சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்

##~##

கோகுலாஷ்டமி 

கிருஷ்ணன் ராதையாக
உடையணிந்திருந்த
குழந்தைகளில்
ஒரு கிருஷ்ணன்
ராதையைத் தனியாக விட்டுவிட்டு
அம்மாவிடம் ஓடிப்போனான்
இன்னொருத்தன்
ராதையின் பின்னலை
இழுத்துக்கொண்டிருந்தான்
ஹரே ராமா ராம ஹரே
பாடிய பெண்ணுக்கு
இடையிடையே
சிரிப்பு வருகிறது
ராதைகள் கோலாட்டம் ஆடாமல்
புதிதான பட்டுப் பாவாடைகளின்
வண்ணம் பார்த்துக்கொண்டிருந்தனர்
சிலர் சிரிக்க... சிலர் அழுது அடம்பிடிக்க
சிலர் தண்ணீர் கேட்க
சிலர் வீட்டுக்குப் போகலாமெனச் சொல்ல
இத்தனைக்கு நடுவிலும்
பெற்றோர்தான் பாவம்
அதட்டியும் கொஞ்சியும்
அவர்களைக் கடவுளாக்கிக்கொண்டிருந்தனர்
அவர்கள் மட்டும்
கடைசி வரையில்
குழந்தைகளாகவே இருந்தார்கள்!

- ப.ராமச்சந்திரன்

சொல்வனம்

மாமழை!

ரு கோடை மழை நாளில்
பாட்டியின் இறப்பு நிகழ்ந்தது.

மழை கொட்டிய அவ்வேளையில்
ஊருக்கு வரும் பேருந்து
கிடைக்காமல் போகவே

மின்னல்கள் சரமாரியாக
எதிரே இறங்கியபடி
மழையோடு மழையாக
நானும் அம்மாவும் நடந்தோம்.

எங்களிருவரின் வருகைக்காகவும்
மற்றபடி
மழை நிற்க வேண்டியும்
பாட்டியும் மற்றவர்களும் காத்திருந்தார்கள்.

வாழ்நாளில்
குடையே பிடித்திடாத பாட்டிக்கு
சுடுகாட்டின் கடைசி வரைக்கும்
குடை பிடித்து வந்தார் மாமா.

இறுதிவரைக்கும்
கண்ணீர் வரவில்லை அம்மாவுக்கு.

எந்தவித சலனத்தையும் காட்டாமல்
மற்றவர்களும் நடந்துகொண்டார்கள்.

மழைக் காலங்களில் யாவரும்
ஏன் சத்தமிட்டு அழுவதில்லையென்று
அதிகப்பிரசங்கித்தனமாய்
தோன்றியது எனக்கு.

பாட்டிக்கு எப்போதும் பிடித்தது
அம்மா கலக்கும் டிகாஷன் காப்பி.

மழை நின்ற அதிகாலையில்
யாவரும் அவரவர் போர்வையில்
சுருண்டுகிடக்க
கவனக் குறைவாகப்
பாட்டிக்கும் சேர்த்து
காப்பி கலந்துவிட்டாள் அம்மா.

கட்டிலை நோக்கி
ஓரடி வைத்துவிட்டு
ஞாபகம் வந்தவளாய்த்
திகைத்து நின்றவளின்
கண்களில் தெரிந்தது
முதன் முதலாக
பாட்டியின் மரணம்!

- சுமதி ராம்

ஒற்றைச் செருப்பு

வாகனங்கள்
அதிவேகமாக
விரையும் சாலையில்
சிறுவனின் ஒற்றைச் செருப்பு
தவறி விழுந்து கிடக்கிறது

அம்மாவிடம்
அடிவாங்கும்
ஒவ்வொரு வேளையும்
அச்செருப்பின் மீது
வாகனங்கள்
ஏறி இறங்கிச் செல்லும்!

- கிருஷ்ணகோபால்

வன்மக் கையுறை

த்தப் பொத்தல்களோ
துப்பாக்கிச் சத்தமோ
இல்லாமல்
வராண்டாவில் விழுவதில்லை
நியூஸ் பேப்பர்

காலிங் பெல் இசைக்கு
பயந்து பறந்துவிடுகிறது
உணவு கொத்த வரும் குருவி

டியூப் லைட்டுக்கு அருகே
தொங்கும்
பிளாஸ்டிக் குருவியின்
அலகில் வலை பின்னுகிறது
சிலந்தி

வால் அசையாமல்
ரீங்கரிக்கும் தும்பிக்குக்
காத்திருக்கிறது
சுவர்ப் பல்லி

கசகசவென பஸ்ஸிலிருந்து
பதுங்கி
மெட்ரோ ரயிலேறி
கிடைக்கும் சொற்ப இடத்தில்
ஒண்டியமர்ந்து
நியூஸ் பேப்பர் பிரித்தால்

ரத்தப் பொத்தல்களோ
துப்பாக்கிச் சத்தமோ
கேட்காமலிருப்பதில்லை!

- இளங்கோ

சொல்வனம்