Published:Updated:

கைமுறுக்குப் பாட்டி

சிறுகதை: என்.ஸ்ரீராம்

கைமுறுக்குப் பாட்டி

சிறுகதை: என்.ஸ்ரீராம்

Published:Updated:

சிறுகதை: என்.ஸ்ரீராம்
ஓவியங்கள்: ஜீவானந்தன்  

ருள்வெளி மெல்ல வெளுத்துக் கொண்டிருந்தது. பெரியப்பா ஆசாரத் திண்ணையில் படுத்திருந்த இவனை எழுப்பி, கட்டுத்தரைக்குக் கூட்டி வந்தார். மூத்திரக் கவிச்சி வீசிய தீனிக்காடி அருகில் சாணிக் குத்தாரிகள் மிதிபட்டுக்கிடந்தன. ஆளைக் கண்டதும், அசை வாங்கிக்கொண்டு படுத்திருந்த மூன்று ஜோடி எருதுகளும் திடும்மென எழுந்து நோக்கின.

பெரியப்பா காரியையும், மயிலையையும் அவிழ்த்து சவாரி வண்டியில் பூட்டினார். போர்ப்பட்டறையிலிருந்து இவன் வைக்கோலை உருவி வந்து வண்டிக்குள் பரப்பி, அதன் மேல் ஏறி உட்கார்ந்தான். வலவன் நீர் வார்த்தது. சுப சகுனம். அப்போது பெரியம்மா வெளிநடை தாண்டி வாசலுக்கு வந்து நின்று சப்தமாகப் பேசினாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைமுறுக்குப் பாட்டி

''மாட்டுல பாலக்கறந்து பார்த்துட்டுப் பணத்தக் குடுங்க... ரெண்டு படியாவது இருக்கணும். அந்த ஆளு மடியக் கட்டி வெச்சி ஏமாத்திறப் போறான். அப்புறம் மாட்டுக்கன்னு காலக்கீல தொப்பக்கட்டையில சிக்க வெச்சு முறுச்சுக்கப் போவுது. சூதானமா வண்டியில தூக்கி வெச்சுக் கொண்டாங்க...''

பெரியப்பா பதிலேதும் கூறாமல், இடவனின் வாலை முறுக்கினார். வண்டி நகர்ந்தது. பெரியம்மா மேலும் பேசுவது கேட்டது.

''வெட்டிநாயம் பேசிக்கிட்டு உக்காந்துராதீங்க... வெயிலுக்கு முன்னால வந்து சேந்துருங்க...''

வண்டி தென்னஞ்சாவடி இட்டேரியில் சென்று, தோட்டத்துக் கடவைக் கடந்து, தார்ச்சாலையில் கிழக்கு முகமாக ஏறியது. இவன் பெரியப்பாவிடம் கேட்டான்...

''கறவ மாடு வாங்கினது எந்தூரு பெரியப்பா?''

''காட்டூருடா..?''

''அப்படின்னா ஆத்தத் தாண்டி கைமுறுக்குப் பாட்டி ஊரு வழியாத்தான் போறோம்... இல்ல பெரியப்பா?''

பெரியப்பா சட்டென திரும்பி இவனைப் பார்த்தார்.

''ஏன்டா... உனக்கு இன்னும் கைமுறுக்கு பாட்டியெல்லாம் ஞாபம் இருக்காடா?''

''ம்ம்ம்...''

***

அந்த வருஷத்தின் கடைசி பெருமழை கொட்டித் தீர்த்த மார்கழி சாயங்காலம். ஆங்காங்கே நீர் தேங்கிய ஈரநிலத்தின் மீது மஞ்சள் வெயில் இறங்கியிருந்தது. தோட்டத்து வீட்டிலிருந்து வடக்கே செங்காட்டூர் செல்லும் ஒற்றையடித் தடத்தில் இவன் நொங்கு வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். அப்போது தூரத் தில் கூனல் முதுகுடன், கையில் ஊன்றுதடி பிடித்து ஓர் உருவம் அசைந்து அசைந்து வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருப் பதைப் பார்த்தான். அவசரமாக நொங்கு வண்டியைத் திருப்பினான். வாழைத்தோப்பு பூச்செடிப் பாத்திக்குள் தாவணி மடி கூட்டி கனகாம்பரப் பூ பறித்துக் கொண்டிருந்த துளசிமணியக்காவிடம் ஓடினான்.

''அக்கா, அக்கா... கைமுறுக்குப் பாட்டி வந்துக்கிட்டு இருக்கு!''

''நெஜமாலுமாடா..?''

துளசிமணியக்கா நம்பாதவளாக வடக்கே பார்த்தாள். நீர் சொட்டிக் கொண்டிருந்த விரிந்த தலைவாழை மடல்களை ஒதுக்கியபடி வரப்பு ஏறி வெளியே வந்தாள். தட்டாம்பூச்சிகள் நிலத்தின் மேலாகப் பறந்து திரிந்தன. இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். அதற்குள் கைமுறுக்கு பாட்டியும் வந்து, வெளித்திண்ணையில் அமர்ந் திருந்தாள். தண்ணீர்ச் சொம்புடன் நடைக்கு வெளியே வந்த பெரியம்மா கேட்டாள்...

''என்னாச்சு... மருமக சோறுபோட மாட்டேன்னு சொல்லிட்டாளா... அதுக்குள்ள கௌம்பிட்டிங்க?''

''இல்லம்மிணி... நம்ம எடத்துக்கு போயி நாம மொடங்கினாத்தான் நல்லது...''

''மழக்காலம்... மசங்க நேரம் வேற... எதுக்கு ஆத்தத்தாண்டி போறீங்க... வெள்ளம் வருதுன்னு பேசிக்கிறாங்க. கம்முன்னு பேசாம இருங்க. வெடியால போலாம்..''

கை முறுக்குப் பாட்டி யோசித்தபடி தண்ணீர்ச் சொம்பை வாங்கி நான்கைந்து மிடக்கு குடித்துவிட்டு, சொம்பைத் திண்ணையோரம் வைத்தாள். மஞ்சள் வெயிலும் சட்டென மறைந்துவிட்டது. துளசிமணியக்கா பெரியம்மாவின் காதில் கிசுகிசுத்தாள்.

''பாட்டிய கைமுறுக்கு சுட்டுக் குடுக்கச் சொல்லும்மா..!''

கைமுறுக்குப் பாட்டிக்கு காது கூர்மை.

''அல்லே... கொமரி... இன்னிக்கு நா ராத்தங்குனா அவ்வளவு தான்... வெள்ளாடு மேய்க்கற கெழவனுக்கு கோவம் பொத்துக் கிட்டு வந்துரும். சீவமாத்துல வெளாசி என்னை வீதியில புடுச்சுத் தள்ளீருவாரு. காலம் போன கடேசியில நா எங்க சீராட்டுப் போவேன், சொல்லு!'' கைமுறுக்கு பாட்டி சிரித்துக் கொண்டு எழுந்தாள். இவன் பாட்டி புறப்பட்டுவிட்டதாக நினைத்தான். துளசிமணியக்காவின் முகம் சோர்ந்துவிட்டது. பாட்டி திரும்பி தடுமாற்றத்துடன் வாசற்படியேறி நடைக்குள் நுழைந்தாள். ஆசாரத் திண்ணையில் போய் உட்கார்ந்து கட்டளையிட்டாள்... ''துளசீ.. நாலு படி பச்சரிசிய ஊற வெய்யி...'' துளசிமணியக்கா முகத்தில் பூரிப்பு. சமையற் கட்டுக்குள் ஓடினாள். பித்தளை அண்டாவைத் திறந்து, வல்லத்தில் பச்சரிசியை மூட்டினாள். சம்படத்து நீரில் ஊற வைத்துவிட்டு வந்தாள்.

''மாட்டு வெண்ணெய் ஓர் ஒழக்கு!'' துளசிமணியக்கா மறுபடியும் சமையற்கட்டுக்குள் ஓடினாள். உரியில் தொங்க விட்டிருந்த ஈயக் கலயத்திலிருந்து ஆழாக்கில் வெண்ணெய்யை எடுத்து வந்தாள். அதன்பின்பு வேலைகள் துரிதமாகவே நடந்தன. கட்டுத்தரை வேலைகள் முடிந்து வந்ததும், பெரியப்பா சவாரி வண்டியைப் பூட்டி கோவில்பாளையம் முத்துக்கோனார் கடைக்குப் புறப்பட்டார். துளசிமணியக்கா இதர சாமான்களின் பட்டியலைப் பெரியப்பாவிடம் கொடுத்து விட்டாள். பெரியம்மா மர்பி ரேடியோ மேலிருந்த பேட்டரி லைட்டை எடுத்து இவனிடம் நீட்டிச் சொன்னாள்...

''நாஞ்சொன்னேன்னு போயி, கந்தாயியைக் கூட்டிட்டு வா! தடம்வழியில பூச்சி புழுவு கெடக்கும், பாத்துப் போடா...''

இவன் காலடியில் வெளிச்சம் பாய்ச்சியபடி தென்னஞ்சாவடி வாய்க்காலைத் தாண்டினான். எப்போதும் இவனுக்கு இருளில் தனியாகப் போவதில் பெரிய மனுஷன் தோரணை வந்துவிடும். முன்பனிக்காலம். வரப்பு அருகுகளில் பனி கோத்துவிட்டது. தோட்டத்தின் கிழக்கோடியில் கருத்த நெடும்பனைகள் வரிசையிட்டு நின்றன. தடத்தில் விழுந்து சிதறியிருந்த ஆமரப்பாளைகளை மிதித்தபடி இவன் அய்யாவு மூப்பனின் குடிசையை அடைந்தான். சுரைக்கொடி படர்ந்த பனையோலைக் கூரையில் மரமேறும் ஏணி சார்த்தி வைக்கப் பட்டிருந்தது. வாசல் கொப்பரையில் இஞ்சிக்கிடந்த தெளுவின் வாசனை வீசிற்று. குடிசைக்குள்ளிருந்து குனிந்து வெளிவந்த கந்தாயி இவனைப் புரியாமல் பார்த்தாள்.

''ஏது சின்னப்புனு இந் நேரத்துல?''

''கைமுறுக்குப் பாட்டி வந்திருக்கு..!'' கந்தாயி புரிந்து

கொண்டவள் போலப் பதிலளித்தாள்.

''நீ போப்பனு.. மூப்பனுக்குச் சோறு போட்டதியும் நா ஓடியாறேன்...''

கைமுறுக்குப் பாட்டி

சோளத்தோகைகள் உராய்ந்து முறைச்சல் எழுப்பின. காலடி அரவம் கண்டதும் கத்திக்கொண்டிருந்த இராப் பூச்சிகள் திடீரென அடங்கின. இவன் வீடு திரும்பியபோது, பெரியப்பா மளிகைக் கடை போய்விட்டு வந்திருந்தார். ஆசாரத்து வாசலில் மணலைப் பரப்பி கல் அடுப்பு கூட்டினார். பெரியம்மா வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய்யை ஊற்றினாள். விறகைப் பற்ற வைத்தாள். எண்ணெய் கொதித்து வரும்போது துளசி மணியக்கா கந்தாயி ஆட்டிய பச்சரிசி மாவைத் தூக்கி வந்து கிட்டத்தில் வைத்தாள். கை முறுக்குப் பாட்டி மாவை உள்ளங்கையில் அள்ளி நாம்பி பிழியத் துவங்கினாள். சரம் சரமாக இறங்கும் மாவுத்தாரை வளைந்து நெளிந்து சங்கிலி போன்று ஒன்றுக்குள் ஒன்றாகக் கோத்துக்கொண்டு கைமுறுக்காக எண்ணெய்யில் மிதந்து பொரிந்தது. முதல் கைமுறுக்கு யாருக்கு என்பதில் இவனுக்கும் துளசிமணியக்காவுக்கும் போட்டி நிலவியது. கைமுறுக்குப் பாட்டி முதல் முறுக்கை துளசிமணியக்காவிடம் கொடுத்து, இவனைச் சமாதானப்படுத்துவது போலச் சொன்னாள்...

''விடுறா... பிறத்தியா வீட்டுக்குப் போற புள்ள... எத்தனை நாளைக்கு இங்கிருக்கப் போறா... வெச்சுக்கிட்டுமே..?''

இந்தக் கைமுறுக்கு சுடும் வைபோகம் எப்படியும் ஆறு மாதத்துக்கு ஒருமுறையாவது நடந்துவிடும். அன்று பங்குனி உச்சி வெயில். கைமுறுக்குப் பாட்டி வடக்கே இருந்து வந்து வெளித் திண்ணையில் அமர்ந்தாள். இவனிடமோ, துளசிமணியக்காலிடமோ எதுவுமே பேசவில்லை. பெரியம்மாவும் பெரியப்பாவும் வந்த பின்னும்கூட பாட்டி மௌனமாகவே இருந்தாள். பெரியம்மா கேட்டாள்...

''குடிக்க ஏதாச்சும் கொண்டு வரட்டுமா?''

கைமுறுக்குப் பாட்டி இருந்திருந்தாற்போல் அழ ஆரம்பித்தாள்.

''என்ன நடந்திச்சுன்னு இப்பிடி அழறீங்க..? மருமக கீது ஏதாச்சும் சொல்லிட்டாளா..?''

''இல்லம்மிணி! நா எம்மகன எப்படியெல்லாம் வளர்த்தேன் தெரியுமா... நெகக்கண்ணுல ஒரு அழுக்குப் படாம... ஆனா இந்த நாயி, ஆரு பேச்சையும் கேக்காம இந்த முண்ட பின்னால ஓடி வந்துட்டான். சேரி... ஓடி வந்ததுதாம் போவுது, ஊட்டோட மாப்புள்ளையா போவலாமா..? அறிவு வேண்டா? இப்ப சீரழிஞ்சு சின்னப்படறான். இந்த வேடைகாலத்துல குத்தவ தோட்டமும் ஒட்ட முடியாம, பொண்டுபுள்ளையையும் வெச்சுக் காப்பாத்த முடியாம...''

கைமுறுக்குப் பாட்டியினால் தொடர்ந்து பேசமுடியவில்லை. கண்களில் திரண்ட கண்ணீர்த் துளிகளை முந்தானையால் துடைத்துக்கொண்டாள். பெரியப்பா இவனை வாழைத்தோள் பக்கம் கூட்டிப் போனார்.

''மாப்புள்ளைய நான் சொன்னேன்னு போயி கூட்டிட்டு வா... போ...''

இரவு வெகு நேரம் வரை குப்பணக் கவுண்டர் பெரியப்பாவுடன் கட்டுத்தரையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். மறுநாள் விடியக் காலை கருக்கலிலேயே வண்டிச் சாய்ப்பிலிருந்து மொட்டை வண்டியை வெளியே இழுத்து நிறுத்தினார். வைக்கோலைக் கருக்கி பட்டாசக்கர அச்சுக்கு 'கீல்’ போட்டார். பூவரசம் பூட்டில் முளைக் குச்சி செதுக்கி அடித்தார். தென்னந்தடுக்கு பின்னி பலகைக்கு பதிலாக முனைக்குச்சியில் வைத்துக் கட்டினார். அதற்கு அடுத்த தினம் குளக்கரையிலிருந்து வண்டல் மண் அடிக்க மொட்டை வண்டியைப் பூட்டிவிட்டார். இவன் பள்ளிக்கூடம் விட்ட சாயங் காலம் நேராக நல்லிமடத்திலிருந்து குளக்கரைக்கு ஓடி வந்தான். கருவேலம் மரங்களிடையே கோவிந்த மாமாதான் வண்டலை வழித்து வண்டிக்கு பாரமேற்றிக்கொண்டிருந்தார். வண்டி கிளம்பும்போது இவனைத் தூக்கி மண்குத்தாரி மேல் உட்கார வைத்தார். பட்டாசக்கரங்கள் இட்டேரி குறுமணலில் பதிந்து நரநரவென சப்தமெழுப்பிக்கொண்டு போயின. அந்தரத்தில் உட்கார்ந்து பயணிப்பது போல இப்படிப் பயணிப்பதில் இவனுக்கு அலாதியான ஒரு திகில் தன்மையும் இருந்தது.

அன்றும் தோட்டத் துக்கு வந்து வண்டி நின்ற போது, இவன் மண்குத் தாரி மீது இருந்து கீழே குதித்து இறங்கினான். ஏற்கெனவே நிலத்தில் கொட்டப் பட்டுக் கிடந்த மண்குத்தாரி மீது ஏறி தாவித் தாவி விளையாண்டு கொண்டு வீட்டை அடைந்தான். ஒறம்பறைச் சனங்களாக இருந்தார்கள். இவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பெரியம்மா விடம் கேட்டபோது, துளசிமணியக்காவைப் பெண் பார்க்க வந்திருப்ப தாகச் சொன்னாள். மாப்பிள்ளை மாநிறமாக கோவிந்த மாமா சாயலி லேயே இருந்தார். நிச்சய தார்த்தத் தேதி குறிக்கப் பட்டது. அன்றிரவு நடுச் சாமத்தில் தூக்கம் கலைந்து இவன் எழுந்து பார்த்தபோது ஆசா ரத்தில் வைத்து துளசி மணியக்காவை பெரி யப்பாவும் பெரியம்மாவும் திட்டிக் கொண்டிருந்தனர். துளசிமணியக்கா தூணில் சாய்ந்தவாறே அழுதுகொண்டிருந்தான். முதல் கோழி கூப்பிடும் நேரம், பெரியம்மா அலறிய அலறலில் வீடே விழித்துக்கொண்டது. உள் அறைக் கட்டிலில் துளசிமணியக்கா வாயில் நுரை தள்ளியபடி கிடந்தாள். மூச்சு வெடுக்கெடுக்கென இழுத்துக்கொண்டிருந்தது. பெரியப்பா பதற்றத்தில் அய்யாவுமூப்பன் வீட்டை நோக்கி ஓடினார். கார் வந்தது. துளசிமணியக்காவை தாராபுரம் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிப் போனார்கள். விடிந்து வெளிச்சம் பரவியபோது, வாசலில் ஆட்டாங்கல்லோரம் அம்மியில் அரளிவிதை அரைத்திருப்பதை இவன் கண்டான்.

வெயில் ஏறிய பின், பெரியப்பா தோட்டத்துக்கு வந்தார். வந்த வுடன் சவாரி வண்டியைப் பூட்டி னார். இவனையும் ஏறிக்கொள்ளச் சொன்னார். எருதுகளைத் துரத்தினார். தெற்கே உப்பாறு தாண்டி நஞ்சியம்பாளையம் போய், வண்டியை நிறுத்தினார். விஸ்தீரமான வீதி, வசதியான வீடு. மாப்பிள்ளையின் அப்பா கும்பிட்டபடி எதிர்கொண்டார்.

''வாங்க, சம்பந்தி..!''

பெரியப்பா வாசலிலேயே நின்றுகொண்டார்.

வெகுநேரம் எதுவும் பேசாமல் சிந்தனை வயப்பட்டவராகவே இருந்தார். மாப்பிள்ளையின் அப்பா பேசினார்... ''ஏதாச்சும் அவசர சோலியா சம்பந்தி?''

''நாம மோசம் போயிட்டோம்..''

''புரியற மாதிரி சொல்லுங்க?''

''துளசிமணி மருந்தக் குடிச்சுட்டா..!''

''அய்யய்யோ... என்ன நடந்திச்சு சம்பந்தி..?''

''என் தோட்டத்துல வண்டிக்கு வண்டல் மண் வழித்துவுடற கோவிந்தன்... வெத்துப் பையன்... தெல்லவாரி... அவனத்தான் கட்டிக்குவேன்னு அடம்பிடிச்சா. திட்டிட்டேன்... படுபாவிப் புள்ள இப்பிடிப் பண்ணிப்புட்டா...''

''ஆயிரம் பத்திரிகை அடிச்சுக் குடுத்தாச்சு. இப்ப வந்து இப்படிச் சொன்னா எப்புடி சம்பந்தி... நான் ஆரு முகத்துல முழிப்பேன்...''

பெரியப்பா பதில் பேச முடியாமல், தலை கவிழ்ந்து நின்றார்.

''பொகையில விரிஞ்சா போச்சு, பொட்டப்புள்ள சிரிச்சா போச்சுன்னு செலவாந்திரம் சொல்வாங்க. பொட்டப்புள்ளைய வளர்க்கறது பெரிசில்ல சம்பந்தி. நல்ல எடமாப் பாத்துக் கட்டிக் குடுக்கணும். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல. மருமககிட்ட எடுத்துச்சொல்லிப் பாருங்க.''

மாப்பிள்ளையின் அப்பா துளசிமணியக்காவின் உடல்நிலை குறித்து எதுவும் விசாரிக்காமல் விட்டது இவனுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. பெரியப்பா தோட்டத்துக்கு வந்து சவாரி வண்டியை அவிழ்த்துவிட்டதும், நேராக மண்குத்தாரிகளிடையே புகுந்து நடந்தார். இவனும் பின்தொடர்ந்தான். குப்பணக் கவுண்டர் மொட்டைவண்டியைத் திருப்பி நிறுத்தி, வண்டல் மண்ணைக் கொட்டிக்கொண்டிருந்த இடத்துக்குப் போய் நின்றார். இவனைப் பார்த்துச் சப்தமாகச் சொன்னார்...
''உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணினது போதும். கௌம்பச் சொல்லுடா!''


''உங்க மக ஆசப்பட்டதுக்கு எம்மகன் என்ன பண்ணுவான்..?''

''வெட்டிப் பேச்சு வேண்டா முன்னு சொல்லுடா!''

குப்பணக் கவுண்டர் மொட்டை வண்டியை அவிழ்த்துவிட்டார். எருதுகளை நுகத்தடியில் கட்டி னார். சாட்டையை மண்குத்தாரி மீது ஓங்கிக் குத்தினார். வடக்கே செங்காட்டூர் செல்லும் ஒற்றையடித் தடத்தில் இறங்கி நடந்தார். பொழுது நடுவானில் ஏறியிருந்தது. உச்சிவெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்டல் மண்குத்தாரிகள் கற்சிலைகள் போலக் கிடந்தன.

விடிந்துவிட்டது. கிழக்கு நோக்கி ஓடும் அமராவதி ஆற்றில், நீர் இடுப்பளவுக்கு மேல் இருந்தது. வண்டி நீருக்குள் இறங்கியதும், எருதுகள் நீர் அருந்தின. வாய் நுரைகள் நீரில் மிதந்து போயின. பச்சைக்கோரைகள் வளர்ந்திருந்த மணல்திட்டில் நீர்க்காகங்கள் உட்கார்ந்திருந்தன. பெரியப்பா சப்தமிட்டு எருதுகளை வேகப் படுத்திவிட்டு, இவனிடம் திரும்பினார்...

கைமுறுக்குப் பாட்டி

''ஏன்டா... கைமுறுக்குப் பாட்டிய ஒரு எட்டு பாத்துட்டுதான் போலாமாடா..?''

எட்டு வருடங்களுக்குப் பின்பு பெரியப்பா மனசு மாறியது இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சரியெனத் தலையசைத்தான் வண்டி அக்கரை மேடேறிற்று. பெரியப்பா மதுக்கம்பாளையத்தின் குறுகிய வீதியில் வண்டியை ஓட்டிச் சென்றார். இருபுறமும் எறவாணத் திண்ணையுடன் கூடிய வீடுகளாகவே இருந்தன. சிவப்புச் செம்பருத்தி பூத்திருந்த ஒரு வீட்டின் முன்பு பெரியப்பா வண்டியை நிறுத்தி குதித்திறங்கினார். இவனும் இறங்கினான்.

நடைக்குள் இருளாக இருந்தது. பெரியப்பா பழக்கப்பட்டவர் போல உள் நுழைந்தார். முன் அறையில் கயிற்றுக் கட்டில் மேல் கைமுறுக்குப் பாட்டி படுத்திருந்தாள். கட்டிலை ஒட்டிய மரத் தூணில் கைத்தடி ஊன்றியிருந்தது. சாதம் காய்ந்த பித்தளை வட்டிலும், மூத்திர நாற்றம் வீசும் மண் கலயமும் கட்டிலின் கீழாகக் கிடந்தன. பெரியப்பா அருகில் போனார்.

''நல்லா இருக்கீங்களா?''

கைமுறுக்குப் பாட்டி நடுங்கும் கைகளால் துழாவி, கைத்தடியைப் பற்றினாள். பின், கைத் தடியின் ஆதரவில் எழுந்து உட்கார்ந்தாள். கூன்முதுகும் தலையும் சேர்ந்து நடுங்கின. பாட்டிக்கு அடையாளம் தெரியவில்லை. வெறித்து வெறித்துப் பார்த்தாள். இவன் யார் என்ற விவரத்தைச் சொன்னான். பாட்டியினால் ஒன்றும் பேச முடியவில்லை. கண்களி லிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது.

''பேரன் லாரிக்குப் போறான். அவம் பொண் டாட்டி கொண்டு வந்து வேள தவறாம சோறு போட்டுர்றா. எனக்கு ஒரு கொறையும் இல்ல...'' மீண்டும் மௌனம். பாட்டி அழுதாள்.

'கூத்துவன் கூப்பிடறான். நா ரொம்ப நாள் தாங்க மாட்டேன்...''

பெரியப்பா நடைப்பக்கம் நகர்ந்தார். இவனும் பின்னே போனான். பாட்டி தன் நடுங்கும் குரலில் கூப்பிட்டாள். இருவரும் நின்று திரும்பிப் பார்த்தனர்.

''கைமுறுக்கு திங்கலாமுன்னு இருக்கு... ராப்பகலா நாக்குல எச்சிலு ஊறுது... நத்திக் கெடக்கேன்...''

சவாரி வண்டி காட்டூரில் வைக்கோல் போர்ப்பட்டறை கொண்ட கட்டுத்தரைக்குள் நுழையும்வரை பெரியப்பா எதுவும் பேசவேயில்லை. வண்டியிலிருந்து இறங்கியதும் மாட்டின் பின்னங் காலை அணைத்துப் பால் கறந்து பார்த்தார். பின், அங்கிருந்த ஆட்களுடன் சேர்ந்து செம்மை படர்ந்த இளங்கிடாரிக் கன்றைத் தூக்கி வண்டி நடுவில் கிடத்திக் கட்டினார். இவன் பின்பக்கம் ஏறி அமர்ந்து, மாட்டின் தலைக்கயிற்றைப் பிடித்துக் கொண்டான். ஏதோ வீட்டில் கோழிக்கறி சமைக்கும் வாசனை காற்றோடு வந்தது. வண்டி மதுக்கம்பாளையத்தைக் கடந்தபோது பெரியப்பா தழுதழுத்த குரலில் பேசினார்...

''துளசிய கோவிந்தனுக்கே கட்டி வெச்சிருக்கலாம். அவளும் நல்லா இருந்திருப்பா... இந்த வீடும் நல்லா இருந்திருக்கும்.'' பெரியப்பா கண்கலங்கி இவன் பார்த்ததேயில்லை. இவனுக்குச் சங்கடமாகப் போய்விட்டது. வண்டி ஆற்றைக் கடந்து மறுகரை ஏறும்போது, பெரியப்பா மறுபடியும் பேசினார்...

''கைமுறுக்குப் பாட்டியப் பாத்த விசயத்தை ஊட்டுல ஆருகிட்டேயும் சொல்லிராதே!''

நான்கு தினங்கள் போயின. ஆகாயமெங்கும் கருத்த முகில்கள் மேற்குப் பார்த்து நகர்ந்தன. வெயில் அடங்கிய இளமதியம். பெரியம்மாவும் பெரியப்பாவும் 'இழவு’ ஒன்றுக்குக் கிளம்பிப் போய்விட்டனர். துளசிமணியக்கா மட்டுமே வீட்டில் இருந்தாள். இவன் கைமுறுக்குப் பாட்டியைச் சந்தித்துவிட்டு வந்ததை ஒன்றுவிடாமல் கூறினான். துளசிமணியக்கா சீக்கிரத்தில் கைமுறுக்கு சுட்டு போசியில் அடுக்கி, இவனிடம் கொடுத்தாள். இவன் சைக் கிளை எடுத்துக்கொண்டு கைமுறுக்குப் பாட்டியின் வீடு போனான். கைமுறுக்குப் பாட்டி கட்டிலில் எழுந்து உட்கார்ந்தவாறே, ஏதோ முனகிக்கொண்டிருந்தாள். இவன் போசியைத் திறந்து கைமுறுக்கு ஒன்றை எடுத்து நீட்டினான். கைமுறுக்குப் பாட்டி பொக்கை வாயில் சிரித்தாள்.

''ஊருக்கெல்லாம் கைமுறுக்கு சுட்டுப் போட்டவ இந்தக் கெழவி. இத்தன காலத்துக்கப்புறம் கைமுறுக்கு திங்கவா ஆசப்படுவேன்... சாவறதுக்குள்ள துளசிமணிய ஒரு தடவயாவது இந்தக் கண்ணால பாத்துரலாமுன்னு அப்படிச் சொன்னேன். என்னோட இந்தக் கைமுறுக்கு பக்குவத்த அவளுக்கு மட்டுமே கத்துக் குடுத்திருக்கேன். அவ நிச்சயம் கைமுறுக்கு சுட்டுக்கிட்டு என்னப் பாக்க ஓடி வந்துருவான்னு நெனைச்சேன்...''

கைமுறுக்குப் பாட்டி விரக்தியில் மோட்டுவளையை வெறிக்க ஆரம்பித்தாள். இவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அப்போது நடைப்பக்கம் திடீரென நிழலாடியது.

கதவைப் பிடித்துக்கொண்டு கோவிந்த மாமா நின்றிருந்தார். இவன் ஒரு கணம் என்ன செய்வது என யோசித்தான். சட்டென கைமுறுக்கை எடுத்து நீட்டினான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism