Published:Updated:

நன்றி என்றது கன்றுக்குட்டி!

கதை: தமிழ்மகன், ஓவியம்: நன்மாறன்

நன்றி என்றது கன்றுக்குட்டி!

கதை: தமிழ்மகன், ஓவியம்: நன்மாறன்

Published:Updated:

விவசாயம் மற்றும் கால்நடை ஆராய்ச்சி விற்பனைக்கூடத்தில் வழக்கத்தைவிட அதிகக் கூட்டம்

நன்றி என்றது கன்றுக்குட்டி!

இருந்தது. விதவிதமான பூச்செடிகளும், காய்கறி விதைகளும், தோட்டக் கருவிகளும் விற்பனை செய்கிற அரசு நிறுவனம் அது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தங்கள் மாடித் தோட்டத்துக்காக, விதைகள், செடிகள் வாங்குவதற்காக அப்பாவுடன் வந்திருந்த அஞ்சலி, “என்னப்பா, இவ்வளவு கூட்டம்?’’ எனக் கேட்டாள்.

நன்றி என்றது கன்றுக்குட்டி!

“அதுவா அஞ்சலி, இந்த விற்பனைக் கூடத்தை இன்றோடு மூடப்போறாங்க. இங்கே வளர்த்த செடிகளை மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கிறாங்க. அதுதான் இவ்வளவு கூட்டம்’’ என்றார் அப்பா.

எதற்காக மூடப்போகிறார்கள் என்று கேட்பதற்குள், அப்பா விற்பனைப் பகுதியை நெருங்கிவிட்டார். அஞ்சலி கேட்க இருந்த கேள்விக்கான பதில், அந்த இடத்தின் கரும்பலகையில் இருந்தது.

‘இந்தப் பகுதியில் மேம்பாலம் கட்ட இருப்பதால், இங்கு இயங்கிவந்த விற்பனைக்கூடம், புதிய இடத்துக்கு  மாற்றப்பட உள்ளது.  இனி, வாடிக்கையாளர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளவும்.

- இப்படிக்கு விற்பனைக்கூட அதிகாரி.’

அதற்குக் கீழே தொலைபேசி எண்ணும் எழுதப்பட்டிருந்தது. நான்காம் வகுப்பு படிக்கும் அஞ்சலிக்குப் புரியும் தமிழில்தான் இருந்தது.

அஞ்சலிக்கு வருத்தமாக இருந்தது. ‘இவ்வளவு பெரிய தோட்டம் அழியப்போகிறதே, இனிமேல் கன்றுக்குட்டிகள் எதையும் பார்க்க முடியாதே’ என்ற ஏக்கம் உண்டானது.

கால்நடை ஆராய்ச்சிக்காக சில பசுக்களும் எருமைகளும் அங்கே இருக்கும். அவற்றின் கன்றுகள் அங்கே வரிசையாகக் கட்டப்பட்டிருக்கும். அப்பாவுடன் ஒவ்வொரு முறை வரும்போதும், உரமோ, விதையோ அவர் வாங்கி முடிக்கும் வரை, அஞ்சலி அந்தக் கன்றுக்குட்டிகளுடன் விளையாடிக்கொண்டிருப்பாள்.

இப்போது, அப்பா வருவதற்குள் அந்த இடத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என நினைத்தாள். அந்த இடம் வெறிச்சோடிக்கிடந்தது. ஒரே ஒரு கன்றுக்குட்டி மட்டும் அங்கே இருந்தது. அங்கிருந்த காவலாளி, ``எல்லா மாடுகளையும் ஆவடிக்கு லாரியில் ஏத்திட்டுப் போய்ட்டாங்க. லாரியில் இடம் இல்லாததால, அடுத்து வரும் வண்டியில இதை ஏத்தி அனுப்புவோம்’’ என்றார்.

அதே நேரத்தில், அங்கே வந்துசேர்ந்த அப்பா, ``இன்னிக்கு கடைசி நாளா இருக்கிறதால, ஒரே  கோளாறா இருக்கு. என்ன விதை இருக்கு, என்ன விதை இல்லைனு ஒரு தகவலும் தெரியலை. சரி, கிளம்பலாம்’’ என்று அலுத்துக்கொண்டார்.

மறுநாள் அப்பாவுடன் பள்ளிக்குச் செல்லும்போது, அந்த விற்பனைக்கூடத்தைப் பார்த்தாள் அஞ்சலி. அது பூட்டி இருந்தது. ஏதோ நினைவு வந்தவளாக, “ஒரு நிமிஷம் அப்பா’’ எனச் சொல்லிவிட்டு, வாசல் இரும்புக் கேட்டுக்கு அருகே சென்றாள்.

அது, சங்கிலியால் இணைத்துப் பூட்டப்பட்டு இருந்தது. கேட்டை அசைத்துப் பார்த்தபோது, சற்றே இடைவெளி கிடைத்தது. சற்றும் தாமதிக்காமல், அந்த இடைவெளிக்குள் நுழைந்து ஓடினாள்.

அப்பாவுக்கு அதிர்ச்சி. ‘‘நில்லு அஞ்சலி. எங்கே ஓடறே?’’ என அதட்டியபோதும் கேட்கவில்லை.

சில விநாடிகளில் திரும்பிவந்தாள். ‘‘அப்பா, உங்க பேச்சைக் கேட்காமல் ஓடினதுக்கு ஸாரி. நேற்று, கடைசி நாள் டென்ஷனில் எல்லாரும் வேலை பார்க்கிறதா சொன்னீங்க. அவங்களுக்கு இருந்த வேலையில் அந்தக் கன்றுக்குட்டியை மறந்திருப்பாங்களோனு நினைச்சேன். அதனால்தான் உள்ளே போய்ப் பார்த்தேன். நினைச்ச மாதிரியே கன்றுக்குட்டி சோர்வோடு படுத்திருக்கு. கொஞ்சம் தண்ணீர் கொடுத்துட்டு வந்திருக்கேன். அதைக் காப்பாத்தணும் அப்பா’’ என்றாள்.

தன்னுடைய செல்போன் மூலம், அறிவிப்புப் பலகையில் இருந்த தொடர்பு எண்ணுக்கு உடனடியாகப் பேசினார் அப்பா. சற்று நேரத்தில் முதலுதவி வேன் ஒன்றுடன் கால்நடைப் பணியாளர்கள் வந்தார்கள். பூட்டைத் திறந்து உள்ளே போனார்கள்.

ஏறத்தாழ மயக்க நிலைக்குப் போய்விட்ட கன்றுக்குட்டிக்கு முதலுதவி செய்தார்கள். “இன்னும் ஒருநாள் ஆகியிருந்தால், கன்றுக்குட்டியின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும். பசுக்களைக் கணக்கெடுத்த நாங்கள் கன்றுக்குட்டியை மறந்தே போனோம். நல்ல சமயத்தில் தகவல் கொடுத்தீங்க’’ என்ற கால்நடை மருத்துவர், ‘சபாஷ்’ என்பதுபோல அஞ்சலியின் தலையை வருடிக்கொடுத்தார்.

கன்றுக்குட்டியை வேனில் ஏற்றியபோது, அது மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தது. அஞ்சலியைப் பார்த்து ‘நன்றி அஞ்சலி’ எனப்  புன்னகைப்பது போல இருந்தது.

அஞ்சலியும் புன்னகைத்துக் கையசைத்தாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism