பிரீமியம் ஸ்டோரி

அவளும் அவளும் 

ஒரு குடம் தண்ணி ஊத்தி

ஒரு பூ பூத்துச்சாம்

ரெண்டு குடம் தண்ணி ஊத்தி

ரெண்டு பூ பூத்துச்சாம்

மூணு குடம் தண்ணி ஊத்தி

மூணு பூ பூத்துச்சாம்

இப்படி

ஊற்றும் தண்ணீர்

குடங்களுக்கேற்ப

பூக்களும் பூத்துச்சாம்.

தினம் நூறு பூ பூக்கும்

அச்செடிக்கு

தினம் தண்ணீர்

ஊற்றுவது யாராம்?

வேற யாராம்

வேலைக்காரிதான்

பூத்த பூக்களை

பறிப்பது யாராம்?

வேற யாராம்

வேலைக்காரிதான்

பறித்த பூக்களை

தொடுப்பது யாராம்?

வேற யாராம்

வேலைக்காரிதான்

தொடுத்த பூக்களை

கூந்தலில் வைத்து

ரசிப்பது யாராம்?

வேற யாராம்

எஜமானியம்மாதான்!

- அ.நிலாதரன்

சொல்வனம்

பெரியம்மாவின் கண்ணாடி

 பெரியம்மாவுக்கு

கண்ணாடி வாங்க வேண்டும்

ஊரிலிருந்து வந்த மோனிக்குட்டி

தூக்கிக் கொஞ்சுகையில்

கண்ணாடியை உடைத்துவிட்டான்

கண்ணாடி உடைந்ததில்

பெரியம்மாவின் உலகம்

சட்டென மங்கலாகிவிட்டது

கண்ணாடியோடே பார்த்துப் பழகிவிட்ட

பெரியம்மாவின் முகம்

கண்ணாடியில்லாமல்

பெரியம்மாவுக்குப் பொருத்தமாகவேயில்லை

கோயில் திண்ணையில்

பெரியம்மாவுடன்

எப்போதும் அமர்ந்து அரட்டையடிக்கும்

லட்சுமி பாட்டியும் விஜயம்மா பாட்டியும்

கண்ணாடி அணிவதில்லை

பெரியம்மாவைவிட

வயதானவர்கள் என்றாலும்

அதற்காகவெல்லாம்

அப்படியே விட்டுவிடமுடியுமா என்ன

பெரியம்மாவுக்கொரு

கண்ணாடி வாங்க வேண்டும்

இப்படித்தான்

ஒரு மாதமாய்

நினைத்துக்கொண்டிருக்கிறேன்

இப்போது கண்ணாடியில்லாமலே

பெரியம்மாவின் முகம்

பெரியம்மாவுக்குப் பொருத்தமாக

மாற ஆரம்பித்துவிட்டது!

- சௌவி

மகனாகும் நான் 

தடதடக்கக் கிடைக்கும் ரயில் டாட்டாக்கள்

தாழப் பறந்து கிலியடிக்கும் விமானங்கள்

கரைந்திருக்கும் கூவியிருக்கும் அகவியிருக்கும்

காகங்கள் குயில்கள் மயில்கள்

தன்னிச்சையாய் மேயும் மாடுகள் ஆடுகள்

துரத்தும் துரத்தா தூங்கும் நாய்கள்

நகர்ந்திருக்கும் பஸ்கள் லாரிகள் கார்கள்

டூவீலரிலுலவும் அத்தைகள் மாமாக்கள்

குறுக்கே வரும் அக்காள்கள் அண்ணன்கள்

ஒதுங்கி நடக்கும் பாட்டிகள் தாத்தாக்கள்

தீம்பார்க் அனுபவம் தரும் மழைச் சாலைகள்

என அவனாகி மெலிதாகிச் சிலிர்க்காமல்

இப்போதெல்லாம் கடக்க முடிவதில்லை

பயணத்தின் பாதைகள்!

- சர் நா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு