மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 7

பாரதி தம்பி

'குடி குடியைக் கெடுக்கும்’ என்பது, எதுகை மோனை வாக்கியம் அல்ல; கண் முன்னால் நாம் காணும் உண்மை. குடி, ஈவுஇரக்கம் இல்லாமல் நம் குடும்பங்களைச் சூறையாடுகிறது; குடும்பத்தின் மகிழ்ச்சியை, நிம்மதியைக் காவு வாங்குகிறது; மனைவியை நிராதரவு ஆக்குகிறது; குழந்தைகளை அநாதைகள் ஆக்குகிறது. தமிழ்நாட்டின் எந்தக் கிராமத்தில் நுழைந்தாலும் இப்படிப்பட்ட குடும்பங்களைப் பார்க்கலாம். கச்சிராயநத்தம், இதற்கு ஒரு தெளிவான உதாரணம். 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே இருக்கிறது இந்தக் கிராமம். மொத்தம் 450 குடும்பங்கள். இதில் 105 பேர் விதவைப் பெண்கள். அத்தனை கணவர்களும் மாண்டுபோக நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கும் ஒரே காரணம், மது. ஒவ்வொரு பெண்ணின் கதையையும் கேட்டால் மனம் நடுங்குகிறது.

குடி குடியைக் கெடுக்கும் - 7

மலர்க்கொடி (33 வயது, 2 மகன்கள்):

''நான் பொறந்ததும் கட்டிக் குடுத்ததும் இதே ஊர்தான். சின்ன வயசுலேயே கல்யாணம்

குடி குடியைக் கெடுக்கும் - 7

முடிஞ்சுடுச்சி. வீட்டுக்காரர் பேர் சசிகுமார். கொஞ்ச விவசாய நிலம் இருக்கு. அதுல விவசாயம் பார்த்தார். கிடைக்கிற காசு பூராத்தையும் குடிச்சே அழிப்பார். குடிச்சுட்டு வந்து எதையாவது வம்புவளர்த்து இழுத்துப்போட்டு அடிப்பார். அன்னைக்கும் அப்படித்தான்... எந்தப் புதுச் சண்டையும் இல்லை; புதுக் காரணமும் இல்லை. பயங்கரமான போதையில வந்து, என்னை அடிச்சுத் துரத்திவிட்டுட்டார். நான் புள்ளைங்களோடு வெளிய வந்துட்டேன். உள்ளே கதவைச் சாத்திக்கிட்டார். ரொம்ப நேரமா ஒண்ணும் சத்தத்தைக் காணோம். கதவை உடைச்சுப் பார்த்தா, ஃபேன்ல தூக்குப்போட்டுத் தொங்குறார். அவர் செத்து வருஷம் ஆறு ஆச்சு. இன்னையவரைக்கும் 'எதுக்குச் செத்தார்?’னு காரணமே தெரியலை.''

முத்துலட்சுமி (35 வயது, 2 மகள், 1 மகன்):

''ரேடியோ செட் வாடகைக்கு விடுற வேலை பார்த்தார். வாங்குற காசுல கால்வாசிகூட குடும்பத்துக்கு வராது. கூட்டாளி சேர்த்துக்கிட்டு கூட்டம், கூட்டமாப் போய் குடிக்கிறது; பூராக்

குடி குடியைக் கெடுக்கும் - 7

காசும் அதுக்கே போயிடும். ஒருகட்டத்துல கடன் வாங்கிக் குடிக்க ஆரம்பிச்சார். ஊரைச் சுத்தி கடன். வாரத்துக்கு ஒருத்தர், ரெண்டு பேர் கடன் கேட்டு வாசல்ல வந்து நிப்பாங்க. மானமே போகும். ஒண்ணும் பண்ண முடியாம, இருந்த கொல்லையை நாலு லட்சத்துக்கு வித்து கடன் எல்லாத்தையும் அடைச்சேன். அதுவும் பத்தலை. கடன்காரன் வந்து கேவலமாப் பேசுனான். 'கடனைக் கட்டு, இல்லன்னா வீட்டுப் பொம்பளைங்களை அனுப்பு’னு சொல்லிட்டான். அந்த அவமானத்தை இவரால தாங்க முடியலை. நாண்டுக்கிட்டுச் செத்துட்டார்.

அவர் செத்த பிறகும் அவர் குடிக்கு வாங்குன கடன் மீதி இருந்துச்சு. புருஷன் செத்தா தாலி அறுக்குற பொம்பளைங்களுக்கு கவர்மென்ட் 12 ஆயிரம் ரூபாய் தருது. அந்தக் காசையும்கூட கடன்காரனுக்குத்தான் கொடுத்தேன். அப்படியும் கடன் ஒழிஞ்சபாடு இல்லை. 45 ஆயிரம் மீதி இருந்துச்சு. என் நிலைமையைப் பார்த்துட்டு ஊர்க்காரங்க ஒண்ணுசேர்ந்து வட்டிக்குக் கொடுத்தவர்கிட்ட, 'வட்டி இல்லாம அசலை மட்டும் வாங்கிக்க’னு பேசிவிட்டாங்க. அப்புறம் தாலி, நகைநட்டு எல்லாத்தையும் வித்து அந்தக் காசைக் கட்டி முடிச்சேன். இப்போ மகளிர் சுயஉதவிக் குழு மூலமா கடன் வாங்கி, காய்கறி பயிர் பண்ணி... ரெண்டு வேளை கஞ்சி குடிக்கிற அளவுக்கு குடும்பம் ஓடுது!''

செல்வகுமாரி (வயது 38, 1 மகன், 1 மகள்)

''வீட்டுக்காரர் பேர் கல்யாண சுந்தரம். வீட்டுக்கே வாங்கியாந்து வெச்சு, காலையில எழுந்தி ரிச்சதும் பாட்டிலைத் தேடி குடிக்கிறதுதான் மொத வேலை. ஒருநாள் குடிச்சுட்டு பயங்கர

குடி குடியைக் கெடுக்கும் - 7

போதை. வீட்டுக்குப் பின்னாடி இருந்த மாமரத்துல ஏறி, நிலை தடுமாறி கீழே விழுந்து, முதுகெலும்பு முறிஞ்சுபோச்சு. ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயி ஊர், ஊரா அலைஞ்சு மூணு லட்சம் செலவு. படுத்தபடுக்கையா கெடந்தப்பவும் நம்மளை அதட்டி, திட்டி குவார்ட்டர் வாங்கியாரச் சொல்லிக் குடிச்சுட்டுத்தான் ஓய்வார். மூணு மாசம் அவருக்கு பீ, மூத்திரம் அள்ளி, எல்லா வேலையும் பார்த்து... கடைசியா ஒண்ணும் முடியாம செத்தார். அவருக்காக வாங்கின கடனை அடைக்க, அதுக்குப் பிறகு நான் கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அந்தக் காசு அரிசி வாங்கக்கூடப் பத்தலை. அப்புறம் படிச்சுக்கிட்டிருந்த பையன் படிப்பை பாதியில நிறுத்திட்டு கூலி வேலைக்குப் போனான். பையன் வேலைக்குப் போயிதான் அந்தக் கடனை அடைச்சான். அவன் சம்பாதிச்சுத்தான் இப்போ குடும்பம் நடக்குது!''

கலாமணி (வயது 34, 2 மகன்கள்)

''என்னத்தங்க சொல்றது? அவர் பேரு கோதண்டராமன். எல்லாரையும் போலத்தான்... பயங்கரமாக்

குடி குடியைக் கெடுக்கும் - 7

குடிப்பார். இந்த ஊர்ல கடை வர்றதுக்கு முன்னாடிலேர்ந்தே குடி. எங்கயோ வெளியூருக்குப் போய் குடிச்சுட்டு, இன்னும் ரெண்டு பாட்டிலை வாங்கி இடுப்புல சொருகிக்கிட்டு வண்டி ஓட்டிக்கிட்டு வந்திருக்கார். போதையில நிலை தடுமாறி வண்டியைப் போட்டுக்கிட்டு கீழே விழுந்து... பாட்டில் உடைஞ்சு, வயித்துல குத்தி, உயிர் போயிடுச்சு. ரெண்டு ஆம்பளைப் பசங்க எனக்கு. அப்பனை மாதிரி இல்லாம வளர்க்கணும்னு நினைக்கிறேன். முடியுமானு தெரியலை. ஊரே குடி, குடினு மூழ்கிக் கிடக்கும்போது இதுங்களை மட்டும் கண்ணைப் பொத்தி வளர்க்குறது எப்படி?''

ஷெயந்தி (வயது 35, 1 மகன், 1 மகள்)

''குடின்னா குடி... அவ்வளவு குடி. குடும்பச் செலவுக்கு நாம கூலி வேலைக்குப் போனாதான்

குடி குடியைக் கெடுக்கும் - 7

உண்டு. ஒருகட்டத்துக்குப் பிறகு யார், என்ன சொன்னாங்களோ தெரியலை... ஒரு மாதிரி சந்தேகத்தோடு பேச ஆரம்பிச்சார். ஒரே அடி, உதை, தொந்தரவு. புள்ளைங்க தடுத்தாலும் அதுங்களுக்கும் அடி. ஒருநாள் குடிச்சுட்டு வந்து என்னை இழுத்துப்போட்டு அடிச்சதுல நான் மயங்கி விழுந்துட்டேன். செத்துட்டேன்னு நினைச்சு, பயந்துபோய் அவர் தூக்கு மாட்டிக்கிட்டார். மயக்கம் தெளிஞ்சு பார்த்தா, செத்துட்டார்னு சொல்றாங்க. ரெண்டு புள்ளைங்களை வளர்க்குறதுக்கு இப்போ வரைக்கும் நான் படுற பாடு அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்!''

விருத்தாம்மாள் (65), ஆதிலட்சுமி (36)

விருத்தாம்மாளின் மகள்தான் ஆதிலட்சுமி. இவர்களின் கதையைக் கேட்டால் கல் நெஞ்சும் கரைந்துவிடும். ஆதிலட்சுமி விவரிப்பதைக் கேளுங்கள்...

''எங்க அப்பா, அம்மாவுக்கு நாங்க அஞ்சு பொம்பளைப் புள்ளைங்க. நான்தான் மூத்தப் பொண்ணு. அடுத்து ரெண்டு பொண்ணுங்க. கடைசி ரெண்டும் ரெட்டைப் புள்ளைங்க. அஞ்சும் பொண்ணுங்களாப் போனதால, ஆம்பளைப் புள்ளை ஆசையில, சொந்தக்காரப் பையன் ஒருத்தனை எடுத்து வளர்த்தாங்க.

எங்க அப்பாவுக்குக் குடிப்பழக்கம் கிடையாது. அஞ்சு பொட்டப் புள்ளைங்களையும் கரை சேர்க்கணுமேனு பொறுப்பாதான் இருப்பார். என்னையும் தங்கச்சியையும் கல்யாணம் பண்ணிக்குடுக்கும்போது அவர் நல்ல அப்பாவாதான் இருந்தார். அந்தச் சமயத்துலதான் ஊருக்குள்ள டாஸ்மாக் கடை வந்தது. டாஸ்மாக் கடை எங்க இடத்துலதான் வந்தது. ஐந்நூறு ரூபாயோ என்னவோ வாடகை கொடுத்தாங்க. 'சும்மா கிடக்கிற இடத்துலேர்ந்து அந்தக் காசாவது வருதே’னு நினைச்சு இடத்தை வாடகைக்குக் கொடுத்தார் அப்பா. ஆனா, மெதுவா அவருக்குக் குடிப்பழக்கம் வர ஆரம்பிச்சிருச்சு. வாடகைக் காசை வாங்கி அங்கேயே கொடுத்துக் குடிக்க ஆரம்பிச்சார். கொஞ்சம் கொஞ்சமா குடிக்கு அடிமையாகிட்டார். கடன் வாங்கிக் குடிக்கிறது, கடையே கதியாக் கிடக்குறது, வீட்டுக்கு வந்து வம்பு வளர்க்குறதுனு எப்பவும் ஒரே சண்டை. இந்தா நிற்குதே... எங்க அம்மா... இதெல்லாம் வாங்காத அடி, உதை இல்லை.

குடி குடியைக் கெடுக்கும் - 7

கடைசி ரெண்டு ரெட்டைப் புள்ளைங்களுக்கும் பள்ளிக்கூடம் படிக்கிற வயசு. இவர் குடிச்சுட்டு வந்து சண்டை போட்டு, கெட்ட வார்த்தையில பேசிக்கிட்டு இருந்தா அந்தப் புள்ளைங்க எங்கேருந்து படிக்கிறது? என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் திருந்தலை. ஒருநாள் விஷத்தைக் குடிச்சுட்டு ரெண்டு புள்ளைங்களும் ஒண்ணா செத்துப்போச்சு. ரெட்டைப் புள்ளைங்க ஒண்ணா செத்த துக்கம் ஊரையே கூட்டிக்கொண்டு வந்தது. ஆனா, அதனால ஊரும் திருந்தலை, எங்க அப்பாரும் திருந்தலை. 'என் புள்ளைங்களை நானே கொன்னுட்டேனே’னு இன்னும் அதிகமாக் குடிக்க ஆரம்பிச்சார். இதுக்கு இடையில 'கெட்டது நடந்த வீட்டுல நல்லது நடக்கட்டும்’னு எங்க வீட்டுல எடுத்து வளர்த்த ரமேஷ§க்கு கல்யாண ஏற்பாடு செஞ்சாங்க. பொண்ணு பார்த்து, மண்டபம் பார்த்து, தேதி குறிச்சு, பத்திரிகை எல்லாம் அடிச்சாச்சு. அந்த நிலைமையில குடிச்சுட்டு வந்து, அவனைப் போட்டு அடிச்சு... அவன் மனசுல என்ன நினைச்சானோ... அவனும் மருந்தைக் குடிச்சுட்டு செத்தான். அடுத்தடுத்து மூணு சாவு. குடும்பமே சூனியம் பிடிச்ச மாதிரி ஆகிடுச்சு. இதுக்கு அப்புறமாவது அவர் திருந்தி இருக்கணும். மூணு உசுரு போக நான் காரணமாயிட்டேன்னு சொல்லி நாள் பூரா குடிக்க ஆரம்பிச்சார். சாப்பாடு, கீப்பாடு எதுவும் கிடையாது. சாராயம் மட்டும்தான். என்னத்துக்கு ஆகும் உடம்பு? கொஞ்ச நாள்ல ரத்தவாந்தி எடுத்து செத்துப்போனார்.

கட்டிக்கொடுத்த இடத்துல நானும் ஒண்ணும் நிம்மதியா இல்லை. என் புருஷனும் மொடாக் குடியன்தான். குடிச்சுக் குடிச்சு குடல் வெந்து படுத்தபடுக்கையாக் கெடந்தார். எங்க அப்பா செத்த அடுத்த வருஷமே அந்தாளும் போய்ச் சேர்ந்துட்டார். நானும் தாலியறுத்து பொறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். இன்னும் எங்க வீட்டுல மிச்சம் இருக்குறது என் ரெண்டு தங்கச்சிங்கதான். அவங்களோட புருஷனுங்களும் குடிக்கிறாங்க. இவ்வளவு நடந்து இருக்குறதைப் பார்த்தும் திருந்தலை. இந்தக் கொடுமையை எல்லாம் பார்த்து எங்க அம்மா இந்நேரம் செத்திருக்கணும். அது கெட்ட நேரம், போய்ச்சேர நேரம் வராம இன்னும் நடமாடிக்கிட்டு இருக்கு. எங்க அப்பா ஒருத்தரோட குடிப்பழக்கத்தால மொத்தக் குடும்பமும் இன்னைக்குச் சிதைஞ்சு, சின்னாபின்னமாகி நடுத்தெருவுல நிக்குது. 'நம்ம குடும்பத்துக்கு என்ன நடந்துச்சு?’னு ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசிச்சுப்பார்த்தா அடுத்த நிமிஷம் வாழத் தோணாது. யாரையாவது பார்த்து ஆறுதல்பட்டுக்கலாம்னா... சுத்தி எல்லாம் நம்மளை மாதிரிதான் இருக்கு. ஒருத்தருக்கு ஒருத்தர் விரக்தியா சிரிச்சுக்கிட்டு, எங்களை அறியாம அழுதுக்கிட்டு, சாகுற நாளை எதிர்பார்த்து வாழ்ந்துக்கிட்டிருக்கோம்.''

மந்திரிகுமாரி, (35 வயது, 1 மகன்)

கச்சிராயநத்தம் கிராமத்தின் பாதிக்கப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களின் அவலங்களை உலகத்தை நோக்கி உரக்கப் பேசும் துணிவுமிக்க பெண் மந்திரிகுமாரி. இவரும் குடியினால் கணவரை இழந்தவர்தான். திருமணமாகி ஒன்றரை வருடங்களே வாழ்ந்த நிலையில் ஐந்து மாதக் கைக்குழந்தையை விட்டுவிட்டு, கணவர் இறந்தபோது மந்திரிகுமாரியின் வயது 21.

குடி குடியைக் கெடுக்கும் - 7

''வீட்டுல சொத்து பிரிக்கும்போது என் புருஷனுக்கும், அவரோட தம்பிக்காரனுக்கும் பிரச்னை. அடிதடியாகிடுச்சு. என் வீட்டுக்காரர் பல் வலிக்குதுனு வீட்டுல இருந்தார். அந்தத் தம்பிக்காரன், இடையில உள்ள சில ஆளுங்களை விட்டு, 'சரக்கு அடிச்சா எல்லா வலியும் போயிடும் வா’னு அழைச்சுட்டுப் போயி, சரக்கை வாங்கி ஊத்திவிட்டிருக்கான். நல்லா குடிச்சுப் போதையானதும், அம்மிக்கல்லைத் தூக்கித் தலையில போட்டு கொலை பண்ணிட்டானுங்க. உடம்பை வேற ஒரு இடத்துல புதைச்சுவெச்சுட்டானுங்க. உடம்பைக் கண்டுபிடிக்கவே 17 நாள் ஆகிடுச்சு. பால் குடிக்கிற கைக்குழந்தையை வெச்சுக்கிட்டு எவ்வளவு அலைஞ்சிருப்பேன், எவ்வளவு நொம்பளப்பட்டிருப்பேன்னு பாருங்க... தம்பிக்காரனை போலீஸ் கைது பண்ணுச்சு. நானும் தாலியை வித்து, நகை நட்டை வித்து கேஸ் நடத்திப் பார்த்தேன். அரசாங்க வக்கீலுக்கு ஃபீஸ் குடுக்கக்கூட கையில காசு இல்லை. அதோட விட்டுட்டேன். என் புருஷனுக்குக் குடிப்பழக்கம் இருக்கப்போயிதானே எவனோ ஊத்திக் குடுத்ததைக் குடிச்சிருக்கார்?  

21 வயசுல புருஷனை இழந்து பொறந்த வீட்டுக்கு வந்து நின்னப்போ, மென்டல் மாதிரி இருந்தேன். நமக்குக் கல்யாணம் நடந்தது உண்மையா, புருஷன் செத்தது உண்மையா, விதவையானது உண்மையானு ஒண்ணும் புரியாது. சுயநினைவுக்கு வர்றதுக்கு ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. அப்புறம் திரும்பிப் பார்த்தா என்னைய சுத்தி இருக்குற பல பேரு, என்னைய மாதிரியே புருஷனைப் பறிகொடுத்தவங்க. எல்லாத்துக்கும் காரணம் குடி. புருஷனை இழந்தது ஒரு பக்கம்னா... விதவைங்கிறதை வெச்சுக்கிட்டு எங்களை ஊர் நடத்துறதுதான் தாங்க முடியாத துயரம். ஒரு பொட்டு வைக்கக் கூடாது; பூ வைக்கக் கூடாது; நல்ல துணிமணி உடுத்தக் கூடாது; சிரிச்சுப் பேசக் கூடாது. இதை எல்லாம் பண்ணினா உடனே தப்பாப் பேசுறது. 'நம்ம மக வயசுல இருக்கிற பொண்ணுங்கதானே’னு யோசிக்கிறது இல்லை. 'விதவைகள் சங்கம்’னு கிண்டல் பண்றது. நாங்க என்னா இன்னொரு ஆம்பளையைத் தேடுனமா? குடும்பத்தை ஓட்ட, பிள்ளைங்களைப் படிக்கவைக்க, வேலை பார்க்கவேண்டியிருக்கு. நாலு இடத்துக்குப் போய் வரவேண்டியிருக்கு. அதைக்கூடப் புரிஞ்சுக்காம இப்படிப் பேசுறாங்க. உடன்கட்டை ஏறுனதை ஒழிச்சுட்டதா சொல்றாங்க. இப்படி உயிரோட வெச்சுக் கொல்றதுக்குப் பதிலா, அப்பவேகூட விழுந்து செத்துடுறது பரவாயில்லை. அதுக்காக இவங்க பேசுறதுக்கு எல்லாம் 'ஆமாம் சாமி’ போட்டுக்கிட்டு இருந்தம்னா, ஒண்ணும் பண்ண முடியாது. அதனால்தான் என்னைய மாதிரி பாதிக்கப்பட்ட பொம்பளைங்களை ஒண்ணு சேர்த்து, பேங்க் லோன் வாங்கி, காய்கறி பயிர் பண்றோம். அதுமூலமா குடும்பத்தை ஓட்டுறோம். எங்களைத் தப்பாப் பேசுற யாரும் ஒரு வேளை கஞ்சி ஊத்தப்போறது இல்லை. ஆனா ஒரு விஷயங்க... இத்தனை பேர் தாலி தானா இறங்கலை. எங்க தாலியை அறுத்தது இந்த அரசாங்கம்தான். அதை எங்கே வேணும்னாலும் வந்து சொல்வோம்!''

- போதை தெளிவோம்...