சினிமா
Published:Updated:

கூதலும் கூதல் நிமித்தமும்!

தமிழச்சி தங்கப்பாண்டியன்

##~##

கூதலுக்கென்று ஒரு சுகமிருப்பதாய்க்
கெஞ்சும் என் போர்வையை
மடித்துவைக்கும்படி மன்றாடுகிறது
விடிகாலை வீதி கூட்டுபவளது இருமல்.

பூசணிப் பூக்களையும் மாக்கோலத்தையும்
தன்னோடு கொண்டுபோன மார்கழியை
மீட்டுத் தருகின்றது
கூதிர் காலைப் பொழுதில்
வீட்டு வாசலில் பால்காரம்மா
துப்பிவிட்டுப்போன வெற்றிலை எச்சில்.

ஒவ்வொரு செம்பருத்தி மொட்டுக்குள்ளும்
ஒளித்துவைக்கப்பட்டிருக்கின்றது
ஒரு கூதிர் கால முத்தம் -
இதழைப் பிரிக்கத்தான் மனமில்லை.

முதியவரது கம்பளி மூடிய
காதுகளின் அருகில்
அதிகாலைக் கூதலில் நடுங்கியபடி
தொடர்கின்றது -
பால்யத்தின் பாடல்.

கூதலும் கூதல் நிமித்தமும்!

நேசிக்கப்படுதலின் உல்லாசத்தையும்
நேசித்தலின் வலியையும்
ஒருங்கேகொண்டு
முகத்தில் அறைகிறது கூதிர்க் காற்று -
பருவங்களைக் கடக்க முடியுமா காதலால்?

கதகதப்பானதொரு முத்தம் வேண்டித்
தவித்திருக்கும் விரகத்தின்
நாணத் தேமல் விடைபெறலாம் -
கூதிர் கால இரவொன்றைக்
கழிக்க வருகின்ற வழிப்போக்கனின்
அழைப்பு மணியில்.

காமம் கடக்க இயலா
உடலின் துயரைப்
பகல் பரிகசிக்கிறது.
இரவு புரிந்துகொள்கிறது.
கூதிரின் அதிகாலையோ
பகிர்ந்துகொள்கிறது.

கலவியின் குறைந்தபட்சக் கருணையற்று
ஒளிரும் தெரு விளக்கினடியில்
உறங்க முயல்கிறது ஒரு ஜோடி.
தார்ப்பாய்க்குள்ளிருந்து
தலை குனிந்தபடி வெளியேறுகிறது
கூதிர்க் காற்று.

குப்பை அள்ளுபவர்களை
வேடிக்கை பார்த்தபடி
சுவைக்கப்படும் தேநீர்க் கோப்பை
ஒவ்வொன்றின் அடியிலும்
குற்றவுணர்வின் கசடு.
கூதலின் சோம்பல் ருசி
கொண்டையுள்ள சீமாட்டிகளுக்குத்தான்.

புறம்பேசும் நபர்களையும்
துரோகமிழைத்த நண்பர்களையும்
ஒரு புன்னகையுடன்
இந்த அதிகாலை
நேர்நோக்க முடிகின்றது.
கூதிர் காலத்தில் கோபம்கூட
சோம்பிக்கிடக்கிறது முற்பகல் வரை!