Published:Updated:

ஐஸ் க்ரீம் வழியொரு பயணம்

கவிதை: கவின்மலர், ஓவியம்: செந்தில்

ணவுவிடுதியின் அந்த ஊழியன் 

சுறுசுறுப்பாக மேஜைகளுக்கிடையே

வாடிக்கையாளர்களைக் கவனிக்கிறான்.

'ரண்டு தோசா

நாலூ சப்பாத்தி

ஒரு போங்கல்’ என

தன் சொந்தத் தமிழில்

ஆர்டர் சொல்கிறான்

வெள்ளை முகத்தில்

முன்வந்து விழும் கோரை முடியை

ஒற்றைக் கையால் பின்தள்ளியவாறே

என் மேஜைக்கு

ஏறத்தாழ துள்ளிக்குதித்து வருகிறான்.

'எந்த ஊர்?’ என்கிறேன்.

மொழி புரியாமல் விழிக்கிறான்.

ஐஸ் க்ரீம் வழியொரு பயணம்

'சரி விடு...

ஒரு வெனிலா ஐஸ்க்ரீம்’ என்கிறேன்.

விரைந்து செல்லுமவன்

நவீன பத்தாயமாய் நிற்கும்

ஐஸ்க்ரீம் பெட்டியைத் திறக்கிறான்.

கையை உள்நுழைக்கையில்

வெளியேறும் பனிப்புகையில் நனைந்தவாறே

சில நொடிகள் நிற்கிறான்

சுற்றம் மறந்து அத்தருணத்தில்

முகம் மலர்ந்து

ஒளிர்ந்த அவன் கண்களில்

கண்டுகொண்டேன்

ஒரு பனிமலையையும்

அதன் அடிவாரத்திலிருக்கும்

அவன் வீட்டையும்.

ஒரு கப் வெனிலா ஐஸ்க்ரீமுடன் திரும்பும்

அவன் நடை இப்போது சோர்ந்திருக்கிறது

என்றாலும்,

விழிகள் மிளிர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒரு ஐஸ்க்ரீம் போதுமானதுதான்

எனினும்

மேலுமொன்று எடுத்துவரச் சொல்கிறேன்!