Published:Updated:

பூவரசம் கிளையில் தொங்கும் இதயம்

பூர்ணா

பிரீமியம் ஸ்டோரி

பூவரச இலையின் நுனி கிள்ளி, சுருட்டி 

பீப்பி செய்து அக்களித்து அகமகிழ்ந்த பால்யம்

சப்தத்தை வெளிக்கொணர மட்டுமே கற்றறிந்திருந்தது

பூவரசம் கிளையில் தொங்கும் இதயம்

பிறகு மரம் பற்றிய அறிவு தெரிந்திருந்தும்

அதைப் பற்றி கண்டுகொள்ளவே இல்லை

அதற்கு நிறையக் காரணங்கள் இருப்பினும்

என்னிடம் நிலம் இல்லையென்று தொடங்கி

அடுக்கிக்கொண்டே போகலாம் இன்னும்.

பருவ வயது முளைத்த நாளன்றில்

மழை ஓய்ந்த இளமாலைப்பொழுதில்

தெருவில் பொடி நடையாய் நடக்கையில்

பூவரசமரத்தில் என் இதயம் தொங்குவதைக் கண்டறிந்தேன்

யுவதியின் பார்வைக் கதிர்வீச்சு படர்ந்து

பழுக்கத் தொடங்கியது கிளையில் தொங்கிய இதயம்

சின்னஞ்சிறு சொல் பூச்சிகளால் சிதைவுற்று

துவாரம் தாங்கியிருக்கும் அந்த இதயத்தில்

காலம் நுழைந்து விளையாடியது.

முற்றிலும் பழுத்து உதிர்ந்து கிடக்கும் இதயத்தில்

உனது பார்வை ரேகைத் தடங்கள்

சாலையில் ஒருபுறம் நானும் மறுபுறம் நீயும்

கண்டும்காணாமல் கடந்தபோது

காலச்சக்கரத்தில் நசுங்கி நொறுங்கிப்போயின

அந்த இதயத்தில் படிந்திருந்த பழைய நினைவுகள்

மற்றொரு நாள் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து

வெளியேறிய அந்த நினைவுகள்

தெருவில் நம்மைத் தேடிக்கொண்டிருந்தன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு