Published:Updated:

தென்காசி 20 கிலோ மீட்டர்

சாம்ராஜ்

தென்காசி 20 கிலோ மீட்டர்

சாம்ராஜ்

Published:Updated:
தென்காசி 20 கிலோ மீட்டர்

தென்காசி 20 கிலோ மீட்டர்

அன்றாடம் லாரியில் நெருக்கிக்கொண்டு
ஆரியங்காவிலிருந்து
கடப்பாரை மண்வெட்டியோடு திரும்பும் மாரி
இசக்கியிடம் அலுத்துக்கொள்கிறாள்
''எத்தனை நாளைக்குத்தான்
இப்படி லாரிமேல நின்னுகிட்டு''
அவளறியாள்
இன்றைக்கொரு மாற்றத்திற்கு
அச்சன்கோயில் திருப்பத்தில்
அவர்கள் அத்தனை பேரும்
லாரியை தலையில் சுமந்து கொண்டிருப்பார்கள்
கோவர்த்தன மலைபோல.
வெளியே மழை பெய்துகொண்டிருக்கும்
இவர்கள் ஒருவர்கூட நனைந்திருக்க மாட்டார்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலம்: மே 19, 2009க்குப் பின்

முன்பு வீட்டில் சீனப் புரட்சியாளர்
புகைப்படம் இருந்த இடத்தில்
இப்பொழுது வெள்ளை சதுரம் மாத்திரமேயிருக்கிறது
உச்சிப் பொழுதில்
ஒன்றுமறியா சூரியன்
முருங்கை மரநிழலை
கழுமரமாய் விட்டுச் செல்கிறான்
அந்த வெற்றுச் சதுரத்தின் மீது.

மரம் மறைவு பிரதேசம்

கையில் கூண்டோடு
ஜோசியக்காரன்
மரம் மறைவில்
சிறுநீர் கழிக்கையில்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறது கிளி

சந்திப்பிழை

வாழ்நாள் முழுக்க
அவரது ராஜசபையில்
வணங்கிய வண்ணமே
எல்லோரும் பின் நகர்ந்திருப்பர்
அந்தரங்கத்தில் மாத்திரமே பார்த்திருப்பார்
பல பிருஷ்டங்களை.
ஆயிரம் சொல்
முழு ராணுவச் சீருடையில்தான்
அவனைக் கொல்ல முடிந்தது உங்களால்

அறுத்துக்கொள்ளுதல்

நாக்கை அறுத்துக்கொள்ளாமல்
உன்னோடு உரையாட முடியாது
அந்தரங்கத்தில்
வேறு சிலவற்றையும் அறுக்கச் சொன்னாய்
இறுதியாய்
அறுத்துக்கொண்டோம் நம் உறவை
இப்பொழுதும்
உன் வீட்டு மாடியில்
உப்புக் கண்டம் காயும் கொடியை
பறவைகள் கொத்தவிடாமல்
நீள் கம்பு வைத்து
விரட்டிக் கொண்டிருக்கிறான் ஒருவன்

ரயில் வரும் நேரம்

வீட்டிலிருந்து பார்த்தால்
தண்டவாளம் தெரியும்
பெரும் கூச்சலோடு ரயில்கள் விரையும்.
இரும்பை காந்தமாக்கக் காத்திருந்ததுண்டு
அம்மாவும் அப்பாவும் மாலை நடையில்
அதனருகே அமர்வதுண்டு
தன் காதலை நிரூபிக்க
தண்டவாளம் வரை போன அக்கா
திரும்பி வரவேயில்லை
அதன் பின் அம்மா
அந்த இரும்பு இரட்டையர்கள் பக்கம்
திரும்பவே மாட்டாள்
இருப்புப்பாதையை மறைத்தன
புதிய கட்டுமானங்கள்.
அம்மாவுக்கு அதில் ஆறுதல்
இப்பொழுது ரயில்கள் கடக்கையில்
அவள் காதுகளை மாத்திரம்
பொத்தினால் போதுமானதாயிருக்கிறது

விட்ட குறை

பின்னிரவில் தூக்கிலிட்டுக் கொண்டிருக்க வேண்டும்
கோல்போஸ்ட்டில் தொங்குகிறான் அவன்
எப்பொழுதோ விட்ட பந்தை
என்றென்றைக்குமாகப் பிடிக்க!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism