பிரபல எழுத்தாளர்கள் வழங்கும் ஆரம்ப வரிகளை, அற்புத கதைகளாக வாசகிகள் பூர்த்தி செய்யும் `கதை எழுதலாம் வாங்க!’ போட்டிக்கு வாசகிகள் அனுப்பும் படைப்புகளைக் கண்டு, ‘என்ன கற்பனைத் திறன்... என்ன சொல்வளம்’ என வியப்பில் திக்குமுக்காடிப் போகிறோம். ’கதை எழுதலாம் வாங்க போட்டி - 3’-க்காக வந்து குவிந்த கதைகளில் இருந்து பரிசுக்குரிய கதையை எழுத்தாளர் அழகிய பெரியவன் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

கதை எழுதலாம்... வாங்க!

அழகிய பெரியவன் எழுதிய கதையும், அதன் ஆரம்ப வரிகளை வைத்து வாசகி கவிதாகுமாரன் எழுதிய முதல் பரிசுக்குரிய (ரூ1,000) கதையும் இங்கே இடம்பெறுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீண்டு வந்த கனவு!

குப்பறை நடைவழியில், இறுகிய முகத்துடன் உட்கார்ந்து விளையாட்டு மைதானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இளமதி. எண்ணம் முழுதும் பிற்பகல் விளையாட்டுப் போட்டிகளின் மேல் கிடந்தது. ஆனால், வீட்டிலிருந்து கிளம்பும்போதே சொல்லிவிட்டாள் அவளுடைய அம்மா கலாவதி... ‘‘வெளையாட்டுங்க எதுலயும் கலந்துக்க வேணாம். படிச்சிட்டு வந்தா போதும். மீறி கலந்துக்கிட்டேன்னு தெரிஞ்சது, ஓங்கையி காலை முறிச்சிடுவேன்...”

கதை எழுதலாம்... வாங்க!

விளையாடுவதற்கு மட்டுமே கலாவதி அப்படிச் சொல்லவில்லை. இனிமேல் பையன்களிடம் பேசக் கூடாது, பள்ளி விழாக்களில் நடனமாடக் கூடாது என்றும் சொல்லிவிட்டாள்.

எல்லாம் அதனால் நடந்தது. ஒரு மாதம் முன்பு வகுப்பு நடந்துகொண்டிருந்தபோது திடீரென ஆடைக்குள் வெம்மையை உணர்ந்தாள் இளமதி. அவளுக்குக் குழப்பம். நீர்மையும், பிசுபிசுப்புமானதொரு அசூயை. தோழிகளில் ஒருத்தி `அதுதான்’ என்றாள். அதைக்கேட்ட கணத்திலேயே அவமானமும், வெட்கமும் தோன்றின. வயிற்று வலியென்றதும் வகுப்பிலிருந்த ஆசிரியர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்.

‘‘எட்டாப்புலயே ஒக்காந்துடுதுங்க. ச்சை... என்னத்த சாப்புடுதுங்களோ..!”

- வகுப்பை விட்டு வெளியே வந்து கூடி நின்று பேசிய ஆசிரியர்களுள் ஒருவரின் சொற்கள், இளமதியின் முதுகைப் பிடித்துத் தள்ளின. புத்தகப் பையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போனாள். பள்ளியிலிருந்து கூப்பிடு தொலைவில்தான் அவளின் கிராமம். அந்த நேரத்தில் கிராமத்தில் ஆட்களே இல்லை. மக்களில் சிலர் ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டும், சிலர் நூறு நாள் வேலைக்கும் போயிருந்தார்கள்.

கலாவதி காலையிலேயே ஊருக்குள் வரும் காலணித் தொழிற்சாலைப் பேருந்தில் வேலைக்குப் போய்விட்டாள். பாட்டியும் வீட்டில் இல்லை. அவள், தூரத்து நிலத்தில் தென்னையோலை முடையப் போகிறாள். ஊரின் தனிமையும், உடலின் பயமும் அவளைப் பிடித்து உசுப்பின. எறவானத்திலிருக்கிற வீட்டுச் சாவியையும் எடுக்க மறந்து அழுதபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தாள். நடுப்பகலில் அவளைப் பார்க்க வந்திருந்த தோழிகள் ஆறுதல் கூறினர்.

“ஏய், முன்ன நம்ம கிளாசு நித்யாவுக்கு இப்பிடி ஆனப்போ நாம அவளத் தொட்டுட்டோம் பாருடி, அதனாலதாண்டி இப்பிடி ஆகுது! எங்கம்மா சொன்னாங்க!”

மாலையில் வந்து விஷயத்தை அறிந்ததும், கலாவதி மகளைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

“இப்பிடி நம்பள நடுவாந்தரத்துல உட்டுட்டுப் போயிட்டாரே உங்கப்பன்..!”

பாட்டி அதட்டினாள்.

“அழறத நிப்பாட்டுடி. பொம்பளப் பொறப்புன்னு எடுத்த பொறவு வாழ்ந்துதான் தீரணும்!”

மீண்டும் பள்ளிக்கு வந்தபோது, இளமதியால் வழக்கம் போல இருக்க முடியவில்லை. இறுக்கமானாள். தன்னை பையன்கள் குறுகுறுவெனப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிப்பதாக உணர்ந்தாள்.

‘‘என்னடி, உங்கம்மா எல்லாத்தையும் சொல்லியனுப்பிச்சாங்களா? ஒழுங்கா இரு!” என்றார் தமிழம்மா.

அம்மாவைப் பற்றி இளமதி நினைத்துக் கொண்டிருந்தபோது யாரோ அவளை அழைப்பது போலிருந்தது.

“என்ன இளமதி? ஓட்டப் பந்தயத்திலா, லாங் ஜம்ப்பிலா... எதில கலந்துக்கப்போற?”

திரும்பிப் பார்த்தாள் இளமதி. சுந்தரம் அய்யா. அவரை இளமதிக்கு மிகவும் பிடிக்கும். எப்போதும் புன்னகையோடு பேசுவார். சுந்தரம், அறிவியல் ஆசிரியர்தான். நல்ல தமிழில் பேசவேண்டும் என அவர் அவ்வப்போது வலியுறுத்துவதால் அப்பள்ளிக்கே ’அய்யா’வாகிவிட்டார். மாணவர்களிடம் இயல்பாகப் பேசும் அவர், பெற்றோர்களைப் பற்றியெல்லாம் விசாரிப்பார். ஒருமுறை இளமதியை அவர் அழைத்து அவள் பெற்றோர்களைப் பற்றி விசாரித்தபோது, இவர் ஏன் இதையெல்லாம் கேட்கிறார் என்றிருந்தது அவளுக்கு.

கதை எழுதலாம்... வாங்க!

“அய்யா நா எதிலயும் கலந்துக்கல. எங்கம்மா வாணானுட்டாங்க...!”

சில கணங்கள் யோசித்த அவர் இளமதியிடம் சொன்னார்... “உங்கம்மாகிட்ட நா பேசறேன். அதுக்கு ஒரு வழியிருக்கு. நீ இன்னிக்கு போட்டிகளில் கலந்துக்கிற!”

- கண் சிமிட்டிக்கொண்டு அவர் சொல்வதை இளமதியால் தட்ட முடியவில்லை. இன்னொருபுறம் அவளுக்கு உள்ளுக்குள் ஆனந்தம் பொங்கியது. பிற்பகலில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் நான்கைந்து பரிசுகளை வென்றாள். மாலையில், இளமதியால் மகிழ்ச்சியை உணரமுடியாதபடி அம்மாவின் பயம் வந்து பீடித்துக்கொண்டது. அவளின் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வாங்கி வைத்துக்கொண்டு இளமதியை வீட்டுக்கு அனுப்பிவிட்டார் சுந்தரம்.

அன்று இருட்டும் வரைக்கும் காத்திருந்து இளமதியின் வீட்டுக்குப் போனார் சுந்தரம். அவரின் வரவை கலாவதி எதிர்பார்க்கவில்லை. பதற்றமடைந்தாள். வீட்டில் ஒன்றுமில்லையே என அங்கலாய்த்தாள். அவளைக் கையமர்த்தி, தன் பையிலிருந்து சான்றிதழ் ஒன்றை எடுத்துக்கொடுத்தார் சுந்தரம். குழப்பத்துடன் அதை வாங்கிப் பார்த்த கலாவதியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. அந்த ஊர்ப்பள்ளியில் அவள் படித்தபோது விளையாட்டில் வாங்கிய சான்றிதழ் அது.

“ஒருநாள், பள்ளி அலுவலக அலமாரியை சுத்தம் செய்தபோது கிடைத்தது!”

“எவ்ளவோ நாளாச்சி சார்! கனவு மாதிரியிருக்கு. கனவேதான்!”

“உங்களோட அந்தக் கனவை உங்க மகளுக்கு இப்போ தரலாமில்லையா..?”

சுந்தரம், தான் வைத்திருந்த இளமதியின் பரிசுகளையும், சான்றிதழ்களையும் அவளிடம் தந்தார். அவற்றைக்  கையில் வாங்கிய கலாவதியின் கண்கள் கலங்கின. வீட்டின் மூலையில் ஒடுங்கிக்கொண்டு நின்றிருந்த இளமதியை அழைத்து அணைத்துக்கொண்டாள்!

பரிசு பெறும் வாசகி சிறுகதை

கதை எழுதலாம்... வாங்க!

கவிதாகுமாரன்

ளமதிக்குப் புரியவில்லை. வகுப்பிலேயே தான் முதல் மாணவியாய் இருந்தும் அம்மா ஏன் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறாள்? தெருவிலும் சக தோழிகளுடன் விளையாடுவதற்கு குறிப்பிட்ட நேரம் வரைதான் அனுமதி. விளையாட்டு என்றாலே வெறுப்பாகிவிடும் அம்மா, இளமதியைப் பொறுத்தவரை பெரும் புதிர்!

மாலைச் சூரியன் தன் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ள, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காற்று சூழலில் குளுமையைப் பூசத்தொடங்கியிருந்தது. விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம். அம்மாவை கொஞ்ச நேரம் மறந்தால்தான் தன் தீராத ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்று நினைத்தாள். விசில் ஊதியதும் ஓடத் தொடங்கினாள். முதலாவதாக வந்து வியர்க்க விறுவிறுக்க மூச்சு வாங்கிய இளமதியின் இதழ்களில் அழகான புன்னகை!

பொளேரென்று விழுந்தது அறை. திகுதிகுவென எரிந்தது கன்னம். அம்மாவிடம் நீட்டிய அந்த வெற்றிக் கோப்பை, வீட்டின் மூலையில் போய் விழுந்தது. ‘‘படிச்சி படிச்சி சொல்லியிருக்கேன். எவ்ளோ திமிர் இருந்தா பந்தயத்துல கலந்துக்கிட்டதும் இல்லாம, ஜெயிச்சத என்கிட்ட வந்து சொல்லுவே?’’

- காளியாக நின்றிருந்தாள் கலாவதி.

இரவு முழுவதும் அம்மா, திட்டிக்கொண்டே இருந்ததில் அவளுக்குள் இருந்த பயமும், கோபமும் அம்மா மீது ஒருவித வெறுப்பாக வந்திருந்தது. முதல் பீரியடில் பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன், ‘‘முதல் பரிசு வென்ற இளமதிக்கு எல்லாரும் கைதட்டுங்க!’’ என்றார் சுகந்தி டீச்சர். அம்மா கொடுத்த அறையும், அதைவிட வலி தந்த வார்த்தைகளும் அந்த கைதட்டல் சத்தத்தையும் மீற, சலனமற்று எழுந்து நின்றாள் இளமதி.

மதிய சாப்பாட்டு இடைவேளை நேரத்தில், தன் தலைகோதி ஆறுதலாய் விசாரித்த சுகந்தி டீச்சரிடம் எல்லாம் சொல்லி அழுதாள்.

அன்று மாலை அந்தப் பட்டாசுத் தொழிற்சாலை வாசலில் சுகந்தி டீச்சர் தன் ஸ்கூட்டியை நிறுத்தியபோது சூரியன் அவசரமாக தன்னை அடிவானத்துள் ஒளித்திருந்தான். வெளியில் வந்த கலாவதி, ‘‘என் பொண்ணுக்கு வெளையாட்டு வேணவே வேணாங்க!’’

- வார்த்தைகளில் அவ்வளவு கசப்பு.

‘‘ஏன் இத்தனை கசப்பு? ஓட்டப் பந்தயத்துல உலக அளவுல சாதிச்ச பி.டி. உஷா, ஷைனி ஆப்ரகாம்னு நம்ம நாட்டுலயே எவ்வளவோ பேர் இருக்காங்களே?’’

‘‘இவ்ளோ பேர் சொல்றீங்களே... ஒங்களுக்கு கலாவதி பக்கிரிசாமிய தெரியுமா?’’

-பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று நடந்தாள் கலாவதி. சுகந்தியின் கண்களில் விரிந்த கலாவதியின் நடையில் சிறு ஓட்டம் தெரிந்தது.

ஒரு வாரம் கழித்து... தன் வீட்டில் அம்மாவிடம் கேட்டாள் இளமதி... ‘‘டீச்சர் சொன்னதெல்லாம் உண்மையாம்மா?’’ புரியாமல் நிமிர்ந்த கலாவதியிடம், ‘‘நீ தமிழ்நாட்டு லெவல்ல ஓட்டப்பந்தயத்துல ஃபர்ஸ்ட் வந்தியா?’’

கலாவதி எழுந்து பீரோ மீதிருந்த ஒரு பெட்டியை எடுத்துக் கீழே வைத்துத் திறந்தாள். ஒரு புகைப்படத்தில் அம்மாவும், அப்பாவும் சேர்ந்து நிற்பதைப் பார்த்தாள் இளமதி.

‘‘நான் ஸ்டேட் லெவல்ல மெடல் வாங்கினப்போ எனக்கு கல்யாணமே ஆகல. ஜெயிச்ச பிறகுதான் தூரத்து சொந்தமான ஒங்கப்பாவைக் கட்டிக்கிட்டேன். நீ என் வயித்துல இருந்தப்போதான் அந்தச் செய்தி வந்தது. நான் போதைப்பொருள் பயன்படுத்திதான் போட்டியில ஜெயிச்சதா சொல்லி, மெடலைப் பறிச்சிட்டாங்க. ரெண்டாவது எடத்துல இருந்த ஒரு பணக்காரப் பொண்ணுக்கு மெடல் போயிடுச்சி. பணம் வெளையாட ஆரம்பிச்ச எடத்துல என் ஓட்டத்துக்கு மதிப்பு இல்லாமப் போச்சு. பேப்பர்லயும், டி.வி-யிலயும் என்னைப் பத்தி தவறான செய்திகள் வர... ஒங்கப்பா என்னை விட்டுட்டுப் போயிட்டாரு.

எங்கே, என் ரத்தம் ஒனக்கும் வந்துடுமோன்னு பயந்துதான், உன்னை விளையாட விடாம வீட்டுக்குள்ள போட்டு அடச்சேன். என்ன தெறமை இருந்து என்ன புண்ணியம்? இங்கே எல்லாமே பணம் தீர்மானிக்கிற ஒண்ணா இருக்கு. இந்த விளையாட்டெல்லாம் வேணாம். ஒங்கம்மாவால இதுக்கு மேல ஓட முடியாதும்மா!’’

- மகளை ஆதரவாய் அணைத்தாள் கலாவதி.

‘‘ஒனக்கு நடந்ததுதான் எனக்கும் நடக்கும்னு இல்லம்மா. என் அம்மாவுக்கு கெடைக்காத அங்கீகாரத்தை, என் மூலமா நான் வாங்கித் தர்றேம்மா!’’

- இளமதியின் இறைஞ்சிய குரல், கலாவதிக்குள் ஏதோ செய்ய ஆரம்பித்தது!

அழகிய பெரியவன்  ஓவியம்: ஸ்யாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism