Published:Updated:

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

தீர்க்க தரிசனம் 

10 செகண்ட் கதைகள்

'' 'அமைச்சர்’, 'முன்னாள் அமைச்சர்’னு ரெண்டு நேம்போர்டு செய்யச் சொல்லிடுங்க...''  மாண்புமிகு அமைச்சர் ராசவேலு ரகசியமாகப் பிறப்பித்த முதல் ஆணை இதுதான்!

- நித்யா

அவன்

10 செகண்ட் கதைகள்

என்னைப்போலவே ஒருவர் முன்னே செல்வதை உணர்ந்து, வேகமாக பின்தொடர்ந்து அவர் தோளில் கை வைத்தேன்... அதே நொடியில் என் தோளில் மற்றொரு கை!

- மணிகண்டராஜ்

வீழ்ச்சி

10 செகண்ட் கதைகள்

'வீழ்வேனென்று நினைத் தாயோ?’  டிஷர்ட் அணிந்த இளைஞன், டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடக்கிறான்!

- ழி.ராஜேந்திரன்

    மினி திரை  

10 செகண்ட் கதைகள்

'எக்காரணம் கொண்டும் சின்னத்திரைக்கு வர மாட்டேன்’ எனப் பேட்டி கொடுத்த நடிகையின் குளியல் வீடியோ வலம்வந்து கொண்டிருக்கிறது வாட்ஸ்அப்பில்!

  - சண்முகசுந்தரம்

புகார்

10 செகண்ட் கதைகள்

'' 'பசங்களை அடிக்கிறான், திட்றான், கிள்ளுறான்’னு ஸ்கூல்ல இருந்து நம்ம பையனைப் பத்தி ஒரே புகார் மழை. இனிமே அவனை வாத்தியார் வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லிடுங்க'' என்றாள் கமலாம்மா!

- எஸ்கா

உதவும் உள்ளம்

10 செகண்ட் கதைகள்

''ஐயோ காப்பாத்துங்க!'' என்ற அலறலோடு ஆற்றில் தத்தளிப்பவனை நோக்கி ஏழெட்டு பேர் ஓடினார்கள் கையில் செல்போனோடு!

- சு.தட்சிணாமூர்த்தி

மாங்கல்யம் தந்துனானே...

10 செகண்ட் கதைகள்

கெட்டிமேளம் கொட்டியதும், 'நிறுத்துங்க’ என்ற குரல் கேட்டு மண்டபமே மண மேடையை நோக்க, ''இருங்க தாலி கட்டுறதை செல்ஃபி எடுத்துக்கிறேன்'' என்றான் மாப்பிள்ளை கூலாக!

- பாளைபசும்பொன்  

ஸ்மார்ட் நீதிக் கதை

10 செகண்ட் கதைகள்

தாத்தா கதை சொன்னார்... ''ஜாடியில் குறைவாக இருந்த தண்ணியை, ஒவ்வொரு கல்லாக எடுத்துவந்து போட்டு மேலே வரச்செய்து, காகம் தாகம் தீர்த்தது.'' பேத்தி கேட்டாள், ''கல்லுக்குப் பதிலா ஸ்ட்ராவை எடுத்து வந்திருந்தா, ஈஸியா குடிச்சிருக்கலாமே தாத்தா?''

- கே.லக்ஷ்மணன்,

பொங்கிட்டோம்ல...

10 செகண்ட் கதைகள்

மேடையில் தலைவர் முழங்கினார்,''பொறுத்தது போதும்... பொங்கி எழு!'' செருப்பு வந்து விழுந்தது.

- பர்வீன் யூனுஸ்

வாய்மை

10 செகண்ட் கதைகள்

தூக்குத்தண்டனை கைதியிடம் கடைசி ஆசை கேட்கப்பட்டது. 'எனக்கு தண்டனை கிடைச்சிடுச் சுன்னு விட்டுடாம, எப்படி யாவது உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிச்சிடுங்க சார்' என்றான்!

- ரம்யா தேவநாதன்

10 செகண்ட் கதைகள்

அதிகபட்சம் 10 நொடிகளுக்குள் வாசித்துவிடக்கூடிய 'நச்’ கதைகள் அனுப்ப வேண்டும். பிரசுரமானால் பரிசு ரூ. 500. உங்கள் கதைகளை 10secondstory@vikatan.com என்ற ஐ.டி-க்கு அனுப்பலாம்!   

அடுத்த கட்டுரைக்கு