மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 2

#Ban Tasmacபாரதி தம்பி படங்கள்: எம்.விஜயகுமார், ஆ.முத்துக்குமார், ப.சரவணகுமார், தே.சிலம்பரசன், கா.முரளி

குடியின் தீங்குகள் குடிப்பவர்களின் உடல்நலக் கேடாக மட்டும் முடிந்துவிடுவது இல்லை. குடிகாரக் கணவர்களால் தமிழ்நாட்டுப் பெண்கள் ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் துன்பங்கள் மரணத்தைவிடவும் கொடியவை. அதனால்தான் டாஸ்மாக்கை மூடக் கோரும் போராட்டங்களில் பெண்கள் முன்நிற்கிறார்கள். சென்னை பட்டினம்பாக்கம் முள்ளிமா நகரில் இருக்கும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி, அந்தப் பகுதி பெண்கள் இன்னமும் போராடிவருகிறார்கள்.   

முழுக்க, முழுக்க அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி அது. கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் சாராயக் கடையில் கொடுத்துவிட்டு வெறுங்கையோடு வீடு வந்து சேர்கிறார்கள் ஆண்கள்.

''என் புருஷன் இன்னைக்குக் குடிச்சுட்டார்னு தெரிஞ்சா நெஞ்சு படபடனு அடிச்சுக்கும். பையன் கையில ஒரு பாயும் தண்ணி கேனும் குடுத்துவிட்டு அவருக்குப் பின்னாடியே அனுப்பிவிட்டுருவேன். இந்தாளுபாட்டுக்கும் போதையில நெஞ்சு வறண்டு விக்கிச் செத்துப்போயிட்டாருன்னா, என்னா பண்றது? நிறையப் பேர் இங்க அப்படிச் செத்துப்போயிருக்காங்க. சில நாள் போதை தலைக்கு ஏறி பீச் மணல்ல விழுந்து கெடப்பாரு. நெருங்கிப் போறப்ப திக்குதிக்குனு இருக்கும். போய் மூக்குல கை வெச்சு மூச்சு வருதானு பார்ப்பேன். வருதுன்னு தெரிஞ்சதும்தான் என் நெஞ்சு படபடப்பு அடங்கும்'' என்கிறார் சுகந்தி படபடப்பாகவே.

குடி நோயாளியாகவே இருந்தாலும், 'கணவன்’ என்ற கேரக்டர் வீட்டுக்குத் தேவையாக இருக்கிறது. காதல், பாசம் என்ற உணர்வுகளுக்காக அல்லாமல் 'கணவன்’, 'அப்பா’, 'குடும்பத் தலைவன்’ என்ற பொறுப்புகளுக்கு அவர் தேவை. ஆனால், ஆல்கஹாலுக்கு இது தெரியுமா? கொஞ்ச குடியா குடிக்கிறார்கள்? எல்லாம் சேர்ந்து அவர்களின் உள்ளுறுப்புகளை உருக்குலைத்து உயிருக்கு உலைவைக்கிறது.

குடி குடியைக் கெடுக்கும் - 2

''எங்க வீட்டுல என்னையும் சேர்த்து நாலு அக்கா தங்கச்சிங்க. நான் கடைசி ஆளு. நாலு பேரோட வீட்டுக்காரங்களும் செத்துப் போயிட்டாங்க. எல்லாருமே குடி. மூளை வெடிச்சு, ஃபிட்ஸ் வந்து, ரத்தம் கக்கிச் செத்துப்போனாங்க. அவங்க செத்தப்போ எங்க புள்ளைங்க கைக்குழந்தைங்க. இன்னைக்கு என் பையன் வளர்ந்து குடிக்க ஆரம்பிச்சிட்டான். என்னாத்த சொல்றது'' என்கிறார் முள்ளிமா நகர் ஆக்னஸ்.

இந்தப் பகுதியில் சாராயத்தை ஒழிக்கக் கடுமையாகப் போராடிவரும் இவர், தன் மகனே குடிக்கிறானே என்ற மனவேதனையில் வெம்புகிறார். குடிகாரக் கணவனைக்கொண்ட பெண்களுக்கு ஆண் குழந்தைகள் இருந்தால், 'எப்படியாவது என் புள்ளையைக் குடிக்காதவனா வளர்த்துடணும்’ என்பதுதான் அவர்களின் ஆகப் பெரிய லட்சியமாக இருக்கிறது. அதற்கு ஏற்றாற்போல அந்தப் பையன் குடிக்காதவனாக இருந்துவிட்டால், அந்த அம்மாவின் முகத்தில் உலகத்தையே வென்ற பெருமிதம் மிளிர்கிறது!

குடியால் கணவனை இழந்த பெண்களின் எண்ணிக்கையும் இந்தப் பகுதியில் மிக அதிகம். அல்பாயுசிலேயே கணவன் போய்ச் சேர,  குழந்தைகளை வைத்துக்கொண்டு குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தத்தளிக்கின்றனர் பெண்கள். கடைசியில் அது குழந்தைகளின் தலையில் வந்து விடிகிறது. ஒரு கட்டத்துக்குப் பிறகு படிக்கவைக்க முடிவது இல்லை. விவரம் தெரியும் வயதில் அம்மாவின் சிரமம் பிள்ளைகளுக்குப் புரியத் தொடங்குகிறது. திடுதிப்பென ஒரு நாளில் புத்தகப் பையைத் தூக்கிக் கடாசிவிட்டு ஏதேனும் ஒரு கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கிவிடுகின்றனர். குடியினால் நிகழ்ந்த அப்பாவின் மரணம், அதனால் அம்மா படும் சிரமங்கள் எல்லாம் அவர்களை ஒருசில வருடங்கள் இழுத்துப் பிடித்தாலும், சூழ்ந்திருக்கும் நச்சுக் கண்ணியில் அவர்களால் மட்டும் தப்ப முடியுமா என்ன? கட்டுக்கோப்பான சிலரைத் தவிர மற்றவர்கள் மதுவின் காலடியில் வீழ்ந்து இரண்டாம் தலைமுறை மது அடிமைகளாக மாறிப்போகின் றனர். குடி நோயில் சிக்கி அப்பா, அண்ணன், தம்பி, கணவன் எனக் குடும்ப ஆண்கள் அனைவரையும் பலிகொடுத்த பல பெண்கள் இங்கு இருக்கிறார்கள்.

குடி குடியைக் கெடுக்கும் - 2

பட்டினம்பாக்கத்தில் நாம் சந்தித்த பலர், நம்பவே முடியாத அளவுக்கு குடி நோயாளிகள். அதிகாலையில் ஒரு கட்டிங்கில் தொடங்கும் இவர்கள் இரவு படுக்கப்போகும் வரையிலும் குடிக்கின்றனர். வேலைக்குப் போவது, சாப்பிடுவது, நடமாடுவது, உயிர்வாழ்வது எல்லாமே குடிக்காகத்தான். மொத்த வாழ்வும் குடியைச் சுற்றியேதான் நகர்கிறது.

''கடையை, கிடையை மூடிறப்போறாங்க சார். எல்லாம் ஃபிட்ஸ் வந்து செத்துப்போயிருவோம்'' என  சீரியஸாகச் சொல்கிறார் ரவி. குறிப்பாக இந்தப் பகுதியின் மிகப் பெரிய பிரச்னை அதிகாலை மது.

10 மணிக்குத்தானே கடை திறக்கும்? அதிகாலையில் எப்படிக் கிடைக்கிறது? இதற்கு என்றே சிலர் இருக்கிறார்கள். டாஸ்மாக்கில் இருந்து மொத்தமாக மதுப் புட்டிகள் வாங்கி வீட்டில் இருப்பு வைத்து, கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். இவர்களின் கடை அதிகாலை 3 மணிக்குத் தொடங்குகிறது. அந்த அகால நேரத்தில் ஆண்கள் ஒரு கட்டிங்குக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். சைடு டிஷ் எதுவும் கிடையாது. வாங்கிய சரக்கை பிளாஸ்டிக் டம்ளரில் ஊற்றி ஒரே இழுப்பு. புறங்கையால் துடைத்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றால், கடை திறப்பதற்கு முன்பு இன்னொரு கட்டிங். கடை திறந்த பின்பு இருட்டும் வரை கடையில் கட்டிங் தொடரும். இப்படியாக வெறிபிடித்துக் குடிக்கிறார்கள். இவர்களின் உடம்பில் ரத்தத்துக்குப் பதில் சாராயம் ஓடுகிறதோ என சந்தேகமாக இருக்கிறது.

''ஒழுங்கா வேலைக்குப் போனா, டெய்லி 300 ரூபா கிடைக்கும். ஆனா, இந்தாளு ரெண்டு நாளைக்குப் போறது; அந்தக் காசை வெச்சு ரெண்டு நாளைக்குக் குடிக்கிறது. இதே கதைதான். வாரக் கடைசியில, சனிக்கிழமை அன்னிக்கு நம்ம கையில 500 ரூபா குடுப்பார். ஞாயித்துக்கிழமை விடியக்காலையில 'நான் குடுத்த காசுல 100 ரூபாயைக் குடு’னு சண்டை போட்டு வாங்கிட்டுப் போயி குடிச்சுட்டு வருவார். அப்புறம் 11 மணிக்கா இன்னொரு 100 ரூபா கேட்பார். இதுபோக பகல் முழுக்க அப்பப்போ 10 ரூபாய்க்கு பீடி வாங்கிக்  குடுத்துட்டே இருக்கணும். தூங்கி எந்திரிச்சு நைட் 100 ரூபா கேட்பார். மறுநாள் காலையில மறுபடியும் 100 ரூபா. இப்படி குடுக்குற பணத்தை பிட்டு, பிட்டா பிடுங்கிட்டுப்போனா என்னா பண்ண? எங்க வீட்டுல இதுதான் பல வருஷ நிலைமை. என்னவெல்லாமோ செஞ்சுப் பார்த்துட்டோம். ஒண்ணும் திருத்த முடியலை. இப்பவெல்லாம் 'மூதேவி, குடிச்சுட்டு வந்து நம்மள நிம்மதியா இருக்கவிட்டா போதும்’னு ஆகிடுச்சு'' என்கிறார் ஜெயந்தி.

குடி குடியைக் கெடுக்கும் - 2

ஆனால், முறையாக வேலைக்குச் செல்லாத இவர்கள், இப்படி குடித்துக்கொண்டே இருக்க பணத்துக்கு என்ன செய்கிறார்கள்?

''அதெல்லாம் எங்களுக்குள்ள ஒரு சிண்டிகேட் இருக்கு சார். நான் வேலைக்குப் போனா, இவனுக்கு வாங்கித் தருவேன். இவன் போனா, எனக்கு வாங்கித் தருவான். குடிக்கு மட்டும் பஞ்சம் கிடையாது'' என்கிறார் ரவி.

இதற்கும் வழியற்ற குடி நோய் முற்றியவர்கள், வேறு உபாயங்களைக் கண்டடைகின்றனர். டாஸ்மாக்கில் இருந்து சரக்கு வாங்கி 24ஙீ7 விற்கிறார்கள் இல்லையா... அவர்களுக்கு டாஸ்மாக்கில் இருந்து 12 குவார்ட்டர் வாங்கித் தந்தால், ஒரு கட்டிங் இலவசம். நாள் முழுக்க இப்படி வாங்கித் தந்து கட்டிங் குடித்துக்கொண்டே இருப்பவர்கள் இருக்கிறார்கள். இதற்கும் வழி இல்லை என்றால், கை நடுங்க, உடல் துடிக்க வெட்கத்தைவிட்டு பிச்சை எடுக்கிறார்கள்.

இப்படி குடித்துவிட்டு வருபவர்களால் வீட்டுப் பெண்கள் எதிர்கொள்ளும் அடி, உதை, சித்ரவதை போன்ற உடல் துன்பங்கள் ஒரு பக்கம் என்றால் பாலியல்ரீதியிலான தொல்லைகள் பெருங்கொடுமை.

குடி குடியைக் கெடுக்கும் - 2

''பொண நாத்தம் அடிக்கிற உடம்போட போதையில வாயைத் தொறந்துகிட்டு 'ஈஈஈ’ன்னு இளிச்சுக்கிட்டுக் கிட்ட வரும்போதே அருவருப்பா இருக்கும். அந்தப் போதையில ஒண்ணும் பண்ண முடியலன்னா, அதுக்கும் நம்மளைப் போட்டு அடிக்கிறது. முன்னாடி இந்தச் சித்ரவதையைத் தாங்கிக்கிட்டேன். இப்போ உடம்புக்கு வேற முடியலை. குடிச்சுட்டு பக்கத்துல வந்தா அடிச்சுத் தொரத்திர்றது. சனியன்... சம்பாதிக்கிற எல்லா காசுக்கும் குடிச்சுட்டு வந்து நம்மளைப் போட்டுப் பிறாண்டுறது'' என்பது சுசீலாவின் வேதனை மட்டுமா? லட்சக்கணக்கான தமிழ்ப் பெண்களின் மனக்குரலும் அதுதான். குடி, பாலியல் வேட்கையைத் தூண்டுகிறது. ஆனால், உடலை இயலாமையில் தள்ளுகிறது. மனம் ஏங்கும்; உடல் தளரும். இயலாத ஆண்களுக்கு அது தன்னுடைய தோல்வி என்பதை ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை. அந்தக் கோபம் மனைவியின் மீது திரும்புகிறது. நாட்கள் செல்ல, செல்ல... மது வெறியேறிய மனம், கோபத்தை சந்தேகமாக உருமாற்றுகிறது. சந்தேகம் என்பது போதையைவிட கொடிய கொள்ளை நோய். மனைவிக்கு வேறு தொடர்புகள் இருப்பதாக குடிகாரன் சந்தேகிக்க.. குடும்பத்தின் மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம் அடியோடு காலி. குடிகாரர்களின் மனைவிகள் சந்திக்கும் இந்தச் சந்தேகக் கொடுமையின் சித்ரவதை எந்த எல்லைக்கும் செல்லும்.

குடி குடியைக் கெடுக்கும் - 2

ராஜலட்சுமி சொல்வதைக் கேளுங்கள். ''நல்லாத்தாங்க இருந்தாரு. பெயின்ட் வேலைக்குப் போன இடத்துல எவனோ வாங்கிக் கொடுத்தான்னு ஆரம்பிச்சு இப்போ தினமும் குடிதான். ஆரம்பத்துல குடிச்சுட்டு வந்து, 'எவன்கூட போன... எவன்கூட படுத்த’னு பேச்சுல மட்டும் இருக்கும். நானும் பதிலுக்குப் பதில் பேசுவேன். பிறகு அடிக்க ஆரம்பிச்சாரு. திருப்பி அடிக்க ஆசைதான்... என் உடம்புல தெம்பு இல்லை. பிள்ளைங்களும் கைக் குழந்தைங்க. முடிஞ்ச மட்டும் அப்படி, இப்படி ஓடித் தப்பிப்பேன். இப்ப கொஞ்ச நாளா வீட்டுக்கு வந்ததும் இருக்குற சோத்தைத் தின்னுட்டு, பிள்ளைங்களை வெளியில கொண்டு விட்டுடுறார். என்னை வீட்டுக்குள்ள விட்டு சேலையை உருவிட்டு ஜாக்கெட்டு, பாவாடையோட நிக்கவிட்டுடுறார். துணி இருக்கிற ரூமையும் பூட்டிடுறதால, வேற துணியும் எடுக்க முடியாது. அப்படியே வெளியிலயும் பூட்டிட்டு பிள்ளைங்களோடு பீச்சுல போய் தூங்கி எழுந்திரிச்சு காலையில வந்துதான் கதவைத் திறக்கிறார். ராத்திரி முழுக்க அரைகுறைத் துணியோட நான் கெடக்கணும். என்ன குளிரா இருந்தாலும் இந்தக் கொடுமைதான். சந்தேகப் புத்தி அளவு கடந்துபோயிடுச்சு. இதுல நாங்க லவ் மேரேஜ் வேற'' - விரக்தியாகச் சிரிக்கிறார் ராஜலட்சுமி.

இத்தனைக்கும் இவர் ஹோட்டல் ஒன்றில் ஹவுஸ்கீப்பிங் பிரிவில் பணிபுரிகிறார். கணவனின் சம்பாத்தியம் முழுவதும் குடிப்பதற்கே சென்றுவிடும் நிலையில் இவர் வாங்கும் மாதச் சம்பளம் 6,000 ரூபாயில்தான் வாடகை கொடுக்க வேண்டும்; பொங்கித் தின்ன வேண்டும். அப்படித்தான் குடும்பம் ஓடுகிறது. ஆனாலும் ஆண் என்ற மிதப்பில் குடியும் அடியும் சர்வசாதாரணமாக நடக்கிறது.

''வெளிநாட்டுல உள்ளது மாதிரி புருஷனைப் புடிக்கலன்னா டைவர்ஸ் பண்ணிட்டு வேற வாழ்க்கையைப் பாத்துக்குறது இங்கேயும் ஈஸியா இருந்துச்சுன்னா, நான் எல்லாம் என்னைக்கோ கிளம்பியிருப்பேன். வேற வழி இல்லை. எங்கே போனாலும் இதே கொடுமைதான். அதான் சகிச்சுட்டிருக்கேன். ஆனா, அதுவும் என்னைக்காச்சும் எல்லை மீறும். அன்னைக்கு என்ன கையில கிடைக்குதோ அதாலேயே...'' எனப் பல்லைக் கடிக்கிறார்.

எனக்கு கவிஞர் சல்மாவின் இந்தக் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன.

யாரேனும் ஒருவர்

கொலையாளியாகும் சாத்தியங்களுடன்

ஒன்றாகவே உறங்குகிறோம்.  

மகிழ்ச்சியற்ற மண வாழ்வின் வெறுப்பு நிறைந்த கணங்களை உணர்த்தும் இந்தக் கவிதையின் சாரம், ராஜலட்சுமிக்கும் பொருந்தக்கூடியதுதான். குடிகாரக் கணவர்களின் வன்முறைகள் எல்லைமீறும் கணம்தோறும் மனைவிகளின் மனங்களில் குறுவாள் ஒன்று எட்டிப்பார்க்கிறது. செயல்படுத்தப்படும் இடங்களில் அதற்கு கொலை எனப் பெயர். செயல்படுத்தப்படாத இடங்களில் அதற்கு குடும்பம் எனப் பெயர்!  

- போதை தெளிவோம்...

தமிழர்கள் குடித்தே     சாக வேண்டுமா?

டாஸ்மாக்குக்கு எதிரான மாணவர் போராட்டத்தைத் தொடங்கிவைத்தவர்கள், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகளின் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில், கல்லூரிக்கு அருகில் இருந்த ஒரு டாஸ்மாக் கடையை மாணவர்கள் அடித்து நொறுக்க... 'சாராயக் கடையை அடிச்சா நாங்க வேடிக்கை  பார்ப்போம்னு நினைச்சீங்களா?’ என வெகுண் டெழுந்த காவல் துறை, மாணவர்களை ஓட ஓட விரட்டி அடித்தது. ஒரு போலீஸ்காரர், மாணவி ஒருவரின் வயிற்றிலேயே பூட்ஸ் காலால் எட்டி உதைத்து, 'காவல் துறை மக்களின் நண்பன்’ என்பதை நிரூபித்தார். 'புக் எடுத்துப் படிக்கவா... சாராயத்தைக் குடிக்கவா?’ என முழக்கமிட்ட மாணவிகளை லத்தியை எடுத்து அடித்தது போலீஸ். 5 பெண்கள் உள்பட 15 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்... 'நாங்கள் ஜாமீனில் வெளிவர மாட்டோம்’ என அறிவித்திருக்கிறார்கள் அந்த மாணவர்கள். வழக்குரைஞர்கள் மூலமாக அவர்களிடம் பேசியபோது...

குடி குடியைக் கெடுக்கும் - 2

''டாஸ்மாக் கடை வாசலில் எங்களை அடித்ததை மட்டும்தான் எல்லோரும் பார்த் தார்கள். அதன்பிறகு சேத்துப்பட்டு காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று குழாய் கொண்டு தாக்கியது போலீஸ். பலருக்கு நிற்கக்கூட முடியாத அளவுக்கு அடி. ரிமாண்ட் செய்து புழல் சிறைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கு சிறைத் துறை போலீஸ் எங்களைக் குறிவைத்து அடித்து நொறுக்கியது. பிறகு சில அரசியல் தலைவர்கள் எங்களைச் சந்திக்க சிறைக்கு வந்தனர். அவர்களைச் சந்திக்க நாங்கள் மறுப்பதாக, சிறை நிர்வாகமே பொய்ச் செய்திகளைப் பரப்பி... எங்களைத் தனிமைப்படுத்த முயற்சித்தது. இப்படி அனைத்து வகைகளிலும் எங்களைச் சூழ்ந்துகொண்டு துன்புறுத்தும் அளவுக்கு நாங்கள் இழைத்த தவறு என்ன? மக்களின் உயிரைப் பறிக்கும், வாழ்வைக் கெடுக்கும் சாராயக் கடைகளை மூடச் சொன்னோம். இது தவறா? மாணவர்கள் குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்துகிடந்தால் கண்டுகொள்ளாத இந்த அரசு, அதே மாணவர்கள் சாராயக் கடையை மூடச் சொல்லிப் போராடினால் அடிக்கிறது; சிறையில் தள்ளுகிறது. என்றால் அரசின் நோக்கம் என்ன? தமிழ்நாட்டில் ஒவ்வொருவரும் குடித்தே சாக வேண்டுமா?

குடி குடியைக் கெடுக்கும் - 2

நாங்கள் 15 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறோம். இதில் இப்போதைய மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், மாணவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எல்லோரும்தான் இருக்கிறோம். ஆனால், 'இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் மாணவர்கள் இல்லை’ என பச்சையப்பன் கல்லூரி முதல்வர் சொல்கிறார். அப்படியானால் அன்றைக்குப் போராட்டத்துக்கு வந்த 500-க்கும் அதிகமானவர்கள் மாணவர்கள் இல்லையா? தைரியம் இருந்தால் அரசு அத்தனை பேரையும் கைது செய்து பார்க்கட்டும். எங்களுக்குள் பிளவை உருவாக்கி துண்டாட நினைக்கும் நயவஞ்சகத்துக்கு நாங்கள் இரையாக மாட்டோம். நாங்கள் குற்றம் இழைத்துவிட்டு சிறைக்கு வரவில்லை. குற்றம் இழைத்துக்கொண்டிருக்கும் அரசைத் தட்டிக்கேட்டு சிறைக்கு வந்திருக்கிறோம். எனவே, எங்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும். இதற்கு அரசு பதில் சொல்லும் வரை நாங்கள் பிணையில் வர விரும்பவில்லை'' என்கிறார்கள்.

'அதற்காக வன்முறையை கையில் எடுப்பது எப்படிச் சரியாகும்?’ என்ற கேள்விக்கு மாணவர் அமைப்பினர் தரும் பதில் முக்கியமானது. ''சரி, மனு கொடுத்தால் மட்டும் டாஸ்மாக்கை மூடிவிடுவார்களா? மனு கொடுத்து டாஸ்மாக் கடையை மூட முடியும் என்றால், இந்நேரத்துக்குத் தமிழ்நாட்டில் ஒரு கடைகூட இருந்திருக்காது. எங்களை, 'சட்டப்படி செயல்படுங்கள்’ எனச் சொல்கிற இந்த அரசு சட்டப்படி செயல்படுகிறதா? கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்பது உயர் நீதிமன்றத்தின் உத்தரவு. ஆனால், அதைக் குப்பைக் காகிதமாகக்கூட இந்த அரசு மதிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவை கையில் வைத்துக்கொண்டு, போராடி, வெறுப்புற்று... கடைசியில் காந்தியவாதியான சசிபெருமாளே 'தீக்குளிக்கும் போராட்டம்’ அறிவிக்கும் நிலை உண்டானது. இதில்தான் அவர் மரணம் அடையவும் நேரிட்டது. எனவே, சட்டத்தை மதிக்காத இந்த அரசுக்கு, எங்களைப் பார்த்து சட்டப்படி நடக்கச் சொல்லும் அருகதை இல்லை. எங்களுக்கு இந்த டாஸ்மாக் விஷக் கடை வேண்டாம். இதை இழுத்து மூடியாக வேண்டும். அதற்கு மக்கள், அதிகாரத்தைக் கையில் எடுத்து களம் இறங்க வேண்டும்'' என்கிறார்கள்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தொடங்கிவைத்த இந்தப் போராட்டம் வேறு சில கல்லூரிகளுக்கும் பரவியது. அவர்களும் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்படி, சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் 'டாஸ்மாக்கை மூடு’ என்னும் கோரிக்கையுடன் உண்ணாவிரதம் இருந்தனர். பிறகு போலீஸ் வந்து இவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றது. இதைத் தொடர்ந்து போராடிய மாணவர்கள் ஒவ்வொருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அந்தந்தத் துறைத் தலைவர்கள் பல்கலைக்கழகத் தலைமையால் வற்புறுத்தப்பட்டனர். இதில் பேராசியர் ராமு.மணிவண்ணனும் ஒருவர். அரசியல் அறிவியல் துறையின் தலைவரான மணிவண்ணன், சர்வதேச அளவில் புகழ்பெற்ற பேராசிரியர். பல்கலைக்கழக முறைகேடுகளை அம்பலப்படுத்திப் போராடுபவர். அவர், டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய தன் துறையைச் சேர்ந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார். உடனே பழைய பகைகளையும் சேர்த்து இதில் பழிதீர்த்துக்கொண்டது பல்கலைக்கழக நிர்வாகம். மணிவண்ணன், துறைத் தலைவர் பதவியில் இருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டிருக்கிறார்!