Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 9

#BanTasmac தொடர்பாரதி தம்பி, படம்: வீ.சக்தி அருணகிரி

'நான் ஒருத்தன் குடிக்கிறதால என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துடும்னு சொல்றது எல்லாம் ஓவர்’ என்பது பல குடிகாரர்களின் எண்ணம். தன் குடியும் போதையும் எப்போதும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே இவர்கள் கருதிக்கொள்கிறார்கள். ஆனால் போதை, இவர்களை மயக்கி, வீழ்த்தி சாத்தானின் சாலைக்கு இழுத்துச் சென்றுவிடுகிறது. அதன் பிறகு தங்கள் குடும்பம் என்ன கதிக்கு ஆளாகிறது என்பதை இவர்கள் அறிவது இல்லை. அறிய வேண்டும் எனில், இந்தக் கதைகளைப் படியுங்கள். தேனி அருகே கோடங்கிப்பட்டியில் பால்பாண்டி என்பவர் நடத்திவரும் 'மனிதநேய ஆதரவற்றோர் காப்பகத்தில்’ உள்ள சிலரது கதைகள் இவை... 

கார்த்திகா 19  கல்லூரி சேர வேண்டும்.

சர்மிளா 17  ப்ளஸ் 1.

''அம்மா லட்சுமி. அப்பா கருப்பசாமி. அப்பா ஒரு ஹோட்டல்ல பரோட்டா மாஸ்டரா இருந்தார். எனக்கு ஆறு வயசும் தங்கச்சிக்கு நாலு வயசும் இருக்கிற வரை அப்பா குடிக்க மாட்டாரு. எங்க ரெண்டு பேரையும் பிரைவேட் ஸ்கூல்ல சேர்த்திருந்தார். டெய்லியும் வீட்டுக்கு வரும்போது திங்க தீனி எல்லாம் வாங்கிட்டு வருவார். எங்களுக்குப் படிக்க எதுனாச்சும் வேணும்னா, உடனே வாங்கிக் குடுத்துருவார். திடீர்னு ஒருநாள் அப்பா எங்கேயோ போயிட்டார். வரவே இல்லை. வீட்ல சாப்பிடவே கஷ்டம். நாங்க கவர்ன்மென்ட் ஸ்கூல்ல சேர்ந்தோம். அம்மா புளி தட்டப் போவாங்க. நாங்க ரெண்டு பேரும் பேப்பர் பொறுக்கப் போவோம். தேனியில எல்லா தெருவுலயும் பேப்பர் பொறுக்கி இருக்கோம். அதுல கிடைக்கிற காசை வீட்டுச் செலவுக்கு வெச்சுக்குவோம். ஸ்கூல்ல மத்தியானம் கொடுக்கிற சத்துணவுல கொஞ்சத்தை மட்டும் ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு, மீதியை எடுத்துட்டு வந்து வீட்ல அம்மாவோட சேர்ந்து மூணு பேரும் சாப்பிடுவோம். ஆனா, எப்பமும் பசியாவே இருக்கும். இப்படியே ஒரு வருஷம் போச்சு. அதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியாம, அம்மா எங்களைக் கூட்டிக்கிட்டு அப்பாவைத் தேடி சங்கரன்கோவில் போனாங்க. ரெண்டு நாள் அலைஞ்சு திரிஞ்சு ஆட்டுக் கறிக் கடையில கறி வெட்டுற வேலைபார்த்த அப்பாவைக் கண்டுபிடிச்சோம். ஒண்ணும் சொல்லாம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனார். ஆனா, டெய்லியும் குடிச்சுட்டு வருவார். அம்மாவை இழுத்துப்போட்டு அடிப்பார். திடீர்னு ஒரு மாசம் வீட்டுக்கே வர மாட்டார். தொடர்ந்து ரெண்டு, மூணு நாள்கூட பட்டினியாக் கிடந்திருக்கோம். அப்புறமா சனி, ஞாயிறுல நாங்க ரெண்டு பேரும் தீப்பெட்டி கம்பெனிக்கு வேலைக்குப் போனோம். அந்தக் காசைச் செலவுக்கு வெச்சுக்கிட்டு ஸ்கூல் சத்துணவை வீட்டுக்கு எடுத்தாந்து மூணு பேரும் சாப்புடுவோம்.

குடி குடியைக் கெடுக்கும் - 9

எப்பயாச்சும் வீட்டுக்கு வர்ற அப்பா, அப்பவும் குடிச்சிட்டுதான் வருவார். ஒருதடவை எங்க அம்மாவைச் சந்தேகப்பட்டு அடிச்சு, ஒரு கல்லை தூக்கித் தலையில போட்டுட்டார். மண்டை உடைஞ்சு ஒரே ரத்தம். அடிபட்டதுல அம்மாவுக்கு மனநிலை பாதிச்சிருச்சு. வீட்டுல சாப்பாடு இல்லை; அப்பா வர்றது இல்லை; அம்மாவைப் பார்த்துக்கணும். என்ன பண்றதுன்னே தெரியலை. படிப்பை நிறுத்திட்டு மாத்தி, மாத்தி தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப் போயிட்டு அம்மாவையும் பார்த்துக்கிட்டோம். அப்போ எனக்கு 9 வயசு; இவளுக்கு 7 வயசு. தாக்குப்பிடிக்க முடியலை. 'அம்மாவைக் கூட்டிட்டு தேனிக்கே போயிடுவோம். அங்கே ஆச்சி இருக்காங்க; பார்த்துக்குவாங்க’னு நினைச்சுக் கிளம்பினோம். பல நாள் ஒழுங்கான சாப்பாடு இல்லாம நடக்கவே முடியலை. காலையில வீட்டுல இருந்து கிளம்பி சங்கரன்கோவில் பஸ் ஸ்டாண்டு வந்து சேர மத்தியானம் ஆகிடுச்சு. பஸ் டிக்கெட் வாங்க கையில காசு இல்லை. நானும் தங்கச்சியும் ஒவ்வொருத்தர்கிட்டயா பிச்சை எடுத்து காசு சேர்த்து பஸ் ஏறி தேனி வந்தோம். பி.சி.பட்டியில ஆச்சி இருந்தாங்க. ஆனா அவங்களால எங்களை வளர்க்க முடியலை. அம்மாவுக்கு மனநோய் முத்திப்போய் சங்கிலியால கட்டிப்போட்டு வெச்சிருந்தாங்க. அப்புறமா அவங்களும் செத்துட்டாங்க. தெரிஞ்சவங்க சொல்லிவிட்டு இங்கே வந்து சேர்ந்து ஏழு வருஷமாச்சு'' - இவ்வளவு இளம் வயதில் இருவரின் தலைமுடியும் நரைத்துப்போயிருப்பது ஏன் என அவர்களின் கதையைக் கேட்ட பிறகுதான் புரிந்தது. இந்தச் சின்னஞ்சிறிய பிள்ளைகள், இத்தனை துன்பங்களை எப்படித் தாங்குகிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் நம்புங்கள்... இந்தக் கொடும் துன்பத்துக்கு இடையிலும் மூத்த பெண் கார்த்திகா, 10-ம் வகுப்புத் தேர்வில் எடுத்த மதிப்பெண் 454. தங்கை சர்மிளா, 10-ம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் 488.

''கார்த்திகாவின் 10-ம் வகுப்பு மதிப்பெண் விவரம், புகைப்படத்துடன் செய்தித்தாளில் வெளிவந்து இருந்தது. மனநிலை பாதிக்கப்பட்டு சங்கிலியில் கட்டப்பட்டிருந்த அவரது அம்மாவிடம் பேப்பரைக் காட்டினோம். அவரது கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வெளியேறியது. அடுத்த நாள் அவர் இறந்துபோனார்'' என்கிறார் பால்பாண்டி.

ஒரு பெரும் சோகக் காவியத்தின் உணர்ச்சியும் உயிர்த்துடிப்பும் மிக்க அந்தக் கணங்களை எண்ணிப்பார்க்கவே மனம் நடுங்குகிறது.

இப்போது வரை இவர்களின் அப்பா இருக்கிறாரா, இறந்துவிட்டாரா என்பது தெரியாது. இவர்களைத் தேடி வரவும் இல்லை. இந்தச் சகோதரிகளின் இப்போதைய லட்சியம் கல்வியின் கரம் பற்றி வாழ்வில் கரைசேர்வதுதான். மூத்த பெண் கார்த்திகா ப்ளஸ் டூ-வில் 892 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மருத்துவம் படிப்பது இவரது விருப்பம். ஒரு ரஷ்யக் கல்லூரி, இவரது மருத்துவப் படிப்புக்குச் சம்மதம் தெரிவித்து சலுகைகள் போக ஐந்து லட்சம் ரூபாய் கட்டுமாறு கூறியுள்ளது. அதைக் கட்ட இயலாத நிலையில் உதவியை எதிர் நோக்கியிருக்கிறார் இப்போது. ''ரஷ்யா போய்தான் படிக்கணும்னு இல்லை. இங்கேயே ஏதோ ஒரு மருத்துவப் படிப்புப் படிக்கணும். அதான் என் ஆசை'' என்கிறார் கார்த்திகா. படிப்பு, தங்கும் இடம், உணவு, உடை என இவருக்கு ஒரு முழுமையான தத்தெடுப்பு தேவைப்படுகிறது.

''எனக்கு சிவில் சர்வீசஸ் எக்ஸாம் எழுதி ஐ.ஏ.எஸ் ஆகணும்னு ஆசை'' என்கிற இளைய  பெண் சர்மிளா, அதைப் பெயரளவுக்குச் சொல்லவில்லை. அதற்கான முழு முனைப்புடன், முழுத் தயாரிப்புடன் இருக்கிறார். தந்தையின் குடியால் குடும்பத்தை இழந்த இந்தப் பெண்கள், கல்வியின் உதவியால் துயர நதியை நீந்திக் கடக்க முயற்சிக்கின்றனர்.

''முடிஞ்சுபோனதை நினைச்சுக் கவலைப்படாதீங்க. படிப்புல கவனம் செலுத்துங்க'' எனச் சொன்னேன். வறண்ட புன்னகையுடன் சர்மிளா சொன்னார், ''அதை எல்லாம் நினைச்சா, ஒரு வேளை சோறுகூட திங்க முடியாது சார்!''

அன்னலட்சுமி, 19  பி.காம்.

''அப்பா பேர் பாலகிருஷ்ணன். கேரளாவுக்கு கூலி வேலைக்குப் போவார். வாங்குற கூலியைக் குடிச்சே அழிப்பார். அம்மாவையும் பயங்கரமா அடிப்பார். நாங்க மொத்தம் நாலு பொண்ணுங்க. ஆம்பளைப் புள்ளை வேணும்னுதான் வரிசையா குழந்தை பெத்திருக்காங்க. நாலாவதும் பொண்ணாப் பொறந்ததும், அந்தப் புள்ளையை மட்டும் ஏதோ ஒரு ஆசிரமத்துக்குத் தத்துக் கொடுத்துட்டாங்க. இப்போ வரைக்கும் அந்தப் புள்ளை எங்கே இருக்குன்னு எங்க யாருக்கும் தெரியாது. மிச்சம் இருந்த மூணு புள்ளைங்க, அம்மா, அப்பா... எல்லாரும் சின்னமனூர் பக்கம் வாய்க்கால்பட்டியில் குடியிருந்தோம். எங்க அப்பாவோட குடிப்பழக்கம் நாளாக, நாளாக ரொம்ப மோசமாச்சு. மூத்த அக்காவுக்கு திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை. கரெக்ட்டா சனிக்கிழமை சம்பளம் போடுற அன்னைக்கு இங்கே இருந்து திருப்பூருக்குக் கிளம்பிப்போய் அவகிட்ட இருந்து பணத்தைப் பிடுங்கி, பூரா காசுக்கும் குடிச்சுட்டு வீடு வந்து சேர்வார். ஒரு தீபாவளி சமயத்துல குடிச்சுட்டு எங்க ஊர்ல வண்டி ஓட்டிக்கிட்டுப் போனப்போ, ஆக்ஸிடென்ட் ஆகி அந்த இடத்துலயே செத்துட்டார்.

குடிச்சுட்டு வந்து தொடர்ந்து அம்மாவை அடிச்சதுல, அம்மாவுக்கு அடிக்கடி மயக்கம் வரும். மூணு பொண்ணுங்கள்ல மூத்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. மிச்சம் இருந்த ரெண்டு பொம்பளைப் புள்ளைங்களை வெச்சுக்கிட்டு அம்மாவுக்குப் பொழைக்க வழி தெரியலை. அதனால ரெண்டு பேரையும் இந்த ஹோம்ல சேர்த்துவிட்டாங்க. எங்க அப்பா மட்டும் குடிக்காதவரா இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்னு பல நாள் நினைச்சிருக்கேன். ஏன்னா, குடிக்காத சமயத்துல அவர் அவ்வளவு பாசமா இருப்பார். அவருக்கு சின்ன வயசுல போலீஸ் ஆகணும்னு ஆசையாம். அதனால, நான் போலீஸ் ஆகணும்னு ஆசைப்பட்டார். நான் போலீஸ் ஆகி கையெழுத்துப் போடணும்னு சொல்லி ஒரு புது ஹீரோ பேனா வாங்கி பத்திரமா வெச்சிருந்தார். அவரே குடிச்சுட்டார்னா, வேற ஆளா மாறிடுவார்!''

சுதா, 16  ப்ளஸ் 1

''அப்பா பேர் முனியாண்டி. ஊர் ஆண்டிப்பட்டி. கல் உடைக்கிற வேலை. மூணு அண்ணனுங்க, அப்புறம் அக்கா, பிறகு நான். எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லேர்ந்து அப்பா குடிக்கிறார். தினமும் குடிச்சுட்டு வந்து அம்மா, அண்ணன் எல்லாரையும் அடிப்பார். ரொம்பக் கேவலமாத் திட்டுவார். அதனால மூணு அண்ணன்களும் சின்ன வயசுலயே வீட்டைவிட்டு ஓடிப்போய்ட்டாங்க. என் அக்கா கல்யாணமாகி தனியாப் போயிட்டா. வீட்டுல நானும் அம்மாவும் மட்டும்தான். அம்மாவும் கொஞ்ச காலத்துல, அப்பாவோட அடி தாங்காம என்னை விட்டுட்டு எங்கயோ போயிட்டாங்க. எங்க அப்பா இன்னொருத்தங்ககூட வாழப் போயிட்டார். நான் மட்டும் என்ன பண்றதுனு தெரியாம, எங்க அக்கா வீட்டுல போய் இருந்தேன். எங்க அக்கா புருஷன் ஒரு திருடன். அடிக்கடி திருடிட்டு ஜெயிலுக்குப் போறவர். அப்படி ஒருமுறை ஜெயிலுக்குப் போனவரை, எங்க அக்கா ஜாமீன்ல எடுத்தா. வெளியில வந்தவர் குடிச்சுட்டு வந்து 'ஜாமீன் எடுக்கிறதுக்கு உனக்கு எங்கே இருந்து காசு கிடைச்சுது? வேற யார்கூடவோ தொடர்பு இருக்குதா?’னு சொல்லி அடிச்சு, மண்ணெண்ணெயை ஊத்தி, கொளுத்தி விட்டுட்டார். அக்கா செத்துட்டா. அந்த கேஸ்ல அக்கா புருஷன் ஜெயிலுக்குப் போயிட்டார். அப்பா இல்லாம, அம்மா இல்லாம, அண்ணன்கள் இல்லாம, அக்காவும் செத்து, ஆதரவுக்கு யாரும் இல்லாம அநாதையா நின்னேன். அப்புறம் யாரோ ஒருத்தர் இந்த ஹோம்ல என்னையைச் சேர்த்துவிட்டார்'' என்ற சுதாவை இடைமறித்தார் பால்பாண்டி.

''எங்க ஹோம்ல இருக்கிற பிள்ளைங்க எல்லாரும் மாவட்டத்துல இருக்கிற பிச்சைக்காரங்களை கணக்கு எடுக்கிற வேலையில் ஈடுபட்டோம். அதுல குச்சனூர் கோயிலுக்கும் போய் வந்தோம். மூணு, நாலு மாசம் கழிச்சு... அப்படிப் போய் வந்த போட்டோ ஆல்பத்தைப் புரட்டிக்கிட்டு இருக்கும்போது, 'எங்க அப்பா எப்படி இருப்பாருன்னு பார்க்கிறீங்களா சார்?’னு சுதா கேட்டுச்சு. 'சொல்லும்மா’னு சொன்னதும், ஆல்பத்துல இருந்த ஒருத்தரைக் காட்டி, 'இவர்தான்’னு சொல்லுச்சு. எங்க எல்லாருக்கும் அதிர்ச்சி. ஏன்னா, குச்சனூர் கோயில்ல பிச்சை எடுத்துக்கிட்டு இருந்த அவங்க அப்பாவைச் சந்திச்சு, அவர் பத்தின விவரத்தைச் சேகரிச்சதே சுதாதான்!'' என அதிர வைத்தார்.

தன்னை நடுத்தெருவில் விட்டுச் சென்ற தந்தை, அவரைப் பிச்சைக்காரனாகச் சந்திக்க நேர்ந்த மகள்... வாழ்வு என்னும் புதிர்வட்டம் மனிதர்களை எப்படிப்பட்ட திருப்பங்களில் எல்லாம் சந்திக்கவைக்கிறது!

''அவர்தான் என் அப்பானு எனக்குத் தெரிஞ்சுடுச்சு. ஆனா, அவருக்கு என்னை அடையாளம் தெரியலை. நாங்க ஏதோ உதவி செய்யத்தான் விசாரிக்க வந்திருக்கோம்னு நினைச்சுக்கிட்டு, நான் கேட்கிறதுக்கு எல்லாம் பாதி உண்மையும் பாதி பொய்யுமா சொன்னார். எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு வந்துட்டேன்'' என்ற சுதாவிடம், 'நான்தான் உங்க பொண்ணுனு சொல்லலையா?’ என்று கேட்டேன்.

நெடுநேரம் அமைதியாக இருந்தவர், ''விரும்பலை'' என்றார்!

- போதை தெளிவோம்...