மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 5

பாரதி தம்பி, படங்கள்: தி.விஜய், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

டாஸ்மாக் மதுக்கடைகளின் உள்ளே நாம் அறியாத இன்னோர் உலகம் இயங்குகிறது. போதையில் தடுமாறும் உடல்களும் மனங்களுமே இங்கு முதலீடு. மதுவின் சுவைக்குப் பயிற்றுவிக்கப்பட்ட உடல், ஒவ்வொரு நாளும் அதற்காக ஏங்குகிறது; அந்தச் செந்நிறத் திரவத்தை உள்ளே ஊற்றிக்கொள்ளத் துடிக்கிறது; அதற்காக எதையும் செய்யும் பித்து நிலைக்குச் செல்கிறது.

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் நாம் சந்தித்த பலர், இந்தப் பித்து நிலையின் இறுதி எல்லையில் நின்றார்கள். இவர்களின் குடும்பங்கள் என்னவாகின்றன என்பதற்கு கல்பனாவின் கதை, மனம் கனக்கும் உதாரணம்.

கல்பனாவுக்கு இப்போது 29 வயது. நகைக்கடை ஒன்றில் 4,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்கிறார்; மூன்று குழந்தைகள். மெலிந்து, தேய்ந்த உடல்வாகு. இந்த வயதுக்கு உரிய எந்த மலர்ச்சியும் முகத்தில் இல்லை. நெற்றியில் இருக்கும் விபூதிக் கீற்றும், கண்களில் படிந்திருக்கும் வறட்சியும், புன்னகைக்க முயலும் உதடுகளின் வெறுமையும் அவரது வாழ்க்கையை ஒரு நொடியில் சொல்லிவிடுகின்றன.

'சாப்பாட்டு நேரத்துல பெர்மிஷன் சொல்லிட்டு வந்திருக்கேன்... சீக்கிரம் பேசிருவோம் சார்' என்கிறார் பரிதவிப்புடன்.

குடி குடியைக் கெடுக்கும் - 5

என்ன பேசுவது, பேசக்கூடிய கொடுமையா அது?

குடிக்கு அடிமையானவர்கள், குடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது நமக்குத் தெரியும். இவர்களின் இந்தப் போதை வெறியைப் பயன்படுத்திக்கொண்டு, டாஸ்மாக் பாருக்குள்ளேயே உட்கார்ந்து இவர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கிறார்கள் பலர். அனுப்பர்பாளையம், திருப்பூர் பகுதியில் உள்ள பல டாஸ்மாக் பார்களில் இப்படி நடக்கிறது. வட்டி என்றால் சாதா வட்டி அல்ல; கந்து வட்டி, மீட்டர் வட்டி, ரன் வட்டியை எல்லாம் தாண்டியது. பெரும்பாலும் ஒரு நபருக்கு 400 ரூபாய் கடன் கொடுக்கிறார்கள். இன்று 400 ரூபாய் வாங்கினால் அடுத்த வாரம் இதே நாளில் 800 ரூபாயாகத் திருப்பித் தர வேண்டும். தவறினால் அதற்கு அடுத்த வாரம் 1,200 ரூபாயாகத் தர வேண்டும். இப்படியே ஒவ்வொரு வாரமும் 100 சதவிகிதம் ஏறிக்கொண்டே போகும். வட்டிக்குக் கொடுப்பவர்கள் இதற்காக எந்த நேரமும் டாஸ்மாக் பாரிலேயே உட்கார்ந்திருப்பது இல்லை. குடிப்பவர்களுக்கு, வட்டிக்குக் கொடுப்பது யார் எனத் தெரியும் என்பதால், போன் செய்து வாங்கிக்கொள்கிறார்கள். இப்படி குடிப்பதற்காக 400 ரூபாய் வட்டிக்கு வாங்கியவர்தான் கல்பனாவின் கணவர் ஆறுமுகம்.

'எங்களுக்கு 2006-ல கல்யாணம் நடந்துச்சு. அரேஞ்ச் பண்ண கல்யாணம்தான். அப்பவே அவர் வாரத்துக்கு ஒரு நாள், ரெண்டு நாள் குடிச்சுட்டு வருவார். பாத்திர கம்பெனி வேலைக்குப் போய்ட்டிருந்தார். வாரத்துக்கு 1,500 ரூபா கிடைக்கும். அதுல 1,000 ரூபா என்கிட்ட தந்துடுவார். வரிசையா மூணு பொம்பளைப் பிள்ளைங்க பொறந்ததும் 'குடிக்கிறதை அடியோட விட்டுருங்க’ன்னு நானும் சொல்லிக்கிட்டே இருந்தேன். அவரும் 'விட்டுடுறேன்’னுதான் சொன்னார். ஆனா,  குடிக்கிறதை விடவே இல்லை.

இங்கே டாஸ்மாக் பார்லயே குடிக்கிறதுக்கு கந்து வட்டிக்குப் பணம் தர்றாங்களாமாம். அங்கே இவர் 400 ரூபா வாங்கியிருக்கார். அதைத் திருப்பிக் குடுக்காம இழுத்தடிச்சுக்கிட்டே இருந்திருக்காரு. அது ஒவ்வொரு வாரமும் ஏறிக்கிட்டே போயி 5,000 ரூபாய்க்கு வந்திடுச்சு. இதைவெச்சு இவருக்கும் கந்துக்குக் குடுக்கிற ஆளுக்கும் அடிக்கடி வாய்ச் சண்டை நடந்திருக்கு. எனக்கு கொஞ்சம் லேட்டாதான் இது தெரிஞ்சுது. நான் சேர்த்துவெச்சிருந்த பணத்தோட, கொஞ்சம் கடனையும் வாங்கி அந்த வட்டிக்குக் குடுக்குற ஆளைப் பார்த்து 5,000 ரூபா குடுத்துட்டு வந்துட்டேன். சனியன் இதோட ஒழிஞ்சுதுனு நினைச்சு, இவரைத் திட்டி 'இனிமே குடிக்காதீங்க’னு சொல்லிட்டு விட்டுட்டேன்.

ஆனா, அதுல இன்னொரு 400 ரூபாய் மிச்சம் இருந்துச்சாமாம். அதைக் கொடுக்கணும்னு என் வீட்டுக்காரர்கிட்ட மறுபடியும் சண்டை போட்டிருக்காங்க. ஏற்கெனவே இவர், நாம குடிச்ச பணத்தை பொண்டாட்டியை கொடுக்கவெச்சுட்டமேன்னு மனசு வருத்தத்துல இருந்தார். இந்த நிலைமையில மிச்சப் பணம் 400 ரூபாயையும் கேட்டு சண்டை. அந்த வட்டிக்குக் கொடுத்த ஆளு நேரா வீட்டுக்கு வந்து, 'பணத்தைக் குடு... இல்லன்னா வீட்டுல உள்ள பொம்பளைங்களை அனுப்பி வை’னு கேவலமாப் பேசிட்டான். இவருக்கு அந்த வார்த்தையைப் பொறுத்துக்க முடியலை...'

சுடுசொல் தாங்காத ஆறுமுகம், கடந்த ஆண்டு ஒரு முழம் கயிற்றில் தூக்கிட்டு மடிந்தபோது அவருக்கு வயது 30. அவர் சாகும்போது கடைசிப் பெண் தீபிகாவுக்கு 3 வயது. இப்போது பால்வாடிக்குப் போகிறாள். இரண்டாவது பெண் பூஜாஸ்ரீ 1-ம் வகுப்பும், மூத்த பெண் சௌமியா 3-ம் வகுப்பும் படிக்கின்றனர். மூன்று குழந்தைளும் அம்மாவின் சேலைத் தலைப்பைப் பிடித்தபடி சுற்றிச் சுற்றி வருகிறார்கள். மிகச் சிறிய ஓர் அறைதான் இவர்களின் வீடு. இருக்கும் பொருட்களை நெருக்கி அடுக்கிவைத்தால் மூன்று பேரும் கால் நீட்டிப் படுக்கலாம். ஆறுமுகத்தின் நினைவாக இவர்களிடம்

குடி குடியைக் கெடுக்கும் - 5

எஞ்சியிருப்பது சில புகைப்படங்கள்தான்.

ஆண் துணை இல்லாத குடும்பம் எதிர்கொள்ளும் சமூக அச்சம், பொருளாதார நெருக்கடி இவை எல்லாம் ஒரு பக்கம் என்றால்... 29 வயது என்பது வாழ்க்கையைத் தொடங்கவேண்டிய பருவம் அல்லவா? கல்பனாவுக்கோ, எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. சின்னஞ்சிறிய மூன்று பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு, அவரால் ஒரு பொழுதேனும் நிம்மதியாக உறங்க முடியவில்லை. 5,000 ரூபாயை தன்மானத்துடன் முகத்தில் தூக்கி வீசும் மனத்திண்மைகொண்ட பெண், எத்தனை கௌரவமான வாழ்வு ஒன்றைக் கற்பனை செய்திருப்பார்? கணவனுடன், பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வெளியில் சென்றுவரும் ஓர் எளிய எதிர்பார்ப்புக்கூட அவருக்கு இப்போது வெறும் ஏக்கமாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. 'எல்லாம் ஒரு கனவுபோல இருந்துவிடக் கூடாதா? காலை தூங்கி எழுந்ததும் அவர் வந்து வாசலில் நின்றுவிட மாட்டாரா?’ என்றுதான் கல்பனாவின் மனம் இரவுகளில் அலைபாயும். அவரது மனநிலையில் இருந்து வாழ்க்கையை ஒரு நிமிடம் கற்பனை செய்துபார்த்தால் நடுக்கமாக இருக்கிறது. இவரது வாழ்வைச் சிதைத்துப் போட்டது எது? மது!

வட்டிக்கு வாங்கியேனும் குடித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் இருப்பது இவர்களின் தவறு மட்டுமா? இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய அரசின் பாத்திரம் இதில் இல்லவே இல்லையா? ஆறுமுகத்துக்கு வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து, கைதுசெய்தது போலீஸ். ஓர் ஆறுமுகத்தின் மரணத்துக்குக் காரணமான ஒரு வட்டிக்காரனைக் கைது செய்துவிட்டீர்கள். ஆனால், மாநிலம் முழுக்க கோடிக்கணக்கான குடிகாரர்களின் குடிவெறியைப் பயன்படுத்திக்கொண்டு சாராயம் விற்று, அவர்களின் மரணத்துக்குக் காரணமாக இருக்கும் அரசாங்கத்தை யார் கைதுசெய்வது... அவர்களுக்கு யார் தண்டனை தருவது?

இந்தக் குடிவெறி, குடிப்பவர்களின் உயிர்களைப் பறிப்பது மட்டும் அல்ல; மனிதர்களின் நல்லியல்புகளைத் துண்டித்து தூர வீசுகிறது. ஓட்டு வாங்குவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அரசியல் கட்சிகள் நினைக்கின்றன என்றால், குடிப்பதற்காக எதுவும் செய்யும் மனநிலையில்தான் குடிகாரர்கள் இருக்கிறார்கள்.

திருப்பூர், திருச்சி, சென்னை உள்பட நாம் பார்த்த பல ஊர்களின் டாஸ்மாக் பார்களில், குடிகாரர்கள் நேரடியாகப் பொருட்களையே அடகு வைக்கிறார்கள். பார் நடத்துபவர்களே இந்த அடகுபிடி வேலையைச் செய்கிறார்கள். அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட / அனுமதி அளிக்கப்பட்ட ஒருவர் அடகு பிடிக்கிறார். பெரும்பாலும் செல்போன்கள்தான் முதலில் அடகு வைக்கப்படுகின்றன. அது எவ்வளவு விலை உயர்ந்த செல்போனாக இருந்தாலும் அதிகபட்சம் 100 ரூபாய், 200 ரூபாய்க்குத்தான் அடகு வைக்கின்றனர். அந்த நேரத்தில் ஒரு குவார்ட்டரும் சைட் டிஷ்ஷ§ம் வாங்க அது போதும். செல்போன் மட்டும் அல்ல, பொருட்களை அடகு வைத்தால் மதுபாட்டில் வாங்கலாம் என்பதைக் கண்டுகொண்ட பிறகு, வீட்டில் எந்தப் பொருள் எல்லாம் கையால் தூக்கிவரக் கூடியதாக இருக்கின்றனவோ அவை எல்லாம் அடகுக்கு வருகின்றன. பெரும்பாலும் அரசின் இலவசப் பொருட்களான மிக்ஸி, டி.வி., ஃபேன் போன்றவை கொண்டுவரப்படுகின்றன. சில இடங்களில் சைக்கிள், லேப்டாப், பட்டுச்சேலைகூட உண்டு. இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, அடகு என இது அழைக்கப்பட்டாலும்கூட, இந்தப் பொருட்கள் பெரும்பாலும் மீண்டும் மீட்கப்படுவது இல்லை. முதல்முறை கொடுக்கப்படும் 100, 200 ரூபாயோடு சரி. அப்படியானால் இது அடகு அல்ல; விற்பனை. செல்போன், ஃபேன், மிக்ஸி, லேப்டாப், சைக்கிள் எல்லாவற்றையும் 100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் விற்கிறார்கள் என அர்த்தம். ஒருவேளை, 'பொருளைக் காணோமே’ என வீட்டில் உள்ள பெண்கள் தேடி, 'எப்படியும் இந்த ஆள்தான் எடுத்துக் குடிச்சிருப்பான்’ என சரியாக யூகித்து, அந்தப் பகுதியில் டாஸ்மாக் பாரில் அடகு பிடிப்பது யார் எனத் தெரிந்து, அந்த நபரைப் பிடித்து, பொருளை மீட்டால்தான் உண்டு.

குடி குடியைக் கெடுக்கும் - 5

இப்படி, தன் வீட்டுப் பொருட்களை எடுத்துச் சென்று குடிக்க ஆரம்பிக்கும் ஒருவர், பிறகு பக்கத்து வீட்டுப் பொருட்களையும் தன் பொருட்களாகப் பாவிக்கும்(?) பரந்த மனப்பான்மையைப் பெறுகிறார்.

''காஸ் சிலிண்டரை வாங்கி, வீட்டு வாசல்ல வெச்சுட்டு வீட்டுக்குள்ள வேலையா இருந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு வெளியில வந்து பார்த்தா சிலிண்டரைக் காணலை. அங்கே, இங்கே தேடி கடைசியில டாஸ்மாக்ல அடகு பிடிக்கிறவன் வீட்டுல கண்டுபிடிச்சேன். அவன் 'இது உன்னோடதுங்கிறதுக்கு என்ன அடையாளம்?’கிறான். எல்லா சிலிண்டரும் சிவப்பாதான் இருக்குது. இதுல அடையாளத்துக்கு நான் எங்கே போறது? 100 ரூபாய்க்கு குடிக்கிறதுக்காக எவனோ ஒருத்தன் 500 ரூபா சிலிண்டரைத் தூக்கிட்டுப் போயிட்டான். புதுசா சிலிண்டர் அப்ளை பண்ணினா என்னென்ன கேள்வி கேட்பாங்களோ, எவ்வளவு பணம் கட்டணுமோ... அதை நினைச்சா வேற பயமா இருக்கு' என்கிறார் திருச்சி எழில் நகர் ராஜேஸ்வரி.

இந்த அரசு, எல்லோரையும் குடிகாரர்களாக மட்டும் மாற்றவில்லை; தன் குடிமக்களைத் திருடர்களாக மாற்றும் திருப்பணியையும் திறம்பட செய்கிறது. அதுசரி, அரசன் எவ்வழியோ... மக்களும் அவ்வழியில்தானே செல்வார்கள்?!

- போதை தெளிவோம்...