Published:Updated:

வெல்ல வேட்டை

ஜி.ஆர்.சுரேந்தர்நாத் ஓவியங்கள்: மனோகர்

வெல்ல வேட்டை

ஜி.ஆர்.சுரேந்தர்நாத் ஓவியங்கள்: மனோகர்

Published:Updated:

நான் நாடார் கடை வந்தவுடன் நின்றுவிட்டேன். பட்டன் இல்லாத டவுசரை இழுத்து இடுப்பில் முடிந்துகொண்டு, நாடார் கண்ணில் படுவதுபோல் நின்றுகொண்டேன். என் சட்டையைப் பிடித்திழுத்த என் தம்பி பிச்சைமுத்து, ''பள்ளிக்கூடத்துக்கு லேட்டாயிடுச்சுண்ணன்’ என்றான். பிச்சைமுத்து, நான் படிக்கும் பள்ளியிலேயே நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறான். என்னைவிட ஐந்து வயது சிறியவன்.

''இருடா... வெல்லம் வாங்கிட்டுப் போகலாம்'' என்ற நான், பிச்சைமுத்துவின் மூக்கில் ஒழுகிக்கொண்டிருந்த சளியைத் துடைத்துவிட்டேன். நாடார் கடையில் கும்பலாக இருந்தது. நான் நன்றாகப் படிப்பேன் என்பதால், அண்ணாச்சிக்கு என் மீது ஒரு தனி பிரியம் உண்டு. கும்பல் இல்லாத சமயத்தில் கேட்டால், கொஞ்சம் தூள் வெல்லம் தருவார். என் டவுசர் பாக்கெட்டில் காலையிலேயே அரிசியைப் போட்டுத் தண்ணீரை ஊற்றி ஊற, வைத்திருந்தேன். அதில் வெல்லத்தைக் கலந்து சாப்பிட்டால், நல்ல ருசியாக இருக்கும்.

''டேய் மணி... ஸ்கூலுக்கு வரலையா?'' என்று பின்னால் குரல் கேட்க... திரும்பினேன். துரைக்கண்ணு கையில் மஞ்சள் பையோடு நின்றுகொண்டிருந்தான். துரைக்கண்ணுவும் என் க்ளாஸ்தான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெல்ல வேட்டை

''நீ போ! நான் கொஞ்சம் வெல்லம் வாங்கிட்டு வரேன்'' என்றவுடன் என்னை நெருங்கிய துரைக்கண்ணு, ''இத்துனூண்டு வெல்லத்துக்கு ஏன்டா இங்க நின்னுட்டிருக்க? உனக்கு வெல்லம்தான வேணும்? நான் ஒரு ஐடியா சொல்றேன், வா...'' என்று என் தோள் மீது கை போட்டு, ரோட்டோரமாக அழைத்துச் சென்றான்.

''நேத்து எங்கண்ணன் ஒரு முழு வெல்லம் கொண்டுட்டு வந்து கொடுத்தான். ஏதுன்னு கேட்டேன். நம்ம குப்புசாமியண்ணன் புதுசா கள்ளச்சாராய வியாபாரம் ஆரம்பிச்சிருக்காராம். அதுக்காக ஏரிக்கரையோரமா குருட்டு மதகு, ஒத்தைக் காவாய்ப் பக்கமா புதர்க்காட்டுல ஏகப்பட்ட ஊறல் போட்டிருக்காராம்.''

''ஊறல்ன்னா?'' என்றேன், என் சட்டையைப் பிடித்திழுத்த பிச்சைமுத்தின் கையைத் தட்டிவிட்டபடி.

''ஊறல்ன்னா... சாராயம் காய்ச்சுறதுக்கு முன்னாடி, ஒரு பெரிய பானைத் தண்ணில வெல்லம், கடுக்காய், பேட்டரி உப்பு, கருவேலம்பட்டை எல்லாத்தையும் போட்டு மண்ணுல புதைச்சு, வைக்கப்போர போட்டு மூடி வச்சிருவாங்க. அப்புறம் நாலஞ்சு நாள் கழிச்சு, அத எடுத்துட்டுப் போய்க் காய்ச்சி சாராயம் தயாரிப்பாங்க. ஒரு பானைக்கு அரை மூட்டை வெல்லம் போடுவாங்களாம். அது கொஞ்சம் கொஞ்சமா கரைய மூணு, நாலு நாள் ஆவுமாம். அதுக்குள்ள போனோம்னா, பானைலருந்து வெல்லத்த  எடுத்துடலாம்...''

''அங்க குப்புசாமியண்ணன் ஆளுங்கள்லாம் இருக்க மாட்டாங்களா?''

''ம்ஹும்... ஊறல் போட்டு நாலஞ்சு நாள் கழிச்சுதான் வருவாங்க'' என்று துரை கூற... எனக்கு உடம்பெல்லாம் இனித்தது. ஒரு பானையில் பாதி முழுவதும் வெல்லமா?

என் அப்பா ஓர் ஏழை விவசாயக் கூலி. வருடத்தில் பாதி நாட்கள் வேலையிருந்தாலே அதிசயம். வரும் கூலிப் பணம் கஞ்சிக்கே போதாது. இதில் தின்பண்டங்களையெல்லாம் எல்லாம் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. எங்களுடைய அதிகபட்சத் தீனி, அரிசியை வறுத்துத் தின்பதுதான். அதையும் வறுத்துத் தர முடியாது என்று அம்மா மறுத்துவிட்டால், ஊற வைத்த அரிசிதான் தீனி. இட்லி, பலகாரம் எல்லாம் தீபாவளியின்போது யாராவது கொடுத்தால்தான் உண்டு. ஆனால், என் நாக்கு எப்போதும் இனிப்புக்காக ஏங்கிக்கொண்டேயிருக்கும். அவ்வப்போது நாடார் கடையில் ஓசி வாங்கித் தின்னும் சிறு துண்டு வெல்லத்தின் ருசி, முழு நாக்குக்கும் பரவுவதற்குள்ளேயே தீர்ந்துவிடும். ஒன்பதாவது படித்துக்கொண்டிருக்கிறேன். இதுவரையிலும் என் வாழ்நாளில் ஒரு முறைகூட முழு வெல்லம் சாப்பிட்டதில்லை. என் வாழ்நாளுக்குள் ஒரு முழு வெல்லமாவது தின்றுவிட வேண்டும் என்பதுதான் என் கனவு. இதோ, அந்தக் கனவு நனவாகப்போகிறது. அரை மூட்டை வெல்லம்.

''இப்ப அங்க போலாமா துரை?'' என்றேன்.

''அய்யோ... நான் பள்ளிக்கூடத்துக்குப் போகணும்'' என்ற துரை வேகமாக ஓடிவிட்டான். நான் பிச்சைமுத்துவின் முகத்தைப் பார்த்தேன். நான் ஒன்றும் கேட்காமலேயே பிச்சைமுத்து, ''வெல்லம் எடுக்கப் போலாம்ண்ணன்... இன்னிக்கி ஸ்கூல் போக வேண்டாம்...'' என்றான். அவனுக்கும் வெல்லம் என்றால் உயிர். வெல்லத்தைவிட என்மீது உயிராக இருப்பான். பள்ளியில் அவன் வகுப்பில் இருக்கும் நேரத்தைத் தவிர, எப்போதும் என் கூடவேதான் சுற்றுவான்.

நானும், பிச்சைமுத்துவும் ஏரிக்கரையை நோக்கி நடக்க... எப்போதும் எங்கள் பின்னால் திரியும் தெரு நாய் டைகரும் எங்களுடன் சேர்ந்துகொண்டது.

பத்து நிமிடம் நடந்து ஏரிக்கரையை நெருங்கியவுடன், சிலுசிலுவென்று காற்று வீசியது. ஏரிக்கரையோரமிருந்த பனை மரங்களும், புங்கை மரங்களும் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. நாங்கள் நேராக குருட்டு மதகை நோக்கி நடந்தோம். மதகருகில் அடர்த்தியாக வளர்ந்திருந்த புதர்க்காட்டுக்குள் நுழைந்தோம்.  

உள்ளே திரும்பிய திசையெங்கும் வேலிக்காத்தான் மரங்கள்தான். நடுநடுவே ஒன்றிரண்டு பூவரச மரங்கள். வேலிக்காத்தான் மரங்களின் கீழ் ஏராளமான ஆரஞ்சு நிற அணில் பழங்கள் விழுந்து கிடந்தன. நான் பழங்களை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு, தம்பிக்கும் நீட்டியபடி சுற்றிலும் பார்த்தேன். சற்று தூரத்தில் வெள்ளைப்பூண்டுச் செடிகளுக்கு நடுவே வைக்கோல் குவியலைப் பார்த்தவுடன் குஷியாகி, அதை நோக்கி நடந்தேன்.

அருகே செல்லச் செல்ல, அந்த நாற்றத்தை உணர்ந்தோம். பிச்சைமுத்து மூக்கைச் சுருக்கினான். டைகர் மோப்பம் பிடித்துக்கொண்டே வைக்கோல் குவியலை நோக்கி ஓடியது. டைகரின் பின்னால் ஓடிய நான் வேகமாக வைக்கோலைத் தூக்கிப் போட்டேன். பூமியில் புதைக்கப்பட்டிருந்த பானையின் வாய்ப்புறம் மட்டும் வெளியே தெரிந்தது. வாய்ப்புறத்தை மூடிக் கட்டியிருந்த சாக்குத்துணியை நான் அவிழ்க்க... நாற்றம் குப்பென்று அடித்தது.  பிச்சைமுத்து மூக்கைப் பொத்திக்கொண்டான். அந்த நாற்றம் என்னை ஒன்றும் செய்யவில்லை. பானைக்குள் இருப்பது வெல்லமல்லவா?

பானையுள் நுரைப்படலம் வெள்ளையாகப் பரவியிருந்தது. பானையை பூமியில் புதைத்திருந்ததால், நின்றபடி என்னால் பானையுள் கையை விட முடியவில்லை. எனவே, தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு பானையில் கையை விட்டேன். மெல்ல நுரையை விலக்கினேன். ஏரித்தண்ணீர் போல் கலங்கலாக இருந்த நீரில் கடுக்காயும், கருவேலம்பட்டைகளும் மிதந்துகொண்டிருந்தன. நான் கையைக் கீழே விட்டுத் துழாவ... வெல்லக் கட்டிகள் கையில் அகப்பட்டன. நான் ''பிச்சைமுத்து... வெல்லம்டா...'' என்று சத்தமாகக் கூறியபடி, வேகமாக ஒரு வெல்லத்தை வெளியே எடுத்தேன். லேசாகக் கரைந்திருந்த அந்த வெல்லம் நல்ல கறுப்பாக இருந்தது. நான் வாயில் வெல்லத்தை வைக்கப்போனேன்.

''இருண்ணன்... ஏரித்தண்ணில கழுவிட்டுச் சாப்பிடலாம்' என்றான் பிச்சைமுத்து.

''அப்ப இரு... எல்லா வெல்லத்தையும் எடுத்துடலாம்...' என்ற நான் பானையில் கையைவிட்டு வரிசையாக வெல்லங்களை எடுத்தேன். பிச்சைமுத்துவும் குப்புறப் படுத்துக்கொண்டு வெல்லத்தை எடுக்க முயற்சித்தான். ஆனால், அவனுக்குக் கை எட்டவில்லை. நான் எடுக்க எடுக்க, வெல்லம் வந்துகொண்டேயிருந்தது. வெல்லத்தை எல்லாம் சாக்குத்துணியில் போட்டேன். மொத்தம் முப்பது வெல்லக் கட்டிகளுக்கு மேல் இருக்கும். சாக்குத் துணியைக் கட்டிக்கொண்டு ஏரிமேட்டில் ஏறி, வேகமாகச் சரிவில் இறங்கினோம். ஒரு வெல்லத்தை ஏரி நீரில் கழுவிவிட்டு, பிச்சைமுத்திடம் நீட்டினேன்.

''நீ சாப்பிடுண்ணன்...' என்றான் பிச்சைமுத்து.

''நீ சாப்பிடுறா. நான் வேற வெல்லம் எடுத்துக்குறேன்' என்று அவன் வாயில் வெல்லத்தைத் திணித்தேன். அவன் வெல்லத்தை ஒரு கடி கடித்துவிட்டு, ''சூப்பரா இருக்குண்ணன்... நீ சாப்பிடு!'' என்று வெல்லத்தை நீட்டினான். நான் வாயில் வைத்துக் கடித்தேன். நாவில் முதலில் மெலிதாக இறங்கிய வெல்லத்தின் ருசி... நான் தொடர்ந்து வெல்லத்தைக் கடிக்கக் கடிக்க... நாக்கு முழுவதும் பரவி இனித்தது.

அருகில் குவியலாகக் கிடந்த வெல்லத்தைப் பார்க்கப் பார்க்க... எனக்குக் கண் கலங்குவதுபோல் இருந்தது. நாடார் கடை வெல்லத்துண்டைப்போல் இது தீரப்போவதில்லை. நாடார் கடை வெல்லம் தீர்ந்துவிடுமே என்பதற்காக நக்கி நக்கிச் சாப்பிடுவேன். இதை நக்கியெல்லாம் சாப்பிடத் தேவையில்லை. நன்கு கடித்து எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம். நாள் முழுக்கச் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம். கடிக்கக் கடிக்கத் தீராத வெல்லம் இது.

வெல்ல வேட்டை

ஏரிக்கரையில் உட்கார்ந்து சாவகாசமாக ஒவ்வொரு வெல்லமாகக் கடித்துச் சாப்பிட ஆரம்பித்தோம். நக்கும் வெல்லத்தின் ருசி நாக்கு முழுவதும் பரவாது. ஆனால், கடிக்கும் வெல்லத்தின் ருசி நாக்கில் ஒரு துளி இடத்தைக்கூட விடாமல் பரவியது. இது கொஞ்சம் மட்டமான வெல்லம்போல. நடுநடுவே சிறுகற்களும் கரும்புச் சக்கையும் பல்லில் தட்டுப்பட... அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு வெல்லத்தைச் சாப்பிட்டேன். வாயில் பாதி வெல்லம் இருக்கும்போதே, அடுத்தடுத்த வெல்லத்தைப் போட்டுக் கடித்துக்கொண்டேயிருந்தேன். பிச்சைமுத்துவைப் பார்த்தேன். அவன் முகம் முழுவதும் சிரிப்பு. அவன் உதட்டோரம் கசிந்த எச்சிலுடன் வெல்லம் கலந்து, தாடையில் கறுப்பாக வழிந்துகொண்டிருந்தது. நான் பிரியத்துடன் அவன் எச்சில் வெல்லத்தைத் துடைத்துவிட்டேன். பிச்சைமுத்து என் தாடையில் வழிந்த வெல்லத்தைத் தொட்டு தன் நாக்கில் வைத்து சுவைக்க... எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. எங்களிடையே ஏற்கெனவே இருந்த பிரியத்தை அந்த சாராய வெல்லம் மேலும் அதிகரித்துவிட்டது.

''நல்லா கடிச்சு நிறைய சாப்பிடுடா. இது தீர்ந்து போனாலும், வேற ஊறல்லருந்து எடுக்கலாம்'' என்ற நான் டைகரைப் பார்த்தேன். அது என் வாயையே பார்த்துக்கொண்டிருந்தது. பொதுவாக, டைகருக்கு வெல்லம் பிடிக்காது. நாடார் கடை வெல்லத்தைக் கொடுத்தால், மோந்து பார்த்துவிட்டுச் சென்றுவிடும். இருந்தாலும், எதற்கும் கொடுத்துப் பார்ப்போம் என்று ஒரு வெல்லத்தைத் தூக்கிப் போட்டேன். சிறிது நேரம் வெல்லத்தை முகர்ந்து பார்த்த டைகர் சட்டென்று அதை வாயில் கவ்விக்கொண்டது. முதலில் மெதுவாக வெல்லத்தைக் கடித்த டைகருக்கு அதன் ருசி பிடித்துப்போக... வேக வேகமாகக் கடித்தபடி என் முகத்தைப் பார்த்தது. நான் சிரிப்புடன் பிச்சைமுத்துவைப் பார்த்து, ''இங்க பாருடா. டைகருக்கு நல்ல வெல்லம் பிடிக்கமாட்டேங்குது. ஆனா, சாராய வெல்லம் பிடிக்குது...'' என்றேன். டைகர் என்னைப் பார்த்து குரைக்க... நான் மேலும் ஒரு வெல்லத்தைப் போட்டேன்.

பிச்சைமுத்து நான்கைந்து வெல்லங்களைத் தின்று முடித்தவுடன், ''போதும்ண்ணன்... என்னமோ பண்ணுது'' என்றான். மேலும் சில வெல்லங்களைத் தின்றவுடன் எனக்கும் திகட்ட ஆரம்பித்தது. அதுவரையிலும் என் வாழ்நாளில் நான் எதையும் திகட்டத் திகட்டத் தின்றதில்லை. முக்கி முக்கி மேலும் ஒரு வெல்லம் மட்டுமே தின்ன முடிந்தது. மிச்சமிருந்த வெல்லத்தை எண்ணினேன். பதினெட்டு இருந்தது.

''மிச்சத்தை என்னடா பண்றது?''

''வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிடலாம்ண்ணேன்...''

''திருட்டு வெல்லம்... அதுவும் சாராய வெல்லம்னு தெரிஞ்சுது... அம்மா கொன்னே போட்டுரும்...'' என்று யோசித்த நான், ''வா...'' என்று எழுந்தேன்.

மீண்டும் குருட்டு மதகு புதர்க்காட்டுக்கு வந்தோம். நன்கு பெரிதாக வளர்ந்திருந்த வேலிக்காத்தான் மரங்களைப் பார்த்தேன். அதன் இரண்டு கிளைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் வெல்லத்தை வைக்கும் அளவுக்கு இடம் இருந்தது. அங்கு ஈரவெல்லத்தை வைத்தால் அப்படியே ஒட்டிக்கொண்டுவிடும். அந்தப் பகுதிக்கு யாரும் வரப்போவது இல்லை. அப்படியே வந்தாலும் கறுப்பு வெல்லம், கிட்டத்தட்ட மரத்தண்டுகளின் நிறத்திலேயே இருப்பதால், யார் கண்ணிலும் படாது. பிறகு வந்து எடுத்துத் தின்னலாம். நானும் பிச்சைமுத்தும் ஆளுக்கு இரண்டு வெல்லங்களை டவுசர் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, மீதி வெல்லங்களை வேலிக்காத்தான் மரங்களில் வைத்தோம். புதர்க்காட்டில் இருந்து மேடேறி சாலைக்கு வந்தவுடன் பிச்சைமுத்து, ''அண்ணன்... மீதி வெல்லத்தை எப்ப சாப்பிடலாம்?'' என்றான்.

''நாளைக்கு ஸ்கூல் விட்டு வந்த பிறகு சாப்பிடலாம்'' என்றேன்.

''அது தீந்துருச்சுன்னா?''

''தீந்துருச்சுன்னா, அடுத்த ஊறலப் பிரிக்க வேண்டியதுதான்'' என்று சிரித்தேன்.

அடுத்த இரண்டு நாட்களில் வெல்லத்தைத் தீர்த்துவிட்டு, புதிய ஊறலைத் தேடினோம். ஆனால், புதிய ஊறல் சாமான்யமாகக் கண்ணில் படவில்லை. உச்சிக்கால்வாய், மேற்குக்கால்வாய்ப் பகுதி வரை வளைத்து வளைத்துத் தேடியும், ஒரு ஊறலையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் பிச்சைமுத்துவிடம், ''என்னடா... புது ஊறல் போடலையோ?'' என்றேன்.

''இல்லையே.... நேத்துகூட குப்புசாமியண்ணன் இந்தப் பக்கம் வந்தாரே...''

''போன ஊறலப் பிரிச்சுட்டோம்ல... அதான் மறைவா எங்கயோ போட்டுருக்காங்க...''

அலைந்து அலைந்து அலுத்துப்போய் உட்கார்ந்தோம். ''என்னண்ணன் எங்கயும் காணோம்...'' என்ற பிச்சைமுத்துவின் முகம் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தது. அதைப் பார்த்த எனக்குத் தாங்க முடியவில்லை. எப்படியாவது ஊறலைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும். அப்போது சட்டென்று அந்த யோசனை தோன்றியது.

''டேய்... டைகரும் அன்னிக்கி வெல்லம் சாப்பிட்டுதுல்ல... அதை அழைச்சுட்டு வந்தா கண்டுபிடிச்சுடும்டா...'' என்று கூற பிச்சைமுத்துவின் முகம் பளிச்சென்று மலர்ந்தது.

''சூப்பர் ஐடியாண்ணன். இப்பவே போய் அழைச்சுட்டு வரேன்'' என்ற பிச்சைமுத்து சிட்டாகப் பறந்தான். பத்தே நிமிடங்களில் டைகரோடு வந்தான். இடத்தைப் பார்த்தவுடனேயே எதற்கு வந்திருக்கிறோம் என்று டைகருக்குப் புரிந்துவிட்டது. அது மோப்பம் பிடித்தபடி வேகமாக நடக்க... நாங்கள் பின்னால் சென்றோம். டைகர் ஒரு முட்புதருக்குள் நுழைந்து, ஓரிடத்தைப் பார்த்துக் குரைத்தது. நாங்கள் ஆவலுடன் பார்த்தோம். ஆனால், அங்கே ஊறல் எடுத்த காலிப்பானைதான் கிடந்தது. எங்களை ஏமாற்றத்துடன் பார்த்த டைகர் முன்பைவிட ஆவேசமாகத் தேடியது. சரியாக கால் மணி நேரத்துக்குப் பிறகு, பிறிதொரு இடத்தில் குவியலாகக் கீழே வெட்டிப் போடப்பட்டிருந்த முட்செடிகளைப் பார்த்துக் குரைத்தது.

''டேய்... நம்ம பழைய ஊறல எடுத்துட்டோம்ல? அதனால வைக்கப்போருக்குப் பதிலா முள்ள வெட்டிப் போட்டிருக்காங்க. நாம யாரு?'' என்று பிச்சைமுத்துவைப் பார்த்துச் சிரித்தேன். கவனமாக முட்செடிகளை எடுத்துவிட்டு, ஊறல் பானையைப் பிரித்தோம்.

அதன் பிறகு வாரத்துக்கு இரண்டு முறையாவது வெல்ல வேட்டைக்குக் கிளம்பிவிடுவோம். குப்புசாமியண்ணன் எங்கு இடத்தை மாற்றினாலும், நாங்கள் டைகரை வைத்துக் கண்டுபிடித்துவிடுவோம். அதனால், எங்கள் கிராம மக்களுக்குச் சரியாக நொதிக்காத, அரைகுறை ஊறலில் தயாரித்த தரமில்லாத சாராயம்தான் கிடைத்து வந்தது.

வெல்ல வேட்டை

எப்போதும் வெல்லத்தை எடுத்தவுடன் ஏரிக்கரைக்குச் சென்றுவிடுவோம். கையில் வெல்லத்தோடு ஏரி நீரில் குளிப்போம். வெல்லத்தைத் தூக்கிப் போட்டு கேட்ச் பிடித்து விளையாடுவோம். வெல்லத்தைச் சோப்புகட்டி போல் உடம்பில் தேய்த்தே கரைப்போம். வாயில் எந்நேரமும் வெல்லத்துடனே திரிவோம்.

ஒரு நாள் நாங்கள் வெல்ல வேட்டைக்குச் சென்றபோது, குப்புசாமியண்ணன் அப்போதுதான் புதிதாக ஊறல் போட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் புதர்களுக்குப் பின்னால் மறைந்து நின்றபடி பார்த்தோம். டைகரிடம் குரைக்காமல் இருக்கும்படி வாயில் விரல் வைத்துக் காட்டினேன். இந்த முறை அவர்கள் வெல்லத்தைப் பானையில் போடவில்லை. தார் டின் போன்ற ஒரு பெரிய பிளாஸ்டிக் பேரலில் நீரை ஊற்றி, அதில் வெல்லத்தைக் கொட்டினார்கள். அந்த பேரல் நான்கைந்தடி உயரம் இருக்கும். நான் கிசுகிசுப்பாக பிச்சைமுத்துவிடம் , ''இன்னைக்கு நாத்தம் இல்லாத வெல்லம் கிடைக்கப்போவுது...'' என்றேன்.

அவர்கள் பேரலைக் குழியில் இறக்கிவிட்டு, சாக்குத்துணியால் வாய்ப்புறத்தைக் கட்டி மூடி, மேலே முட்செடிகளைப் போட்டுவிட்டுச்  சென்றனர். நாங்கள் ஐந்து நிமிடங்கள் அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. தூரத்தில் பேச்சு சத்தம் மெல்ல மெல்லத் தேய்ந்து ஓய்ந்தவுடன், ஊறலை நோக்கி நடந்தோம்.

ஊறலைப் பிரிக்க... உள்ளே தெளிவான தண்ணீருக்குக் கீழே பளிச்சென்று தெரிந்த வெல்லத்தைப் பார்த்தவுடன் சந்தோஷமாக இருந்தது. நாற்றமடிக்காத, கரையாத புது வெல்லம். சந்தோஷத்துடன் தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு பேரலில் கையை விட்டேன். பேரலின் ஆழம் அதிகம் என்பதால், கால்வாசித் தண்ணீர் வரைதான் கையை விட முடிந்தது. அதற்காக நான் பெரிதாகக் கவலைப்படாமல், பேரலின் விளிம்பில் ஏறி அமர்ந்துகொண்டு, பேரல் தண்ணீரில் காலை விட்டுப் பார்த்தேன். காலும் எட்டவில்லை.

''சீக்கிரம் எடுண்ணன்...'' என்றான் பிச்சைமுத்து.

''இருடா...'' என்று யோசித்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. அப்படியே ஊறலில் குதித்துவிட்டேன். வெல்லத்தின் மீதுதான் நான் நின்றுகொண்டிருந்தேன். ஆனால், வெல்லத்தை எடுப்பதற்காகக் கையைக் கீழே விட்டபடி குனிந்தால், தலை பேரலில் முட்டியது. நான் எவ்வளவு முயன்றும் பாதித் தண்ணீர் வரை கையை விட முடிந்ததே தவிர, வெல்லத்தைத் தொடமுடியவில்லை. எழுந்து வெளியே வந்த நான், ''முத்து... நான் குனிஞ்சா தலை முட்டுது. நீ இறங்கு...'' என்றேன்.

''அய்ய...'' என்று பிச்சைமுத்து முகம் சுளிக்க... ''உனக்கு வெல்லம் வேணும்னா இறங்கு'' என்றேன். சில விநாடிகள் யோசித்த பிச்சைமுத்து மளமளவென்று சட்டையைக் கழற்றிவிட்டு பேரலில் இறங்கினான். அவன் தலை பேரலில் முட்டாமல், கை கீழே சென்றது. ஆனாலும், வெல்லத்தைத் தொடமுடியாமல், ''கை எட்டமாட்டேங்குதுண்ணன்...'' என்றான். அவன் முழுமையாகத் தண்ணீரில் மூழ்கினால்தான் வெல்லத்தை எடுக்க முடியும். ''தண்ணில முங்கி கைய விடுடா...'' என்றேன்.

''அய்யய்யோ... என்னால முடியாது...''

''முங்குடாங்கிறேன்...'' என்று நான் அவன் தலையைப் பிடித்துத் தண்ணீருக்குள் அமுக்கினேன். சற்றுத் திமிறிய பிச்சைமுத்து கையில் வெல்லம் அகப்பட்டவுடன் திமிறுவதை நிறுத்திவிட்டு, வெல்லத்துடன் தண்ணீரை விட்டு மேலே வந்தான். ஒரு வாய் கடித்துவிட்டு, என்னிடம் வெல்லத்தை நீட்டினான். வெல்லம் கிடைத்த உற்சாகத்தில் பிச்சைமுத்து இப்போது எந்தத் தயக்கமுமின்றி நீரில் மூழ்கி, ஒவ்வொரு வெல்லமாக எடுத்து என்னிடம் கொடுத்தான்.

வெல்ல வேட்டை

அப்போது திடீரென்று டைகர் குரைக்கும் சத்தம் கேட்க... நான் வேகமாக திரும்பிப் பார்த்தேன். ஒரு புதர் மறைவில் இருந்து குப்புசாமியண்ணன்  நான்கைந்து ஆட்களுடன் பேசியபடி வர... எனக்கு பகீரென்றது. ஏதோ மறந்துவிட்டதை எடுக்க வந்திருக்கிறார்கள்போல. டைகரையும் எங்களையும் பார்த்தவுடன், குப்புசாமியண்ணனின் முகம் மாறியது. வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ஆத்திரமாக, ''கம்னாட்டி நாய்ங்களா... இந்தப் பசங்கதான்டா எங்க ஊறல் போட்டாலும் பிரிக்கிறானுங்க. புடிச்சு கையக் கால வெட்டுங்கடா...'' என்று தன் ஆட்களிடம் கூவியபடி ஓடிவந்தார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மாட்டினால், அடி பின்னி எடுத்துவிடுவார்கள்.

பேரலில் இருந்து எட்டிப் பார்த்த பிச்சைமுத்து, முகத்தில் பீதியுடன் ''அண்ணன்...'' என்று அலறினான். ''பயப்படாம மேல ஏறுடா...'' என்றேன். பிச்சைமுத்து மேலே ஏற முடியாமல் திணறினான். அருகில் நெருங்கிய குப்புசாமியின் ஆட்களை மறித்தாற்போல் நின்றபடி டைகர் குரைக்க... அவர்கள் சற்றே தயங்கியபடி நின்றனர்.

இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு நான் பேரலினுள் கைகளை நீட்டி பிச்சைமுத்துவை வெளியே தூக்கினேன். வெளியே வந்த பிச்சைமுத்துவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு மெயின் ரோடு இருக்கும் திசையை நோக்கி ஓடினேன். எங்கள் பின்னாலேயே டைகரும், குப்புசாமியும் அவரது ஆட்களும் ஓடிவந்தனர். டைகர் அவ்வப்போது திரும்பி அவர்களைப் பார்த்துக் குரைத்தபடியே ஓடி வந்தது.

''டேய் நில்லுங்கடா களவாணிப் பசங்களா... நாங்க உயிரக் கொடுத்து தொழில் பண்றோம். வந்து நாசமாக்கிட்டுப் போறீங்களா, நாய்களா?'' என்றபடி குப்புசாமியண்ணன் எங்கள் மீது செருப்பை விட்டெறிந்தார். நாங்கள் சட்டென்று அடர்த்தியான முட்செடிகளுக்குள் புகுந்து ஓட ஆரம்பித்தோம். இதில் குழம்பிப்போன டைகர் எங்கோ திசை மாறிச் சென்றுவிட... நானும் பிச்சைமுத்துவும் மட்டும் சிட்டாகப் பறந்தோம். கஷ்டப்பட்டு மெயின் ரோடுக்குச் சென்றுவிட்டால், ஊர் வந்துவிடும். அதன் பிறகு மாட்டினாலும் பிரச்னை இல்லை. ஊர்க்காரர்கள் தடுத்து, என்ன ஏதென்று விசாரித்து அடியில் இருந்து காப்பார்கள். இங்கே இவர்களிடம் தனியாக மாட்டினால், அவ்வளவுதான்!

தூரத்தில் மெயின் ரோடு தெரிய... நாங்கள் உற்சாகத்துடன் சாலையை நோக்கி ஓடினோம். பிச்சைமுத்து எனக்கு முன்னால் வேகமாக ஓடிக்கொண்டிருந்தான். சாலை நெருங்க... பிச்சைமுத்து வேகமாக மேட்டில் ஏறி, சாலை விளிம்பைத் தொட... நான் திரும்பி குப்புசாமியண்ணனைப் பார்த்தேன். அப்போது அவர் சாலையைப் பார்த்து, ''அய்யோ... மகமாயி...'' என்று கத்தியபடி நின்றுவிட்டார்.  

நான் வேகமாகத் திரும்பி சாலையைப் பார்த்தேன். பிச்சைமுத்து சாலையில் வேகமாக ஏறவும், அந்தச் சாலைத் திருப்பத்தில் இருந்து அதி வேகமாக வந்த லாரி பிச்சைமுத்து மீது மோதவும் மிகச்சரியாக இருந்தது. லாரி மோதிய வேகத்தில் என் கண் முன்னாலேயே பிச்சைமுத்து ரோட்டில் ஏழெட்டு அடி தூரம் தூக்கி வீசப்பட... நான் ''முத்தூ...'' என்று கத்தியபடி சாலையை நோக்கிப் பேய் போல ஓடினேன். அதற்குள் லாரி கீழே விழுந்து கிடந்த பிச்சைமுத்துவின் மீது ஏறி பிரேக் போட்டு நின்றது. பின்னால் குப்புசாமியண்ணனின் ஆட்களும் கத்தியபடி ஓடிவந்தனர். நான், ''முத்து... முத்து....'' என்று அலறியபடி சாலை மேடேறினேன். லாரியில் இருந்து இறங்கிய டிரைவர் எங்களைப் பார்த்துவிட்டு  ஓட ஆரம்பித்தான்.

நான் சாலையில் கிடந்த பிச்சைமுத்துவை நோக்கி வேகமாக ஓடினேன். நான் பிச்சைமுத்துவை நெருங்கியபோது, அவன் உடலில் ஓர் அசைவும் இல்லை. தலை, முகம், உடம்பெல்லாம் ரத்தம் வழிந்தோட... கண்கள் வானத்தை வெறித்துப் பார்க்க... ஒரு துளி சந்தேகத்துக்கும் இடமின்றி பிச்சைமுத்து இறந்து கிடந்தான். அதிர்ந்துபோன நான் அழக்கூடத் தெம்பின்றி பிரமை பிடித்தாற் போல் சில விநாடிகள் நின்றேன். பிறகு அப்படியே மண்டியிட்டு அமர்ந்து, பிச்சைமுத்துவை நோக்கிக் குனிந்தேன். பிச்சைமுத்துவின் பால் வடியும் முகத்தில் இப்போது வெறும் ரத்தக்காயங்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அந்தக் கண்கள் மட்டும் என்னையே வெறித்துப் பார்ப்பதுபோல் இருந்தன.

அம்மா அடிக்கும்போதெல்லாம் என் முதுகுக்குப் பின்னால் வந்து ஒளிந்துகொள்ளும் பிச்சைமுத்து, ஒன்றுக்குப் போகும்போதுகூட ஒரு கையால் என்னைப் பிடித்தபடியே மூத்திரம் போகும் பிச்சைமுத்து, பக்கத்து வீட்டில் கொடுத்த ஒற்றை வாழைப்பழத்தை வைத்திருந்து நான் வந்தவுடன் பிட்டுக் கொடுத்த என் பிரியத்துக்கு உரிய தம்பி பிச்சைமுத்து பிணமாகக் கிடந்தான். நான் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

''நம்ம வீட்டுல மட்டும் ஏண்ணன் இட்லி, தோசைல்லாம் சுட மாட்டேங்கிறாங்க?''

''பாட்ஷா மாதிரி பேசட்டுமாண்ணன்? நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி!''

''அண்ணன்... பேய் இருக்காண்ணன்?''

''பாதுஷான்னா என்னண்ணன்?''

''வயசாகி நாமெல்லாம் செத்துப்போயிடுவோம்னு அம்மா சொல்றாங்க. செத்துப்போறதுன்னா என்னாண்ணன்?''

நான் தோள்கள் குலுங்க அழ ஆரம்பித்தேன். பிச்சைமுத்துவைத்  தூக்கி மடியில் போட்டுக்கொண்ட எனது அழுகை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது. அவனை நெஞ்சோடு சேர்த்துக் கட்டி அணைத்துக்கொண்டு கதறி கதறி அழுதேன். அழுதபடியே அவன் கைகளை வருடியபோதுதான் கவனித்தேன். மூடியிருந்த அவன் வலது கையில் ஏதோ தெரிந்தது. நான் பிச்சைமுத்துவின் கைவிரல்களைப்  பிரிக்க... கையில்  ரத்தக்கறையுடன் ஒரு சிறு துண்டு வெல்லம்.

இவையெல்லாம் நடந்து ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஆகின்றன. நன்றாகப் படித்த நான் ப்ளஸ் டூவில் மாவட்டத்திலேயே முதலாவதாக வந்தேன். எங்கள் ஸ்கூல் ஹெட்மாஸ்டரின் உதவியுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்துவிட்டு, இன்று சென்னையில் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில், மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறேன். வீட்டில் எல்லா பொருட்களையும் வாங்கிக் குவித்துவிட்டாலும், தீபாவளிக்கு அதிரசம் சுடக்கூட வெல்லம் மட்டும் வாங்குவதே இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism