கவிதை: பூமா ஈஸ்வரமூர்த்தி
குனிந்தபோது புற்கள்
நேருக்குநேரில் செடி-கொடிகள்
அண்ணாந்து பார்த்தாலோ
போதும்போதுமென மரங்கள்
பூக்கள் கனிகள் வாசம் நிறம்
சாகம்பரி களைகட்டித்தான் நிற்கிறாள் இங்கே!
••
அப்போதெல்லாம்
எவ்வளவு பெரிய பெரிய மரங்கள்
நாற்பது கோடையையும் தாண்டியவர்கள்
சொல்கிறார்கள்.
இப்போது பெரிய பெரிய மரங்கள்
வீட்டிற்கு முன்னே
பெரியதோர் அத்திமரமும் இரண்டு சப்போட்டாவும்
அத்திமரத்தின் வயதை
நினைக்கவே அச்சம்.
அணில் பறவைகள் குரங்குகளென
ஆனந்தமாக மரங்கள்!

••
பெரிய மகளுக்கு அம்மை
அப்போது அவள் கர்ப்பிணி
வேப்ப இலைகளை
பதற்றத்துடன் தேடியபோது
தெரிந்துகொண்டேன்
இங்கே
வேப்பமரங்கள் குறைவுதான்
திருநெல்வேலியில்
எங்கெங்கும் வேப்பமரங்கள்.
மரங்கள் சொரிந்த
இளம் பச்சை நிற பால்வண்ண
வேப்பம் பூக்கள்
ரயில் நிலையத்துப் பரவசம்!
••
எந்த ஊர் ஆலயமோ
மூலவர் உற்சவரைவிட
ஸ்தலவிருட்சம் எதுவெனவே
மனம் முந்துகிறது!
••
துரிதமாகவும் திருத்தமாகவும்
பேசிவிடுமாம் மருதமரத்துக் கிளிகள்
மாமரத்து எறும்புகள் சுளீரெனக் கடிக்கும்
வேப்பமரத்து எறும்புகள் அவ்வளவாக
கடிப்பதில்லை.
அப்பியிருக்கும்
கம்பளிப்பூச்சிகளையும் தாண்டி
நெய் உருக்கும்போது
தேடும் முருங்கை இலைகளைக்
கொண்டுவரும்
அம்மாவின் மகன்கள் இங்கும் உண்டு!
••
அகல அகலமான இலைகளுடன்
பாதி தென்னைமர உயரத்தில்
வாழைமரங்கள்.
மழை நேரத்து
உடைமரக் கூட்டம்
காதலர்களை வா... வாவென அழைக்கும்.
புன்னைமர நிழலே ஓர் ஆன்மிக
இளைப்பாறுதல்!
••
நிறைய நிறைய
பறவைகள் வந்தமரும்
மரங்கள் எதுவென
தேடியும் யோசித்தும் இருக்கிறேன்
ஒரு நாளில் உணர்ந்தேன்
எல்லா மரங்களும் எல்லா
பறவைகளையும் ஏற்றுக்கொள்கின்றன
எல்லா பறவைகளும் எல்லா
மரங்களையும் ஏற்றுக்கொள்கின்றன!