சுவரொட்டி

தன் வீட்டு சுவரில், அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டியவனுடன் சண்டை போட்ட அரவிந்த், ஃபேஸ்புக்கில் நண்பர்கள் அக்கவுன்ட்டில் தன் படத்தை டேக் செய்தான்!
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- எம்.விக்னேஷ்
விரதம்

காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக, 'இன்றைக்கு நான் மௌன விரதம்’ என ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் மற்றும் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் அப்டேட் கொடுத்தாள் கிரிஜா!
- காஞ்சனா சாய்ராம்
புடவை

'கண்டாங்கி... கண்டாங்கி... கட்டிவந்த பொண்ணு...’ பாடலை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த மகள், ''ஹீரோயின் போட்டிருக்கிற டிரெஸ்ல எதுப்பா கண்டாங்கி?'' எனக் கேட்கிறாள்!
- க.தமிழினியன்
ஷ்..!

தனக்கு சாக்லேட் வேண்டும் என அடம்பிடித்த குழந்தை அழுவதை நிறுத்தியது... 'போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிந்துவிடுவேன்’ என்றதும்!
- இ.க.இளமருது
விதிவிலக்கு

''சார், அவரும் ஹெல்மெட் போடலை' என்று சொன்ன பையனைப் பார்த்து போலீஸ்காரர் சொன்னார்... 'அவர் வக்கீல்ப்பா!'
- மு.மணிகண்டன்
மாமியார்

சாமிக்குப் படைத்த சாதத்தை ஒழுங்காகக் கொத்தித் தின்னாமல் பால்கனி முழுக்கச் சிந்தி இலையைக் கவிழ்த்த காகத்தைப் பார்த்து கணவனிடம் சொன்னாள்... 'எனக்கு வேலை வெச்சுடுச்சு, இது உங்க அம்மாவேதான்!'
- அமிர்தா
வரம்

விறகுவெட்டியிடம் இருந்து மூன்று கோடரிகளையும் வாங்கிக்கொண்டு போனது வனதேவதை!
- கவிஜி
காத்திருப்பு

ஜாமீனில் வெளியே வந்த தலைவர் தொண்டர்களைப் பார்த்துச் சொன்னார்... 'ஐ அம் பேக்.' இன்னொரு வழக்கில் அவரைக் கைதுசெய்யக் காத்திருந்த போலீஸ் அதிகாரி சொன்னார்...
'ஐ அம் வெயிட்டிங்!'
- துரை மதுரை
படிப்பினை

வாடகை வீட்டு ஓனரிடம் புதுமனை புகுவிழா பத்திரிகையை நீட்டி நன்றி சொன்னேன்... ''உங்களை மாதிரி ஹவுஸ் ஓனர்கள் குடைச்சல் தரலைன்னா, நான் சொந்த வீடே கட்டியிருக்க மாட்டேன்!''
- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்
புதிய தலைமுறை

'அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் தீபாவளிக்கு டிரெஸ் எடுக்கலாம்' என்றார் அப்பா. 'தீபாவளிக்கு டிரெஸ் எடுத்துடுவோம். அடுத்த மாசம் சம்பளம் வந்ததும் கொடுத்துடலாம்' என்று கிரெடிட் கார்டைத் தேய்த்தான் மகன்.
- அஜித்
