Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 10

#BanTasmacபாரதி தம்பி, படங்கள்: கே.குணசீலன், தே.சிலம்பரசன்

ரு காலி பீர் பாட்டில் என்ன செய்துவிடும்? காட்டின் பேரரசனான யானையையே கொலைசெய்து சாகடிக்கக்கூடும். கீழே உள்ளவை, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய  'யானை டாக்டர்’ சிறுகதையில் வரும் வரிகள்... 

'என்னால் எவ்வளவு யோசித்தாலும் புரிந்து கொள்ள முடியாத விஷயம், காலி மதுக் குப்பிகளை ஏன் அத்தனை வெறியுடன் காட்டுக்குள் வீசி எறிகிறார்கள் என்பது...

மற்ற எந்த மிருகத்தைவிடவும் யானைக்கு மிக அபாயகரமானது அந்தக் கண்ணாடிக் குப்பியின் உடைசல். யானையின் அடிக்கால் ஒரு மணல் மூட்டையைப் போன்றது. குப்பிகள் அநேகமாக மரத்தில் மோதி உடைந்து மரத்தடியிலேயே கிடக்கும். யானை அதன் மகத்தான எடையுடன், உடைந்த அந்தக் கண்ணாடிக் குப்பியின் மீது காலை வைத்தால், குப்பி நேராக அதன் பாதத்துக்குள் முழுக்கப் புகுந்துவிடும். யானை இருமுறை காலைத் தூக்கி வைத்து நடந்தால், அது இன்னும் நன்றாக உள்ளே சென்றுவிடும். அதன் பிறகு யானையால் நடக்கவே முடியாது. இரண்டே நாட்களில் காயத்தில் சீழ்வைக்கும்; புழுக்கள் உள்ளே நுழையும்; அவை சதையைத் துளைத்து சீழை உள்ளே கொண்டுசெல்லும். முக்கியமான குருதிப்பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டுவிட்டால், பிறகு யானை உயிருடன் எஞ்சாது.

வீங்கிப் பெருத்து, சீழ் வழியும் கால்களுடன் பல நாட்கள் யானை காட்டில் அலையும். ஒருகட்டத்தில் நடமாட முடியாமல்போகும்போது ஏதாவது மரத்தில் சாய்ந்து நின்றுவிடும். ஒரு நாளில் 30 லிட்டர் தண்ணீர் குடித்து, 200 கிலோ உணவு உண்டு, 50 கி.மீ நடந்து வாழவேண்டிய உயிர், அப்படி ஐந்து நாட்கள் நின்றால் மெலிந்து உருக்குலைந்துபோய்விடும்; முதுகு எலும்பு மேலே துருத்தும்; கன்ன எலும்புகள் புடைக்கும்; காதுகள் அசைவது குறையும்; மத்தகம் தாழ்ந்து தாழ்ந்து வரும்; மெள்ள துதிக்கையை தரையில் ஊன்றி குப்புறச் சரிந்து நிற்கும்; பின்னர் மத்தகமே தரையில் ஊன்றும்; அடுத்த நாள் பக்கவாட்டில் சரிந்து வயிறு பாறைபோல மறுபுறம் எழுந்து நிற்க விழுந்துகிடக்கும்; வாலும் துதிக்கையும் மட்டும் சுழல, கண்களை மூடி - திறந்தபடி நடுங்கிக்கொண்டிருக்கும்; பிற யானைகள் அதைச் சூழ்ந்து நின்று தலையாட்டிப் பிளிறிக்கொண்டிருக்கும். அதன் பின் யானை இறந்துபோகும்.

குடி குடியைக் கெடுக்கும் - 10

துதிக்கையின் கடைசி அசைவும் நின்ற பிறகும்கூட யானைக் கூட்டம் பல நாட்கள் சுற்றி நின்று கதறிக்கொண்டிருக்கும். பின்னர் அவை அதை அப்படியே கைவிட்டு பல கி.மீ தள்ளி முற்றிலும் புதிய இன்னோர் இடம் நோக்கிச் சென்றுவிடும். யானைத் தோலின் கனம் காரணமாக, சடலம் அழுகாமல் இந்தக் காட்டில் எந்த மிருகமும் அதைச் சாப்பிட முடியாது. அழுகிய யானையை செந்நாய்கள் முதலில் தேடிவந்து வாயையும் குதத்தையும் மட்டும் கிழித்து உண்ணும். பிறகு கழுகுகள் இறங்கி அமரும். கழுதைப்புலிகள் கூட்டம் கூட்டமாக வெகுதொலைவில் இருந்து தேடி வரும். மனிதனைவிட 170 மடங்கு அதிக நியூரான்கள் கொண்ட மூளையை உடைய காட்டின் பேரரசன், வெறும் வெள்ளை எலும்புகளாக மண்ணில் எஞ்சுவான்.’

- இது கதைக்கான கற்பனை அல்ல; நடைமுறை நிஜமும்கூட. இப்படி பல விலங்குகள் சாகின்றன. சரியாகச் சொல்வதானால் சாகடிக்கப்படுகின்றன. மலைச்சரிவுகளில் அமர்ந்தபடி இயற்கையின் ஏகாந்தத்தை ரசித்து, குடித்துவிட்டு தூக்கி வீசும் மது பாட்டில்கள் காட்டு விலங்குகளின் இருப்புக்குச் சவால்விடுகின்றன. மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா செல்பவர்கள் ஏன் இத்தனை வெறித்தனமாகக் குடித்துத் தீர்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. டிக்கியில் மது பாட்டில்களை நிரப்பிக்கொண்டுதான் காரையே எடுக்கின்றனர். அன்றாட வாழ்க்கை நெருக்கடிகளில் இருந்தும் அலுவலக வேலைப்பளுவில் இருந்தும் தப்பித்து, ஓரிரு நாட்கள் இளைப்பாறத்தான் சுற்றுலா செல்கிறார்கள். ஆனால், வந்த இடத்திலும் குடித்துவிட்டு மல்லாந்துவிடுகின்றனர். இதற்கு ஏன் ஊட்டிக்கும் கொடைக்கானலுக்கும் கிளம்பி வர வேண்டும்? அதுதான் அரசு ஒவ்வோர் ஊரிலும் சாராயக் கடைகளைத் திறந்துவைத்திருக்கிறதே... அங்கேயே குடித்துவிட்டு துர்நாற்றம் பிடித்த டாஸ்மாக் பாரிலேயே மயங்கிக் கிடக்கலாமே?

குடி குடியைக் கெடுக்கும் - 10

மலைப்பகுதியில் மட்டும் அல்ல... குடித்துவிட்டு வீசும் மது பாட்டில்களால் சமதளப் பகுதியிலும் பிரச்னைதான். தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களை ஒட்டி, கிராமப் பகுதிகளில் இருக்கும் பல டாஸ்மாக் கடைகள், குடிகாரர்களிடையே புகழ்பெற்றவையாக இருக்கின்றன. நகரங்களில் நெருக்கடி, நசநசப்பு. இந்தக் கிராமத்துக் கடைகள் இயற்கைச்சூழலில் அமைந்திருக்கின்றன. பாட்டிலை வாங்கிக்கொண்டு அப்படியே அருகில் இருக்கும் வயல்வெளி, தோட்டம், மரத்தடிகளில் அமர்ந்துகொள்ளலாம். இதனால் நகரங்களில் இருந்து டூ-வீலர், கார்களில் இந்தக் கடைகளை நோக்கிக் குவிகின்றனர். குடித்துவிட்டு காலி பாட்டில்களை அங்கு இருக்கும் வாய்க்கால்களில், வயல்வெளிகளில், வேலிகளில் வீசிச் செல்கின்றனர். இந்தப் பாட்டில்களைப் பொறுக்கி விற்பதற்கு பலர் இருக்கிறார்கள் என்பதால், உடையாத பாட்டில்களை அவர்கள் பொறுக்கிவிடுவார்கள். உடைந்த பாட்டில்களை என்ன செய்வது? அவை வாய்க்காலில் தண்ணீர் வரும்போது அல்லது மழைக்காலத்தில் நீரில் அடித்துச் செல்லப்படுகின்றன. அது பாசன வாய்க்கால் என்றால் உடைந்த பாட்டில் துண்டுகள் வெள்ளாமை வயல்களுக்குச் சென்றுவிடுகின்றன. அடர்ந்த காட்டில் யானையின் காலில் ஒரு பீர் பாட்டில் குத்தித் துளைப்பதைப்போல, நடவு வயலில் சேற்றில் நின்று நாற்று முடிச்சுகளை விளம்பிக் கொண்டிருக்கும் விவசாயியின் காலில், உடைந்த கண்ணாடி பாட்டில் சில்லுகள் உள்ளே ஏறிவிடுகின்றன. எதிர்பாராத நேரத்தில் விவசாயியின் பாதத்தை ஒரு கண்ணாடித் துண்டு குத்திக் கிழித்து உள்ளே சென்றுவிடுவதைக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். திருச்சி, தஞ்சாவூர் பகுதி கிராமங்களில் இப்படி அடிக்கடி நடக்கின்றன.

உடைந்த சாராயப் பாட்டில்கள் விவசாயத்துக்கு இன்னொரு பிரச்னையாக உருவெடுப்பதால்,

குடி குடியைக் கெடுக்கும் - 10

நடவுக்கு முன்பு இதை வேறு கவனமாகப் பார்த்துப் பொறுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், சேற்றில் தேடி எவ்வளவு கண்ணாடித் துண்டுகளை எடுத்துவிட முடியும்? குத்துவது குத்தத்தான் செய்யும். காலில் கட்டுப்போட்டுக்கொண்டு, வேலை கெட்டு, ஒரு வாரம் உட்காரவேண்டியதுதான். வயல் வேலையைப் பெரும்பாலும் நிலத்தின் உரிமையாளர் மட்டுமே செய்வது இல்லை; செய்யவும் முடியாது. ஒரு விவசாயக் கூலி இந்த வேலையைச் செய்து, அவர்கள் காலில் கண்ணாடிச் சில்லு குத்திவிடும்போது அவருக்கு ஒரு வார வருமானம் போய்விடுகிறது. 'அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் கமல் எறியும் கோலிக்குண்டு ஒரு பொருளில் மோதி, அது இன்னொன்றில் மோதிக்கொண்டே செல்வதுபோல... எங்கோ, யாரோ ஒருவர் குடித்துவிட்டு வீசும் பாட்டில், அதற்குச் சம்பந்தமே இல்லாத ஒரு விவசாயக் கூலித் தொழிலாளியின் அன்றாட வருமானத்தைப் பாதிக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் என்ற கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. சுற்றி முந்திரித்தோப்பு. சரக்கு வாங்கிக்கொண்டு அருகில் உள்ள தோப்பில் அமர்ந்துகொள்கின்றனர். மரத்தின் நிழலில் ஜாலியாக பாட்டு பாடிக்கொண்டு, கதை பேசிக்கொண்டு, போதை ஏறியதும் மரத்தின் கிளைகளில் அமர்ந்துகொண்டு இல்லாத சேட்டை எல்லாம் செய்கிறார்கள். முந்திரித்தோப்பில் எங்கெங்கு காணினும் குடித்து வீசிய காலி பிளாஸ்டிக் டம்ளர்களும், தண்ணீர் பாக்கெட்டுகளுமாகக் குவிந்துகிடக்கின்றன. இப்படிக் குடிப்பதில் பெரிய மனிதர்களும் உண்டு, இளைஞர்களும் உண்டு, பள்ளிச் சிறுவர்களும் உண்டு. இளைஞர்கள் குடிப்பதை மூத்தவர்கள் கண்டிப்பது இல்லை; சிறுவர்கள் குடிப்பதை இளைஞர்கள் கண்டிப்பது இல்லை. வேண்டுமானால், சரக்குப் போதவில்லை என ஒரு கட்டிங் கடன் கேட்பார்கள், அவ்வளவுதான். முன்பு ஒருகாலத்தில் ஊர்ச் சாவடியில் வயதானவர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் இடத்துக்கு சிறுவர்கள் சென்றால், 'இங்கே எல்லாம் உனக்கு என்ன வேலை... போய் விளையாடு போ!’ என விரட்டிவிடுவார்கள். சூதில் இருந்தும் தீமையில் இருந்தும் இளையோரைத் தள்ளியிருக்க வைக்க முயன்றனர். இப்போது 'இந்த வயசுல உனக்கு குடி கேட்குதா? போடா...’ எனக் குடிக்கும் பள்ளிச் சிறுவர்களை விரட்டிவிட ஏன் பெரியவர்களால் முடியவில்லை? அதற்கு உரிய மன தைரியம்கூட அவர்களுக்கு இல்லை. ஏனென்றால், தவறைத் தட்டிக்கேட்பதற்கான தார்மீக அறத்தை, நீதியுணர்ச்சியை அவர்கள் இழந்துவிட்டனர். தான் பின்பற்றாத ஒன்றை எப்படிப் பிறருக்கு பரிந்துரைக்க முடியும்? 'இவ்வளவு வயசான பிறகு உனக்கு எதுக்கு குடி?’ என அவன் திரும்பக் கேட்டுவிட்டால்? எனவே ஒரு தரப்பின் தப்பை மறுதரப்பு மௌனமாகப் பொறுத்துக்கொண்டு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறது.

குடி குடியைக் கெடுக்கும் - 10

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே ஒரு கிராமத்தில் ஒரு பள்ளிச் சிறுவன் டி.வி.எஸ் எக்ஸ் எல் வண்டியில் ஒரு வொயர் கூடை முழுக்க குவார்ட்டர் பாட்டில்களை நிரப்பிக்கொண்டு போனான். வெளியில் இருந்து பார்க்கும்போதே உள்ளே சரக்குப் பாட்டில்கள் இருப்பது தெரிகிறது. நடுத்தர வயதுடைய ஒருவர், அந்தப் பையனை வண்டியில் அனுப்பிவிட்டு, இன்னொரு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார். என்ன என விசாரித்தால் அவரது கரும்பு வயலில் அன்று வெட்டும் வேலை நடக்கிறது. தொழிலாளர்களுக்குக் கொடுப்பதற்காக சரக்கு பாட்டில்கள் வாங்கி, மகனிடம் கொடுத்து அனுப்பிவிட்டு, அவர் வேறு ஒரு வேலையாகக் கிளம்பிச் செல்கிறார். இதுபோன்ற காட்சிகள் விவசாயப் பகுதிகளில் சர்வசாதாரணம். தொழிலாளர்களுக்கு குவார்ட்டர் தருவது கிட்டத்தட்ட கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே மாநிலம் முழுக்க விவசாய வேலைகளுக்கான கூலித் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, எதைச் செய்தேனும் தொழிலாளர்களைக் கவர்ந்து செல்லவேண்டிய நிலையில் இப்படி குவார்ட்டர் பாட்டில்களை நாடுகின்றனர். அதை வாங்கித் தர, பள்ளியில் படிக்கும் தன் மகனைப் பயன்படுத்துவதில் உள்ள மனத் தடங்கல்களை விவசாயிகள் கடந்துவிட்டனர். 'இல்லன்னா மட்டும் இவனுவளுக்கு குவார்ட்டர்,  ஆஃப்னா என்னன்னு தெரியாதா?’ எனக் கேட்டார் ஒரு விவசாயி. தன்னைச் சுற்றிலும் மதுக்கடைகள், தன் தாத்தா வயது உள்ளவர்களும், தன் அப்பா வயது உள்ளோரும் தன் அண்ணன் வயதுகொண்டோரும் குடிக்கிறார்கள்; தன் கைகளாலே மதுப்பாட்டில்களை எடுத்துத் தொழிலாளர்களுக்குத் தருகிறான்; குறைந்தபட்சம் நான்கு மது பிராண்டுகளின் பெயர் அவனுக்குத் தெரியும். இத்தகைய பின்னணிகொண்ட ஒரு பையன், குடி 'தவறானது’ என எப்படி எண்ணுவான்? அப்படி அவன் நினைத்து ஒதுங்கியிருக்க வேண்டும் எனச் சொல்வது பேராசை. தவறுகளை ஒருமுறை செய்துபார்க்கத் தூண்டும் அந்த இளம் வயதில், தவறு இழைப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் உருவாக்கித் தந்துவிட்டு, பிறகு அவர்களை மட்டுமே காரணமாக முன்னிருத்த முடியாது!  

- போதை தெளிவோம்...

ரஷ்யா பறந்தார் கார்த்திகா

தேனி அருகே கோடங்கிப்பட்டியில் உள்ள 'மனிதநேய ஆதரவற்றோர் காப்பகத்தில்’ தங்கிப் படித்துவரும் நான்கு மாணவிகள் குறித்த கட்டுரை கடந்த இதழில் வெளியாகியிருந்தது. குடியினால் குடும்பத்தை இழந்தவர்களின் பரிதாபக் கதைகள் அவை.  

குடி குடியைக் கெடுக்கும் - 10

கார்த்திகா, மருத்துவம் படிப்பதற்காக ரஷ்யா செல்ல விரும்புகிறார் என்றும், அதற்கு 5 லட்ச ரூபாய் தேவை என்றும் எழுதியிருந்தோம். நல்லவர்கள் சிலரின் தொடர் முயற்சிகளின் மூலமாக கார்த்திகா ரஷ்யாவுக்கு விமானம் ஏறிவிட்டார். ''இப்போதைக்கு விசா, விமானக் கட்டணம் மட்டும் கட்டி அனுப்பிவிட்டோம். இன்னும் 4.5 லட்சம் கட்ட கொஞ்சம் தவணை வாங்கியிருக்கிறோம்'' என்கிறார் காப்பகத்தின் நிர்வாகி பால்பாண்டி.

** கடந்த இதழில் கட்டுரைக்கான புகைப்படத்தில் கார்த்திகா, சுதா இருவரின் பெயர்களும் இடம்மாறி வெளியாகிவிட்டன. இவர்தான் கார்த்திகா.