Published:Updated:

சொல்வனம்

ஓவியம்: ம.செ.,

இப்போதெல்லாம்...

 இடையில் தொங்கும்

வாள்போல் கிழிந்த பாளை

அந்தரத்தில் அநாயாசமாய்

அங்குமிங்கும் நடந்தபடி

கீற்று வேய்வார் பூமிநாதன்

அழுக்கு வேட்டியும்

சாயம்போன துண்டுமாய்

கொம்பில் செருகி நீட்டி

உதவிக்கொண்டிருப்பார்

உத்திராபதி.

வரிச்சிக்கு இது

மோட்டுவளைக்கு இன்னது

குறுக்குக்கு இன்ன கழி

கயறு இத்தனை முடிச்சு

கணக்குப்போட்டு ஒதுக்கிப்போடுவார்

மேஸ்திரி பக்கிரி.

மூன்று குவளைத் தேநீர்

மூன்று சமோசாக்கள்

தனித்தனித் தட்டில் வரும்

பூமிநாதன் தேநீர் மட்டும் பருகுவார்

உத்திராபதி சமோசா மட்டும் தின்பார்

மேஸ்திரி வாய் கொப்பளித்து

நீராகாரம் கேட்டு நிற்கையில்

இருள் கவிழ்ந்து மின்னல் கோடிழுத்து

வானம் தடதடக்க

பெய்யெனப் பெய்யும் மழை

பாதிக் கூரையின் கீழ்

எல்லோரையும்

ஒன்றாக ஒதுங்கவைத்து

ஈரமாக்கும் ஒரு மழை

இப்போதெல்லாம் பொழிவதே இல்லை!

-சூ.சிவராமன்

சொல்வனம்

தேடல்

கழன்று விழுந்து காணாமல்போன

கம்மல் திருகாணியைக்

கண்டெடுத்தே வரவேண்டுமென்ற

அப்பாவின் கட்டளைக்கு அரண்டுபோய்

தேடிக்கொண்டிருக்கிறாள் மகள்...

அவரிடம் இரக்கத்தை!

-பாப்பனப்பட்டு வ.முருகன்

உள்ளுறையும் ஈரம்

ஊருக்கு வரும்போதெல்லாம்

அம்மாவிடம் நான்

வழக்கமாகக் கேட்கும் கேள்வி

மழையேதும் பெய்துச்சா?

அம்மா கூடுதலாக

இன்னொரு பதிலும் சொல்வாள்

விடுப்பில் வந்தபோது நீயும்

வீட்டுக்கு வந்து போனாய்

வழக்கம்போல் என் நலத்தை

விசாரித்துச் சென்றாய் என்று.

நான் இல்லாதபோதும்

என் மண்ணில் மழை பொழிவதும்

என் மனையில் நீ புகுவதும்

எனக்கு மகிழ்ச்சியே.

பிடிவாதம் என்ற செல்லாக்காசின்

இரு பக்கங்களாய்

நீயும் நானும்!

-சேயோன் யாழ்வேந்தன்