Published:Updated:

செருப்பு

சிறுகதை: தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்

செருப்பு

சிறுகதை: தமயந்தி, ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:

டுக்கடுக்காய் அடுக்கப்பட்டிருந்த செருப்புகளின் விலையை முதலில் பாத்துட்டுதான் மங்காக்கா பின்ன அதோட நிறம், அளவுலாம் பாத்தா. இன்னிக்கு செருப்பு வாங்க வேண்டிருந்திருக்கும்னு அக்கா நினைச்சிருக்க மாட்டா.

அலுவலகத்தில் இருந்து வர்றப்பவே மங்காக்கா ரொம்ப சோர்வாதான் இருந்தா. எங்கிட்ட அவ பேசவே இல்ல. பேசாம போய் முகம்லாம் கழுவி வந்து படுக்கைல சோர்ந்து உக்காந்தப்பதான், அம்மா வெளிறின காப்பியைக் கையில தந்து, ''ஒனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு''ன்னு சொன்னா. மங்கா அம்மாவப் பாத்து முறைச்சா. அம்மா உடனே உள்பக்கமா என்னப் பாத்து, ''அத இவட்ட எடுத்துக்கொடுடீ. பேய் புடிச்சி முழிக்கா பாரு''ன்னா.

செருப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் அந்த கவர, ரேடியோ டேபிள்ல தேடினேன். அது கொஞ்சம் கசங்கிப் போய் இருந்தது. அதை எடுத்து மாம்பழம் சூப்பின படியே அம்மாட்ட கொடுத்தேன். மங்காக்கா என்ன முறைச்சிட்டே, ''மேல மட்டும் மாம்பழம் ஆச்சோ, கொன்னே போடுவேன்''ன்னா. எனக்கு கோவம் வந்துச்சு. நான் ஏதும் பேசிவிடக் கூடாதேன்னு அம்மா என்னைப் பாத்துக் கண்ணக் காட்டினா.

மங்காக்கா என்ன அவ்வளவு கோபமா இருக்கான்னு, வெளிய வந்தப்பதான் தெரிஞ்சுது. ஏற்கெனவே தேய்ஞ்சு போன செருப்பு மறுபடி பிஞ்சி போய், ஒரு பின்னை மாட்டி நடந்து வந்திருக்கா. எனக்கு மங்காக்கா மேல பரிதாப உணர்வு வந்துச்சு. எத்தனை வருஷமா சம்பாதிக் கிறா. ஆனா, அவளுக்குன்னு எதுவுமே வச்சிக் கிட்டதில்ல. எதுத்த தெரு சண்முகம் அவளுக்கு முன்ன ஒரு லவ் லெட்டர் எழுதினான். அதுல அவ 'அவள் ஒரு தொடர்கதை’ கவிதான்னோ, ஏதோ ஒரு பெயரைப் போட்டு எழுதினான். அத அக்கா கண்டுகொள்ளல. ஆனா, அப்புறமா கேசட்ல 'கல்லிலே என்ன உண்டு...’ பாட்ட மட்டும் அடிக்கடி கேட்க ஆரம்பிச்சா. நான் கடந்து போறப்ப ஆஃப் செய்வா.

மங்காக்கா பக்கவாட்டில் ஸ்ரீப்ரியா மாதிரி இருப்பா. கைக்கு பார்டர் வச்ச சட்டைதான் மங்காக்காவும் போடுவா. சண்முகம் அந்தக் காதல் கடிதாசில, அக்கா புடவை கட்டுற அழகைப் பத்தி எழுதியிருந்தான். 'ஒரு தலை ராகம் ரூபா’ மாதிரி அழகா புடவை கட்டுறேனு எழுதியிருந்தான். எந்த விதமான சலனமும் இல்லாமதான் அக்கா அத வாசிச்சா. அந்தப் பார்வை இப்பக்கூட நல்லா ஞாபகம் இருக்கு.

அதே மாதிரி ஒரு பார்வைலதான் செருப் பையும் மங்காக்கா தேர்ந்தெடுத்துட்டு இருந்தா. குதிகால் உயரமான ஒண்ணைப் போட்டுப் பாத்து, எதிரே ஆளுயர இன்னொரு மங்காவா நின்ன கண்ணாடில, கால அங்கிட்டும் இங்கிட்டும் பாத்தா. அவளுக்கு அந்தச் செருப்பு பிடிச்சிருந்தமாரி எனக்குத் தோணுச்சு. அதுகூட அவளோடயே இருக்கறதால, வாழுறதால அப்படித் தோணியிருக்கலாம். அவ பார்வைல கண்டே பிடிக்க முடியாது. ஒரு நிமிஷம் யோசிச்சு, பின்ன வலது கையால அத புறந் தள்ளினா. அவ கண்ணாடி வளையல் கிலிங்னு வித்தியாசமா சத்தம் எழுப்புச்சு.

அப்பா மட்டும் குடிக்காம இருந்தா மங்காக்கா இப்படி காலத்துக்கும் கண்ணாடி வளையல் போட்டுக்கிட்டு அலைய வேணாம். ''இதுல உள்ள அழகு தங்க நகைக்கு உண்டா?''ன்னு அக்கா கைய இடதும் வலதுமா ஆட்டி ஆட்டிச் சொல்லுவா.

அப்பாக்கு இன்னொரு குடும்பம் இருக் குன்னு தெரிஞ்ச அன்னிக்கு அம்மா அழுதா, அழுதா, அப்படி அழுதா. அப்ப அக்கா ஒரு சேர்ல சம்மணமிட்டு டீயில மிக்சரப் போட்டு குடிச்சிட்டு, ''அடச்சீ போ! கல்யாணமானா இன்னொரு லவ் வரக் கூடாதா? இருக்கட்டும், இருக்கட்டும்... முடிஞ்சா நீயும் லவ் பண்ணி செட்டில் ஆகு!''ன்னா.

''என்ன பேசுறா பாரு''ன்னா அம்மா என்கிட்ட.

''போம்மா... எல்லாத்தயும் சும்மா புனிதம் புனிதம்னு தூக்கி வச்சிட்டு என்னத்த கண்ட? பெரிய ஷாஜகான் உன் புருஷன். உன்னப் பாக்காம இருக்க மாட்டார். அடத்தூ! போ... போய் வேலயப் பாரு.''

அம்மா மிரண்டு போய்ப் பார்த்தாள். அப்பா அந்த வாரம் வீட்டுக்கு வரல. அவர் வந்தப்ப அம்மா பேசவேயில்லை. அவர் நல்லாக் குடிச்சுட்டு, ''நண்டு வறுக்கலியா?''ன்னு கேட்டார்.

''இல்ல.''

''அப்ப, சிக்கன் கொண்டா!''

''இல்ல.''

எழுந்து அம்மாவோட முடியப் பிடிச்சு அடிச்ச அப்பாவ, உள்ள நுழைஞ்ச அக்கா கையில பிடிச்சு அடிக்க ஆரம்பிச்சா. அப்பா எதிர்பாக்கவே இல்ல. அம்மா பதறிப் போய், ''ஏய்... டீ மங்கா! என்ன பண்ணுத..? என்ன வேல இது?''ன்னா. அக்கா நிறுத்தாம அப்பாவ அடிச்சித் தொவைச்சா. அப்பா ஏதும் கத்தல, கதறல! ஓஞ்சி போய் அக்கா நிறுத்தினா. ஏதும் பேசாம போய் அறைக்குள்ள பூட்டிக்கிட்டா. யாரும் யாரோடயும் பேசல. நான் வெளிய வாசல்லயே உக்காந்திருந்தேன். அம்மா சுருண்டு நடு அறையில் படுத்துக் கிடந்தா. அக்கா மறுநாள்தான் கதவைத் திறந்தா.

''அந்தாள் இருக்கானா, போயிட்டானா?''

அப்பாவைப் பாத்துட்டேதான் இந்தக் கேள்விய அம்மாட்ட கேட்டா மங்காக்கா. அம்மா ஒண்ணும் சொல்லல. ''அந்தாள் இன்னொரு வீடு வச்சிருக்கான்னு மூக்கு சீந்தி சீந்தி அழுதியே... இப்ப எங்கருக்கான்?''

''மங்கா! மரியாதயா பேசு!''ன்னா அம்மா. அக்கா சிரிச்சிட்டு, கொடிலருந்து துண்டை எடுத்திட்டுப் போயிட்டா. அப்பா எழுந்து வெளியே போனவர்தான்... வரவேயில்லை.

அடுத்த வாரமே அவருக்கு பராலிட்டிக் அட்டாக் வந்திடுச்சுன்னு சேதி வந்துச்சு. அம்மா போகல. அக்காவும் அதப் பத்தி ஏதும் கேக்கல. மூணு மாசம் கழிச்சு சீரியஸ்னு ஒருத்தன் வந்தப்போ, அம்மா பீன்ஸ் அரிஞ்சுட்டிருந்தா. அது ஒரு ஞாயித்துக்கிழமை. அக்கா எண்ணெய் தேச்சு ஊற வச்சிருந்தா. அம்மா அவன்ட்ட, ''செரி! சாப்டுட்டு வாரோம்''ன்னா. அக்கா கொஞ்சம் அதிர்ந்து, அம்மா கிட்ட வந்தா. ''நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்மா! போலாம், வா!''ன்னா.

''இல்ல. குளி. சாப்டுட்டுப் போலாம்!''

''கஷ்டமா இல்லியாம்மா?''

அம்மா எதுவுமே பேசல. ''என்னத் திட்டணும்னா திட்டு. நான் அந்தாள அடிச்சதும், அவன் இவன்னு பேசினதும் ஒனக்குக் கோவம்னு எனக்குத் தெரியும்!''

''அப்டில்லாம் இல்ல.''

''உண்மையச் சொல்லு. எனக்காக நடிக்காத!''

அம்மா அப்படியே மங்காக்கா தோள்ல சாய்ஞ்சு அழுதா. அக்கா கண்ணுல தண்ணி முட்டி கீழே வழிஞ்சுது. அத ஒத்த விரலால துடைச்சிட்டு, அம்மா தோளைத் தட்டிக் கொடுத்தா.

''வுடு. நீ கௌம்பு. அங்க போய் பிரச்னைலாம் பண்ணாத. நான் இவளக் கூட்டிட்டு வர்றேன்.''

ஆனால் அம்மா கிளம்பவில்லை. எங்களோடதான் வந்தா. அப்பா கிட்டத்தட்ட உயிரில்லாமதான் இருந் தாரு. அக்கா உள்ள வரல. அப்பா பக்கம்தான் அந்தம்மா நின்னுட்டு இருந்தா. அம்மாவப் பார்க்கத் தெம்பில்லாம தலையைக் கவிழ்ந்துக்கிட்டா.

அங்க இருந்த அமைதி, மரணத்தவிடக் கொடுமை யானதா இருந்துச்சு. அப்பா ஒரு தடவ கண்ணத் திறந்து அம்மாவ, அப்புறமா என்னப் பாத்துட்டு, என்னத் தாண்டிப் பாத்தார். அக்காவதான் தேடுறார்னு நினைச்சேன். வெளிய வந்து அக்காட்ட, ''வாக்கா''ன்னேன். ''வேணாம்டீ! அவரப் பாத்தா, அதும் இப்படிப் பாத்தா... மனசு இளகிரும். அது கூடாது. வுடு!''ன்னா அக்கா.

அம்மா எழும்பவும், அந்தம்மா ஓடி வந்து, ''இருங்கன்னு சொல்லப்படாது. ஆனா, வேற வழியில்ல. எம் மேல ஒங்களுக்குக் கோவம் இருக்கும். எனக்கு வாழ்க்க சரியா அமையலன்னு இவரோட வாழ்ந்தேன். பாத்துப் பழகுறப்ப நல்லாதான் பேசி னார். அப்புறம்தான்...''

''....................''

''எல்லா வாழ்க்கையும் ஒண்ணுதான்னு எனக்கு ஆண்டவன் எழுதி வச்சிட்டான். எது நிசம்னு தெரிஞ்சிக்கிற புத்தி எனக்கு இல்ல...''

செருப்பு

அம்மா எதுவுமே பேசாம வெளிய வந்துட்டா. அப்புறமா, அப்பா இறந்த பிறகு யாரும் போகல. ஏன்னுல்லாம் இப்ப வரைக்கும் காரணமும் தெரியல. எனக்குப் போகணும்னுதான் தோணுச்சு. ஆனா, அம்மாக்காகவும் அக்காக்காகவும் ஒண்ணும் சொல்லல. அம்மா அன்னிக்குச் சாப்டல. சிலர் வந்து அங்க வரச் சொல்லிக் கூப்பிட்டும் அம்மா பிடிவாதமா மறுத்துட்டா. அக்கா என்னக் கூப்பிட்டு, ''அம்மாவ தனியா விடு. எதும் பேசாத''ன்னா. அப்பா மேல நிறைய தப்பு உண்டு. தன்னோட ஸ்தானத்துக்காகப் போராடி உரிமை கொண்டாடின சரோஜா சித்திய எனக்குத் தெரியும். சித்தப்பா செத்தப்ப, அவர் உடலைத் தங்களோட வீட்டுக்குதான் கொண்டு வரணும்னு தலைவிரிகோலமா சித்தி தெருவுல உருண்டு அழுது சாதிச்சிருக்கு. அம்மாக்கு ஏன் அப்படில்லாம் தோணலன்னு தெரில!

அக்கா என்ன அழைச்சிட்டுக் கோயிலுக்குப் போனப்ப, ஒரு நாள் மெள்ளமா கேட்டேன்... ''அக்கா! அம்மா ஒன்னப் பாத்து பயப்படுதோ?''

''ஏம்ல?''

''அப்பா இறந்தப்ப அவளுக்குப் போகணும்னு தோணிருக் கும்ல? எனக்கே தோணுச்சே!''

''நான் போ வேணாம்னு யாரயும் சொல்லலயே!''

''இல்லக்கா! நீ சொல்லலன்னாலும், ஒரு அதிகாரத்த மறைமுகமா செலுத்துறியோன்னு தோணுச்சுக்கா!''

''என்னடீ சொல்ற?''

''ஆமா, தோணுச்சு! நீ பேசாம கல்யாணம் பண்ணிக்கக்கா. நீ எவ்ளோ நாள்தான் கஷ்டப்படுவ!''

''பச்... இப்ப என்னாச்சு ஒனக்கு?''

''எனக்குக்கூட அப்பா செத்ததுக்குப் போணும் போலருந்துச்சு!''

''ஏன்... எனக்கு மட்டும் இல்லியா?''

''அப்ப நாம ஏங்க்கா போகல?''

அக்கா என்னை ஆழமா பாத்துட்டு, 'தெரியலயே!’ன்னா. அவளோட கண்ணு படபடன்னு அடிச்சிச்சு. ''நான் வேற ஒரு நல்ல வேல பாத்துட்டுப் போணும். அப்பதான் எல்லாத்துக்கும் விடிவு வரும்''னா. அதைச் சொல்றப்பகூட அவ இறுக்கமாதான் இருந்தா.

இதும் வேலைக்கான கடிதமாதான் இருக்கும். அதான், அவ்ளோ பதற்றம் அவளுக்கு. அம்மா அவகிட்டயே நிக்க, ''நாளக்கழிச்சி மதுரைல இன்டர்வியூ! ம்... எப்படிப் போக?''ன்னா அக்கா.

''காசு வேணுமா? வச்சிருக்கியா?''

''இல்ல, கமலாட்ட வாங்கிக்கறேன்! செருப்பு இல்லம்மா. பிஞ்சிடுச்சி. ஊக்கு குத்தி வச்சிருக்கேன். அப்புறம்... நல்ல டிரெஸ் வேணும்!''

''இந்த வேலைக்குப் போனா எவ்ளோ சம்பளம் கிடைக்கும்?''னு டக்குனு கேட்டா அம்மா.

''முப்பதாயிரம் இருக்கும்''னு அக்கா அசால்ட்டா சொன்னதும் எனக்கு பகீர்னுச்சு. அம்மா பதற்றமாகி, ''சரி, நீ ராஜி வீட்டுல தங்கிக்கோ. இந்தா, இதயும் கூட்டிட்டுப் போ''ன்னு என்னைப் பார்த்துச் சொன்னா. ''ஆமா, ஆமா... நான் கறிவேப்பில, அது இதுன்னு பேசுவ! நான் போக மாட்டேன்'' னேன். ''அட, வா! சும்மா நீட்டாத!''ன்னா மங்காக்கா. அவ உதடு குவிச்சு சொன்னது எனக்குப் பிடிச்சிருந்துச்சு.

அம்மா பக்கத்து வீட்டு கமலாக்காட்ட ஐந்நூறும், சீட்டுக்காரன்ட்ட ஐந்நூறும் வட்டிக்கு வாங்கினா. அக்கா என்னைக் கடைக்கு வரச் சொல்லுவான்னு நினைக்கவே இல்ல ''நெசமாத்தான் கூப்பிடுறியா?''ன்னேன். அவ ரொம்ப நாளைக்கப்புறம் என்னப் பாத்துச் சிரிச்சா. எனக்கு அது ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு.

அக்காகூட நடந்து போறதே ரொம்ப சந்தோஷமாருந்துச்சு.

''நல்லாருக்காடீ?''

அக்கா ஒரு செருப்பைக் காட்டி, என்னைக் கேட்டா. என்னால நம்பவே முடியல. 'ம்ம்...’னு வேகமா தலையாட்டினேன்.

''ஒனக்கு முத மாச சம்பளத்துல செருப்பு வாங்கித் தாரேன்''ன்னா அக்கா.

நான் ஒண்ணும் சொல்லல. அக்கா அந்த செருப்புப் பையை குத்தவுணர்ச்சியோடு பாத்து, கைல எடுத்துக்கிட்டது எனக்குக் கஷ்டமா இருந் துச்சு. பின்னால சுரிதார் முந்நூறு ரூபாய்க்கு வாங்கிக்கிட்டா. தாகமா இருந்துச்சு. நான் ஒண்ணும் சொல்லல. அவளே ஒரு ஆரஞ்சு ஜூஸ் அஞ்சு ரூபாய்க்கு வாங்கிக் கொடுத்தா. ''மதுரைல வேல கெடச்சிட்டா, மிச்ச காசுல நல்ல ஓட்டல்ல சாப்டலாம், கண்ணு!''ன்னா.

நான் பதில் சொல்லல. அவ என் தலையை வருடிக் கொடுத்து, ''ஒனக்கும் நல்ல துணிமணி, செருப்பெல்லாம் போடணும்னு ஆச இருக்கும்ல? சீக்கிரமே வாங்கித் தாரேன். ஒனக்கொண்ணுமே வாங்காம எனக்கு மட்டும் வாங்குறது கஷ்டமாருக்கு''ன்னா.

எனக்கு அதுகூட கஷ்டமா இல்ல ஆனா, வேற ஆளுங்க வீட்டுல தங்குறதுல எனக்குச் சங்கடம் உண்டு. அத எப்படி அம்மாட்டயோ அக்காட் டயோ சொல்ல? அப்படியே மென்னு முழுங் கிட்டேன்.

அம்மா பரபரன்னு ராஜி வீட்டுக்கு போன் பண்ணி, அக்கா வர்றதச் சொன்னா. சித்தி பொண்ணு. எனக்கு அக்கா முறை வேணும். ராஜிக்காக்கு குழந்தைகள்லாம் இல்ல.. ராஜிக்கா அக்காவோட செருப்பைப் பாத்து, ''அழகா இருக்கே, மங்கா! எங்க வாங்கின? நம்ம ஊர் மாறிடுச்சு போல''ன்னா. அக்காக்கு கொஞ்சம் பெருமையா இருந்திருக்கும்போல. சிரிச்சிக்கிட்டா. அக்கா சிரிச்சே நாளாச்சுன்னு தோணுச்சு எனக்கு.

செருப்பு

அன்னிக்கு ராஜிக்கா ஸ்பெஷலா சமைச் சிருந்தா. மங்காக்கா பெரிசா ஒண்ணும் பேசல. ராஜிக்காவயும் அந்த வீட்டோட நேர்த்தியையும் அதே பார்வையால பாத்துட்டே இருந்தா. ராஜிக்கா சாப்பிட்டதுக்கு அப்புறம் வீட்டை ஒழிச்சுவைக்கிறப்ப, மங்காக்கா செருப்பையும் என்னோடதையும் ஒரு ரேக்ல வச்சா.

''மங்கா! ஒன் செருப்ப நான் சுட்டுறுவேன்னு நெனைக்கேன்!''

''அவ்ளோதானேக்கா! வச்சிக்க?''ன்னுட்டு சட்டுன்னு, ''செருப்ப மட்டும்தான கேப்ப. என்னய மாதிரி வாழ்க்கையக் கேக்கமாட் டேல்ல?''ன்னு பெரிசா சிரிச்சா அக்கா. அவ இப்படில்லாம் சிரிச்சு நான் பாத்ததே இல்ல. ராஜிக்காவே ஒரு தடவ அதிர்ந்து, ''இந்த வேல கெடச்சி நீ நல்லா வருவ மங்கா! இதுக்கு மும்மடங்கு வெலைக்கு எனக்கு செருப்பு வாங்கிக் கொடுப்ப!''ன்னா.

அன்னிக்கு ராத்திரி, எனக்கு அவ்வளவா தூக்கமே வரல. ராஜிக்கா சமைச்ச களைப்புல நல்லா தூங்கிட்டா. மங்காக்கா ஜன்னல் பக்கமா நின்னு வெளியே பாத்துட்டு இருந்தா. எதப் பாக்கான்னு தெரியல. ஒருவேளை செருப்ப பாக்கலாம்னு எனக்குத் தோணுச்சு. செருப்பு வாங்கின பிறகு, மங்காக்காக்கு ஒருவிதமான மிடுக்கு வந்த மாரி இருக்கு. அந்த மிடுக்குல ஒரு அதிகாரம் இருக்கு. ஒரு செருப்பு இவ்ளோ அதிகாரத்தத் தருமான்னும் தோணுச்சு.

''தூங்கலயாக்கா?''ன்னேன்.

''இல்ல. தூங்கணும்''னு வந்து படுத்துக்கிட்டா.

''என்னக்கா யோசிக்கிறே?''ன்னேன்.

''இல்ல... வேல கெடச்சா, கெடச்சான்னு எல்லாம் செஞ்சாச்சு. ஒருவேள கெடைக் கலன்னா? அதான் யோசிச்சேன்..!''

எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. அக்காவால முழுசா எந்த நொடியும் சந்தோஷமா இருக்க முடியாதுன்னு தோணுச்சு.

எப்ப தூங்கினேன்னு தெரில. காலைல எழுந்து கதவத் திறந்த ராஜிக்கா, ''ஐயோ!''ன்னு கத்தினா. அக்காவும் நானும் பதறியடிச்சு எழும்பி, கதவுப் பக்கம் போனப்ப, ஒரு குட்டி நாயை ராஜிக்கா அடிச்சிட்டு இருந்தா. அதோட வாயில அக்காவோட செருப்பு பிஞ்சு இருந் துச்சு. அதப் பாத்து அக்கா வெடிச்சு அழ ஆரம்பிச்சா. அக்கா அழுறத மிரண்டு போய்ப் பாத்த ராஜிக்கா ஓடி வந்து, ''செருப்புதான... அழாத! வுடு மங்கா, வுடு!''ன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருந்தா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism