Published:Updated:

பக்கத்து வீட்டு குதிரை

சிறுகதை: வா.மு.கோமு

பக்கத்து வீட்டு குதிரை

சிறுகதை: வா.மு.கோமு

Published:Updated:

சிறுகதை: வா.மு.கோமு
ஓவியங்கள்: மகேஸ்  

நான் சுரேஷ்குமார். திருப்பூர்வாசி. தனி மாவட்டமாக திருப்பூர் பிரிக்கப்பட்டதற்கு முன்பே இந்த நகரில் நான் பதினெட்டு வருட காலம் வாழ்ந்து சலித்திருக்கிறேன். திருப்பூரில் எந்தெந்த சந்துகளில் அரசாங்கப் பள்ளிகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் என் படிப்புக்காக நான் சென்றிருக்கிறேன். ஆக, பெரிய படிப்பு படித்த புத்திசாலி என்று என்னை உடனே கணக்குப் போட்டுவிடாதீர்கள்.

'புத்தர் போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றார்’ என்ற ஒரு வரியை பதினெட்டு முறை சொல்லிப் பார்த்துவிட்டு, ஒரு நாள் கழித்துக் கேட்டீர்கள் என்றால், 'புத்தர் ஆலமரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றார்’ என்று சட்டெனச் சொல்வேன். ஏனென்றால், அனுப்பர்பாளையத்தில் என் வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளி, ஆலமரத்தடியில்தான் பல காலமாக அமர்ந்திருக்கிறார் பிள்ளையார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பக்கத்து வீட்டு குதிரை

என் ஞாபக மறதியை முன்னிட்டு, மருந்துக் கடைகளில் கிடைக்கும் கேப்சூல்களில் இருந்து மிட்டாய்கள் வரை சப்பிப் பார்த்துவிட்டேன். என் பயமெல்லாம், ஒரு நாள் என் அம்மாவிடமே, 'நம்ம வீட்டுக்குள் வந்துட்டு போயிட்டு, சாப்டுட்டு, தூங்கிட்டு இருக்காரே... இந்தக் கண்ணாடி போட்ட மனுசன் யாரும்மா?’ என்று அப்பாவைப் பற்றியே கேட்டுவிடுவேனோ என்பதுதான்.

அப்பா பனியன் கம்பெனி ஒன்றில் கணக்காளராகவே இத்தனை வருட காலத்தையும் ஓட்டிவிட்டார். அவர் கணக்கில் புலியாக இருக்க வேண்டும். அதனால்தான் அவர் தாக்குப்பிடித்துக்கொண்டிருக்கிறார் என்று யோசித்திருக்கிறேன். அவர் மகனான எனக்கு, கணக்கு என்றால் வயிற்றில் உடனே புளி கரையும். அவரிடம் இயல்பாகவே இருக்கும் நற்பண்புகளில் ஒன்றுகூட என்னிடம் இல்லாமல் போனது துரதிர்ஷ்டம் என்று என் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருப்பார்.

அம்மாவுக்கு நான், 'ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு.’ வீட்டில் நான் ஒருவன் மட்டுமே ராமசாமியை அப்பாவென்றும், சரஸ்வதியை அம்மாவென்றும் அழைத்தபடி இருக்கிறேன். ஒரு தம்பி இருந்திருந்தால் 'தம்பியுடையான் படைக்கஞ்சான்’ என்று சிக்கண்ணா கல்லூரியில் ஆறு மாத படிப்புக்குக்கூடச் சென்றிருக்க மாட்டேன்.

இந்த நேரம் பாகத் தகராறு போட்டு வீட்டின் நடுவில் சுவர் எழுப்பி, சேரன் பாண்டியனாக மாறியிருப்போம். நல்லவேளை, அப்படியெல்லாம் பக்கத்துத் தெருவில்தான் நடக்கிறது. அண்ணனும் தம்பியும் தங்களின் வயதை மறந்து அடிக்கடி சாலையில் கட்டி உருண்டு காதைக் கடித்துக்கொள்வதெல்லாம் நடந்துகொண்டேயிருக்கிறது.

மனிதனாகப் பிறந்தால் முப்பத்தெட்டு தொழில்கள் செய்திருக்க வேண்டும் என்று என் நண்பர்கள் அடிக்கடி சொல்வார்கள். நான் முதன்முதலாக கல்லூரி வாழ்வை முடித்துக் கொண்டு வந்த பிறகு, அனுப்பர்பாளையத்திலேயே ஒரு லேத் மிஷினில் டர்னராக போய்ச் சேர்ந்துகொண்டேன். அங்கு என் பிழைப்பு ஆறு மாத காலம் ஓடிற்று. ஒரே ஒருநாள் என் எஜமான் ஃபீஸ் இல்லை என்று வெல்டிங்கில் அமர வைத்தார். நானும் பிரியம் சந்தோசமாக பர்ர்ர்... பர்ர்ர் என்று நான்கு மணி நேரம் அமர்ந்துவிட்டேன். எனக்கு அந்த வெளிச்சமும் ஒட்டும் வேலையும் பிடித்திருந்தது.

அன்றிரவு, எனக்குக் கண்கள் காலையில் குருடாகிவிடும் என பயம் பிடித்துக்கொண்டது. நான் படுக்கையில் துடிப்பது கண்டு அம்மா செய்வதறியாமல் வீட்டுக்குள் அங்கும் இங்கும் ஓடி தடுக்கி விழுந்துகொண்டிருந்தாள். கண்கள் இரண்டிலும் யாரோ ஒரு கொத்து மணலை நிரப்பி வைத்துவிட்டுப் போனதுபோல இருந்தது. இழவு வீட்டில் போய் கதறி அழுதவன்போல கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வடிந்தபடி, இல்லை யில்லை... ஊற்றாய் ஒழுகியபடி இருந்தது.

'அம்மா... கண்ணு தெரியாதவனம்மா! போட்டுட்டுப் போங்கம்மா!’ என்று நான் மலைப்படிக்கட்டு ஒன்றில் அமர்ந் திருப்பது போலவெல்லாம் நினைத்துத் தவித்துக்கொண்டிருந்தேன். என் கண்களைப் போக்கடித்த எஜமானின் கொரவளையில் கத்தி செருக வேண்டுமே! அதற்கு டெல்லியில் இருந்து கூலிப்படையை வரவழைக்க வேண்டும்.

இறுதியாக, எட்டு மணி சுமாருக்கு அப்பா வந்தார். நிலைமையைச் சரிசெய்யும் விதமாக டெலிபோனில் சிலரிடம் பேசி, என் அம்மாவிடம், 'அவன் கண்ணுல பெரிய வெங்காயத்தை பிழிந்துவிடு, சரசு’ என்று சொல்லிவிட்டுச் சாப்பிடப் போய்விட்டார். டி.வி-யில் நான் பார்த்துக்கொண்டிருந்த தொடர் நாடகங்களில் அன்று என்ன நடந்திருக்கும் என்றும் வேறு தெரியவில்லை!

பெரிய மன உளைச்சல்தான் போங்கள்! கவிதா அவள் புருசனிடம் கோபித்துக்கொண்டாளே நேற்று. அவள் பொட்டி கட்டி பிறந்த வீடு போயிருப்பாளோ? எட்டு மணி நாடகத்தில் ஆஸ்பத்திரியில் லாரியில் அடிபட்டு நினைவில்லாமல் கிடந்தானே கோபி... அவன் கண்விழித்து, 'நான் எங்கே இருக்கேன்?’ அப்படின்னு கேட்டிருப்பானோ?! 'இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ என்று டாக்டர் சொல்லியிருப்பாரோ?

அம்மா பெரிய வெங்காயத்தைப் பிழிந்து, சாற்றை என் கண்களில் ஊற்ற, அது எக்ஸ்ட்ராவாக தீயை வாரிக் கண்ணில் கொட்டியது. ஆனாலும், ஏகப்பட்ட கனவுகளோடு நான் அன்றிரவு நிம்மதியாய் உறங்கினேன். அன்று கண்ட கனவுகள் அனைத்திலும் எனக்குக் கண் தெரியவே இல்லை! இருந்தும், ஒரு காதலி இருந்தாள். அவள் அழகாக இருந்தாளா என்பது மட்டும் இந்த குருட்டுக் கண்ணுக்குக் கனவிலும் தெரியவில்லை.

பக்கத்து வீட்டு குதிரை

அடுத்த நாள், நான் என் எஜமானிடம் கணக்கை முடித்துக் கொண்டேன். தினமும் பதினைந்து ரூபாய் கூலிக்காக என் கண்களைப் போக்கடித்துக்கொள்ள முடியாது என ஆணித் தரமாகப் பேசினேன். வெல்டிங்கில் அமருகையில் கண்ணாடி வேண்டுமாம். அது ஒரு மூலையில் உடைந்து கிடந்தது. கணக்கு முடித்தேன் என்றேனே! அந்த வாரத்தில் நான்கரை நாள் மட்டும் வேலை செய்திருந்தேன் என்பதால், அறுபத்தெட்டு ரூவா வாங்கிக்கொண்டு, பாக்கெட்டில் கிடந்த சில்லறை எட்டணாவை அவரிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்.

என் அடுத்த வேலை கம்பெனி வாட்ச்மேனாக நின்றது. கம்பெனி பாண்டியன் நகரில் இருந்தது. இரண்டு நாட்கள், இளநீல வர்ண யூனிஃபார்ம் அணிந்து, கம்பெனியின் முகப்பில் மடிப்புக் கலையாமல் சல்யூட் போட்டு நின்றுகொண்டிருந்தேன். மூன்றாம் நாள் காலையில் கம்பெனி எஜமான் காருக்கு சல்யூட் வைத்து, பெருங்கதவை முழுதாக நீக்கிவிட்டேன். பத்து நிமிடத்தில் எஜமான் அழைப்பு வந்தது.

குளிர்ந்த அறைக்குள் பவ்யமாய் நுழைந்து மறு சல்யூட் வைத்தேன். என் வலது கையில் அப்போது டைட்டன் வாட்ச் கட்டியிருந்தேன். அது அவரை உறுத்தியிருக்கிறது. இடது கைக்கு மாற்றிக் கட்டிக் கொண்டு போய், வாட்ச்மேன் உத்தி யோகம் பார்க்கச் சொன்னார். அழகாக ஆங்கிலத்தில் 'சாரி சார்’ என்று சொல்லிவிட்டு என் உடைகளை அணிந்துகொண்டு கிளம்பிவிட்டேன்.

அடுத்ததாக, வேலைக் கென்று எந்த முயற்சியும் இன்றி, வீட்டில் எந்த நேரமும் டிவி பார்த்துக்கொண்டு அமர்ந் திருந்தேன். அப்பா என்னை நான்கு சக்கர வாகன பணிமனை ஒன்றில் கூட்டிப் போய்ச் சேர்த்துவிட்டார். அந்தப் பணிமனையின் எஜமான் எங்களுக்கு தூரத்துச் சொந்தம் என்று வேறு சொல்லியிருந்தார். ஸ்வராஜ் மஸ்தா வண்டிகள் மட்டுமே அங்கு பணிக்கு வந்துகொண்டிருந்தன.

அங்கும் எனக்கு இளநீல வர்ண உடை கொடுத்தார்கள். பணிமனையில் இருந்த வேலைக்காரர்கள் அனைவரின் நீல வர்ண உடைகளும் அவை நீல வர்ணம்தானா என்ற சந்தேகத்தைக் கிளப்பிவிட்டன. பணிமனையில் நான் நான்கு மாத காலம் பொறுப்பாய் இருந்தேன். திடீரென எனக்குள் ஞானோதயம் தோன்றியது பிற்பாடுதான். அதாவது, நான்கு சக்கர வாகனப் பணி கற்று, நாளை நான் திருப்பூரில் எந்த வீதியிலும் ஒரு பணிமனை அமைத்து, அதில் எஜமானனாக அமர முடியாது.

ஏதோ இரு சக்கர வாகனப் பணிமனை வேண்டுமானால் அனுப்பர்பாளையத்திலேயே நாலு ஸ்பானர்களை வைத்துக் கொண்டு அமர்ந்துவிடலாம். என் அப்பாவின் பொருளாதார நிலைமையில் காலம் முழுதும் நான் கிரீஸிலும் சீமெண்ணெ யிலும் ஆயிலிலும் மாட்டிக்கொள்வேன். எனக்கொரு காதலி கிடைத்தால்கூட அவள், 'உங்ககிட்ட சீமெண்ணெய் வாசம் வீசுதுங்க’ என்று என்னை ரிஜெக்ட் செய்துவிடுவாள்.

இப்படியாக, நான் பத்து தொழில்கள் பார்த்து, கடைசியாக இப்போது டிசைனராக திருப்பூரில் மங்கலம் சாலையில் கே.வி.ஆர் நகர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள காம்ப்ளெக்ஸில் அமர்ந்துவிட்டேன். பார்ட்டிகள் சொல்லும் அழகுணர்ச்சிக்கு ஏற்ப, பனியன் முகப்பில் டிசைன் செய்து தருவது என் வேலை. பணி குறைவாக உள்ள நாட்களில் வாரப் பத்திரிகைகளுக்கு கார்டில் ஜோக்குகள் எழுதி அனுப்புவதை வழக்கமாக்கிக் கொண்டேன். சுரேஷ்குமார் என்ற பெயரில் எல்லா வார, மாத பத்திரிகைகளிலும் ஆடிக்கொருமுறை அமாவாசைக்கொருமுறை ஜோக்குகள் வரும்.

'ஆசிரியரே, என் பையன் ஸ்கூல்ல குறும்பு பண்றானுங்களா?''

'இல்லீங்க! ஸ்கூல்ல ரொம்ப பொறுப்பான பையன் அவன்.''

'அடிச்சுக் கிடிச்சு வச்சிடாதீங்க! அப்புறம் நான் உங்களை அடிக்கவேண்டி வரும்!''

இப்படி அப்போதைக்கு அப்போது தோணுவதை கார்டில் நுணுக்கி நுணுக்கி எழுதி, ஒரு கார்டில் ஐந்து ஜோக்குகள் வீதம் வாரம் ஒரு முறை பத்து கார்டுகள் அனுப்பிக்கொண்டு இருந்தேன். அவற்றில் வரும் தொகை எனக்குச் சில்லறை செலவுகளுக்கு உதவிக்கொண்டிருந்தது. சில்லறை செலவுகள் என்றால், வண்டிக்கு பெட்ரோல் போடுவது, செல்போனுக்கு ரீசார்ஜ் போடுவது, நெட்டுக்கு கார்டு போடுவது போன்றவைதான்.

கிட்டத்தட்ட நூறு ஜோக்குகள் சேர்ந்துவிட்டதால் அவற்றைத் தொகுத்து 'சுரேஷ்குமார் ஜோக்குகள்’ என்றொரு புத்தகம் போட வேண்டும் என ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அதன் பின்னட்டையில், நான் தலைகீழாக மரத்தில் தொங்குவதுபோல இருக்கும் ஒரு போட்டோ எடுத்து வைத்திருக்கிறேன்; அதைப் போட உத்தேசம்! இது உங்களுக்குக் கேலிக்கூத்தாகப் படலாம். ஆனால், சிம்பாலிக்காக 'நான் ஒரு வெளவால்’ என்பதைச் சொல்ல வருகிறேனாக்கும்!

கடைசியாக ஒரு தகவலைச் சொல்லிவிட்டு, என் சமீபத்திய சிக்கலை உங்களுக்குச் சொல்லிவிடுகிறேன். அந்த கடைசித் தகவல்- 'தவக்களை’ என்ற பெயரில் நான் மூஞ்சிப்புத்தகத்தில் இருக்கிறேன். யார் ரெக்வஸ்ட் கொடுத்தாலும், என் நட்பில் சேர்த்துக்கொள்கிறேன். இப்போதைக்கு என் நட்பில் தென்றல் நாசர், சிக்ஸ்முகம், சகிதா முருகன், நாகி பிரசாத், கமலக்கண்ணன் என்று எங்கள் ஆட்களோடு மட்டும் நட்பில் இருக்கிறேன்.

என் சமீபத்திய சிக்கல் என்னவென்றால், பக்கத்து வீட்டில் ஒரு பப்ளிமாஸ் இருக்கிறது. பப்ளிமாஸுக்கு ரேவதியம்மா என்று பெயர். அவருக்கு வயது 35 இருக்கலாம். அவர் கணவர் சிதம்பரத்துக்கு 40 இருக்கும். திருமணமான நாளில் இருந்து அவர்கள் ஒன்றை மட்டுமே மறந்துவிட்டிருந் தார்கள். அதாவது, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது.

அவர்கள் என் பக்கத்து வீட்டுக்குக் குடிவந்து ஏழெட்டு வருடம் இருக்கலாம். அவர்கள் அந்த வீட்டை விலைக்கு வாங்கித்தான் கோவையில் இருந்து காலி பண்ணி வந்திருந்தார்கள். அவர்களோடு இன்று வரை என் அம்மாவும் அப்பாவும்தான் பேச்சு வைத்துக்கொண்டிருந் தார்கள். நான் அவர்களுக்குப் புன்னகை மட்டும் புரிந்து, இந்த வேகமான ஊரில் ஓடிக் கொண்டிருந்தேன். எப்போதாவது, 'போயிட்டு வர்றனுங்க ஆன்ட்டி’ என்று விடைபெறுவதோடு சரி. அவர்கூட என் அம்மாவிடம், 'காலில் சக்கரம் மாட்டாதது ஒண்ணுதான் சுரேஷ§க்குக் குறை’ என்று சொல்வார்.

ஆன்ட்டிக்கு பப்ளிமாஸ் என்று புனைபெயரை என் அம்மாதான் வைத்திருந்தார். ஆன்ட்டி என்னிடம் ஒரு வார காலமாக ஒரே விஷயத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அவர்கள் வீட்டில் ஒரு மாத காலமாக, கல்லூரிப் படிப்புக்காக ஒரு குதிரை வந்து தங்கியிருக்கிறதாம். ஆன்ட்டி, சுவேதாவை குதிரை என்றுதான் குறிப் பிட்டார். முதலாக, அவர்கள் வீட்டில் கல்லூரிக்குப் போகும் பெண் வந்து தங்கியிருப்பதே எனக்குத் தெரியாது.

வாழ்க்கையின் மீதான போராட்டத்தில் கண்ணுக்கு அருகில் இருக்கும் அழகுகளெல் லாம் தெரிவதற்கு வாய்ப்பே இல்லை. ஆன்ட்டி என்னிடம் சொன்ன விஷயம் எனக்கு பகீரென்று இருந்தது.

அதாவது, சுவேதா என்கிற குதிரை, கோவையில் இவர்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக் காரரின் ஒரே பெண். அப்போ தெல்லாம் மண்ணு கொளித்து விளையாடிய சின்னப் பெண் ணாம் அவள். வீட்டுக்காரர், அப்போது இவரின் கணவருக்குத் தொழிலில் பல உதவிகள் செய் தாராம். அந்த வீட்டை காலி செய்து வருகையில் வீட்டுக் காரரும் அவர் மனைவியும் சுவேதா பாப்பாவும் 'கோ’வென அழுததை ஆன்ட்டி சொல்லிய போது எனக்கும் அழுகை வந்துவிடும்போல இருந்தது. இப்போது கல்லூரிப் படிப்புக்கு வந்து சேர்ந்த சுவேதாவால், தன் வாழ்க்கை நாசமாகிவிடுமோ என்ற பயம் வந்திருப்பதாகச் சொன்னார்.

சுவேதாவால் ஆன்ட்டி வாழ்க் கைக்குப் பாதிப்பா? யாரால் தாங்கிக்கொள்ள முடியும்? உலகமே தன் இயக்கத்தை நிறுத்திவிட வேண்டும் என்பது போல மொட்டைக் கட்டை யாய்ப் பேசியதால், எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.

சிதம்பரம் 40 வயதில் தலையில் முன்பகுதியில் வழுக்கை வாங்கிக்கொண்டவர். அவர் பாண்டியன் நகரில் பனியன் கம்பெனி ஒன்றை ரேவதி ஹொசைரீஸ் என்ற பெயரில் வைத்திருந்தார். வீட்டினுள்ளே அரை மணி நேரம் தண்டால், கர்லாக்கட்டை உருட்டுபவராம். மொட்டை மாடியில் அவர் செய்வதை, நான் காலம்பற நேரத்தில் செய்வேன்.

வந்த நாளில் இருந்து எந்த நிமிடமும் வீட்டில் அவரோடே நொய் நொய்யெனப் பேச்சுக் கொடுத்துக்கொண்டு இருக்கிறதாம் குதிரை. தண்டால் எடுத்தால், கிட்டே போய் நின்றுகொண்டு ராவடி பண்ணுகிறதாம். சமீபமாக ’அங்கிள்! அங்கிள்’ என்று கொஞ்சாட்டம் போடுவது கேட்கவே நாராசமாக இருப்பதாக வருத்தப்பட்டு என்னிடம் சொன்ன ஆன்ட்டி கடைசியாய், குதிரையின் மைண்டை டைவர்ட் செய்ய என்னைக் காதலிக்கச் சொன்னார். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் என்னிடம் அப்படிச் சொல்லலாமா?

'ஆன்ட்டி, நீங்க என்னை பிரச்னைல தள்ளி விட்டுடுவீங்க. என் அப்பா காதுல விழுந்து துன்னா பூகம்பமே வெடிச்சிடும் தெரியுமா! எதுக்கும் எதுத்த வீட்டுல ஒருத்தன் இருப்பான், பாருங்களேன்'' என்றேன். ஆன்ட்டி அழத் துவங்கிவிட்டதும், எனக்குப் பரிதாபம் கூடிக்கொண்டது.

''அவ ரொம்ப அழகா இருப்பா, சுரேஷ் குமாரு. நீ பார்த்ததில்லையே! பார்த்தீன்னா அவத்திக்காலிக்கே சுருண்டு போயிடுவே, ஆமா! ஆன்ட்டி உனக்கு மொக்கை ஃபிகராவா காட்டி லவ் பண்ணச் சொல்லுவேன். நீ இன்னிக்கு 9 மணிக்கே ஆபீசுக்குக் கிளம்பு. தினமும் என் வீட்டுக்காரரோடதான் அவ பைக்குல ஒட்டி, ஒரசிட்டு பாண்டியன் நகர் பஸ் ஸ்டாப் வரைக்கும் போறா! இன்னிக்கு அவரை ஏதாச்சும் சொல்லி, வீட்டுல பிடிச்சுக்கறேன். உன்னோட தாட்டி உடறேன்'' என்று சொல்லவும், மறுக்க மனமே வரவில்லை எனக்கு.

''சும்மா வண்டில உம்முன்னு அவகூட பேசாமகொண்டி ட்ராப் பண்ணிடாதே! தொண தொணன்னு பேச்சுக் குடுத்துப் பாரு! அப்புறம் தெனமும் உன்னோடதான் வருவா' என்று ஆன்ட்டி சொன்னதைக் கேட்டுத் தலையாட்டினேன் பூம் பூம் மாடு மாதிரி!

ஆன்ட்டி என்ன ஏற்பாடு செய்ததோ... அன்று சுவேதா என் பைக்கில் ஒரு புன்னகையை வீசிவிட்டு வந்து பின்னால் அமர்ந்து கொண்டாள். சும்மா சொல்லப்புடாதுங்கோவ்! ஆன்ட்டி சொன்னது மாதிரி சுவேதாவைப் பார்த்ததுமே நான் க்ளீன் போல்டு! என்ன வாசனைத் திரவியம் அடித்திருந் தாளோ தெரியவில்லை, என் ஆபீஸினுள்கூட ஒரு பொழுதுக்கும் அடித்துக் கொண்டே இருந்தது. மனித உடலுக்குள் மழை பொழிவதை ரசித்திருக்கிறீர்களா? அதை ரசிக்க ஒரு பெண்மீது நீங்கள் ப்ரியத்தை வைக்க வேண்டும். அப்புறம் மழை சோவெனக் கொட்டும்.

ஆன்ட்டி என் வீடு தேடிவந்து, ''இன்னிக்கு எங்க வீட்டுல பாவக்காய் கூட்டு, கத்திரிக்கா குழம்பு'' என்று சாப்பிட கைப்பிடியாய் பிடித்து இழுத்துப் போனது. நான் சுவேதாவை ஓரக்கண்ணால் ரசித்துப் பார்த்தபடி, டேபிளில் சிதம்பரம் அருகில் அமர்ந்து ஒரு கட்டு கட்டிக்கொண்டிருந்தேன். இதைத்தான் இடிந்த சுவரில் மண்ணை அப்புவது மாதிரி என்று இங்கு சொல்கிறார்கள்.

பக்கத்து வீட்டு குதிரை

சாப்பிடுகையில் உம் என்றா சாப்பிட

முடியும்? என்ன படம் பிடிக்கும்? என்ன கலர் பிடிக்கும்? இப்படி ஓடிக்கொண்டிருக்க... ஆன்ட்டி எங்களுக்குப் பரிமாறியபடி இருப்பார். 'என்ன படம் பிடிக்கும்?’ என்ற என் கேள்விக்குச் சட்டென அங்கிளும் சுவேதாவும் 'முதல் மரியாதை’ என்றார்கள். செவாலியே சிவாஜி கணேசன் நடித்த படமல்லவா அது! அதில் அவர் கல்லு தூக்கி வீசுவாரே! அங்கிள் கர்லாக்கட்டை தூக்கிச் சுற்றியே சுவேதாவை கேட்ச் செய்துவிட்டாரோ! ஆன்ட்டி வேறு என்னைப் பார்த்து 'பார்த்தியா!’ என்று கண்ணால் பேசியது.

''ஏறாத மலை மேலஏஏ எலந்தே பழுத்திருக்கு! ஏறி உலுப்பட்டுமா?'' சுவேதா, ராதாவைப்போல 'பாட்டுச் சத்தம் கேட்டதய்யா’ என்று வருவது போல நினைத்துப் பாட, எனக்கு விக்கல் எடுத்துவிட்டது. ஆன்ட்டி என் தலையைத் தட்டி தண்ணீரை எடுத்துக் கொடுத்தது.

இந்த ஒரு வார காலத்தில் ஆன்ட்டி சொன்னதுபோல சுவேதா என் வண்டியில் வந்த நேரமெல்லாம் 'அங்கிள்... அங்கிள்’ என்று அவர் பாட்டையே பேசியபடி பழைய பேருந்து நிலையம் வரை வந்தாள். நம்ம பாட்டை எப்போது பாடுவது என்று கேட்கத்தான் என்னால் முடியவில்லை. நான் ஒரே வாரத்தில் அவளுக்கான டிரைவராக மாறிவிட்டேன்.

காதல் நிதானமாக வந்தால்தான் நிலைத்து நிற்கும் என சமாதானம் சொல்லிக்கொண்டேன். பாருங்கள், எனக்கும் அங்கிள் மீது கொஞ்சம் பொறாமையாக இருந்தது. அங்கிள் இப்போ தெல்லாம் பேன்ட் அணிந்து, சட்டையை இன் செய்து, பெல்ட் போட்டு கிளம்புகிறார். அது சுவேதாவின் ஐடியா என்று ஆன்ட்டி மூக்கைச் சிந்தினார்.

ஆன்ட்டி இன்று ரொம்பவே பதற்றத்தில் இருந்தார். காலையில் நேரமே அவசரமாய் குண்டான் குண்டானென ஓடி வந்தவர், 'என் தங்கச்சிக்கு ஒடம்புக்கு முடியாம அவினாசில ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்களாம். நான் வேற போயே ஆகணும், சுரேசு! எப்ப திரும்புவேன்னும் தெரியல! இன்னிக்கி சனிக்கிழம! குதிரைக்குக் காலேஜு இல்லை. இவரு அவகிட்ட மாட்டிக்கிட்டாருன்னா..?’ என்று பதைபதைப் போடு பேச... எனக்கே சங்கடமாய் இருந்தது.

''அப்படியெல்லாம் ரொம்பப் பயப்படாதீங்க ஆன்ட்டி! அங்கிள் உங்க மேல உசுரையே வச்சிருக்காரு'' என்றேன், வேறு பேசத் தெரியாமல். இத்தனை காலம் கழித்து வாழ்க்கை போய்விடுமோ என்று பயப்படும் ஆன்ட்டியைப் பார்க்கப் பரிதாப மாக இருந்தது. ''அவரு நல்லவருதான் சுரேசு. அவ எதாச்சும் திட்டம் போட்டு இந்த சினிமா படத்துல வர்ற மாதிரி, 'ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு! ரெண்டும் தூங்காம தவிச்சிருக்கு’ன்னு பாடி வசியம் பண்ணிட்டா..?''

''அதெல்லாம் சினிமாலதான் காட்டுவாங்க ஆன்ட்டி! பயப்படாம போயி, உங்க தங்கச்சி பக்கத்துல இருந்து அவங்களுக்கு உதவியா இருங்க'' என்று சொல்லி முடித்துக்கொண்டதும், மனசில்லாமல் ஆன்ட்டி எங்கள் வீட்டில் இருந்து சென்றது. இதோ, ஆபீஸில் அமர்ந்திருக்கும் இந்த நேரம் வரை ஆன்ட்டி சொன்னதுபோல செம்மையான பாடல்களாய் ஒவ்வொன்றாய் மனதுக்குள் வந்துகொண்டேயிருந்தன. எல்லாமே ஜானகியம்மா பாடிய பாடல்கள்.

'மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்குத்தானே! நாளை எண்ணி நான் காத்திருந்தேன் நாளும் உனக்குத்தானே!’ எனக்கே இந்தப் பிரச்னை குழப்பத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டது. ஆன்ட்டி பாவம்தான். என்னதான் தங்கச்சி அருகில் மருத்துவமனையில் இருந்தாலும், மனம் பூராவும் சிதம்பரமே இருப்பார் என்றே நினைத்தேன்.

பதினொரு மணியைப்போல என் அலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. புதிய எண்ணாக இருக்கவே, எடுத்துக் காதுக்குக் கொடுத்தேன். ஆன்ட்டிதான்.

''சுரேசு... நான் ரேவதி பேசுறேன். என் பிரச்னை எல்லாம் தீர்ந்திடுச்சு. இப்பத்தான் சந்தோசமா இருக்கேன். அதான் உங்கொம்மாட்ட உன் நெம்பர் வாங்கி கூப்பிட்டேன்.''

''ஆன்ட்டி, நீங்க இன்னுமா அவினாசி போகாம வீட்டுல இருக்கீங்க?''

''நான் கிளம்பியாச்சு சுரேசு! குதிரை டி.வி-ல என்னமோ பார்த்துட்டு இருந்துச்சு. 'நான் போயிட்டு வர்றேம்மா. வீட்டை பத்திரமா பார்த்துக்கோ’ன்னு சொல்லிட்டு பஸ் ஸ்டாப் வரைக்கும் நடந்து வந்துட்டேன். அப்பத்தான் பர்ஸை வீட்டுலயே வெச்சிட்டு வந்தது ஞாபகத்துக்கு வந்துச்சுன்னா பாத்துக்கவே..!''

''நீங்க ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு பாட்டு நெனப்பாவே இருந்திருப்பீங்க''

''ஆமாம் பாத்துக்கவே! சரியின்னு திரும்ப வீடு போறேன்... குதிரை போன்ல பேசிட்டு இருக்குற சத்தம் கதவுகிட்ட போனதும் கேட்டுச்சு. அதுல என் பேரும் அடிபடவே நின்னுட்டேன் அப்படியே! யாரோ அவ ஃப்ரெண்டுகிட்ட பேசிட்டு இருந்தாபோல. அங்கிள் ரொம்ப நல்லவராம். நான்தான் பக்கத்து வீட்டுப் பையனோட எந்த நேரமும் சிரிச்சு சிரிச்சுப் பேசிட்டிருக் கனாம். அன்னிக்குச் சாப்பிடறப்ப அவ முதல் மரியாதை பிடிக்கும்னு சொன்னாள்ல சுரேசு..?''

''ஆமாங்க ஆன்ட்டி''

''அப்பக்கூட சாப்பிடற டேபிள்ல உக்காந்துட்டு, அங்கிளுக்குத் தெரியாம ரெண்டும் கண்ணால பேசிக்குதுக! இங்க இருக்கவே பிடிக்கலை. உன் வீட்டுல ரெண்டு நாள் தங்கிட்டு ஹாஸ்டல்ல சேர்ந் துக்கறேன்னு அவளோட துணிமணிகளை பேக் பண்ணிட்டு இருந்தா! நான் உள்ள போய் பர்ஸை எடுத்துட்டு கிளம்பலாம்னு இருக்கப்ப, எனக்கு நன்றி சொல்லிட்டு அவளும் கிளம்பிட்டா சுரேசு!''

''என்ன ஆன்ட்டி சொல்றீங்க? அப்ப சுவேதா வீட்டை விட்டுப் போயிட்டாங்களா? அதும் உங்களையும் என்னையும் பத்தி தப்பா பேசிட்டு?'' - எனக்குத்தான் பகீரென்றது.

''நம்மளைப் பத்தி தப்பா பேசினா பேசிட்டுப் போகுது. அதென்ன உண்மையா, நாம ரெண்டு பேரும் கவலைப்படறதுக்கு? எப்படியோ, என் பிரச்னை முடிஞ்சுது சுரேசு. வச்சிடறேன்''

ரேவதியம்மா போனை அணைத்து விட்டது. இப்போது எனக்கு பிரச்னை ஆரம்பமாகிவிட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism