‘‘மாஸ்டர்... பரோட்டா மாஸ்டர்”

பள்ளிக்குள் நுழைந்த ரஞ்சித் முதுகுக்குப் பின்னால் குரல்கள் ஒலித்தன. ரஞ்சித் திரும்பிப் பார்க்காமல் நடந்தான். திரும்பிப் பார்த்தால், குரல் கொடுத்தவர்கள் மரம், சுவருக்குப் பின்னால் மறைந்துகொள்வார்கள் அல்லது அவர்களுக்குள் வேறு எதுவோ பேசுவது போல நடிப்பார்கள்.

ரஞ்சித்துக்கு இது பழகிவிட்டது. ஆரம்பத்தில் கோபம் கோபமாக வரும். ‘‘யாருடா பரோட்டா மாஸ்டர்னு கூப்பிட்டது?” என்று சண்டைக்குப் போவான்.

பரோட்டா மாஸ்டர்!

‘‘இங்கே நின்னுட்டு இருந்தா, நாங்க சொன்னதா அர்த்தமா?” என்று வம்படியாகப் பேசுவார்கள்.

இதை ஆரம்பித்துவைத்தது, அவன் வகுப்பில் படிக்கும் வினோத், பாஸ்கர், ஜீவா. கடைசி பெஞ்ச் பிஸ்தாக்கள். எல்லோரிடமும் வம்பு செய்வதும், கிண்டல் அடிப்பதும் அவர்களின் பொழுதுபோக்கு.

ரஞ்சித், எட்டாம் வகுப்பு படிக்கிறான். அவன் அப்பாவுக்கு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டர் வேலை. ஒரு நாள் மாலை நேரம், அப்பாவைப் பார்க்கச்  சென்றிருந்தான் ரஞ்சித். அப்பாவிடம் பேசிவிட்டு பணமும், பார்சல் கட்டிக்கொடுத்த பரோட்டாவையும் வாங்கும்போது, ஹோட்டல் வாசலில் இவர்களைப் பார்த்தான்.

‘‘டேய் ரஞ்சித், யாருடா அது?” எனக் கேட்டான் வினோத்.

“அப்பா” என்றான் ரஞ்சித்.

“ஓ... உன் அப்பா இங்கேதான் வேலை செய்றாரா? அப்போ, டெய்லி பரோட்டாவை கட்டுக் கட்டுனு கட்டுவேனு சொல்லு” என்றான் பாஸ்கர்.

‘‘அப்படி இல்லை. எப்போதாவதுதான் சாப்பிடுவேன்’’ எனச் சொல்லிவிட்டு, வேகமாகச் சென்றுவிட்டான்.

வகுப்பில், ஒவ்வொருவருக்கும் அவர்களின் உருவம், பெயரின் அடிப்படையில் பட்டப் பெயர் வைத்திருந்த மூன்று பேரும், இவனுக்கு என்ன வைப்பது எனத் தெரியாமல் இருந்தார்கள். இப்போது கிடைத்துவிட்டது.

அடுத்த நாள், வகுப்பில் ஆசிரியர் இல்லாத நேரம். “ஹலோ, பரோட்டா மாஸ்டர்” எனப் பின் வரிசையிலிருந்து சத்தமாகக் குரல் வந்தது. அன்று ஆரம்பித்ததுதான். வேறு சிலரும் கிண்டல்செய்ய ஆரம்பித்தார்கள்.

பரோட்டா மாஸ்டர்!

சில சமயம் ரஞ்சித்துக்கு அழுகையாக வரும். ‘சே, அப்பா ஏன் இந்த வேலையைச் செய்றார்?’ என நினைப்பான். இன்றும் அப்படித்தான். கிண்டல் செய்தவர்கள் மீது காட்ட முடியாத கோபம், அப்பா மீது திரும்பியது.

அன்று இரவு, வேலை முடிந்து 11 மணிக்கு வந்தார் அப்பா. ரஞ்சித், வாசலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான்.

“ரஞ்சித், இன்னும் தூங்கலையா?” எனக் கேட்டார்.

“இன்னும் சாப்பிடக்கூட இல்லை. அப்புறம் அப்புறம்னு சொல்லிட்டு புஸ்தகத்தையே பார்த்துட்டு இருக்கான்” என்றாள் அம்மா.

“இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகுறது? எழுந்து வா” என்ற அப்பா, அவன் கையைப் பிடித்துத் தூக்கினார்.

சாப்பிடும்போது, ரஞ்சித் தயக்கமாக ஆரம்பித்தான். “நீங்க ஏன்ப்பா இந்த வேலை செய்றீங்க?’’

“ஏன் ரஞ்சித், இந்த வேலைக்கு என்னவாம்? என் அப்பா, அம்மா என்னைப் படிக்கவைக்கல. 12 வயசுல  ஒரு ஹோட்டலில் டேபிள் துடைக்க ஆரம்பிச்சு, சர்வரா மாறினேன். பரோட்டா மாஸ்டருக்கு நல்ல கிராக்கி இருந்துச்சு. அதைக் கத்துக்கிட்டேன். நீ நல்லா படி.

பெரிய வேலைக்குப் போ. ஆமா, திடீர்னு எதுக்கு இப்படிக் கேட்கிறே?” என அவன் தலையை வருடினார் அப்பா.

நடந்ததைச் சொன்ன ரஞ்சித், “சமைக்கிறது பொம்பளைங்க வேலை. அதைத்தான் உன் அப்பா செய்றாருனு கிண்டல் பண்றாங்கப்பா” என்றான்.

பரோட்டா மாஸ்டர்!

சிரித்த அப்பா, “அவங்க தப்பா நினைச்சுட்டு இருக்காங்க. ஊர்ல, உலகத்துல இருக்கிற ஹோட்டல்ல எல்லாம் ஆம்பளைங்கதான் சமைக்கிறாங்க. அம்மா, வீட்டுக்கு சமைக்கிறாங்க. நான் ஊருக்குச் சமைக்கிறேன். இப்ப, கேட்டரிங் படிப்பே இருக்கு. அதைப் படிச்சுக் கத்துக்கிட்டு கை நிறையச் சம்பளம், வெளியூர்ல வேலைனு இருக்கிறது எல்லோருக்கும் தெரியுமே. அந்த மூணு பசங்களையும் நாளைக்கு ஹோட்டலுக்குக் கூட்டிட்டு வா” என்றார் அப்பா.

‘‘எ... எதுக்குப்பா?” எனப் புரியாமல் கேட்டான் ரஞ்சித்.

‘’நீ கூட்டிட்டு வா சொல்றேன். பயப்படாதே, ஒண்ணும் செய்ய மாட்டேன்” என்று சிரித்தார் அப்பா.

அடுத்த நாள் வகுப்பறையில்...

“எதுக்கு ஹோட்டலுக்குக் கூப்பிடுறே? எல்கேஜி பையன் மாதிரி உன் அப்பாகிட்டே கம்ப்ளைன்ட் பண்ணுனியா?” என்றான் வினோத்.

‘‘போய்தான் பார்ப்போம்டா. என்ன பண்ணிடுவார்’’ என்று விறைப்பாகச் சொன்னான் ஜீவா.

பள்ளி முடிந்து, ஹோட்டலுக்குச் சென்றார்கள். ரஞ்சித்தின் அப்பா, அவர்களை வரவேற்றார். “வாங்க தம்பிங்களா! இப்போதான் பரோட்டா மாவு பிசைந்தேன். 10 நிமிஷம் வெயிட் பண்ணுங்க. சூடா சாப்பிடலாம்” என்றார்.

அடுத்து என்ன நடக்கப்போகுதோ... ‘என் பையனை ஏன் கிண்டல் செய்றீங்க’னு எப்போது கேட்பார்?   என்ற படபடப்பு மூன்று பேரிடமும் இருந்தது.

ஆனால், ரஞ்சித்தின் அப்பா அதைப் பற்றியே பேசவில்லை. சூடான பரோட்டாக்களைக் கொண்டுவந்து வைத்தார். “சாப்பிடுங்க. பரோட்டாவை ஆசைக்கு எப்போதோ சாப்பிடலாம். அளவுக்கு அதிகமானா கெடுதல். சின்ன வயசுல, ஒருத்தருக்கு ஒருத்தர் கிண்டல் பண்ணிக்கிறது சகஜம்தான். அதுக்குப்போய், ரஞ்சித் ரொம்ப வருத்தப்படுறான். ஒருத்தர் மேல வருத்தமோ, கோபமோ, வெறுப்போ ஏற்பட்டா, அப்படியே விடக் கூடாது. ஏன்னா, அது மனசுக்குள்ளே வளர்ந்து வளர்ந்து, அவங்க உடம்பையும் பாதிக்கும். எதிராளியையும் பழிவாங்க நினைக்கும். இந்த வெறுப்போ, கோபமோ நீங்கணும்னா, அவங்களை நண்பர்கள் ஆக்கிக்கிட்டா போதும். அதுக்குத்தான் உங்களை வரச் சொன்னேன். வினோத், உங்க அப்பா என்ன வேலை பார்க்கிறார்?” எனக் கேட்டார்.

“மளிகைக் கடை வைச்சிருக்கார்.”

‘‘அட... நமக்குத் தொடர்புள்ள வேலைதான். மளிகைக் கடையில் இருந்து பொருட்கள் வந்தால்தானே இங்கே என் வேலை நடக்கும்” எனச் சிரித்தவாறு சென்றுவிட்டார்.

ஹோட்டலுக்கு கூட்டம் வர ஆரம்பித்துவிட்டது. ரஞ்சித்தின் அப்பா, வேலையில் பரபரப்பாகிவிட்டார். எரியும் அடுப்பின் வெப்பம், அவர் உடலில் வியர்வையை உண்டாக்கியது.

‘‘டேய் ரஞ்சித், தினமும் ரொம்ப நேரம் இந்த சூட்டுல நின்னு வேலை செய்யணும்ல” என்றான் பாஸ்கர்.

“ஆமா... யாரையும் ஏமாற்றாமல் உழைச்சுப் பிழைக்கிறோம்னு நினைச்சுக்கிட்டா, எந்த வேலையும் கஷ்டமா தெரியாதுனு சொல்வார்” என்றான் ரஞ்சித்.

சற்று நேரம் அமைதி. “ஸாரிடா. உன்னை மட்டும் இல்லே, யாரையுமே இனிமே கிண்டல் பண்ண மாட்டோம். நாம நல்லா படிப்போம். பெரிய வேலைக்குப்போய் நம்ம அப்பா, அம்மாவை நல்லா வெச்சுப்போம்” என்றான் வினோத்.

ரஞ்சித், மகிழ்ச்சியோடு திரும்பி அப்பாவைப் பார்த்தான். வெப்பமான அந்த இடத்திலும் அப்பாவின் முகத்தில் மலர்ச்சி. ‘எப்படி விஷயத்தை முடிச்சேன் பார்த்தியா?’ என்பது போல புன்னகைத்தார்.

எம்.லோகேஷ் மதன்

ஸ்யாம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு