Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை - 30

இருளின் ஒலி!கா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்

பிரீமியம் ஸ்டோரி

பெல்காம்  கடந்து சென்று கொண்டு இருந்தோம். சங்கேஸ்வர், நிபானி, காகல் ஆகிய ஊர்களைக் கடந்தால், கோலாப்பூர். பெல்காமில் இருந்து சுமார் 150 கி.மீ தூரம் இருக்கிறது. நிபானி என்ற ஊர்தான் கர்நாடக  - மகாராஷ்ட்ரா மாநிலங்களின் எல்லை.

‘‘கோலாப்பூரில் இருந்து வெங்காயம், சர்க்கரை போன்றவை தமிழகத்துக்கு வருகின்றன. கோலாப்பூர் செருப்புகள் புகழ்பெற்றவை.  அதேபோல், டெக்ஸ்டைல் உற்பத்தியிலும் பெயர் பெற்றது இந்த ஊர். டெக்ஸ்டைலுக்கு மும்பைதான் மார்க்கெட் என்பதால், தமிழகத்துக்கு லோடு கிடைக்காது. வெங்காயம், சர்க்கரை, இண்டஸ்ட்ரி மெஷின்கள் என தமிழகத்துக்கு லோடு கிடைக்கும். எப்படியும் ஒருநாள் அல்லது மூன்று நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்” என்றார் சேதுராமன்.

‘‘கோலாப்பூருக்கு 150 கி.மீ.தானே இருக்கிறது. இன்று இரவு கோலாப்பூர் சென்று விடுவோமா?” என்று கேட்டேன். ‘‘இல்லை. இன்று இரவு ஓய்வெடுத்து விட்டு நாளை காலையில்தான் கோலாப்பூர் செல்வோம். நீங்கள் திரும்ப என்னுடனே வருகிறீர்களா” என்று கேட்டார். ‘‘உடனே லோடு கிடைத்தால் வரலாம். தாமதமானால் என்ன செய்வது?” என்றேன். ‘‘நான் லோடு இறக்கிவிட்டு எப்போது லோடு கிடைக்கும் என்ற தகவலை உறுதி செய்கிறேன். அதற்கேற்றவாறு திட்டமிடலாம்!” என்றார் சேதுராமன்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 30

லேசாக இருட்டத் தொடங்கிய சமயத்தில், சங்கேஸ்வர் என்ற ஊரில் டீ குடிப்பதற்காக லாரியை நிறுத்தினார். அங்கே நின்றிருந்த தமிழக லாரி டிரைவர்களைச் சந்தித்து ஏதேனும் தகவல் இருக்கிறதா எனக் கேட்டுக்கொண்டு வந்தார்.

அடுத்து நிபானி என்ற ஊர் அருகே நெருங்கியபோது, இரவு 8 மணியைத் தாண்டியிருந்தது. சாலையோரம் இருந்த தாபா ஒன்றின் பக்கவாட்டில் லாரியை நிறுத்தினார் சேதுராமன். இரவு உணவு சப்பாத்தி டால் ஃப்ரை சாப்பிட்டுவிட்டு, தூங்குவதற்கு ஆயத்தமானோம். பெர்த்தில் நம்மை உறங்கச் சொன்னவரிடம் மறுத்துவிட்டு, அவரைப் படுக்கச் சொன்னோம். நானும், விஜய்யும் தலையை பெர்த்தில் வைத்துக்கொண்டு, பக்கவாட்டுப் பலகைகளில் கால்களை நீட்டினோம். தூரத்தில் இருந்த நெடுஞ்சாலை விளக்கின் ஒளி, லேசாக கேபின் உள்ளே பரவி, கும்மிருட்டைத் துரத்தியிருந்தது. காற்றைக் கிழித்துக்கொண்டு முன்னேறும் வாகனங்களின் ‘உய்ய்ங்’ ஒலியும், சாலையில் தேயும் டயர்களின் ஒலியும் கேட்டுக்கொண்டே இருக்க... விரைவாகவே உறங்கிப் போனோம்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 30

சேதுராமன் எங்களை எழுப்பிய போது, இருள் விலகவில்லை; மணி 4.30. ‘‘இப்போது கிளம்பினால்தான் அதிகாலையிலேயே கோலாப்பூர் செல்ல முடியும். தயாராகுங்கள்!” என்றார். முகம் கழுவி, டீ குடித்து அடுத்த 15 நிமிடங்களில் தயாராகியிருந்தோம். சில்லென்ற காற்று அறைய, லாரி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. குறைவான நேரம் என்றாலும், எங்களுக்கு ஆழ்ந்த உறக்கம். மணி அடித்ததுபோல சேதுராமன் நாலரைக்கு எழுந்துவிட்டதால், அவர் உண்மையிலேயே உறங்கினாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அதைக் கேட்டவுடன் சிரித்தவர், ‘‘தூங்கினேன். ஆனால், வீட்டில் தூங்குவதுபோலத் தூங்க முடியாது. கோழித் தூக்கம்போல லேசாக கண்ணயர்வதுதான். கால்களை நீட்டி கண்களை மூடிப் படுத்தாலே, உடல் தெம்பாகிவிடும். ஆழ்ந்து தூங்கிவிட்டால், லாரியில் இருக்கும் பொருட்களை எப்படிப் பாதுகாப்பது? நடு இரவில் ஒருமுறை எழுந்து லாரியைச் சுற்றிப் பார்த்தேன். தூங்கினாலும் விழிப்பாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும்!” என்றார்.
காகல் என்ற ஊரை அடைந்தபோது நன்றாக விடிந்திருந்தது. ‘‘இன்னும் 35 கிலோ மீட்டர்கள்தான் கோலாப்பூர்!” என்றார் சேதுராமன். எங்கள் உடைகளை எடுத்து பேக் செய்ய ஆரம்பித்தோம். ‘‘அடுத்த தடவை அஹமதாபாத் போலாம். ட்ரிப் ரொம்ப நல்லா இருக்கும். இன்னும் நெறைய விஷயங்கள் உங்களுக்குக் கிடைக்கும்” என்றவர், ‘‘ஒண்ணும் உங்களுக்கு அசெளகரியம் இல்லையே... எங்க பொழப்புதான் இப்படி இருக்கு... நீங்க கஷ்டப்படணும்னே ஏன் வர்றீங்கன்னு தெரியலை. சரி, நீங்க எழுதறதால ஏதாச்சும் நல்லது நடந்தா, எங்க டிரைவர் சமூகத்துக்கே ரொம்ப நல்லதுதானே!” என்றார் சிரித்துக்கொண்டே.

சாலையின் வலதுபக்கம் இருந்த சிவாஜி யுனிவர்சிட்டி, கோலாப்பூர் வந்துவிட்டதை உணர்த்தியது. நகரத்தை மத்தியில் இணைக்கும் சாலையின் ஓரம் லாரியை நிறுத்தினார் சேதுராமன். ‘‘திரும்புவதற்கு லேட் ஆகும். நீங்கள் பஸ்ஸில் ஊர் திரும்புங்கள்!” என்றவர் ஆட்டோ பிடித்து, கோலாப்பூர் நகர மத்தியில் இருக்கும் விடுதிக்கு எங்களை அழைத்துச் செல்லச் சொன்னார். சேதுராமனிடம் விடை பெற்றோம்.

பாஞ்ச்கங்கா நதிக்கரையில் அமைந்திருக்கும் கோலாப்பூரின் அடையாளங்களில், மகாலட்சுமி கோயிலும் ஸ்ரீ சத்ரபதி சாஹு மியூஸுயமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அரண்மனை, தற்போது மியூஸியமாகச் செயல்படுகிறது. அரண்மனை வளாகத்தில் சிறு மிருகக் காட்சி சாலையும், ஏரியும் அந்தப் பகுதியை அழகாக்குகின்றன. கோலாப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு பஸ்ஸில் முன்பதிவு செய்திருந்தோம். அங்கிருந்து ரயில் மூலம் சென்னை திரும்புவது திட்டம்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 30

சேலத்தில் இருந்து லாரி டிரைவராக இருக்கும் நண்பரிடம் இருந்து போன் வந்தது. "எங்கே இருக்கிறீர்கள்?" என்று விசாரித்தவர், ‘‘கோலாப்பூர் பக்கத்திலதான இருக்கு. ரெண்டு நாள்ல போயிடலாம். கோயம்புத்தூர்ல இருந்து கேரளாவுக்குள்ள போகணும்னா வாளையார் செக்போஸ்ட்ல நாங்க படாத பாடுபட வேண்டியது இருக்கு. கேரளாவுல யாரும் காசு வாங்கமாட்டாங்கதான். ஆனா, செக்போஸ்ட்ல காத்திருக்குறதுக்குக் காசு வாங்கிட்டு அனுப்புற மத்த ஸ்டேட் காரங்க தேவலைன்னு ஆயிடுது. அதைப் பத்தி நீங்க அவசியம் எழுதணும்” என்றவர், "சரி, இந்த தடவை கொஞ்சம் தூரமா போலாமா? காஷ்மீர்ல ஆப்பிள் சீஸன் ஆரம்பமாயிடுச்சு. வர்றீங்களா... ஆப்பிள் லோடு ஏத்திக்கிட்டு வருவோம்!” என சீரியஸாக அழைத்தார்.

(நெடுஞ்சாலை நீளும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு