Published:Updated:

மண் மூட்டைகளும் தங்கத் துகள்களும்!

நேபாள நாடோடிக் கதை கதை: ஸ்ரீபாலா ஓவியம்: மணிவண்ணன்

மண் மூட்டைகளும் தங்கத் துகள்களும்!

நேபாள நாடோடிக் கதை கதை: ஸ்ரீபாலா ஓவியம்: மணிவண்ணன்

Published:Updated:

‘இறைவனின் தேசம்’ என்று புகழப்படும்  நேபாளத்தில், மக்கள் இடையே நிறைய வகுப்புகளும், சாதிகளும் உண்டு. அதில் ஒன்றுதான் நெவார் வகுப்பினர். கடுமையான உழைப்பாளிகள். மர வேலைப்பாட்டுக்குப் பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கென்றே தனியாக நாள்காட்டி உண்டு.  அது பற்றி சுவாரஸ்யமான கதையும் உண்டு.

அந்தக் காலத்தில், நேபாள நாடு பல்வேறு அரசர்களால் ஆளப்படும் சின்னச்சின்ன சமஸ்தானங்களாக இருந்தன. அவற்றில் ஒன்று, பக்தபூர். காத்மண்டுவில் இருந்து சற்று அருகில் இருக்கும் பக்தபூர் அரசருக்கு, முனிவர் மூலம் ஓர் அதிசய ரகசியம் தெரியவந்தது.

மண் மூட்டைகளும் தங்கத் துகள்களும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காந்திபூர் பகுதியில் ‘லாக்’ எனும் புனிதக் குளம் உள்ளது. அந்தக் குளத்தில் இருந்து, குறிப்பிட்ட தினத்தில் குறிப்பிட்ட நேரத்தில் சேகரிக்கப்படும் மண், அடுத்த நாள் பொன்னாக மாறிவிடும் என்பதே அந்த ரகசியம்.

இதை அறிந்துகொண்ட அரசர், அந்தக் குறிப்பிட்ட நாளில் சில சேவகர்களை அழைத்தார். ‘‘அந்த லாக் ஏரிக்குச் செல்லுங்கள். நான் குறிப்பிடும் நேரத்தில் அங்கே இருந்து மண்ணைத் தோண்டி எடுத்து வாருங்கள்’’ என்று கட்டளையிட்டார்.

ஏன், எதற்கு என சேவகர்கள் கேட்கவில்லை. கேட்கத்தான் முடியுமா? அரசர் கட்டளையை நிறைவேற்றுவதுதானே சேவகர்கள் கடமை. உடனே கிளம்பினார்கள். தாம் சேகரித்த மண் மூட்டைகளுடன் அரண்மனைக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். வழியில், நெவார் வகுப்பைச் சேர்ந்த சக்வால் என்பவர் குடியிருந்தார்.

“என்ன எடுத்துச் செல்கிறீர்கள்?” என்று எதேச்சையாகக் கேட்டார்.

“லாக் குளத்து மண்ணை மன்னர் சேகரித்து வரச் சொன்னார்” என்றான் ஒரு சேவகன்.

புத்திக்கூர்மையான சக்வாலுக்கு சந்தேகம் உண்டானது. இதில் ஏதோ விஷயம் இருக்க வேண்டும் என நினைத்தார்.

‘‘உங்களைப் பார்த்தால் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். அரசரின் சேவகர்களான உங்களுக்கு  உணவு

மண் மூட்டைகளும் தங்கத் துகள்களும்!

கொடுப்பது என் பாக்கியம். எல்லோரும் சாப்பிட்டுவிட்டுச் செல்ல வேண்டும்’’ என்றார்.

சேவகர்கள் வயிறாரச் சாப்பிட்ட பிறகு, ‘‘சேவகர்களே, எனக்கு ஓர் ஆசை. நீங்கள் கொண்டுவந்த மண் மூட்டைகளை எனக்குக்  கொடுக்கிறீர்களா? அரண்மனைச் சேவகர்களுக்கு விருந்து கொடுத்ததன் நினைவாக, இதை வைத்துக்கொள்வேன். பின்னாளில், என் மகனிடமும் பேரன்களிடமும் காட்டி மகிழ்வேன்’’ என்றார்.

உணவு அளித்த ஒருவர், ஒரு வேண்டுகோள் வைக்கும்போது தட்ட முடியுமா? இது மண்தானே. மறுபடியும் லாக் குளத்துக்குச் சென்று எடுத்துக்கொண்டால் போயிற்று என நினைத்த சேவகர்கள், ஒப்புக்கொண்டனர். மீண்டும் லாக் குளத்துக்குச் சென்று மண்ணைச் சேகரித்துக் கொண்டு அரண்மனை திரும்பினார்கள்.

சேவகர்கள் வைத்துவிட்டுச் சென்ற மண் மூட்டைகளை அடுத்த நாள் பிரித்தார் சக்வால். அவை, தகதகவென ஒளிர்ந்தன. எல்லாமே தங்கத் துகள்கள். ஆனந்த அதிர்ச்சி சக்வாலுக்கு. மகிழ்ச்சியில் ‘ம பூஜா’ செய்துகொண்டார். நேபாள மொழியில் ‘ம’ என்றால், ‘நான்’ என்று பொருள். இந்தச் சுய வழிபாட்டை ‘ம பூஜா’ என்று குறிப்பிடுவர்.

அதே நேரம், அரண்மனையில் அரசர் ஆவலோடு மண் மூட்டைகளைப் பிரித்தார். அவை, மண்ணாகவே இருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.  சேவகர்களை அழைத்தார்.

‘‘உண்மையைச் சொல்லுங்கள். நான் சொன்ன நேரத்தில் மண்ணை எடுத்தீர்களா? ஆம் என்றால், அது எங்கே? இல்லை என்றால், அரசரின் கட்டளையைச் சரியாகச் செய்யாத உங்களுக்கு மரண தண்டனைதான்” என்றார் சீற்றமாக.

சேவகர்கள் பயந்துவிட்டனர். நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். இதைக் கேட்ட அரசர், என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தார்.

‘சக்வாலைப் பகிரங்கமாக அழைத்து விசாரித்தால், அந்த ரகசியம் எல்லோருக்கும் தெரிந்துவிடும். ரகசியமாக அழைத்து தண்டித்தால், அவனது குடும்பமும் உறவுகளும் மக்களிடம் சொல்வார்கள். தனக்கு கெட்ட பெயர் உண்டாகும். என்ன செய்வது?’ எனத் தடுமாறினார்.

அப்போது, சக்வால் வந்திருப்பதாக ஒரு சேவகன் வந்து சொன்னான். உடனே அவரை சந்திக்கச் சென்றார் மன்னர்.

‘‘அரசே வணக்கம். இந்த நேரம் இங்கே என்ன நடந்திருக்கும் என என்னால் யூகிக்க முடிகிறது. எதற்காக மண்ணைக் கொண்டுவரச் சொன்னீர்கள் என்பதை அறியும் ஆவலில்தான் இப்படிச் செய்தேன். வேறு எந்த நோக்கமும் இல்லை. இந்த சமஸ்தானம் நிறையக் கடனில் இருப்பதும் தெரியும். அரசரின் பிரச்னையைத் தீர்ப்பது குடிமகனின் கடமை. தங்கத் துகள் மூட்டைகளைக் கொடுத்துவிடுகிறேன். ஆனால், ஒரு வேண்டுகோள். எங்களின் நெவாரி வகுப்பினருக்காக ஒரு நாள்காட்டியைத் தொடங்க  ஒப்புக்கொள்ள வேண்டும்’’ என்றார் சக்வால்.

கடன் சுமையால் கலங்கி நின்றிருந்த அரசருக்கு சக்வாலின் புத்திக்கூர்மையும் நாட்டுப்பற்றும் பிடித்திருந்தது. எனவே, ஒப்புக்கொண்டார். அவரை வணங்கிவிட்டு, தங்கத் துகள் மூட்டைகளைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் கிளம்பினார் சக்வால்.

கி.பி 880-ம் ஆண்டில் நெவாரி நாள்காட்டி பிறந்தது. நெவாரி புத்தாண்டு, தீபாவளிக் கொண்டாட்டத்தின் நான்காவது நாளில் வருகிறது. ‘த்யோஹார்’ என்று நேபாளியரால் வழங்கப்படும் தீபாவளி, ஐந்து நாள் கொண்டாட்டம். இதன் நான்காவது நாளில், நெவார் வகுப்பினரின் ஆண் மக்கள் தம்மைத்தாமே போற்றி வணங்கும் ‘ம பூஜா’வை, இன்றும் பின்பற்றிக் கொண்டாடுகின்றனர்.