Published:Updated:

“ஆற்றலாளர்... அன்பாளர்... கவிராயர்!”

மா.அ.மோகன் பிரபாகரன், படம்: ஜெ.வேங்கடராஜ்

“ஆற்றலாளர்... அன்பாளர்... கவிராயர்!”

மா.அ.மோகன் பிரபாகரன், படம்: ஜெ.வேங்கடராஜ்

Published:Updated:

முன்னர் ஒரு விழாவில், 'வெற்றி பல கண்டு, நான் விருது பெற வரும்போது, வெகுமானம் என்ன வேண்டும் எனக் கேட்டால், அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’ என கருணாநிதி மகிழ்ந்து, நெகிழ்ந்து பாராட்டிய கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழா, சமீபத்தில் சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்ந்தது. 

இரண்டு நாட்கள் நடந்த நிகழ்ச்சியில், முதல் நாள் திரைக் கலைஞர்கள் கலந்துகொண்ட பாராட்டு விழா. இயக்குநர்கள் எஸ்பி.முத்து ராமன், கே.பாக்யராஜ் கலந்துகொள்ள, அப்துல் ரகுமான் எழுதிய 'மின்மினிகளால் ஒரு கடிதம்’ கஜல் கவிதைத் தொகுப்பின் உருது மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.

எஸ்பி.முத்துராமன் பேசும்போது, ''அப்துல் ரகுமானிடம் 'திரைப்படத்துக்குப் பாடல் எழுத வாருங்கள்’ என்றேன். அதற்கு அவர், 'அம்மி கொத்த சிற்பி எதற்கு?’ என்றார். அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அவர் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுத வேண்டும்'' என மறுபடியும் அழைப்புவிடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இரண்டாம் நாள்... கவிஞர்கள், தமிழ் அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்ட பாராட்டு விழா. அதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்துல் ரகுமானின் கவிதைகள், புத்தகங்கள் பற்றிய இணையதளத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய வைகோ, ''மதுவின் பிடியில் சிக்கிச் சீரழியும் தமிழகம், அதில் இருந்து விடுபட கவிதைகள் எழுத வேண்டும்'' என்றார்.

“ஆற்றலாளர்... அன்பாளர்... கவிராயர்!”

''நாம் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை யாரோ சிலர் தீர்மானிக்கிற வெறுப்பு அரசியல் காலத்தில் வாழ்கிறோம். அது கொஞ்சம் கொஞ்சமாக நம் அன்றாட வாழ்விலும் பரவிக்கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க, அரசியல், கலை, இலக்கியம் எல்லாவற்றிலும் மக்களுக்காகப் பணியாற்றும் தலைவர்கள் தமிழ்ச் சமூகத்துக்குத் தேவை'' என்ற திருமாவின் பேச்சுக்கு, தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் பேச்சு பதில் சொல்வதாகவே இருந்தது... ''அரசியல் என்றுமே சமயங்களுக்கு மரியாதை தர வேண்டும். அது பிடிக்காதவர்கள் இரண்டுக்கும் நடுவில் வரும்போதுதான் பிரச்னை. நாங்கள் 'நாட்டின் வளர்ச்சி’ என்றால் அவர்களுக்கு அது, 'மாட்டிறைச்சி’யாக ஒலிக்கிறது'' என்றார் அவர்.

அதன் பிறகு பல தலைவர்கள், அறிஞர்கள் வாழ்த்திப் பேச இருந்த நிலையில்... 8:30 மணி வரை நிகழ்ச்சி நீண்டுகொண்டிருந்தது. ஆனால், 8 மணிக்கு 'கவிக்கோ கருவூலம் வெளியீடு’ நிகழ்வு. அதன் சிறப்பு அழைப்பாளர் கருணாநிதி... சரியான நேரத்துக்கு வந்துவிட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிலையோ தர்மசங்கடம். மேடையின் பின்பக்க வாயிலில் கருணாநிதி வந்த செய்தி கேட்டதும், வைகோ முன்பக்க வாயில் வழியாகக் கிளம்பிச் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் தமிழிசையும் கிளம்பிச் செல்ல... ஆரம்பமானது 'கவிக்கோ கருவூலம் வெளியீடு’ நிகழ்வு.

வைரமுத்து பேசும்போது, ''கவிதை என்பதும் கலை என்பதும், பகுதி நேர ஊழியம் அல்ல; அது ஒரு கலைஞன் உடலில் உயிர் தங்கி இருப்பதுபோல தொடர்ச்சியாகச் செய்யவேண்டிய வேலை.

அந்த வேலையை இன்று வரை செய்துவருகிறார் அப்துல் ரகுமான்'' என்றார்.

''கவிக்கோவின் கவிதை வரிகளுக்கு நான் இசையமைக்கப் பெரிதும் விரும்பினேன். ஆனால், தாஜ்நூர் முந்திக்கொண்டார்'' என தன்  ஆசையைச் சொன்னார் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

அப்துல் ரகுமான் பேசும்போது, ''கலைஞருக்கு கவிதை என்பது பெரிய வீடு; அரசியல் என்பது சின்ன வீடு. இரண்டுக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாத வகையில் வந்து போவார். அவர் வந்திருக்கும் இந்த நிகழ்வு என் வாழ்வில் முக்கியமானது'' என மகிழ்ந்தார்.

இறுதியாக வாழ்த்துரை வழங்கிய கலைஞரின் வார்த்தைகள் நெகிழ்வுக் குவியல்...

''உடல் நலிவு மிகுந்திருந்தாலும்கூட, எழுந்து நின்று பேச முடியாத அளவுக்கு ஒரு சூழல் என் உடலுக்கு ஏற்பட்டிருந்தாலும்கூட, அப்துல் ரகுமான் அழைத்துவிட்டாரே என்ற உணர்வின் உந்துதலால்தான் இந்த விழாவில் கலந்துகொண்டுள்ளேன்'' என கருணாநிதி சொன்னபோது அவரின் கைகளைப் பற்றிக்கொண்டார் அப்துல் ரகுமான்.

''தமிழ்க் கவிஞர்களை வரிசைப்படுத்தினால் அதில் முதல் இடம் என் நண்பர் அப்துல் ரகுமானுக்குத்தான். அப்படிப்பட்ட ஆற்றலாளர், அன்பாளர், தமிழ் உணர்வாளர்... எல்லாவற்றையும்விட நன்றி மறவாத நண்பர்.

அதனால்தான் மாசற்ற கவிராயராக அப்துல் ரகுமான் விளங்குகிறார்'' எனப் பாராட்டி உச்சி முகர்ந்தார் கருணாநிதி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism