Published:Updated:

பட்டாசு பந்திப் பாளையக்காரனும் ஒரு பன்றிக் குட்டியும்...

மாரி செல்வராஜ் ஓவியங்கள்: செந்தில்

பட்டாசு பந்திப் பாளையக்காரனும் ஒரு பன்றிக் குட்டியும்...

மாரி செல்வராஜ் ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:

பெரியவர் கள்ளாண்டனிடம் அம்மா அடிக்கடி சொல்லியிருக்க வேண்டும். அடிக்கடி என்றால் பார்க்கிற நேரமெல்லாம். அப்பா வலியால் துடித்து காட்டுகிற நாளெல்லாம் வேறு எதையும் பேசாமல் நச்சரித்து அதை மட்டுமே சொல்லியிருக்க வேண்டும். அன்று அதிகாலையிலே வீட்டு வாசலில் வந்து பெரியவர் கள்ளாண்டன் நின்ற தோரணை அப்படித்தானிருந்தது. ஆமாம்... பெரியவர் கள்ளாண்டன் இப்படி சாரத்தை மடித்து, கருத்த செம்பறியின் தொடை மயிர் போல, சிக்கி சுருட்டி சுருள் சுருளாக மயிர் முளைத்துக் கிடக்கும் தன் கால் முட்டி தெரிகிற மாதிரி நிற்பதை ஊருக்குள் யாரும் பார்த்ததே இல்லை. அதனால்தான் அன்றைக்கு எங்கள் வீட் டுக்கு முன்னால் தலைவாசலில் சாரத்தை மடித்து இறுக்கிக் கட்டிக்கொண்டு பெரியவர் கள்ளாண்டன் நின்றதை வீட்டுக்குள் இருந்தபடியே கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்த எனக்கு, அது நான் அடிக்கடி பார்க்க நினைத்த ஒரு நல்ல கனவு போலிருந்தது. ஆனால், அது கனவில்லை. நான் பார்த்த அடுத்த நொடி தாத்தா வின் வெங்கல சோத் துக் கும்பாவை உருட்டி விட்டதைபோல அவர் குரல் எனக்கு நங் என்று கேட்டது. வாசலில் நடப்பது அத்த னையும் நிஜம்.

''பாப்பாம்மா... பாப்பாம்மா...''

பெரியவர் கள்ளாண்டன் அம்மாவை இப்படிதான் கூப் பிட்டார். குழந்தையாக இருந் தாலும் சரி, குமரியாக இருந் தாலும் சரி, கிழவியாக இருந் தாலும் சரி, ஊருக்குள் எந்தப் பெண்களைக் கூப்பிட்டாலும் அவர்களின் பெயருக்குப் பின்னால் அம்மா என்ற வார்த்தையை தானாகவே சேர்த்துக் கொண்டுதான் கூப்பிடுவார். அதிலும் கண்ணம்மா, வள்ளி யம்மா என்ற பெயருடையவர் களை கண்ணம்மாம்மா, வள்ளி யம்மாம்மா என்று அவர் கூப்பிடுவதைக் கேட்டு அவர்கள் சிரிப்பதையும், பெரியவர் கள்ளாண்டன் வேறு வழியில் லாமல் நெளிவதையும் நான் பார்த்திருக்கிறேன். பெண்களுக்கு அம்மா என்றால், ஆண்களுக்கு அய்யாவைச் சேர்த்து கூப்பிடுவார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என்ன லெட்சுமணய்யா... அம்மா இல்லையா?''

கண்களைக் கசக்கிக்கொண்டு வாசலுக்கு வந்த என்னைப் பார்த்து இப்படித்தான் கேட்டார்.

''அம்மா... உள்ள கடைசியில பாத்திரம் விளக்கிக்கிட்டு இருக்காங்க. வருவாங்க, என்ன விசயம்?''

''இல்லைய்யா... அம்மாகிட்டதான் கொடுக்கணும்''

பட்டாசு பந்திப் பாளையக்காரனும் ஒரு பன்றிக் குட்டியும்...

கொஞ்ச நேரம் அம்மா மட்டும் தாமதமாக வந்திருந்தால், என் இரண்டு கைகளாலும் நான்தான் முதன்முதலில் அதை அவ்வளவு ஆச்சர்யத்தோடு வாங்கியிருப்பேன். அதற்குள் அம்மா வந்துவிட்டாள்.

''என்ன கள்ளாண்டா... கொண்டு வந்துட்டியா? எங்க காட்டு பார்ப்போம்'' இப்படி அம்மா கேட்டதுதான் தாமதம். ''நீங்க கேட்டு கொடுக்காம இருப்பேனா? அதுவும் பட்டாசு பந்திப் பாளையக்காரனுக்காக கேட்டுருக்கிய. அத நான் கொடுக்காம விட்டா என் குடும்பத்துக்குள்ள பெரண்டை கொடி கோரமா முளைச்சிடாது. அதுதான் நேத்து ஈனுனதை இன்னைக்கு காலையில கண்ணு முழிக்க வெச்சு தூக்கிட்டு வந்துட்டேன்'' என்று மடித்துக்கட்டிய சாரத்தை அவிழ்த்து வலது கையை உள்ளே விட்டு, அப்படியே தொட்டால் ஒட்டிக்கொள்ளும் ஒரு கன்னங்கருத்த கைக்குழந்தையை லாகவமாக தூக்குவதைப்போல ஏதோ ஓர் அசையும் பொருளைத் தூக்கிக் காட்டினார்.

சிணுங்கலைக் கேட்டு முதலில் நான் மூஞ்செலி என்றுதான் நினைத்தேன். அப்புறம் அதன் உப்பிய குட்டி வயிற்றைப் பார்த்து நிச்சயம் முயல்தான் என்று நம்பிக்கொண்டு ''ஹே... முயல் குட்டி... முயல் குட்டி'' என்று கைகளை நீட்டினேன். அதற்குள் அவரிடம் இருந்து அம்மா அதை வாங்கிவிட்டாள். ''அவசரக்காரி... சின்ன பையன் கையால அத வாங்க விட்டா தான் என்னவாம்'' என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே அம்மா அதை தரையில் விட்டுவிட்டாள். ஐயோ... அது மூஞ்செலி இல்லை; முயல் குட்டியும் இல்லை. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத, பார்த்தவுடன் பயப்பட வைக்கிற, அருவருப்படைய வைக்கிற, பெரியவர் கள்ளாண்டனின் நிறைய பெரிய பன்றிகளில் ஏதோ ஒரு பெரிய பன்றி போட்டிருக்கும் சின்னப் பன்றிக்குட்டி அது. ஆனால், இந்தச் சின்னஞ்சிறு குட்டியைப் பார்க்க பயமாக இல்லை; அருவருப்பாகவும் இல்லை. பார்க்கப் பார்க்க டி.வி-யில் அடிக்கடி பார்க்கிற ஏதோ ஒரு வெளிநாட்டு நாயைப்போல அவ்வளவு அழகாக இருந்தது. அதன் ரோமங்கள் கூட அவ்வளவு மிருதுவாக இருந்தன. அம்மா கையில் தூக்கிக் கொள்ளச் சொன்னாள். கூச்சம் பிசுபிசுக்க நான் நாக்கை அவசரமாக சுழித்ததைப் பார்த்து பெரியவர் கள்ளாண்டனே அலேக்காகத் தூக்கி என் கைகளில் அதைக் கொடுத்துவிட்டார்.

''சும்மா அப்படியே நெஞ்சோடு சேர்த்து வெச்சீங்கன்னா பச்ச புள்ளையத் தூக்கி அணைச்ச மாதிரிதான் இருக்கும். ஒண்ணும் செய்யாது'' என்று பெரியவர் கள்ளாண்டன் சொன்னது உண்மைதான். நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டம் ஆஸ்பிட்டலில் வைத்து அம்மா, ''இந்தாடா... பாப்பாவைத் தூக்கிப்பாரு'' என்று தூக்கிக்கொடுத்த மாடத்தி அக்காவின் குட்டியோண்டு மகனை போலத்தானிருந்தது, அந்தப் பன்றிக்குட்டியை அப்படி நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருப்பது. அப்படியே அணைத்துக்கொண்டிருந்தேன். அது ஒரு பிசுபிசுப்பும் சொரசொரப்பும் இல்லாமல் என் நெஞ்சோடு நெளிந்துகொண்டிருந்தை நான் பார்த்துக்கொண்டேஇருந்தபோதுதான் அப்பா அங்கு வந்தார்.

''என்ன இது... பன்னிக்குட்டிய வாங்கிகிட்டு இருக்க? எதுக்கு?''

அம்மா பதில் சொல்லவில்லை. அப்பா என்ன கேட்டாலும் எப்போதும் எந்த பதிலும் அடுத்தவர்கள் முன்னாடி அம்மா சொல்லிவிட மாட்டாள். பக்கத்தில் இருப்பவர்கள்தான் அப்பாவுக்குச் சொல்ல வேண்டும். நான் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், எனக்குதான் அம்மா பன்னிக்குட்டி எதற்கு வாங்கினாள் என்றே தெரியாதே! அதனால், பெரியவர் கள்ளாண்டன் சொல்லுவாரென்று உம்மென்றிருந்தேன். கள்ளாண்டனே அதைச் சொல்லிவிட்டார்.

''எல்லாம் உங்களுக்காத்தான். உள்மூலம், வெளிமூலம்னு உசுரு போய் உசுரு வருதுன்னு ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்குமா அலையிறீங்கள்ளா... அதுக்குதான் ஒரு பன்னிக்குட்டிய வளர்த்து ஊரெல்லாம் பட்டாசு கொளுத்துற நாள்ல உன் எல்லையிலே வந்து பலி கொடுக்கிறேன்னு, பட்டாசு பந்திப் பாளையக்காரன்கிட்ட அம்மா நேர்ந்துருக்காங்க.''

''அதுக்குன்னு இந்தப் பன்னிக்குட்டியை வீட்டுல வெச்சு வளர்க்கப் போறியளோ?''

அப்பாவின் இந்தக் கேள்விக்கு நான் எதற்கு ஆமாம் என்று அவசரமாக சொன்னேன் என்று தெரியவில்லை. ஆனால் நான்தான் சொன்னேன், 'ஆமாம்’ என்று. அதைக் கேட்டதும் அப்பாவின் முகம் திடீரென்று அவநம்பிக்கையுடைய தாத்தாவின் முகத்தைப்போல மாறிவிட்டது.

''தெருவுக்குள்ள தெரியாம என்னைக்காவது ஒரு நாள் ஒரு பன்னி வந்தாலே கள்ளாண்டன் குடிசையைத் தேடிப் போய் பிரிச்சி போட்டுட்டு வர்றானுவ எல்லாரும். நீ என்னடான்னா, இத வீட்டுக்குள்ள வளர்க்கப் போறியா? வெளங்கும். யாரு இந்தப் பொல்லாத யோசனைய உனக்கு சொன்னா?''

''உங்க அக்கா கோமதிதான் சொன்னா... 'பட்டாசு பந்திப் பாளையக்காரனுக்கு பன்னி பலி ஒண்ணு போடு. உன் புருசனுக்கு அறுத்து அறுத்து முளைக்கிற மூலம் அடியோடு அழிஞ்சி போய்டும்’னு.''

''சரி! நடுத்தெருவுக்குள்ள வெச்சு பன்னிய வளர்த்தா ஊரே சண்டைக்கு வருமே...''

''கோயில் பன்னின்னா யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.''

அப்பாடா... அம்மா பயப்படாமல் எல்லாத் தையும் பேசிவிட்டாள். இனி அப்பா எதுவும் சொல்ல மாட்டார். 'உங்க இஷ்டம்’ என்று புகையிலை வாங்கக் கடைக்குப் போய்விடுவார். நினைத்ததைப் போலவே அப்பா எல்லாரையும் பார்த்து தாத்தாவின் அவநம்பிக்கையான முகத்தை அவசரத்துக்கு வாங்கி ஒரு முறைப்பு முறைத்துவிட்டுப் போய்விட்டார்.

''இன்னையிலிருந்து எத்தனை தீபாவளி கழிச்சி பலிகொடுத்தா சரியா இருக்கும்?'' - என் நெஞ்சுக்குள் புதைந்திருக்கும் அந்த குட்டி யோண்டு குட்டியை அக்கறையோடு பார்த்த வாறே அம்மா கேட்டாள்

'மூணு தீவாளி கழிஞ்சாலே போதும். பலிக்கேத்த பொலிவு எந்தப் பன்னிக்குட்டிக்கும் வந்துடும். நீங்க நாலாவது தீபாளிக்குக் கொண்டு போய் நறுக்குனு பலி கொடுத்திடலாம்'' என்பதை அழுத்தமாகச் சொல்லிவிட்டு 'தன் கடமை இத்தோடு முடிந்தது. இனி, பட்டாசு பந்திப் பளையக்காரனுக்கு நான் எந்த பதிலும் சொல்ல வேண்டியதில்லை’ என்பதைப்போல சாரத்தை கீழே இறக்கிவிட்டபடி பெரியவர் கள்ளாண்டன் எங்களிடம் இருந்தும் அந்தக் குட்டிக் கண்களைக் கொண்ட குட்டிப் பன்றிக்குட்டியிடம் இருந்தும் விடைபெற்று, திரும்பிப் பார்க்காமலே போய் விட்டார். அம்மா அவருக்குக் காசு எதுவும் கொடுக்கவில்லை. அவரும் கேட்கவில்லை. பட்டாசு பந்திப் பாளையக்காரனுக்கு பயந்திருப் பார்போல. பயந்தாங்கொள்ளி கள்ளாண்டன் என்று ஒருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.

பன்றிக்குட்டியை அம்மா வாங்கினாள். தெருவில் சில நேரம் தத்தித் தத்தி நடந்துவரும் குட்டிக் குழந்தைகளை அம்மா இப்படிதான் வானம் உயரத்துக்குத் தூக்கி வைத்து அழகு பார்ப்பாள். அவ்வளவு பெரிய வானத்தையும் அம்புட்டோண்டு குட்டியையும் அம்மா குறுகுறுவென பார்த்துக்கொண்டேயிருந்தாள். அந்த நேரத்தில் குறும்பான அந்தக் குட்டி மிகச்சரியாக அம்மாவின் நெற்றியில் முத்திவிட, அதிசயமாய் அப்படியே சிலிர்த்துப் போனாள். அம்மா. ஒரு சிரிப்பு சிரித்தாள். அப்படியொரு சின்ன உயிரை இவ்வளவு உயரே தூக்கி வைத்துக்கொண்டு அவள் சிரித்த சிரிப்பு, என் அம்மாவிடம் நான் பார்த்துப் பார்த்து சேகரித்து வைத்துக்கொண்ட எத்தனையோ சிரிப்புகளில் ஆகச்சிறந்த அற்புதமான சிரிப்பாக அடிக்கோடிட்டு அங்கேயே பத்திரப்படுத்தினேன்.

அம்மாவுக்குப் பிடித்ததைப்போல, எனக்குப் பிடித்ததைப்போல, அப்பாவுக்கு அந்தப் பன்றிக் குட்டியைப் பிடிக்கவில்லை. தன் உள்மூலமும் வெளிமூலமும் ஊசிப் பட்டாசுபோல புஸ் ஸென்று காணாமல் போனால் போதும் என்ப தற்காகவும், பட்டாசு பந்திப் பாளையக்காரன் நினைத்தால் அது நிச்சயம் நடக்கும் என்பதற் காகவும். அப்பா வேறு வழியில்லாமல் அந்தப் பன்றிக்குட்டியையும் அதனை வளர்க்க நானும் அம்மாவும் செய்யும் கோமாளித்தனங்களையும் பொறுத்துக்கொண்டார். ஒரு குட்டிப்பன்றியின் நான்கு தீபாவளி வளர்ப்பைத் தாங்குகிற மாதிரி அம்மா ஒரு பெரிய மரப்பெட்டி செய்து கொண்டுவந்து பன்றிக்குட்டியை அதற்குள் வைத்துதான் வளர்க்கத் தொடங்கினாள். பீங்காட்டுக்குப் போகாமல், மலத்தைத் திங்காமல், சாக்கடைகளில் உருண்டு புரளாமல், ஊர் சுற்றாமல், அதை சுத்தமாக வளர்த்து பட்டாசு பந்திப் பாளையக்காரனுக்குப் பலி கொடுக்க வேண்டும் என்று முடிவுசெய்திருந்தாள் என்பதால், அதை கவனித்துக்கொண்டேயிருக்கும் முழுப் பொறுப்பையும் அவள் எனக்குக் கொடுத்திருந்தாள்.

ஒவ்வொரு நாளும் அதிகாலையிலே அதை மரப்பெட்டிக்குள் இருந்து வெளியே எடுத்து கொஞ்ச நேரம் விளையாட வைப்பேன். அம்மா அதற்கு தவிட்டையும் பழைய சோற்றையும் சேர்த்துப் புரட்டி பெரிய மண்சட்டியில் வைப் பாள். மூக்கால் தின்கிறதா அல்லது வாயால் தின்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு, ஒரு காண்டாமிருகத்தின் குட்டியைப்போல உறுமிக் கொண்டு கொஞ்ச தூரம் ஓடிவிட்டு, அம்மா விடமே திரும்பி வரும். அதற்கு அம்மாவை நன்றாக அடையாளம் தெரிந்துவிட்டது. என்னையும்கூட அது சரியாக கண்டுபிடிக்கத் தொடங்கியிருந்தது. அம்மா இருந்தால் அம்மா காலைச் சுற்றிவருவது, அம்மா இல்லை என்றால், என் காலைச் சுற்றி வருவது என்று அது ஒரு வட்டமான வாழ்க்கையை வாழத் தொடங்கி யிருந்தது. என்ன காரணத்துக்கோ அம்மா அதன் சின்னக் கழுத்தில் ஒரு சின்ன மணியைக் கட்டிவிட்டாள். மணி கட்டிய பன்றியைப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாய் இருந்தது. அது ஓடும்போதோ அல்லது நடக்கும்போதோ கேட்கிற அந்த மணி சத்தம், பூமிக்கு அடியில் இருந்து கேட்பது போலிருக்கும். முதல் தீபாவளிக்கு அம்மா பன்றிக்குப் பட்டாசு பயத்தைப் போக்க வேண்டும் என்று, அது அடைக்கப்பட்டிருக்கும் மரப்பெட்டியைச் சுற்றி என்னைப் பட்டாசு வெடிக்கச் சொன்னாள். நான் பட்டாசுகளை வெடிக்கத் தொடங்கியதும் பன்றிக்குட்டி போட்ட சத்தத்தையும் நடுக்கத்தையும் பார்த்து அம்மா பயந்தே போய்விட்டாள். பட்டாசு பந்திப் பாளையக்காரனை நினைத்துக்கொண்டு, கொஞ்சம் திருநீறை அள்ளி அந்த மரப்பெட்டிக்குள் அம்மா வீசியெறிந்தும், பன்றிக்குட்டியின் கதறல் விடியும் வரை அடங்கேவே இல்லை. காலையில் மரப்பெட்டியைத் திறந்து அம்மா அதை வெளியே எடுத்த பின்தான் அதன் அலறல் நின்றது. அத்தோடு சரி... அது அந்த மரப்பெட்டிக்குள் மறுபடி போய் புகுந்துகொள்ள மறுத்துவிட்டது. பழுத்த பனம்பழத்தையும் வாழைப்பழத்தையும் அம்மா பெட்டிக்குள் வைத்துப்பார்த்தாள். வெளியே நின்றபடி வாசனையை மட்டும் பிடித்துக்கொண்ட பன்றிக்குட்டி உள்ளே போக மறுத்துவிட்டது. அதன்பிறகுதான் அம்மா வேறு வழியில்லாமல் அதற்கு அது கோரிய சின்ன சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தாள். தொழுவுக்குப் பக்கத்திலே ஒரு பெரிய குழி வெட்டி அதில் நீரால் நிரப்பி கொஞ்சம் வளர்ந்துவிட்ட பன்றியை இறக்கிவிட்டாள். விரும்பும் சுதந்திரத்தை அனுபவிக்கிற ஓர் உயிரின் முகச்சாயல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அப்போதுதான் நான் பார்த்துக்கொண்டேன். அப்போதே அதை அடிக்கோடிட்டு சுதந்திரத்தை அனுபவிக்கிற முகச்சாயலாக என்னுள் இன்றுவரை பத்திரப்படுத்திக்கொண்டேன். ஆனால், அதன்பின் நடந்ததெல்லாம் வேறு. தனக்குத் தாமதமாக வழங்கப்பட்ட சுதந்திரத்தை எங்கள் பன்றிக்குட்டி எங்களையும் மீறி ஆவேசமாய் அனுபவிக்கத் தொடங்கியது.

பட்டாசு பந்திப் பாளையக்காரனும் ஒரு பன்றிக் குட்டியும்...

அது அடுத்தவர்களின் பனங்குழிகளைத் தேடி அலையத் தொடங்கியது. கதவில்லாமல் திறந்துக்கிடக்கும் குடிசைக்குள் எல்லாம் நுழையத் தொடங்கியது. மண் சட்டி பானைகளுக்குத் தன் பெரிய மூக்கை நுழைத்து, வெளியே எடுக்க முடியாமல் மூச்சு முட்டி, அத்தனை சட்டிகளையும் உடைத்து சுக்கு நூறாக் கியது. மூக்கு ஒழுக வேடிக்கை பார்க்க வந்த சிறுமிகளை, குட்டி காண்டாமிருகமாக மாறி விரட்டத் தொடங்கியது, வாயெல்லாம் மலமாக, உடலெல்லாம் சேறாக தெருவெங்கும் எங்கள் பன்றிக் குட்டியின் மணியோசைதான் கேட்டது. எங்கள் பன்றிக்குட்டியின் ஆவேசமான உறுமலுக்கு விசேஷ வீட்டுக்காரர்கள் அச்சப்படத் தொடங்கினார்கள். கல்யாண வீட்டுக்காரர்கள் வீடு தேடி வந்து, ஒருநாள் மட்டும் பன்றிக்குட்டியை அடைத்துவைக்கச் சொல்லி கெஞ்சினார்கள். எல்லாருமே அப்பாவிடம் வந்துதான் முறையிட்டார்கள். அப்பா தன் மூலத்துக்காக தன் மேல் இரக்கம் கொண்டு இன்னும் இரண்டு தீபாவளி பொறுத்துக்கொள்ளச் சொன்னார். அம்மாதான் ஆக்ரோஷமாகிவிட்டாள். ''ஏன்... உங்க ஆடு எங்க வீட்டுக்குள்ள வரல? பூனை வரல? நாய் வரல?'' என்று கேட்பவரிடமெல்லாம் உறுமினாள். ''ஏம்மா... ஊட்டுக் குன்னு வளர்க்கிற ஆடு, நாய், பூனையும் பலிக்குன்னு வளர்க்கிற உன் பீ திங்குற பன்னிக்குட்டியும் ஒண்ணாம்மா? ஊருக்கு வெளிய வளர்க்கிறத யாராவது நடு ஊருக்குள்ள வளப்பாங்களா? கோவில் பன்னி அப்படிங்கிறதாலதான் பொத்திக்கிட்டுப் போறோம். இல்லன்னா, என்னைக்கோ கொத்திக் குடல உருவிருப்போம்'' என்று சொல்லிவிட்டுப் போவார்கள். அந்த நாட்களெல்லாம் அம்மாவும் நானும் மணியோசையைப் பின்தொடர்ந்து எங்கள் பன்றிக்குட்டியைத் தேடி அலைவோம். ஏதாவது தெருவின் எதாவது சாக்கடையில் இருந்து அம்மாவைப் பார்த்து ஓடி வரும். எதுவும் சொல்லாமல் அம்மா முன்னாடி நடக்க, மணி ஓசை எழுப்பியவாறு அம்மா பின்னாடி அது நடக்கும். வீட்டுக்கு வந்ததும் புது தண்ணீர் பாய்ச்சிய குழிக்குள் தூக்கிப்போட்டு குளிப்பாட்டுவாள். நடப்பது அத்தனையையும் அவநம்பிக்கையான தாத்தாவின் முகத்தோடு வேடிக்கை பார்த்த அப்பா, அன்று உறுதியாகச் சொல்லிவிட்டார். ''நாலு தீபாவளிலாம் பொறுத்துக்க முடியாது. மூலம் என் உடம்பை அரிக்குது. இந்தப் பன்னி என் உயிரப் புடுங்குது. வர்ற தீபாவளிக்கு கள்ளாண்டன கூட்டிக்கிட்டுப் போய் தாயும் மவனும் பட்டாசு பந்திப் பாளையக்காரனுக்கு பொலியக் கொடுத்துட்டு வந்துருங்க. இதுக்கு மேல என்னால தாங்கிக்க முடியாது'' என்று. அதற்கு அம்மா உம் கொட்டினாளா என்று தெரியவில்லை. ஆனால், எங்கள் பன்றிக்குட்டி டுர் டுர் டுர் என்று டுர் கொட்டியது.

மூன்றாவது தீபாவளிக்கு முதல் வாரத்திலே அப்பா மறுபடியும் ஞாபகப்படுத்திவிட்டார். ''இதோட ரத்தம் பட்டாசு பந்திப் பாளையக்காரன் மேல பட்டாதான் எனக்கு நிக்காம வடியிற ரத்தத்தை அவன் அடைப்பான் போலிருக்கு'' என்று அப்பா அம்மாவிடம் நச்சரிக்கத் தொடங்கிவிட்டார். பலிகொடுக்கத்தான் வளர்த்தாள் என்றாலும், ஏனோ அந்த ஒரு வாரமாக திடீரென்று அப்பாவி தலையாட்டிப் பாட்டியின் 'ஐயோ பாவம்’ முகச்சாயல் வந்து ஒட்டிக்கொண்டதைப் போலிருந்தது அவள் முகம். ஒருவேளை, அவளை அந்தப் பன்றிக்குட்டி ஓடி ஆடி தினமும் தேடவைத்து என்னைவிட சுவாரஸ்யப்படுத்தியிருந்ததால் இருக்கலாமோ..., அல்லது, அடி நிலத்துக்குள் கேட்பதைப்போல எப்போதும் எங்கள் பக்கத்தில் கேட்கும் அதன் மணிச் சத்தம் அவளுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கணும்போல அவளுக்குத் தோன்றியிருக்கலாமோ... தவிட் டையும் பழைய சோற்றையும் மண் சட்டியில் போட்டு கலக்கி வைக்கும்போது, எங்கள் பன்றிக் குட்டி அம்மாவின் கையில் ஒட்டியிருப்பதைத்தான் முதலில் நக்கித் திங்கும். அந்தக் குட்டி நாக்கின் பிசுபிசுப்பு கலந்த சுரசுரப்பு அவளுக்குப் பிடித்திருக்குமோ.... என்னவென்று சரியாகத் தெரியவில்லை. மூன்றாம் தீபாவளி பக்கத்தில் வர வர, அம்மா எங்கள் பன்றிக்குட்டிக்கு, பக்கத்திலேதான் இருந்தாள். அதுவும் எங்கள் பன்றிக்குட்டியும் அதிசயமாக வெளியே வேட்டைக்குக் கிளம்பாமல் அம்மா தோண்டிப்போட்ட குழிக்குள்ளேதான் முடங்கி மூழ்கிக் கிடந்தது. ''இன்னும் ஒரு தீபாவளி பொறுத்தா, நல்லா பெரிய காண்டாமிருகம் மாதிரி பெருசாகிடும். அப்புறம் கூட்டிட்டுப் போய் கவுரவமா பலிகொடுத்தா அந்தப் பாளையக்காரனுக்கு எவ்வளவு குளிர்ச்சியா இருக்கும்'' அம்மா என்னமோ ஏதோ சொல்லி அடுத்த தீபாவளி வரை பன்றிக்குட்டியின் உயிரை இழுத்துக்கொண்டு போக முயற்சித்தாள். ''நீ பன்னிய பலி கொடுக்கிறேன்னு வேண்டிக்கிட்டியா... இல்ல, காண்டாமிருகத்தைப் பலி கொடுக்கேன்னு பாளையக்காரன்கிட்ட வேண்டிக்கிட்டியா?'' அப்பா தீர்மானமாகக் கேட்டார். ''பன்னியாத்தான் பலி கொடுக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன்'' அம்மா முனங்கியது அப்பாவுக்குக் கேட்டுவிட்டது. ''அப்போ அது பன்னியா இருக்கும்போதே கொண்டுபோய் பலியக் கொடு. காண்டாமிருகம் ஆயிட்டா வேண்டுதல் பலிக்காம போயிடப் போவுது'' என்று சொல்லிவிட்ட அப்பா, எப்போதும்போல புகையிலை வாங்க கிளம்பிப் போய்விட்டார்.

வேகமாக துள்ளிக்குதித்து ஓடி வரும் வெள்ளாட்டங்குட்டியின் இளம் மறிபோல அந்த அவசியமில்லாத மூன்றாம் தீபாவளி கொஞ்சம் வேகமாக ஓடி வந்துவிட்டது. தெருவெங்கும் உள்ள வீடுகள் திடீரென்று உடைந்து சில்லுசில்லாக நொறுங்கியதுபோல, கேட்ட பட்டாசு சத்தங்களுக்குப் பயந்து, எங்கள் பன்றிக்குட்டி தொழுவில் தோண்டப்பட்ட குழிக்குள்ளே முடங்கி விழிபிதுங்கி கிடந்தது. அப்பா சொல்லிருப்பார்போல... காலையிலே பெரியவர் கள்ளாண்டன் சைக்கிளோடு வீட்டுக்கு வந்துவிட்டார். ''அய்யா சொன்னாவ... இன்னைக்கு பன்னிய கோயிலுக்குக் கொண்டுபோய் பலி கொடுக்கணும்... சைக்கிள்ல கொண்டுபோய் இறக்கிட்டு வந்திருன்னு. அதான் வந்தேன். குட்டிப் பையன் எங்க இருக்கான். அடைச்சு வெச்சிருக்கியளா?'' அம்மாவிடம் பேசிக்கொண்டே அம்மாவின் பதிலுக்குக் காத்திருக்காமல் தொழுவுக்கு வந்துவிட்டார் கள்ளாண்டன். ''பரவாயில்லையே... மூணு தீபாவளியிலே பையன் முழுசா ஜம்முன்னு ஆயிட்டானே! சரி... ஏதாவது வாழைப்பழத்தை அல்லது பனம்பழத்தை நீட்டி என்கிட்ட புடிச்சிக்கொடுங்க. நான் சைக்கிள்ல கட்டிக்கொண்டு போய் கோயில்ல இறக்கிட்டு வந்திடுறேன்'' சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு தீபாவளி கொண்டாடப்போகிற அவசரத்தில் இருந்தார் கள்ளாண்டன். அம்மா எதுவுமே பேசவில்லை. ஒரு பெரிய பனம்பழத்தை எடுத்து கள்ளாண்டனிடம் கொடுத்தாள். கள்ளாண்டன் பனம்பழத்தை இடது கையால் நீட்ட... குழிக்குள் இருந்து ஆவேசமாக எழுந்து வந்த எங்கள் பன்றிக்குட்டி கள்ளாண்டனின் வலது கையில் இருந்த பெரிய நீளமான இரும்புக் கண்ணியில் சிக்கி 'டுர்... டுர்... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... டுர்.. டுர்ர்ர்ர்ர்ர்ர்...’ என்று கதறித் துடித்து, பெரியவர் கள்ளாண்டனின் பிடிக்குள் வந்து சேர்ந்தது. இதுவரை ஒரு முறைகூட அந்தப் பன்றியின் அப்படியொரு கதறலைக் கேட்டுப் பழகாத அம்மா, அவசரமாய் வீட்டுக்குள் போய்விட்டாள். நான்தான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நிறைய துண்டுக் கயிறுகளை எடுத்து பன்றிக்குட்டியின் நான்கு கால்களையும் இரண்டு இரண்டு கால்களாக இறுக்கிப் பிடித்துக் கட்டினார், அப்புறம் அதன் வாயையும் பிளக்க முடியாதவாறு, சின்ன இரும்புக் கம்பியால் பன்றிக்குட்டி துடிக்கத் துடிக்க வேகமாக நேர்த்தியாகக் கட்டினார். ஆவேசமான பன்றிக்குட்டியின் கதறலும் உறுமலும் அடுத்த நொடியே அதன் பெரிய மூக்குக்குள் அடங்கிப்போனது.

''எதுக்காக இப்படி அசையவிடாம கட்டிட்டீங்க. அது அம்மா சொன்னா கேட்கும். வான்னு சொன்னா அது எங்க வேணும்னாலும் வரும்'' நான் பாவமாய் சொன்னதைக் கேட்டு பெரியவர் கள்ளாண்டன் பதில் சொல்லாமல் வெறுமென சிரித்தது எனக்கு அவ்வளவு எரிச்சலாக இருந்தது. அம்மாவைப்போலவே வீட்டுக்குள் போய்விடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதுதான் கள்ளாண்டன் பதில் சொன்னார்.

''இல்லய்யா எப்பேர்ப்பட்ட வளர்ப்பு பன்னியா இருந்தாலும் பட்டாசு சத்தத்துக்கு ஊருக்குள்ள நிக்காது. நாம போறது பட்டாசு பாளையக்காரன் கோயிலுக்கு. இன்னைக்கு தீவாளி வேற. கோயில்ல பட்டாச போட்டு கொளுத்து கொளுத்துன்னு கொளுத்துவாங்க. கயிறு அவிந்திச்சு... அவ்வளவுதான்! அப்புறம் கடவுளே வந்தாலும் எந்தப் பன்னியையும் பிடிக்க முடியாது'' என்று சொல்லிவிட்டு பன்றிக்குட்டியைத் தூக்கி அசால்ட்டாக தன் சைக்கிள் கேரியரில் வைத்து அசையவிடாமல் இறுக்கிக் கட்டிக்கொண்டு, ''அய்யா... அம்மாவக் கூட்டிக்கிட்டு சீக்கிரமா நடந்து வந்திருங்க. நான் கொண்டுபோய் கோயிலுக்குப் பின்னாடி இறக்கி போட்டுர்றேன்'' என்று அவசர அவசரமாகக் கிளம்பிப் போனார் பெரியவர் கள்ளாண்டன்.

பன்றிக்குட்டி கோயிலுக்குப் போய் ரொம்ப நேரமாகியும் அம்மா கிளம்பாமல் இருந்ததற்கு அப்பா திட்டியிருப்பார்போல. தலையாட்டிப் பாட்டியின் ஐயோ பாவம் முகச்சாயலோடு அம்மா வேக வேகமா கிளம்பிக்கொண்டிருந்தாள், என்னையும் அவசர அவசரமா புதுச் சட்டையைப் போட்டு கிளம்பச் சொன்னாள். அப்பாவுக்கு மூலத்தின் ரத்தக் கசிவு அதிகமாகி இருக்கும்போல. தன் பெரிய பிருஷ்டத்துக்கு விசிறியால் விசிறிவிட்டபடி எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். ''போனோமா... பன்னிய பலி கொடுத்தோமான்னு சாமியக் கும்பிட்டுட்டு திருநீறு வாங்கிட்டு வேகமா வீட்டுக்கு வாங்க! தீவாளியும் அதுவுமா தனியா இருக்க முடியாது.'' அப்பா சொல்லி முடிக்கும் முன்பே, நானும் அம்மாவும் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டோம். கோயில் வந்து சேரும் வரை அம்மா உம்மென்றுதான் வந்தாள். கோயிலில் கூடியிருந்த கூட்டத்தையும், தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த பட்டாசு சத்தங்களையும் கேட்டு, மக்கள் பலி கொடுக்க கொண்டுவந்திருந்த நிறைய பெரிய பெரிய பன்றிகளைப் பார்த்த பிறகுதான் அவள் முகம் கொஞ்சம் மாறியது. கோயிலுக்குப் பின்னாடி பன்றிக்குட்டியோடு நின்றிருந்த பெரியவர் கள்ளாண்டன் எங்களைப் பார்த்ததும் சைக்கிளில் இருந்து பன்றிக்குட்டியை இறக்கிக் கீழே பொத்தென்று போட்டார்.

''சரிங்கம்மா... நான் கிளம்புறேன். வீட்ல புள்ளகுட்டியெல்லாம் தீவாளியும் அதுவுமா என்னிய தேடித் திரியும்'' என்று அவர் கிளம்பத் தயாரானபோதுதான் அம்மா பேசத் தொடங்கினாள்.

''பலி கொடுக்கிற வரைக்கும் எங்ககூட இருந்துட்டுப் போயேன்.''

''ஐயோ! எப்பவும் கோயிலுக்கு வருவேன். தூரமா நின்னு சாமி கும்பிடுவேன். பன்னி பலிகொடுக்கும்போது மட்டும் பத்து கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கம் ஓடிடுவேன்.''

''ஏன் அப்படி?'' -நிஜமாகவே அம்மா ஆச்சர்யமாக அவசரமாகக் கேட்டாள்.

''ஆடு மாடு கோழிய எல்லாரும் வளர்க்கிறாங்க. அதைப் பலி கொடுக்கும்போது எல்லாரும் வேடிக்கை பார்க்கலாம். ஆனா, பன்னிய நாங்க மட்டும்தான வளர்த்து உங்ககிட்ட பலிக்குன்னு கொடுக்கிறோம். அது மட்டுமில்லாம, ஊருக்குப் பிடிக்காம வளர்க்கிற பன்னியை நீங்க சாமிக்குக் கொண்டுவந்து பலி கொடுக்கும்போது எங்களையே பலி கொடுக்கிற மாதிரி தோணும். எது எப்படியோ... பன்னிய பலிகொடுக்கும்போது நாங்க பக்கத்துல இருந்தா, அது எங்களுக்குப் பெரிய பாவம். அதான், நீங்க பூசாரிக்கிட்ட சொன்னீங்கன்னா... அவங்களே வந்து தூக்கிட்டுப் போய் பலி கொடுத்திடுவாங்க. நான் கிளம்புறேன்'' சொல்லிவிட்டு ஒரு நிமிடம்கூட பெரியவர் கள்ளாண்டன் தாமதிக்கவில்லை. கிளம்பிப் போய்விட்டார். அம்மா பன்றியையே பார்த்துக்கொண்டிருந்தாள். பெரிய பலூனுக்கு வாயும் மூக்கும் இருப்பதைப்போல அது காற்றைக் குடித்துக்கொண்டு கிடந்தது. என்ன நினைத்தாளோ தெரியவில்லை, பூஜை தொடங்கும் வரை அதைத் தடவிக்கொடுத்தபடி அதன் பக்கத்திலே அம்மா உட்காந்திருந்தாள். பூஜை தொடங்கியது ஆலமரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த பெரிய பெரிய மணிகளின் சத்தமும், தொடர்ச்சியாக வெடித்த பட்டாசுகளின் சத்தமும், பெண்களின் குலவை சத்தமும் கேட்டபோது பட்டாசு பந்திப் பாளையக்காரன் ஏதோ ஒரு திசையில் இருந்து கறுப்புக் குதிரையில் வந்துவிடுவான் போலிருந்தது எனக்கு.

''எப்பா... நீ பன்னிக்கிட்ட இரு. நான் யாரு பலி கொடுக்கிறான்னு பார்த்து சொல்லி கூட்டிட்டு வாரேன்'' என்று அம்மா கோயிலுக்குள் கிளம்பிப் போனாள். பலி கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்போல. பெரிய பன்றிகளின் ஊளை சத்தமும், பெண்களின் குலவைச் சத்தமும், கட்டுண்டுக் கிடக்கும் எங்கள் பன்றிக்குட்டியை மட்டும் அல்ல... காவலுக்கு இருக்கும் என்னையும் உறைய வைத்துவிட்டது. விருட்டென்று எழுந்து கோயிலுக்குள் ஓடிவிட்டேன். அம்மா ஆலமரத்தின் ஒரு விழுதைப் பிடித்தவாறு, பலிகொடுப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் ஆவேசமாய் இழுத்து தன் புடவைக்குள் வைத்துக்கொண்டாள். நான்கு பேர் ஒரு பெரிய பன்றி யைத் தூக்கிக்கொண்டு வந்து, ஒரு பெரிய மரக் கட்டையில் வானத்தைப் பார்த்தவாறு படுக்க வைத்தார்கள். ஒருமுறைகூட வானத்தைப் பார்க்காத அந்தப் பன்றி வானத்தைப் பார்த்தவாறே ஊளையிட முடியாமல் உறுமக்கூட முடியாமல் திணறிக்கொண்டிருந்தது. ஒரு முறையாவது அது வானத்தைப் பார்த்ததா என்று தெரியவில்லை. அதற்குள் பெரிய கூர்மையான கத்தியோடு ஆடிக்கொண்டே நாக்கைத் துருத்தியபடி வந்த பட்டாசு பந்திப் பாளையக்காரன் கோயில் பூசாரி அந்தப் பன்றியின் கழுத்தைக்கூட அறுக்காமல் அதன் மார்பில் ஓங்கி ஒரு குத்து குத்தினார். படக்கென்று அம்மா என் கண்களை மூடினாள். பன்றியின் ரத்தம் எல்லோர் மீதும் நிச்சயம் தெறித்திருக்கும் என்று நினைத்துக்கொண்டு அம்மாவின் விரல்களை என் விழிகளில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றிப் பார்த்தேன். பன்றியின் உயிர் முழுவதுமாகப் போய்விட்டதாகத் தெரியவில்லை. அதற்குள் குத்து விழுந்த அந்தப் பன்றியின் ஓட்டை விழுந்த மார்பின் ரத்த குழிக்குள் பூசாரி ஒரு புஸ்வாணம் பட்டாசை வைத்து கொளுத்த, எல்லோருக்கும் பிடித்த அழகிய பொறி போன்ற தீயின் ஜூவாலைகள் வானத்தை நோக்கி பட்டாசு பந்திப் பாளையக்காரனை நோக்கி உயர உயர, பெண்கள் எல்லாரும் குலவையிட, அம்மா வும் குலவையிட தன் இதழ்களை குவித்தவாறு ஆனால் குலவையிடாமலேயே என் கைகளைப் பிடித்து இழுத்துக்கொண்டு வேகமாக கோயிலுக் குப் பின்னாடி வந்துவிட்டாள்.

குத்துப்பட்ட பன்றிகளின் ரத்த வாடை காற்றில் விஷம் மாதிரி பரவிக்கொண்டிருந்தது. அந்தக் காற்றை மட்டுமே குடித்துக்கொண்டிருந்த எங்கள் சின்ன பன்றிக்குட்டியின் உடல் இன்னும் வேகமாக நடுங்கிக்கொண்டிருந்தது. மேலே பார்த்தவாறு இருக்கும் எங்கள் பன்றியின் வலது கண் யாரைப் பார்க்கிறது என்பதை பக்கத்தில் போய் பார்த்த அம்மா என்னை ஒரு முறை திரும்பிப் பார்த்தாள். என் உடம்பும் நடுங்கிக்கொண்டிருந்ததை உறுதிப்படுத்திக்கொண்டவள், கட்டப்பட்ட பன்றியின் கயிறுகளையும் கம்பிகளையையும் வேகமாக அவிழ்த்துவிட, விருட்டென்று எழுந்த கழுத்தில் மணி கட்டிய எங்கள் செல்ல பன்றிக்குட்டி எங்களைத் திரும்பிக்கூட பார்க்காமல் ஏதோ ஒரு திசையில் ஒரு மூஞ்செலிபோல வேகமாக ஓடி மறைந்தது. பன்றி ஓடிய திசையையே பார்த்துக்கொண்டிருந்த அம்மா, பட்டாசு பந்திப் பாளையக்காரனின் திருநீறை அள்ளி என் நெற்றி நிறையப் பூசிவிட்டுச் சொன்னாள். ''ஓடிடுச்சி.''

உடல் நடுங்க நானும் சொன்னேன். ''ஆமா ஓடிடுச்சிம்மா.''

அம்மா சிரித்தாளா தெரியவில்லை. நான் சிரித்தேன். அதன் பிறகு அம்மா சிரித்தாள். அந்த மூன்றாம் தீபாவளியின் இரவின் பட்டாசுகளை எல்லோரும் வெடிக்கத் தொடங்கும்போது எங்கிருந்தோ பட்டாசு பந்திப் பாளையக்காரன் கறுப்புக் குதிரையில் வரும் சத்தம் எனக்கு நிஜமாகவே கேட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism