Published:Updated:

சொல்வனம்

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

சீதையோடு ஒரு செல்ஃபி 

தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாள் சீதை.

இரண்டாவது டிக் வராத வாட்ஸ்அப் செய்திகளால்

நிரம்பியிருந்தது ராமனின் தொடுதிரை.

பாதுகைகளை சுவரெங்கும் ஒட்டியிருந்தான் பரதன்.

வாலிக்கு இரங்கல் எழுதிக்கொண்டிருந்தான் சுக்ரீவன்.

ராவணன் பறித்துக்கொண்ட செல்பேசியில் இருந்தது

சீதைக்கு நினைவில் நில்லாத ராமனின் எண்.

விபீஷணன் தனிச்செய்தி அனுப்பியிருந்தான் ராமனுக்கு.

அறுந்த மூக்குடன் டேக் செய்திருந்தாள் சூர்ப்பணகை.

'ஆறு மாதங்களுக்கு டீஆக்டிவேட்’ என்றான் கும்பகர்ணன்.

ராமனைப்போல சுய படமிட்ட போலிக்கணக்கில்

சீதைக்கு நட்பு அழைப்பு அனுப்புகிறான் ராவணன்.

'எங்கே உருப்படப்போகிறது?’ என்று கடந்தாள் மண்டோதரி

அனுமனிடம் இருந்து ராமனுக்கு ஆதாரமாக வருகிறது

அசோகவனப் பின்னணியில் சீதையோடு செல்ஃபி ஒன்று!

- ஷான் 

சொல்வனம்

ஒளிரும் துயரம்

தோழியின் கைபேசி எண் என

பள்ளி நாட்குறிப்பேட்டில்

குறித்துவந்த மோனிஷா

உறங்கும் முன்னர்

தனது பொம்மைக் கைபேசியில்

தோழியைத் தொடர்புகொள்கிறாள்.

நாளை வரும்போது

பின்புறம் அழிப்பானுள்ள

பென்சில் எடுத்துவருமாறு

கட்டளையிட்டு பிறகு

சாப்பிட்டுத் தூங்குமாறு பணித்து

அணைத்துவைக்கிறாள்.

சதாசர்வகாலமும்

வளர்ந்த மனிதர்களின்

ஒப்பனை அன்பைக் கடத்தியபடி

தொலைவில் விண்முட்டி நிற்கும்

செல்பேசி கோபுரம்

பிஞ்சு விரல்கள் வழி கசிந்த

எளிய ஸ்நேகம் ஒன்றைக்

கடத்திடும் தொழில்நுட்ப

ரகசியம் தெரியாமல் திகைக்கிறது.

அதன் உச்சியில் சிவப்பென

ஒளிர்கிறது

இத்துயரத்தின் சிறு அடையாளம்.

- கே.ஸ்டாலின் 

வடை மழை

வயற்காட்டிலிருந்து திரும்பும்போது

கணக்கு வைத்திருக்கும் மளிகைக் கடையில்

தேன் மிட்டாயோ வரிக்கியோ

மறக்காமல் வாங்கி வருவார் அப்பா.

வானம் இருட்டிக்கொண்டு

மழை வரும் அறிகுறி தெரிந்தால்

உளுந்தை ஊறவைத்துவிடுவாள் அம்மா.

மழை வரும் நாளில் கண்டிப்பாக

வடை சுடுவாள் என்று

தூறலோடு ஓடிவருவார் அப்பா.

அன்றைக்கு மட்டும் வெறுங்கையோடு

'என்ன வாங்கி வந்தேப்பா?’ என்று

ஓடிவரும் பிரியாக்குட்டியிடம்

அம்மா சொல்வாள்

'இன்னைக்கு உங்கப்பா

உனக்கு மழை வாங்கி வந்திருக்கார்’ என.

அதையும் நம்பிவிடுவாள்

மின்னல் கண்ணைப் பறிக்கும் என்ற பயமின்றி

ஜன்னல் வழியே கைநீட்டி

மழை வாங்கிக்கொள்ளும் பிரியாக்குட்டி.

- சேயோன் யாழ்வேந்தன் 

சொல்வனம்

போரடிக்கிறது

எங்கோ ஒரு வனத்தில் அடர்மழை பெய்கிறது

தூங்கும் குழந்தையின் பலூன் ஒன்று வெடிக்கிறது

சக்கரங்கள் கிரீச்சிட விபத்தொன்று நிகழ்கிறது

நடுக்கமின்றி மூளைக்கட்டியை வெட்டுகிறார் மருத்துவர்

மலர்ந்து சிரிக்கிறது பார்வையற்ற மழலை

இருநூறு கோடிகளை இழக்கிறான் பங்கு வர்த்தகன்

கடலை நோக்கிப் பாய்கிறது பயணிகள் விமானம்

சிவப்பு உடை அணிந்தவன் கழுத்தறுபட்டுச் சாகிறான்

இழுத்து மூடப்படுகிறது ஒரு கோயிலின் பெருங்கதவு

மூச்சடக்கிப் படுத்திருக்கிறான் எல்லைக் காவலன்

போரடிக்கிறது என்றபடி புரண்டு படுக்கிறேன் நான்.

- ஷான்