மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 3

#BanTasmac பாரதி தம்பிபடங்கள்: என்.ஜி.மணிகண்டன், கே.குணசீலன், ரா.ராம்குமார், ர.சதானந்த்

ரு பெண், டாஸ்மாக் கடை இருக்கும் இடத்தைக் கடந்துசெல்வதற்குள் எத்தனை பதற்றம் அடையவேண்டியிருக்கிறது என்பதை பெண்கள் மிக நன்றாக அறிவார்கள். ஒரு குப்பை லாரி நமக்கு முன்பாக வந்து நின்றால், எப்படி மூக்கைப் பொத்திக்கொண்டு அவசரஅவசரமாகக் கடந்துசெல்வோமோ, அப்படி மனதை இழுத்துப் பிடித்துக்கொண்டு பதற்றத்துடன் கடக்கிறார்கள். எந்த நிமிடமும் தன்னை நோக்கி ஆபாசமான ஒரு சொல் பாயலாம்; இரட்டை அர்த்தப் பாடல் ஒலிக்கலாம். இரையைச் சுற்றி மொய்க்கும் மீன்களைப்போல, தன் உடலை மொய்க்கும் கண்களை என்ன செய்ய முடியும்? பயந்து, ஒதுங்கி, வேகவேகமாகக் கடக்கிறார்கள். 

பொதுவெளியில் ஒரு பெண் எதிர்கொள்ளும் இத்தகைய சிக்கல்கள், குடிப்பவர்களால் மட்டும் நிகழ்வது இல்லை. குடியில் இல்லாத கண்களும் அப்படித்தான் பார்க்கின்றன. குடிக்காத ஆணின் மனமும், பெண்ணைக் கேலிக்கு உரிய பண்டமாகத்தான் எதிர்கொள்கிறது. ஆனால், குடிவெறி என்பது மனதின் கட்டுப்பாட்டை இழக்கச்செய்கிறது; தயக்கத்தைக் காணாமல் போகச்செய்கிறது. நம் மனதில் தோன்றும் ஓர் எண்ணத்தைச் செயல்படுத்தலாமா, வேண்டாமா, விளைவு என்னவாகும் எனச் சிந்தித்துப்பார்க்கும் பகுத்தறிவை ம்யூட் செய்கிறது. குடிக்காமல் இருக்கும்போது செய்யத் தயங்கும் செயல்களை, குடித்துவிட்டுச் செய்வது இதனால்தான். இந்த அளவுகோலில் ஒரு குடிக்காத ஆண், பெண்களைப் பார்ப்பதற்கும் குடித்த ஆண், பெண்களைப் பார்ப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. குடிக்காதவன் சமூக நிலைக்கு அஞ்சுகிறான்; குடிப்பவன் சமூகத்தையே மறக்கிறான். எனவே, அவனுக்கு சமூகம் குறித்த அச்சம் இல்லை. குடி, ஓர் ஆணின் பிடறியைப் பிடித்து குற்றத்தின் அந்தப்புரத்துக்குள் தள்ளுகிறது.  

குடி குடியைக் கெடுக்கும் - 3

மெரினா பீச்சின் தெற்கு முனையில், லைட் ஹவுஸை ஒட்டியிருக்கும் நொச்சிக்குப்பம் கடற்கரைச் சாலையில், வரிசையாக மீன் விற்கும் பெண்களில் கிருஷ்ணவேணியும் ஒருவர். நான் அவரைச் சந்தித்தபோது காயவைத்த கருவாடை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டிருந்தார்.

''ஆடி மாசம் கூழ் காய்ச்சி ஊத்தும்போது கருவாட்டுக் குழம்பு ஊத்துவாங்கல... அதுக்குத்தான் இது. ஒரு கை அளவு கருவாடு எடுத்துப் போட்டியன்னா ஊருக்கே குழம்புவைக்கலாம்'' எனச் சிரித்துக்கொண்டே கண்ணாடியைச் சரிசெய்துகொள்கிறார். முகத்தின் இடது புறம் தொடங்கி கழுத்து, அதற்கும் கீழான உடல் பகுதி எங்கும்  தீக்காயங்கள். தோல் கறுத்து, சுருங்கி, இழுத்துக்கொண்டு கண்களைத் திருப்பிக்கொள்ள வைக்கிறது.

''கடலுக்குப் போனா குடிக்க மாட்டார்; வெளிய வந்தா ஒரே குடிதான். அந்தாளு சம்பாதிக்கிற காசுக்குக் குடிச்சு முடிச்சுட்டு, கடைசியில நாம வெச்சிருக்கிற காசைப் பிடுங்கிக் குடிப்பார். காரணமே இல்லாம சண்டை வரும். எப்பவும் வீட்டுக்குள்ள அடிதடி, ரகளைதான். நாலு வருஷத்துக்கு முன்ன, எனக்கு வேறு யாரோடயோ தொடர்பு இருக்குனு சந்தேகப்பட்டு, தூங்கிக்கிட்டிருந்த என் மேல பெட்ரோலை ஊத்திக் கொளுத்திவிட்டுட்டாரு. இந்த ஒரு பக்கம் பூரா எரிஞ்சுபோச்சு. அதுக்குப் பிறகும் குடிக்கிறதைவிடலை. கட்டுன புருஷன் இப்படின்னா பெத்தது இருக்கே... அது, அதுக்கு மேல. என் மகனும் குடிக்கிறான். மருமகளைப் போட்டு அடிச்சுக் கொல்றான். அவ ரெண்டு புள்ளைங்களை வெச்சுக்கிட்டு தினம் செத்து, செத்துப் பொழைக்கிறா. இந்தக் கொடுமைக்கு ஒரு முடிவுகாலம் இல்லையா? பொண்டாட்டி, புள்ளைங்க உயிரை எடுத்து, குடும்பத்து நிம்மதியைக் கெடுக்கிற இந்தக் கருமத்தைக் குடிச்சாத்தான் ஆம்பளைங்களுக்குச் சந்தோஷம்னா, வாங்க எல்லாரும் குடும்பத்தோட போய்க் குடிப்போம்... கொடலு வெந்து சாவோம்'' - கொந்தளித்துப் பேசும் கிருஷ்ணவேணி, இப்போதும் கணவனின் கொடுமைகளுக்கு அஞ்சி நடுங்குகிறார்.

குடி குடியைக் கெடுக்கும் - 3

இவரது வீட்டின் அருகே வசிக்கும் மற்றொரு பெண் கற்பகம்.  பால் குடிக்கும் கைக்குழந்தையை வைத்திருக்கும் தாய். ஓர் அறைதான் வீடு. அதற்குள்தான் சமைத்து, குளித்து, சாப்பிட்டு, தூங்கி எழுந்து குடும்பம் நடத்த வேண்டும். குடித்துவிட்டு பின்னிரவில் வீட்டுக்கு வந்துசேரும் கணவன், கை கால்களைப் பரப்பிக்கொண்டு, இருக்கும் கொஞ்சம் இடம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டு தூங்கினால், அந்தப் பெண்ணும் குழந்தையும் எங்கு செல்வது?

''அதாவது பரவாயில்லைங்க. தூக்கத்துல காலைத் தூக்கி குழந்தை மேல போடுவார். அது வீல்னு அழுவும். மறுபடியும் பால் கொடுத்துத் தூங்கவைக்கிறதுக்குள்ள படாதபாடாயிடும். இதை எல்லாம் புரிஞ்சுக்கிற நிலைமையில அவர் இருக்க மாட்டார். ஒருநாள் இல்ல ஒருநாள், போதையில வேகமா காலைத் தூக்கி குழந்தை மேல போட்டு, அதுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்னா பண்றது? இந்தப் பயத்துலயே எனக்குப் பதக்பதக்குனு தூக்கமே வராது'' - அந்தப் பெண் விவரிக்கும் காட்சியைக் கற்பனை செய்யவே பதறுகிறது நமக்கு.

இப்படி... கேட்டால் சொல்வதற்கு மனதைப் பதைபதைக்க வைக்கும் கதை ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. எப்படி அனைத்துவிதமான சமூகத் தீமைகளும் இறுதியில் பெண்ணைப் பாதிக்கும் அம்சமாக முடிவுறுகிறதோ, அப்படித்தான் குடி என்னும் தீங்கின் ஆகப்பெரிய பாதிப்பாளர்களாக பெண்களே இருக்கிறார்கள். உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் சமூகரீதியாகவும் கடும் துன்பங்களைச் சுமக்கிறார்கள். ஆனாலும் இந்தப் பெண்கள் தங்கள் வலிமிகு வாழ்வை விவரிக்கும்போது, புன்னகையைச் சூடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். சிரிப்பின் வழியே அந்தக் கணத்தின் துயரத்தைக் கடந்துவிட முயற்சிக்கிறார்கள். அழுகையைவிட அந்தச் சிரிப்பே பெரும் வலியை நமக்குள் கடத்துகிறது.

குடி குடியைக் கெடுக்கும் - 3

நமது குடும்ப அமைப்பு பெரும்பாலும் ஆண்களைச் சார்ந்தே இயங்குகிறது. கணவன் உயிரோடு இருக்கும் வரையிலும் பொருளாதாரரீதியில் அவனையே சார்ந்து இயங்கவேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இருக்கிறது. திடீரென ஒருநாள் கணவன் செத்துப்போகும்போது திக்கற்ற காட்டில் தனித்துவிடப்படுகின்றனர். இரண்டு குழந்தைகளைக் கையில் கொடுத்துவிட்டு குடித்துச் செத்துப்போகும் ஒரு கணவன் உயிரோடு இருந்தால், தன் மனைவி படும் துயரங்களைப் பார்த்தே செத்துப்போவான். பிள்ளைகளுக்கு நல்ல துணிமணி எடுத்துத் தர இயலாது. வாய்க்கு ருசியாக ஒரு வேளை சோறு உண்ண முடியாது. வீட்டைச் சுற்றிலும் கடன்கள். சுற்றத்தின் மத்தியில் மதிப்பு இழந்த வாழ்க்கை. நரகத்திலும் கொடிய துன்பத்தைச் சகித்துக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.

பல இடங்களில் இது எதிர்மறையில் சென்று முடிகிறது. குடிகாரக் கணவனின் அருகில் நீண்ட காலம் இருப்பதால், மனைவியும் குடிக்கத் தொடங்குகிறார். குடி, குடும்பப் பழக்கமாகிறது. வேலைக்குச் சென்று வீடு திரும்பும்போது அரிசி, பருப்புடன் சேர்த்து விஸ்கி, பிராந்தியும் வாங்கி வருகின்றனர். ஒருகட்டத்தில் இருவரும் குடிக்கு அடிமையாகி, குடிநோயாளியாக மாறும்போது அரிசி, பருப்பு இரண்டாம்பட்சமாகி, சாராயம் முதன்மையாகிறது.

குடி குடியைக் கெடுக்கும் - 3

உடுமலைப்பேட்டையில் கடந்த வாரம் நடந்த இந்தச் சம்பவம், உண்மையிலேயே நம்மை நிலைகுலையைச் செய்கிறது. உடுமலைப்பேட்டை அமராவதி நகரைச் சேர்ந்த மலர்க்கொடி என்கிற பெண் கூலிவேலைக்குச் செல்பவர். குடிப்பழக்கம் உள்ள இவருக்கு, ஓர் ஆண் குழந்தை. ஒரு வயது. கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி உடுமலை பேருந்து நிலையத்துக்கு குழந்தையுடன் வந்த இவர் அருகில் டாஸ்மாக் கடையில் இருந்து மது வாங்கி, பேருந்து நிலையத்தின் ஓரமாக அமர்ந்து குடித்திருக்கிறார். போதை தலைக்கு ஏற... பிளாட்பாரத்திலேயே மயங்கிப் படுத்துவிட்டார். அருகில் இருந்த குழந்தை பசியில் 'அம்மா... அம்மா’ என அழுதுகொண்டே அவர் மீது தவழ்ந்து ஏற... அந்தச் சுரணை எதுவும் அந்த அம்மாவுக்கு இல்லை. பசியில் அழுது களைத்த குழந்தை, சற்று நேரத்தில் அழுகையை நிறுத்திவிட்டது. ஓர் அம்மாவும் குழந்தையும் பல மணி நேரமாக பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடப்பதைக் கண்ட அருகில் இருந்த கடைக்காரர்கள், போலீஸுக்குத் தகவல் சொன்னார்கள். அவர்கள் வந்து இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், குழந்தை இறந்துவிட்டது. இப்போது அந்தப் பெண்ணைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இந்தப் பூமிக்கு வாழவந்த அந்தச் சின்னஞ்சிறு தளிர், பெரும் விருட்சமாக வளராமல் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது ஏன்?

10 மாதங்கள் உடல் நோக, உயிர் நோகச் சுமந்து பெற்ற அம்மா, தன் குழந்தை சாக வேண்டும் என விரும்பப்போவது இல்லை. ஆனால், தன் குழந்தை செத்துக்கொண்டிருப்பதை அறிய முடியாத அளவுக்குப் போதை அவரை மூழ்கடித்துவிட்டது. 'குழந்தையை வைத்துக்கொண்டு குடிக்கிறோமே’, 'பேருந்து நிலையத்தில் குடிக்கிறோமே’ என்ற தயக்கங்கள் எதுவும் அவரிடம் இல்லை. ஆனால், இந்தத் தயக்கம் இல்லாமல்போனது மலர்க்கொடியிடம் மட்டும்தானா? தன் நல்லியல்பை, நற்பண்பை இழந்தது அந்தப் பெண் மட்டுமா? மலர்க்கொடியை மட்டும் கைதுசெய்தால் போதுமா?

குடி குறித்த சமூக அளவுகோல், கடந்த 10 ஆண்டுகளில் தலைகீழாக மாறியிருக்கிறது. குடிப்பவர்களை சமூகத்தில் சற்று கீழிறக்கிப் பார்த்த காலம் இப்போது இல்லை. முன்பு 'குடிகாரன் வீட்டில் பெண் எடுக்காதே’ என்பார்கள். இப்போது அப்படிச் சொல்ல முடியுமா? குடி, சமூகத்தின் அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்றாக, சமூக இயல்புகளில் ஒன்றாகப் பண்புமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. நல்லது, கெட்டது அனைத்துக்கும் குடிதான் ஒரே ஆசுவாசம். முன்பு ஒவ்வோர் ஊரிலும் நண்பர்கள் கூடுவதற்கு என ஓர் இடம் இருக்கும். இப்போது நண்பர்களின் சந்திப்பு என்றால், அது மதுக் கடையில்தான் நிகழ்கிறது.

தஞ்சாவூர் பக்கம் சில பகுதிகளில் கூலிவேலைக்கு ஆட்களைக் கூப்பிடும்போது சம்பளத்துடன் சேர்த்து ஒரு குவார்ட்டரும் தர வேண்டும் என்பது வழக்கமாகி வருகிறது. அறந்தாங்கி, பேராவூரணி பகுதிகளில் மொய்விருந்து நடத்துவார்கள். ஒவ்வொன்றும் கோடிகளில் பணம் வசூலாகும் பிரமாண்ட விருந்து. நிகழ்ச்சிக்கு முன்பாக ஊரில் இருக்கும் அத்தனை டாஸ்மாக் கடையில் இருந்தும் மொத்தமாக சரக்கை வாங்கி வைத்துக்கொள்கி றார்கள். ஒரே நாளில் பல மொய்விருந்துகள் நடைபெற்றால் சரக்குக்குத் திண்டாட்டமாகி போட்டி, அடிதடி ஏற்படுகின்றன.

குடி குடியைக் கெடுக்கும் - 3

போலீஸ்கூட ஒருகாலத்தில் சாராயம் விற்பவர்களைத்தான் அடிக்கும். ஆனால் இப்போது, சாராயம் விற்பவர்களுக்கும்  குடிப்பவர்களுக்கும் பாதுகாப்பு தருகிறது. 'சாராயம் வேண்டாம்’ எனச் சொல்பவர்களை அடித்து நொறுக்குகிறது. இப்படியாக மொத்த சமூகத்தின் குணமும் குடியால் பெரும் மாற்றம் கண்டிருக்கிறது. இந்தக் கொடிய நச்சுச்சூழலில் இருந்து, தங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கை பெற்றோர்களுக்கே போய்விட்டது. 'குடிச்சாலும் ரோட்டுல விழுந்து அசிங்கப்படுத்தாம இருந்தா சரி’ என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். அதனால்தான் ஒரு பெண், கைக்குழந்தையை வைத்துக்கொண்டு குடிப்பது யாருக்கும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. குடியை ஒரு தவறான செயலாகக் கருதித் தட்டிக்கேட்கும் நற்பண்பும் துணிவும் நம் மனங்களில் இருந்து அகன்றுவிட்டன.

டாஸ்மாக் ஆரம்பித்த ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 25 லட்சம் பேர் குடித்தார்கள். இப்போது இந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தொட்டுவிட்டது. மலர்க்கொடி... கோடியில் ஒருவர்.

ஆனால், இந்தக் கோடிக்கணக்கான குடிநோயாளிகள் சுயம்புவாக உருவாகவில்லை. இந்த அரசால் திட்டமிட்டு உருவாக்கப்

பட்டவர்கள். குடித்து, குடித்து குடல் வெந்து செத்துப்போன அத்தனை பேரின் மரணத்துக்கும் இந்த அரசுதான் பொறுப்பு. அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்க இந்த அரசுதான் காரணம். தன் மகனைக் காப்பாற்றாத ஒரு தாயைக் கைதுசெய்துவிட்டீர்கள். தன் மக்களைக் காப்பாற்றாத இந்த அரசாங்கத்தை என்ன செய்வது? அரசு என்றால் ஆளும் அ.தி.மு.க அரசு மட்டும் அல்ல. மக்களுக்கு ஊற்றிக்கொடுத்ததில் முந்தைய தி.மு.க அரசுக்கும் சரிபாதி பங்கு உண்டு.

குறள்:

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

உரை:

'மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால், அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது எனக் கூறலாம்.’

இந்த உரையை எழுதியது வேறு யாரும் அல்ல... தி.மு.க தலைவர் மு.கருணாநிதி!

- போதை தெளிவோம்...

ஜெயராம் வெங்கடேசன், அஜய்குமார் தண்ணீர்குளம் ஆகிய இருவரின் தலைமையில் 'டாஸ்மாக்: தமிழ்நாட்டின் பேரிடர்’ என்ற தலைப்பில் சிறிய ஆய்வு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 15 கிராமங்களில், 573 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அறிக்கை அதிர்ச்சியான பல புள்ளிவிவரங்களைத் தருகிறது. அதில் இருந்து சில இந்தக் கட்டுரையில் பெட்டிச்  செய்திகளாக...

குடி குடியைக் கெடுக்கும் - 3

ஒருவர் மதுவுக்காக, ஒவ்வொரு மாதமும் சராசரியாக எவ்வளவு செலவுசெய்கிறார்?

எப்போதாவது குடிப்பவர் - 534 ரூபாய்

வாரத்துக்கு 1-2 நாட்கள்   - 1,443 ரூபாய்

வாரத்துக்கு 3-4 நாட்கள்   - 2,184 ரூபாய்

தினமும் குடிப்பவர்கள் - 6,552 ரூபாய்.

குடி குடியைக் கெடுக்கும் - 3

இதன் சராசரி 4,312 ரூபாய். அதாவது குடிகாரத் தமிழர்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4,312 ரூபாய் குடிக்காகச் செலவிடுகிறார்கள்.

'டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்துவிடும்’ எனச் சொல்வது உண்மையா? தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் 2005-2014-ம் ஆண்டு வரையிலான புள்ளிவிவரங்கள் இவை.

இந்தியா முழுவதும் நடந்த கள்ளச்சாராயச் சாவுகள்     - 11,032.

கள்ளச்சாராயச் சாவுகளில் முதல் மூன்று இடங்களில்   உள்ள மாநிலங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப்.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயச் சாவுகள் 1,509; கர்நாடகா    1,421; பஞ்சாப் 1,364.

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் - 843.

குடி குடியைக் கெடுக்கும் - 3

அதாவது மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமான குஜராத்தில், கள்ளச்சாராய ஆறு கரைபுரண்டோடி   ஆயிரக்கணக்கானோர் செத்துவிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் அங்கு கள்ளச்சாராயத்தால் 843 பேர்தான் உயிர் இழந்துள்ளனர். ஆனால் 'நாங்கள் நல்ல சாராயம் விற்கிறோம்’ எனச் சொல்லிக் கொள்ளும் தமிழ்நாடு, கள்ளச் சாராயச் சாவுகளில் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. மேலும், அந்த நல்ல சாராயத்தால் கொல்லப்படும் பல்லாயிரம் உயிர்களின் எண்ணிக்கை குற்றமாகக் கருதப்படுவது இல்லை; குற்ற ஆவணக் காப்பகத்தில் சேர்க்கப்படுவதும் இல்லை.