Published:Updated:

சொல்வனம்

ஓவியம்: எஸ்.சிவபாலன்

சொல்வனம்

ஓவியம்: எஸ்.சிவபாலன்

Published:Updated:

துயில் எழுப்புதல் 

'பேரன் பேத்தி எடுத்தாச்சு

இனியென்ன?

ராமாத்தாளுக்கு நல்ல சாவுதான்’

உரையாடியபடி

ஒப்பாரி முடித்துக் கலைகிறது

கூட்டத்தின் ஒரு பகுதி.

நேற்றிரவு வரை

கன்னங்கள் தடவி

கதைகள் பல சொல்லி

நெற்றி முறித்து

திருஷ்டி கழித்த அப்பத்தா

நீண்டு கிடக்கிறாள்

மீண்டு வராத் துயிலில்.

விளையாட்டாய் ஒருநாள்

'நாஞ்செத்தா நெய்தீபம்

புடிப்பியாடா?’ என்றவளிடம்

'நீயெப்ப சாவ?’

என்று கேட்டவன்தான்

அழுகிறான் தலைமாட்டில்

அவளை எழச்சொல்லி!

சொல்வனம்

-மகிவனி

குளம் என்பது...

தவளைகள், மீன்கள்,

தண்ணீர்ப் பாம்புகள்

இன்னும் பிற

நீர்வாழ் உயிரினங்கள் ஜீவித்திருக்கும் குளத்தில்

பாசிகளும் நீர்த் தாவரங்களும்

படர்ந்திருக்கின்றன.

எதை வீசி எறிந்தாலும்

உள்ளிழுத்து

நேர்த்தியாக நீர்வளையங்களைக்

காட்சிப்படுத்தும் குளம்

நெகிழிகளை மட்டும்

வெளியே தள்ளி மிதக்கவிடுகிறது

தான் 'குளம்’ என்று சொல்லி!

-தென்பாண்டியன்

ஆரத் தழுவிய தோல்விகள்

யுத்தம் தொடங்குகிறது

அவர் மிகுந்த கவனத்தோடும்

நீங்கள் சிரித்துக்கொண்டும்

காய்களை நகர்த்துகிறீர்கள்.

உங்கள் மந்திரி வீர மரணம் அடைகிறார்

இடையில் குதிரை கொல்லப்படுகிறது

யானை வதமும் நடக்கிறது

இதோ இறுதியில்

வெள்ளை ராஜாவையே சிறைபிடித்துவிட்டார்

நீங்கள் தோற்கிறீர்கள்.

'அப்பா தோத்துட்டார்... நீ ஆடுமா’ என

அவர் உங்கள் மனைவியை

சண்டைக்கு அழைக்க...

படை திரட்டி தயார் ஆகிறார்

இம்முறையும் தோற்க

விழுந்து கிடக்கும் வெள்ளை ராஜா.

- ராம் வசந்த்

பூம்பாவாய்

பூம்பூம் மாடு வாசலில் நிற்கிறது.

அதன் அலங்கார உடை கண்டு

அறியாதார் அதிசயிப்பர்.

கொம்புகளின் கூர்மை

குத்திக் கிழிக்குமோ என்று

குழந்தைகள் அஞ்சும்.

பூம்பூம் மாட்டுக்காரன் வந்துவிட்டால்

செய்கிற வேலையை விட்டுவிட்டு

ஓடிவந்து பத்து ரூபாய் கொடுப்பாள்.

நான் அந்த மாட்டுக்கு

இரு வாழைப்பழங்கள் கொடுப்பேன்

அவளிடம் கேட்டுக்கொண்டு!

- சேயோன் யாழ்வேந்தன்