காளான்களின் ராணி!

நிறைய பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் இருக்கும் மழையூரில், காளான்களும் அதிகம். மரங்களின் கீழே, பாதைகளில் என எல்லா இடங்களிலும் காளான்கள். அந்தக் காளான்களுக்கு ராணி, லக்ஸி. அவள், ரொம்ப ரொம்ப அழகு. அவள் பறந்து செல்ல பட்டாம்பூச்சிகள் இறக்கைகளைக் கொடுத்திருந்தன. அவள் கண்கள் பிரகாசிக்க, நட்சத்திரங்கள் ஒளியைத் தந்திருந்தன. காளான்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் பாதுகாத்தாள் லக்ஸி.

ஒரு நாள், அங்கே வந்த ஒருவர்  செடிகளுக்கு மருந்து அடித்துச் சென்றார். உடல் மீது மருந்து பட்டதும் மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயங்கி விழுந்தன. இதைப் பார்த்த லக்ஸி, மேக ராஜாவிடம் மழையைக் கேட்டாள். மேகங்கள் கறுத்து, மழை பெய்தது. மழையில் நனைந்த மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயக்கம் தெளிந்தன. அவை, முழுமையாகக் குணமாகும் வரை லக்ஸிதான் உணவளித்துப் பாதுகாத்தாள்.

கதை நேரம்!

இவ்வளவு நன்மைகள் செய்யும் ராணிக்கு, சிறப்பான பரிசு தர வேண்டும் எனப் பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் காளான்களோடு ஆலோசனை நடத்தின.

‘‘நாம் காட்டின் மறுபுறமும் சென்று, சிறந்த பரிசைத் தேடலாம்’’ என்றது ஒரு பட்டாம்பூச்சி. மற்ற பட்டாம்பூச்சிகளும் ஒப்புக்கொண்டன.

பல இடங்களில் தேடி அலைந்தன. ஓர் ஓடை அருகே, பார்க்கவே வித்தியாசமாக ஒரு வண்டி நின்றிருந்தது. மிகப் பெரிய பரங்கிக்காயைக் குடைந்து, சக்கரங்கள் அமைத்த அழகான வண்டி. இரவுப் பயணத்தில் வெளிச்சம் தருவதற்காக, அந்த வண்டியில் ஒரு விளக்கும் இருந்தது. ஓடைக்கு அருகில் இருந்த தோட்டத்தின் உரிமையாளர்தான் அந்த வண்டிக்கும் சொந்தக்காரர்.

திரும்பி வந்து இந்த வண்டி பற்றிச் சொன்னதும், தங்களைத் தோட்டக்காரரிடம் தந்து, பரங்கி வண்டியை ராணிக்குப் பரிசாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டன, உணவுக் காளான்கள்.

அதன்படி செய்து, லக்ஸி ராணிக்குப் பரிசு அளிக்க, ‘‘இந்த அன்புதான் என்னை மேலும் மேலும் இங்கே இருக்கச் செய்கிறது” என்று மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டாள்.

அந்த மகிழ்ச்சியில் இன்னும் இன்னும் பல காளான்கள், பட்டாம்பூச்சிகள், மின்மினிகள் மழையூரில் தோன்றின. 

மந்திர கிரீடம்!

லையில் கிரீடத்தோடு கம்பீரமாக வந்து நின்றது,  ‘வினோ’ என்ற அந்தத் தவளை. வினோவுக்கு அந்தக் கிரீடம் கிடைத்த கதை சுவாரஸ்யமானது.

ஒரு நாள் பாம்பு ஒன்று வினோவைத் துரத்த, ஓடிச் சென்று ஒரு பொந்தில் நுழைந்தது. கொஞ்ச நேரத்தில், அந்தப் பொந்து நகர, பயத்தோடு எட்டிப் பார்த்தது. யாரோ தண்ணீர் அள்ளிச் செல்ல வைத்திருந்த பானையைப் பொந்து எனப் புகுந்துவிட்டது புரிந்தது.

கதை நேரம்!

அப்போது, காலில் ஏதோ குத்துவது போல இருந்ததை எடுத்துப் பார்த்தால், குட்டியான கிரீடம். அந்தக் கிரீடத்தைக் கெட்டியாகப் பிடித்துத் தாவிக் குதித்து, குளத்துக்கு வந்துவிட்டது.

‘‘யாருக்கும் கிடைக்காத மந்திரக் கிரீடம் எனக்கு கிடைத்திருக்கிறது. நானே இந்தக் குளத்துக்கு ராஜா. நான் சொல்வதை எல்லோரும் கேட்க வேண்டும்’’ என்றது.

கிரீடத்தின் பளபளப்பைப் பார்த்து, குளத்தில் இருந்த எல்லா உயிரினங்களும் வினோ சொன்னதைக் கேட்டு நடந்தன. வினோவை நெருங்க, பாம்புகளும் பயந்தன. ‘‘இந்தக் குளத்துக்கு புதிதாக யாரும் வரக் கூடாது, இங்கிருப்பவர்கள் வெளியே செல்லவும் கூடாது’’ என்று கட்டளை இட்டது.

இந்தச் செய்தி, எல்லா ஊர் தவளைகளுக்கும் தெரியவந்தன. வினோவின் ஆணவத்தை அடக்க, டினோ எனும் தவளை கிளம்பியது.

டினோ, மந்திரம் தெரிந்த தவளை. அது, வினோவின் குளத்துக்கு வந்தது. தன் மந்திர சக்தியால், குளத்து நீரை உறிஞ்சிவிட்டது. குளத்தில் இருந்த தவளை, பாம்புகள் நிலத்திலும் வாழ முடியும். ஆனால், தண்ணீர் இல்லாவிட்டால் மீன்கள் இறந்துவிடும் அல்லவா? அவை, டினோவிடம் தண்ணீரைக் கொடுத்துவிடும்படி கேட்டன.

டினோ சிரித்துக்கொண்டே, ‘‘இந்தக் குளத்துத் தண்ணீர்,  வினோவின் கிரீடத்தில் உள்ளது. அதைத் தட்டிவிட்டால் குளத்தில் நீர் வந்துவிடும்’’ என்றது.

உடனே மீன்கள் ஒன்றுசேர்ந்து, வினோ மீது பாய்ந்து கிரீடத்தைச் சாய்த்தன. குளத்தில் நீர் நிறைந்தது. ஆனால்  யாரும் எடுக்க முடியாத அளவு சேற்றுக்குள் கிரீடம் புதைந்துவிட்டது.

- விஷ்ணுபுரம் சரவணன்

உண்மையின் உடை!

ர் ஊரில் உண்மை, பொய்  இரண்டும் அருகருகே வசித்து வந்தன. இரண்டும் பரம எதிரிகள் என்பது உங்களுக்குத் தெரியும்.

உண்மை எப்போதுமே புத்தாடையோடு காணப்படும். அமைதியானது. அன்புமயமானது. இன்னும் பல நற்குணங்கள் அதனிடம் இருந்தன. அதனால், நல்லோர் உண்மையை நேசித்தனர்.

ஆனாலும், உண்மை எப்போதும் மறைவாகவே இருந்தது. தன்னை அரிதாகவே வெளிப்படுத்தியது.  அப்படி  வெளிப்பட்டபோது,  மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

கதை நேரம்!

பொய்யின் நிலையோ இதற்கு நேர் எதிர். எப்போதும் மனிதர்கள் மத்தியில் உலவிக்கொண்டே இருந்தது. அழுக்கு உடையில் வலம் வந்தது. நல்ல மனிதர்கள் அதனுடன் பழகுவதைத் தவிர்த்தனர். ஆனால், கெட்டவர்கள் பொய்யை மிகவும் விரும்பினர். உண்மையிடம் இருந்து விலகி இருப்பதுதானே அவர்கள் வழக்கம்?

ஒரு நாள் உண்மையும் பொய்யும் குளத்தில் நீராடிக்கொண்டிருந்தன. உண்மை, தனது அழகிய உடைகளை ஒரு கல் மீது வைத்திருந்தது.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்திக்கொண்ட பொய், உண்மையின் உயர் தர உடைகளைத் திருடி அணிந்துகொண்டு ஓட்டம் பிடித்தது.

கதை நேரம்!

குளத்தில் இருந்து வெளியே வந்த உண்மைக்கு அதிர்ச்சி. அது, பொய்யின் அழுக்கு உடைகளை அணிய விரும்பவில்லை. அதைவிட உடையின்றி இருப்பதே நல்லது என எண்ணியது.

இன்று நாம், பொய்யை பகட்டான பொன்னிற உடையிலும், உண்மையை உடை ஏதும் இல்லாமலும் காண்கிறோம்.

- ஜெயசூர்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு