Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 11

#BanTasmacபாரதி தம்பி, படங்கள்: ப.சரவணகுமார்

குடி குடியைக் கெடுக்கும் - 11

#BanTasmacபாரதி தம்பி, படங்கள்: ப.சரவணகுமார்

Published:Updated:

டாஸ்மாக் என்பது, சமூகத்தின் வேறு எந்தப் பிரிவினரையும்விட தலித் மக்களுக்கே பெரும் கேடாக இருக்கிறது. நிலம், தலித்களுக்குச் சொந்தம் இல்லாத நிலையில், அன்றாடம் உழைத்துப் பிழைக்கவேண்டிய வறிய நிலையில் இருக்கின்றனர். அப்படி ஒவ்வொரு நாளும் உடல்நோக உழைத்து, கொண்டுவரும் பணத்தை டாஸ்மாக் கடை வழிப்பறி செய்துகொள்கிறது. மற்ற சாதியைச் சேர்ந்த குடிகாரர்களுக்கும் இது பொருந்தும் என்றாலும், தலித் மக்களை இது இன்னும் கூடுதலாகச் சுரண்டுகிறது. 

இதை இப்படிச் சிந்தித்துப்பாருங்கள்... பல்லாயிரம் ஆண்டுகளாக கல்வியில் இருந்து விலக்கிவைக்கப் பட்டிருந்தவர்கள் தலித் மக்கள். மேல் சாதிக்காரர்கள் மந்திரங்களை, கல்வியைக் கற்கும்போது, அதை ஒரு கீழ் சாதிக்காரர் கேட்டுவிட்டால், அவர் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது போன்ற கற்பிதங்கள் இந்தச் சமூகத்தில் இருந்திருக்கின்றன. பல நூற்றாண்டு காலச் சமூக, அரசியல் போராட்டங்களைக் கடந்து, கடந்த இரண்டு தலைமுறைகளாகத்தான் தலித்கள் பள்ளி, கல்லூரிகளில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளனர். அதுவும் அத்தனை எளிதாக நடந்துவிடவில்லை. ஒரு தலித் இளைஞன், சாதி ஆதிக்கம், அடக்குமுறை, அவமானம், புறக்கணிப்புகள் என அனைத்தையும் கடந்து, தட்டுத்தடுமாறி ஒவ்வொரு படியாக ஏறி, ஒரு நல்ல நிலையை எட்டுவது இப்போதும் பெரும்பாடுதான். பல்வேறு அரசு மற்றும் தனியார் பணிகளில் இருக்கும் தலித்கள் இத்தகைய படிநிலையைக் கடந்தே வந்துசேர்கின்றனர். படிப்பதும் பணிக்குச் செல்வதும் மற்றவர்களுக்குச் சாதாரணமானதாக, வாழ்வின் அங்கமாக இருக்கலாம். ஆனால், தலித்களைப் பொறுத்தவரை இது மிக, மிக அசாதாரணமானது. படிப்பை ஊக்குவிக்கும் ஒரு சதவிகிதக் காரணிகூட அவர்களைச் சுற்றி இல்லை. மகன் அடுத்த ஆண்டு ப்ளஸ் டூ செல்கிறான் என்றால், இந்த வருஷமே கேபிள் கனெக்ஷனை நிறுத்திவிட்டு மொத்தக் குடும்பமும் பிள்ளையின் படிப்புக்காகத் தியானம் செய்யும் சூழல் தலித்களுக்கு இல்லை. அவர்கள் நெருப்பாற்றை நீந்தித்தான் ஒவ்வொரு படியையும் கடக்கவேண்டியிருக்கிறது.

குடி குடியைக் கெடுக்கும் - 11

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படிப்பட்ட பின்னணியில் கல்லூரிப் படிப்பை முடிக்கும் ஒரு தலித் இளைஞன், குடிகாரனாக மாறி வாழ்வைச் சீரழித்துக் கொண்டால், அதை தனிமனித இழப்பாக வரையறுக்க முடியாது. அது, அந்தக் குடும்பத்தை மறுபடியும் இருண்ட காலத்துக்கு இட்டுச்செல்கிறது. 'எப்படியும் தன் குடும்பம் தலையெடுத்துவிடும்’ என எண்ணிக்கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்தின் நம்பிக்கை ஒளி மங்கி அணைகிறது. ஓர் ஊரில் 20 இளைஞர்கள் இப்படி குடியில் வீழ்ந்தால், அந்தக் கிராமத்தின் வளர்ச்சி பல தலைமுறைகள் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது. இப்படி, மாநிலம் முழுக்க உள்ள தலித் மக்களின் வாழ்க்கைச்சூழலை, மது என்னும் நஞ்சு ஒட்ட உறிஞ்சுகிறது. ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்க்கும்போதுதான் இதன் பேரபாயம் நமக்குப் புரியும்.

இப்படிச் சொல்வதன் அர்த்தம், தலித்கள் மட்டும்தான் குடிக்கிறார்கள் என்பதோ... அவர்கள்தான்

குடி குடியைக் கெடுக்கும் - 11

அதிகம் குடிக்கிறார்கள் என்பதோ அல்ல. மேலும், 'பொதுவெளியில் மீண்டும் மீண்டும் தலித்களை நோக்கி இழிவான சித்திரமே முன்வைக்கப்படுகிறது. 'தலித்கள் குடிக்கு அடிமையாகிறார்கள்’ என்பதும் அத்தகைய வாதங்களில் ஒன்றுதான்’ என இதை எதிர்நிலையில் இருந்து பார்க்கவேண்டியதும் இல்லை. குடி என்னும் பெருங்கேடு, தலித்களின் முன்னேற்றத்தைப் பின்னுக்கு இழுக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொள்ளத் தயாராக வேண்டும். அப்படி ஒப்புக்கொள்வதன் வழியேதான் இதற்கானத் தீர்வை நோக்கி நகர முடியும். 'இப்படிச் சொல்வது பொய்’ என்பதாலோ, 'இது மிகைப்படுத்தல்’ என ஒதுக்குவதாலோ சிக்கல் தீரப்போவது இல்லை.

90-களில் இந்தியா முழுவதும் அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் அரசியல், இலக்கியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தலித்களின் எழுச்சி நிகழ்ந்தது. தமிழ்நாட்டிலும் இது எதிரொலித்தது. ஆனால், 2003-ம் ஆண்டில் டாஸ்மாக் சாராயத்தின் வருகைக்குப் பிறகு தலித்களின் வாழ்க்கைச் சூழல் முற்றிலுமாகச் சூறையாடப்பட்டிருக்கிறது. இந்தக் குறிப்பான கோணத்தில் டாஸ்மாக் ஏற்படுத்தியுள்ள விளைவை யாரேனும் சமூகப் பகுப்பாய்வு செய்தால் நிச்சயம் அதிர்ச்சியான உண்மைகள் கிடைக்கும்.

90-களில் அம்பேத்கர் நூற்றாண்டு மட்டும் கொண்டாடப்படவில்லை. அதுதான் இந்தியாவில் தனியார்மய, தாராளமய கொள்கைகள் முழுவேகத்தில் அமல்படுத்தப்பட்ட காலம். அதையொட்டி, நகரங்களை மையப்படுத்தி ஏராளமான புதிய தொழிற்சாலைகள் முளைத்தன. புதிய தொழில்வாய்ப்புகள் வந்தன. நகர எல்லைகள் விரிவடைந்தன. கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி பல லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அப்படி நகரம் நோக்கி நகர்ந்ததில் பெரும்பான்மையினர் தலித்களே. இப்போது விவசாயக் கிராமங்களில் ஏற்பட்டுள்ள கூலி ஆள் பற்றாக்குறையின் நதிமூலம் இந்த இடப்பெயர்வுதான். பெரும்பான்மை விவசாயக் கூலிகளாக தலித்களே இருந்தனர். அவர்கள் இடம்பெயர்ந்துவிட்டதால்தான் இப்போது பற்றாக்குறை.

இவ்வாறு நகரங்களுக்கு இடம்பெயர்ந்த தலித்கள், பல தலைமுறைகளாக பண்ணை அடிமையாக இருந்த நிலையில் இருந்து... முறைப்படுத்தப்பட்ட ஒரு தொழிற்சாலை வேலைக்கு வந்தார்கள். சாதி இழிவை நினைவூட்டாத, மனித மாண்புகளை மதிக்கிற இந்தத் தொழிற்சாலை வேலைகளை இறுகப் பற்றிக்கொண்டார்கள். உழைப்பு, கடின உழைப்பு, மிக மிகக் கடின உழைப்பு என உழைக்கும் இயந்திரங்களாக மாறினார்கள். இப்போது இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் நகரங்களில் பிறந்து வளர்ந்துவிட்டனர். ஆனால், எந்தக் கயிற்றைப் பற்றிக்கொண்டு மேலே ஏறினார்களோ, அதே தனியார்மய தாராளமய கயிறு, பாம்பாக மாறி இவர்களின் கழுத்தை இறுக்கத் தொடங்கிவிட்டது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு உருவான வேலைப்பறிப்பு, அதிக வேலை நேரம், ஊதிய உயர்வு இல்லை என்ற சூழல் இப்போது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு பக்கம் நுகர்வு மோகத்தைத் தூண்டும் சுற்றுப்புறம்; மறுபக்கம் வாய்க்கும் வயிற்றுக்கும் போதாத ஊதியம், நிச்சயமற்ற எதிர்காலம்... என, தொழிலாளர்கள் திக்கற்று நிற்கும்போதுதான் அரசாங்கம் 'பாட்டிலைத் திற... கஷ்டத்தை மற’ என டாஸ்மாக்கைக் கொண்டுவருகிறது. தனிப்பட்ட கஷ்டம், குடும்பக் கஷ்டம், அலுவலகக் கஷ்டம் என அனைத்துத் துன்பங்களுக்கும் ஒரே வடிகால் 'சாராயம்’ என ஆனது. தொழிலாளர்கள், உழைக்கும் பணத்தை எல்லாம் அங்கு கொண்டுபோய்க் கொட்டுகின்றனர். இப்படி 90-களுக்குப் பிறகு நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வந்த இரண்டாம் தலைமுறை தலித் குடும்பங்களின் வாழ்வையும் டாஸ்மாக் சூறையாடிக்கொண்டிருக்கிறது.

குடி குடியைக் கெடுக்கும் - 11

உழைக்கும் மக்களின் வாழ்வு டாஸ்மாக்கால் சீரழிக்கப்படும் நிலையில், 'குடி என்பது தனிமனித உரிமை’ எனப் பேசுவது சரியா? ஒரு சிக்கலை பொதுவாக அணுகுவது, குறிப்பாக அணுகுவது என இரண்டு அணுகுமுறைகள் இருக்கின்றன. 'மதுவிலக்கு’ எனப் பொத்தாம் பொதுவாகப் பேசுவதும், 'அது சாத்தியமற்றது’ என மறுப்பதும் பொதுவான அணுகுமுறை. ஆனால், இதை நாம் குறிப்பாகப் பேசுவோம். டாஸ்மாக் வந்த பின்புதான் தமிழ்நாட்டில் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; டாஸ்மாக் வந்தபின்புதான் தமிழ்நாட்டில் குடிப்பவர்களின் சராசரி வயது குறைந்துள்ளது; டாஸ்மாக்தான் சரக்கின் அளவை அதிகரித்துள்ளது; டாஸ்மாக் வந்த பின்புதான் குடி, சமூகத்தின் அன்றாட இயல்புபோல மாற்றப்பட்டிருக்கிறது. இவற்றை எவரேனும் மறுக்க முடியுமா? இந்த அம்சங்கள் கேடானவை எனக் கருதினால் அதற்கு 'டாஸ்மாக்கை மூடு’ என்பதுதான் போராட்ட முழக்கமாக இருக்க முடியும். 'அதற்கு மதுவிலக்குத் தேவையா?’ என்றால், அதை விவாதத்துக்கு உட்படுத்தலாம். மாறாக, மிக மிக மோசமாக குடியினால் தமிழ்ச் சமூகம் வீழ்ந்து கிடக்கும் நிலையில் 'குடி தனிமனித உரிமை’ எனப் பேசுவது குயுக்தியானது.

இன்னொரு பக்கம் குடியை 'தனி மனித உரிமை’ என வரையறுக்க முடியுமா? நீங்கள் ஓர் அலுவலகத்தில் பணிபுரிகிறீர்கள். முறையான ஊதியம், முறையான வேலை நேரம், முறையான விடுப்புகள் இருக்க வேண்டும். இந்த அடிப்படை பணி உரிமைகளை நீங்கள் பெறும்போதுதான், 'அலுவலகத்துக்கு கட்டம் போட்ட சட்டை அணிந்து வரக் கூடாது எனச் சொல்வது என் தனிமனித உரிமையில் தலையிடும் செயல்’ எனச் சொல்ல முடியும். மாறாக, உங்களுக்குச் சென்ற மாத சம்பளமே இன்னும் வரவில்லை; வேலை நேரம் 10 மணி நேரத்தையும் தாண்டுகிறது; ஓவர்டைமுக்கு உரிய ஊதியமும் கிடையாது... என்ற நிலை இருக்கும்போது, நீங்கள் கட்டம் போட்ட சட்டைக்காகப் போராடுவதை தனிமனித உரிமை என வரையறுக்க முடியுமா? நிர்வாக உரிமைகளை அனுபவிக்கும்போதுதான் தனிமனித உரிமைகளைக் கேட்டுப் பெறுவதற்கான மன உந்துதலே வரும். மாறாக, நிர்வாகத்தின் அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் மௌனமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவர் 'கட்டம் போட்ட சட்டை என் உரிமை’ எனக் கேட்பது நகைப்புக்கு உரியது. மேலும், அப்படிக் கேட்பதற்கான சிந்தனைகூட அவருக்குத் துளிர்விடாது. நிர்வாக உரிமைகளைப் பெறுவது என்பது, தனிமனித உரிமைகளை அனுபவிப்பதற்கான முன்நிபந்தனை.

குடி குடியைக் கெடுக்கும் - 11

இதை அப்படியே நாட்டுக்கும் பொருத்துவோம். ஒரு குடிமகனாக நமக்கு பல்வேறு அரசியல் உரிமைகள் இருக்கின்றன. பேச்சுரிமை, எழுத்துரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட இந்த உரிமைகள் நமக்கு முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா? உங்கள் வார்டு கவுன்சிலர் செய்துள்ள ஆக்கிரமிப்பைக் கண்டித்து 10 பேரை ஒன்றுசேர்த்து ஒரு தெருமுனைக் கூட்டம் நடத்தினால் 'அது உங்கள் பேச்சுரிமை’ என்பதை அங்கீகரித்து கவுன்சிலர் கடந்துசெல்வாரா? 'இந்திய அரசியல் சாசனம், சுரண்டலை எதிர்க்கும் உரிமையை எனக்கு வழங்கியிருக்கிறது. எனவே, நான் டொனேஷன் தர மாட்டேன்’ எனச் சொல்லி உங்கள் பிள்ளைக்கு எல்.கே.ஜி அட்மிஷன் வாங்கிவிட முடியுமா? நிச்சயம் முடியாது. அரசியல்வாதிகள் நமக்கு மனம் மகிழ்ந்து அளிக்கும் ஒரே உரிமை வாக்குரிமை மட்டும்தான். மற்ற உரிமைகள் நடைமுறையில் வெறுமனே ஜிகினாத்தனமாக, பொருள் அற்றதாக இருக்கின்றன. இதைப் பெறுவதற்கு உத்வேகம் கொள்ளாமல் 'குடி என்னும் தனிமனித உரிமையைத் துய்ப்பது எனது உரிமை’ எனப் பேசுவது சரியானதா? மறுக்கப்படும் அரசியல் உரிமைகளைக் கேட்டு போராடாமல் இருக்க... தனிமனித உரிமைகளின் பக்கம் நம்மைத் தள்ளிவிடுவதுகூட தந்திரமான அரசியல்தான்!

மேலும் குடி மட்டும்தான் தனிமனித உரிமையா? விரும்பிய பெண்ணை அல்லது விரும்பிய ஆணைக் காதலிப்பதும், திருமணம் செய்துகொள்வதும்கூட தனிமனித உரிமைதான். இந்தியப் பெற்றோர்கள் இதை அனுமதிக் கிறார்களா? சாதி மாறி காதலித்தால் கழுத்தை அறுத்து ரயில் தண்டவாளத்தில் வீசுவது மட்டும் அல்ல, பெற்ற பெண்ணை விஷம் கொடுத்து கொலையும் செய்கிறார்கள்; கர்ப்பிணிப் பெண்ணைக் கருவறுக்கிறார்கள்.

குடி குடியைக் கெடுக்கும் - 11

'வழிபாட்டு உரிமை’யை அடிப்படை உரிமை எனச் சொல்கிறது இந்திய அரசியல் சாசனம். விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரத்தில், தலித் மக்கள் ஊர் கூடி தேர் இழுக்க முயன்றது தனிமனித வழிபாட்டு உரிமைதான். வழங்கப்பட்டதா? தேர் எரிந்து, ஊர் எரிந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களைத்தானே பந்தாடுகின்றனர்? 'நாங்கள் படிக்க இடையூறாக இருக்கிறது. மதுக்கடை வேண்டாம்’ என மாணவிகள் போராடுகிறார்கள். அப்படிப் போராடும் உரிமை சட்டப் படியானது. ஆனால் போலீஸ், மாணவிகளை அடித்து நொறுக்கி பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைக்கிறது. விரும்பிய துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, விரும்பிய கடவுளை வழிபடும் உரிமை, தவறுகளைக் கண்டித்துப் போராடும் உரிமை போன்ற முக்கியமான அரசியல் உரிமைகள் நமக்கு ஒவ்வொரு நாளும் மறுக்கப்படுகின்றன. இந்த முதன்மை உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டுகொள்ளாமல், குடி என்னும் தனிமனித உரிமைக்காகக் குரல்கொடுப்பது சரி அல்ல. இதில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது, எங்கே அரசியல் உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்படுகின்றனவோ அங்கேதான் தனிமனித உரிமைகளும் நிலைநாட்டப்படும்.

அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவதை ஏற்றுக்கொண்டே, தனிமனித உரிமை பேசுவது பயனற்றது; சாத்தியமற்றது மற்றும் தந்திரமானது!

- போதை தெளிவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism