Published:Updated:

அப்பா முதல் அப்பா வரை

கவிதை: தமிழச்சி தங்கபாண்டியன், ஓவியம்: ம.செ.,

கொடியறுத்த நொடியில்   

உலகை எதிர்கொள்ளும்

உள்ளங்கையில்  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்பாக்களின் முதல் ஆகாயம்.  

சிறு கைச் சோறள்ளிச்  

சிதறுமொரு கவளத்தில்  

அப்பாக்களின் முதல் கனவெச்சில்.

சட்டென்று முகம் நனைக்கும்

இளஞ்சூட்டுச் சிறுநீரில்

அப்பாக்களின் முதல் எதிர்நீச்சல்.

தரை சிணுங்க மலர்த்தும்

வெள்ளிமணிக் கிணுக்கத்தில்  

அப்பாக்களின் முதல் புன்னகை.

சாணி வண்ணக் காகிதங்களைத்  

தைத்துப் புதிதான நோட்டாக்கும்  

சாக்கூசிகளில்  

அப்பாக்களின் முதல் கைரேகை.  

பள்ளி மதிப்பெண் அட்டைகளில்  

மைகலங்கப் பொதியும்  

கைநாட்டில்  

அப்பாக்களின் முதல் வியர்வை.

பரமபத விளையாட்டில்  

பிள்ளையைப் பாம்பு கொத்தத்  

தோள் சேர்க்கும்  

விஷமுறிவில்  

அப்பாக்களின் முதல் கண்டம்.  

அடி வயிறு மொட்டவிழ  

அரும்பு தனங்கள் புலன்விழிக்க  

தலை கோதி விலகும்

கைப்பிடியில்  

அப்பாக்களின் முதல் நடுக்கம்.

காதலுற்றுக் காமுற்று

இன்புற்றுச் சுயம்விட்டு

வலசைபோகும் கூட்டிற்கு

வழியனுப்பும் கையசைப்பில்  

அப்பாக்களின் முதல் கண்ணீர்.  

ஆடி அடங்காக் கடலலைகள்  

இளைப்பாறும் கரைவிளிம்பில்  

அப்பாக்களின்  

இறுதிக் காற்தடங்கள்.

அப்பா முதல் அப்பா வரை

மகளுக்கு அப்பா  

முதலெழுத்து மட்டுமா என்ன  

அவளுக்கு  

அப்பா  

அன்பின் முலை சுரக்கும்  

ஆதித்தாய் மடுவின்  

மேடிட்ட சுனையும்  

சூலுறாக் கருப்பையும்  

சுடரொளியும்கூட!