மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 12

#BanTasmacபாரதி தம்பி, படங்கள்: கே.குணசீலன்

வ்வோர் அரசுத் துறைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. கல்வித் துறையின் நோக்கம்

குடி குடியைக் கெடுக்கும் - 12

சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி வழங்குவது; சுகாதாரத் துறையின் நோக்கம், தரமான மருத்துவ வசதிகளை அனைவருக்கும் வழங்குவது; வனத் துறையின் நோக்கம் வனங்களைப் பாதுகாப்பது. இப்படி டாஸ்மாக் என்ற அரசுத் துறையின் நோக்கம் என்ன... தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடிகாரரை உருவாக்குவதா? 

'இரண்டு படி லட்சியம். ஒரு படி நிச்சயம்’ என அண்ணா சொன்னார். அவர் சொன்னது அரிசிக்கு. அண்ணா பெயரில் கட்சி நடத்தும் இன்றைய அரசு, 'வீட்டுக்கு இரண்டு குடிகாரர் லட்சியம்; ஒருவர் நிச்சயம்’ எனக் கோட்பாடு வகுத்துக்கொண்டிருக்கிறது. அதனால்தான் மிகக் கடுமையாக மக்கள் எதிர்ப்பு  தெரிவிக்கும் ஊர்களில்கூட விடாப்பிடியாக மதுக்கடைகளை நடத்திக்கொண்டி ருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகில் இருக்கிறது செல்லம்பட்டி என்ற கிராமம். புது ஆற்றுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவர... எங்கும் குளுமையும் பசுமையும் நிறைந்திருக்கின்றன. சுற்றியுள்ள விவசாயக் கிராமங்களுக்கு இந்த ஊர்தான் ஒன்றுகூடும் இடம். மாலை நேரமாகிவிட்டால் ஆற்றுப்பாலம் எங்கும் கூட்டம் மொய்க்கும். செல்லம்பட்டியில் மொத்தம் மூன்று டாஸ்மாக் கடைகள். முழுக்க முழுக்க விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் நிறைந்த பகுதி என்பதால், மூன்று கடைகளிலும் கூட்டம் கும்மும். ஆற்றில் தண்ணீர் வந்தாலும் வராவிட்டாலும் டாஸ்மாக் தண்ணீருக்கு மட்டும் எந்தத் தடையும் இல்லை. ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்றால், குடிகாரர்களுக்கு அதுதான் திறந்தவெளி பார். ஆற்று மணலில் அமர்ந்து ஏகாந்தமாகக் குடிப்பார்கள்.

குடி குடியைக் கெடுக்கும் - 12

தமிழ்நாட்டின் ஒவ்வோர் ஊரிலும் டாஸ்மாக் என்பது எப்படி சமூக நோயாக உருவெடுத்துள்ளதோ, அதே நிலைமைதான் இங்கும். ஒரு புதிய தலைமுறைக் குடிகாரர்கள் உருவானார்கள். டாஸ்மாக்கில் இருந்து சரக்கை வாங்கிப் பதுக்கி, கடை மூடப்பட்டிருக்கும் நேரத்தில் விற்பனைசெய்து இதை ஒரு 24ஜ்7 சேவையாகச் செய்தார்கள் சிலர். குடும்பங்கள் சிதைந்து, கெட்டன. தற்கொலைகளும் விபத்துக்களும் முன்பைவிட அதிகரித்தன. இதற்கு டாஸ்மாக்தான் நேரடிக் காரணம் என்பதை மக்கள் உணர்ந்தாலும், கூட்டாக ஒன்றுசேர்ந்து எதிர்த்து நிற்க யாரும் முன்வரவில்லை. எதிர்ப்புகள் முணுமுணுப்புகளாக முடிந்துபோயின. இந்த நிலையில்தான் கடந்த மார்ச் மாதத்தில் நடந்தது அந்த விபத்து.

பொய்யுண்டார்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்த சுபகிரிராஜன், ரமேஷ் ஆகிய இரண்டு இளைஞர்களும் நிறை குடிபோதையில் டூ-வீலர் ஓட்டிக்கொண்டு சென்றனர். எதிரே அவர்களின் நண்பர் கமலநாதன் என்பவர் வந்துள்ளார். சோழபுரம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்த அவர் குடிக்கவில்லை; குடிப்பழக்கமும் இல்லை. 'யேய்... வாடா மாப்ள’ என இருவரும் கமலநாதனை இழுத்து வண்டியின் நடுவில் உட்காரவைத்துக்கொண்டனர். போதை தந்த கிளர்ச்சியில் பெரும் சத்தத்துடன் வண்டியை ஓட்டிக்கொண்டு ஒரத்தநாடு சாலையில் சென்றார்கள். சாலை ஒரு வளைவில் திரும்ப, இவர்களும் திரும்பினார்கள். எதிரே ஒரு லாரி. கண் இமைக்கும் நேரத்தில் மூன்று பேரும் லாரியில் மோதித் தூக்கி எறியப்பட... எங்கும் ரத்தச் சகதி. வண்டியை ஓட்டிய ரமேஷ் தப்பித்துக்கொண்டார். நடுவில் அமர்ந்திருந்த கமலநாதனும் பின்னால் அமர்ந்திருந்த சுபகிரிவாசனும் அந்த இடத்திலேயே சடலம் ஆனார்கள்.

குடி குடியைக் கெடுக்கும் - 12

இறந்துபோன இரண்டு இளைஞர்களும் அவரவர் வீட்டுக்கு ஒரே ஓர் ஆண் பிள்ளைகள். அதிலும் கமலநாதனின் இறப்பை யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. குடிப்பழக்கமே இல்லாத கமலநாதன், குடிப்பழக்கம்கொண்ட நண்பர்களால் இன்று உயிரையே இழந்துவிட்டார்.

''நல்லாப் படிக்கிற பையன். டிப்ளமோ படிச்சான். நல்லா தாளம் போடுவான். எது கிடைச்சாலும்

குடி குடியைக் கெடுக்கும் - 12

வாசிப்பான். மியூஸிக் மேல ஆர்வம் வந்து 'அம்மா, நான் மெட்ராஸ்ல போய் மியூஸிக் காலேஜ்ல சேரப்போறேன்’னு சொன்னான். 'சந்தோஷமா போய்ப் படிப்பா’னு அனுப்பிவெச்சேன். ரெண்டு மூணு வருஷமா மெட்ராஸ்ல இருந்துதான் படிச்சான். சினிமா பாட்டுல காட்டுற மாதிரி... அது என்னமோ கிடார்னு ஒண்ணு, அதை எல்லாம் வெச்சுக்கிட்டு வாசிப்பான். 'கங்கை அமரன்கூட பாடியிருக்கேன்’னு ஒரு தடவை சொன்னான். 'திறமையா இருக்கான்; எப்படியும் பொழச்சுக்குவான்’னு நம்பி இருந்தேன். லீவுல வீட்டுக்கு வந்தவன் இப்படிப் பொசுக்குனு போயிடுவான்னு நினைக்கலையே...'' எனக் கசியும் கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் கமலநாதனின் அம்மா

பாஞ்சாலை. மகனுக்கு ஒன்பது வயது இருக்கும்போதே பாஞ்சாலையின் கணவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார். இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு, பிள்ளைகளின் முகம் பார்த்து, பிள்ளைகளுக்காகவே இத்தனை ஆண்டுகள் வைராக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பாஞ்சாலை என்கிற கிராமத்து அம்மா தலையில், இடி விழுந்ததுபோல் நிலைகுலைந்துபோயிருக்கிறார். ஊர்ப் பிள்ளைகள் எல்லாம் குடியில் வீழ்ந்துகிடக்கும்போது தன் பிள்ளை மட்டும் குடிக்காமல் இருப்பதை நினைத்து எத்தனை பெருமிதப்பட்டிருப்பார் அவர்! கட்டிய கணவனை இழந்து, பெற்ற பிள்ளையை இழந்து... அவரது ஒரு நாள், ஒரு பொழுதை நினைத்துப்பார்த்தால், நமக்கு மனம் நடுங்கிவிடும்.

குடி குடியைக் கெடுக்கும் - 12

அந்தக் கொடிய விபத்தில் உயிர் இழந்த இன்னொருவர், சுபகிரிவாசன். 25 வயது இளைஞர். நிலபுலன் அதிகம் இல்லாத சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். படித்த படிப்பின் மூலம் வேலை பெற முடியவில்லை. விவசாயம் செய்ய பெரிய அளவுக்கு நிலம் இல்லை என்றால், வெளிநாடு செல்வதுதான் இந்தப் பகுதி இளைஞர்களின் ஒரே தேர்வு. இப்படி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் உடல் உழைப்பு வேலைகளைச் செய்கின்றனர். அப்படி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியா சென்றவர் சுபகிரிவாசன். அங்கு டாரஸ் வண்டி டிரைவராகப் பணிபுரிந்தார். தன் கடின உழைப்பால் குடும்பத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் சென்றார். சகோதரிக்குத் திருமணம் செய்துவைத்தார். மூன்று மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோதுதான் இந்த விபத்து.

''அவன் குடிகாரன் கிடையாதுங்க. சொல்லப்போனா செத்தப் பிறகுதான் அவன் குடிப்பான்கிறதே எங்களுக்குத் தெரியும். கூட்டாளிக சரியில்லை... கேரளாவுல இருக்கிற அக்கா வீட்டுக்குப் போயிருந்தான். அங்கே இருந்து எங்களுக்கே தெரியாம இங்கே வந்து செட்டு சேர்ந்து குடிச்சிருக்கானுங்க. ப்ச்... புள்ளையை விட்டுட்டோம். இப்போ என்னத்த அழுது என்ன ஆகப்போகுது? அவன் தலையிட்டுத்தான் எங்க குடும்பம் தலையெடுத்துச்சு. இந்தமுறை வெளிநாடு போய்ட்டு வந்தா, அவனுக்கும் ஒரு கல்யாணம் பண்ணிவெச்சுடலாம்னு இருந்தோம். இப்படி ஆகும்னு யாரு கண்டா?'' என வறண்ட குரலில் சொல்கின்றனர் சுபகிரிவாசனின் பெற்றோர் முருகேசனும் மணிமேகலையும்.

இங்கு இருந்து ஏராளமான இளைஞர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர் என்பதால், அவ்வப்போது யாரோ சிலர் விடுமுறையில் வருவதும் போவதுமாகத்தான் இருப்பார்கள். அப்படி ஓரிரு மாத விடுமுறையில் வரும் அவர்கள், 'எப்படியும் மறுபடியும் வேலைக்குச் சென்று கடுமையாக உழைக்கத்தான் போகிறோம். இருப்பதற்குள் மகிழ்ச்சியாக இருந்துவிட வேண்டும்’ என நினைத்துக்கொண்டு குடித்துத் தீர்க்கிறார்கள். இதற்காக உள்ளூர் நண்பர்களைச் சேர்த்துக்கொள்கின்றனர். இது பெற்றோர்களுக்கு அரசல்புரசலாகத் தெரிந்தாலும் அவர்களும் கண்டும்காணாமல் விட்டுவிடுகின்றனர். கடைசியில் அது மீட்க முடியாத மரணப் பள்ளத்தாக்குக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. வெளிநாடுகளில் இருந்து விடுமுறையில் வருவோர் குடித்துவிட்டு விபத்துகளில் வீழ்ந்து கை-கால்களை இழப்பதும், படுத்தபடுக்கையாகக் கிடப்பதுமான கதைகள் இந்தப் பகுதியில் எக்கச்சக்கம்.

சுபகிரிவாசன், கமலநாதன் ஆகிய இருவரும் இறந்த பின்னர் செல்லம்பட்டி சுற்றுவட்டார மக்கள் பெரும் கொந்தளிப்புடன் ஒன்றுதிரண்டனர். 'டாஸ்மாக் கடைகளை மூடியே ஆக வேண்டும்’ என நூற்றுக்கணக்கான பெண்கள் ஒன்றுதிரண்டு போராடத் தொடங்கினார்கள்.

''பெண்களை எல்லாம் ஒண்ணுசேர்த்து கடையைச் சுத்தி உட்காரவெச்சிருவோம். குடிக்கிறவன்லாம் யாரு? அங்க உட்கார்ந்திருக்கிற பெண்களோட புருஷன், புள்ளைங்கதானே? இவங்களைப் பார்த்ததுமே அப்படியே நைசா நகர்ந்துடுவாங்க. இப்படியே நாலைந்து நாள் நடந்துச்சு. ஒருநாள் கடைக்கு மாலை போட்டு ஒப்பாரி வெச்சாங்க. இன்னொரு நாள் தஞ்சாவூர் கலெக்டர் ஆபீஸ்ல போய் மனு கொடுத்து, 'கடையை மூடலைனா, எல்லாரும் தாலியைக் கழட்டிக் குடுத்திருவோம். நீங்களே வெச்சுக்குங்க’னு சொல்லிட்டு வந்தாங்க. கடைசியில எங்க போராட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் பணிஞ்சுவந்துச்சு. மூணு கடைகளையும் மூடினாங்க...'' என்கிறார், அந்தப் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் ஒருவரான குரு ஜோதிவேல்.

குடி குடியைக் கெடுக்கும் - 12

இவ்வாறாக செல்லம்பட்டியில் இருந்து கடைகள் அகற்றப்பட்டன. ஆனால், அப்படி எல்லாம் அரசு விட்டுவிடுமா என்ன? செல்லம்பட்டியில் அகற்றிய கடைகளை வேறு எங்கேனும் திறந்தே ஆக வேண்டும் என முடிவுசெய்து அருகில் இருக்கும் மருங்குளம் என்ற ஊருக்கு வந்தனர். மருங்குளத்தில் ஏற்கெனவே ஒரு டாஸ்மாக் கடை இருந்த நிலையில், அருகிலேயே இன்னொரு கடையைப் போட்டார்கள். மக்கள் வெகுண்டு எழுந்தனர். இவர்களின் போராட்டத்துக்குச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஆதரவு தெரிவித்துத் திரண்டனர். தங்களது கிராமங்களில் மரங்களை வெட்டிப்போட்டு சாலை மறியல் செய்தனர். அந்தப் பகுதியின் ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. கடைசியில் மாவட்ட நிர்வாகம் வேறு வழியின்றி மருங்குளத்தில் புதிதாகத் திறக்கப்பட்ட கடையை ஒரே மாதத்தில் அகற்றியது. ஏற்கெனவே அங்கு இயங்கிய ஒரு டாஸ்மாக் மட்டும் இன்னும் இருக்கிறது.

இதன் பிறகும் அடங்கவில்லை அதிகாரிகள். அருகில் வேங்குராயன்குடிகாடு என்ற கிராமம் இருக்கிறது. இந்த ஊருக்குள் நுழையும் இடத்தில் உள்ள முந்திரித்தோப்பில் டாஸ்மாக் கடை அமைக்கும் முயற்சியில் இப்போது இறங்கியிருக்கிறார்கள். அந்த ஊர் மக்கள் 'எங்கள் ஊருக்கு டாஸ்மாக் வேண்டாம்’ என கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். இப்படி எந்தப் பக்கம் போனாலும் மக்கள் ஓட, ஓட விரட்டி அடிப்பதால், 'எல்லாரும் இப்படிச் சொன்னா, நாங்க எங்கதான் போய் கடையைத் திறக்கிறது?’ எனக் கேட்கிறார்கள் அதிகாரிகள். வேறு சில அதிகாரிகளோ, 'டாஸ்மாக்கை மூடிட்டு சாராயம் காய்ச்சப்போறீங்களா?’ என மிரட்டவும் செய்கிறார்கள். எப்படி இருப்பினும் இந்தப் பகுதி கிராம மக்களின் ஒற்றுமையான டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் பெறும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

- போதை தெளிவோம்...