தனது நாடகம் ஒன்றுக்கான அழைப்பிதழை நண்பன் அனுப்பியிருந்தான். தமிழ் நாட்டின் கடைக்கோடி ஊர் ஒன்றில் மலைச் சரிவில் காட்டுவாசிச் சமூகத்தினரிடையே அந்த நாடகம் நிகழ்த்தப்படப்போவதாய் அழைப் பிதழ் அறிவித்தது. பாரம்பரியத்தை மீட்டெடுக்கவேண்டும் என்பதில் நண்பனுக்கு மாளாத ஆர்வம் உண்டு. ஆகவே, நாடகமும் முதலில் இப்படியான இடங்களில் நடத்தப்படுவதை அவன் ஒரு அரசியற் செயல்பாடாக வைத்திருந்தான். வெளிமாநிலத் தலைநகரில் அது என் கைக்குக் கிடைத்தபோது சிவசந்திர சேகர னும் கூட இருந்தார். அழைப்பிதழின் வாக்கியங்களை என்னால் வாசிக்கக் கேட்டு அழைப்பிதழின் வடிவத்தையும் கண்ணுற்ற சந்திரசேகரன் ''நானும் உன்னுடன் வருகிறேன்'' என்று விருப்பத்தை வெளியிட்டார்.

சந்திரசேகரன் அங்கே வெளியாகி திறம் பட ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நாடகப் பத்திரிகையின் ஆசிரியர். இரண்டாயிரம் பிரதிகள். மாநிலத்தின் நாடகங்கள் பற்றிய அவரது கருத்துக்களுக்கு ஆதரவும் செவிகளும் இருந்தன.

நாடக தினத்தன்று தம் மாநிலப் பெருமையையும் மாநிலத்தில் கிடைத்த மது வகைகளையும் தனது கைப்பையில் தாராளமாக அடைத்து வந்திருந்தார் சந்திரா.

ஒருபொருட்பன்மொழியான தனது பெயர் உட்பட வீட்டுப் பெயரையும் நீளமாக முழக்கியே அவர் கட்டுரைகள் எழுதி வந்தாலும், ஊரிலுள்ளோர் அவரை அழைப்பது சுருக்கமாக 'சந்திரா’ என்று தான்.

நாடகத்தில் நாட்டுப்புறக் கூறுகளை உள்ளடக்கிய சொல்லாட்சியில் புதி யன உள்நுழையும் போதெல்லாம் ரசனைக்களவான ஒரு மிடறை அவர் தொண்டைக்குள் சரித்துக்கொண்டிருந்தார். நாடகத்தில் அத்தகைய சொல்லாட்சிகள் நிறையவே இருந்தன. அழைப்பிதழிலேயே நாடகத்தின் தன்மையை உணர்ந்தவர் போல ஏராளமான பாட்டில்களை அவர் வாங்கிவந்திருந்தார். நானும் அவரும் அமர்ந்திருந்தது ஒரு பாறைத் திண்டில். அரங்கத்தின் அமர்வுப் பகுதி மரங்களின் வேர்கள், பாறைத் திண்டுகள், மண் அம் பாரங்கள் என இயற்கையோடு இரண்டறக் கலந்த வகையிலாயிருந்தது. எங்கள் பாறைத் திண்டின் ஒளி மறைவுப் பிரதேசத்தில் சரக்குகளை வைத்திருந்த சந்திரா முழு இருட்டிலும் மாந்துகிற லயத்தை தனது நீண்ட கால அனுபவத்தால் பெற்றிருந்தார். எங்களிற் குறுக்கிட வந்தவர்களை, 'என்ன வேணும்?'' என்று அவரது தாய்மொழியில் கேட்டு விரட்டிக்கொண்டிருந்தார். அவரது மொழியில் இந்தக் கேள்வியானது தமிழில் திட்டுவதுபோலவே இருக்கும். அவருடன் மொழியாடுவதற்கான ஊடக உரையை நான் மட்டுமே பெற்றிருந்தேன் அக்கூட்டத்தில். மற்றபடி வந்திருப்பவரின் முக்கியத்துவம் பற்றி எனது நண்பனுக்கும் ஏனைய அறிவு ஜீவிகளுக்கும் சொல்ல வேண்டியவர்களுக்குச் சொல்லியாயிற்று. உணர்த்த வேண்டியவர்களுக்கு உணர்த்தி யாயிற்று. கைவசம் தொழிலோ, பெரிய வருமானங்களோ இல்லாதபடியால் நானும் அறிவுஜீவிக் கூட்டத்தின் அங்கத்தினனே.

நாடகத்தில் நண்பர்கள் விழுந்து புரண்டு மண்ணென்றும் கல் என்றும் பாராமல் 'ஏகாதிபத்தியத்துக்கு எதிராக’ நடித்துக்கொண்டிருந்தார்கள்.

சந்திரா லேசாகக் கண்ணீர் மல்கி, ''பாடி லாங்குவேஜ் நல்லா இருக்கு'' என்றார்.

சுதமதியை மையமாக வைத்த நாடகம் அது. நாடகத்தின் பிரதான அம்சம் வாழ்க்கைதான். அதாவது துயரம். கொஞ்சம் சிறப்புப்படுத்திச் சொல்வ தென்றால் பெண்ணின் துயரம். இந்த சுதமதி மணிமேகலைக் காப்பியத்தில் வரும் சுதமதி. புராண புராதன சரித்திர இதிகாசங்களில் 'வள்ளி’ நீங்கலாக துயரப்படாத பெண்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?

சித்திரவல்லி, தமயந்தி, சீதை, நல்ல தங்காள் வரை அனைவரின் துயரத்தையும் நாடகம் பேசியது. பண்டைய வழக்கப்படி சுதமதியின் துயரம் என்று கூடப் பேரிட்டிருக்கலாம்.

நாடகம் பூடகப் பொருளில் நர்மதா அணை முதல் அணு உலை வரை பலதையும் பேசித் தீர்த்துக் கொண்டி ருந்தது.

சுதமதியின் அறுபதடிக் கூந்தலில் துயரத்தின் நறுமணம் அகிலெனப் பரிமளித்து அகிலத்துப் பெண் களெல்லாம் காலகாலமாகச் சூடுவது சுருள்வில்லெனவே முடிவில்லாத் துயரம் ....’ (இது நாடக எபெக்ட்)

சுருள் வில் நீண்டு சோகம் ஒலித்துக்கொண்டிருக்கையில் ''டீக்கடைக்குப் போய்விட்டு வருவோமே?'' என்றார் சந்திரா. சரக்கு இருக்கிறது. முறுக்கு தீர்ந்து விட்டது. நானும் சந்திராவும் டீக்கடைக்குக் கிளம்பினோம். நாடகம் இப்போது ஒலி வடிவமாய் மாறிவிட்டது. தேநீர்க் கடை எங்கிருந்தோ இடம் பெயர்ந்து அன்றைய தினத்துக்கென இரண்டு எமர்ஜன்சி மின்கல விளக்குகளுடன் பூத்திருந்தது.

தேநீர்க் கடைக்குப் போகும் வழி யில் சந்திரா, ''உங்கள் நண்பனின் நாடகத்தில் ஏன் பெண்களே நடிக்க மாட்டேனென்கிறார்கள்? எல்லோரும் குடுமி வைத்த ஆண்கள்?'' எனக் கேள்வி எழுப்பினார். நண்பனின் நாடக ஆக்கத்துக்குப் பெண்கள் உதவி புரிகிற அளவு அவனோ அல்லது மாநிலமோ வளரவில்லை. ஆனால் அதை நேராகச் சொன்னால் கலை மனது ஏற்றுக்கொள்ளாது. இது விவகாரத்தில் அவனது சார்பாக நின்று அவன் அளிக்கும் பதிலையே சந்திராவுக்கு அளித்தேன்.

''தமிழ் நாட்டில் பெண்கள் வேஷத்தை ஆண்கள் கட்டி ஆடுவது என்பது தொன்றுதொட்ட வழக்கமாகும். அந்தப் புனைவுக்குப் பெயர் ஸ்த்ரீ பார்ட்.''

இருட்டின் நடைபாதையில் இந்தப் பதிலை அவர் ஒப்பினாரா, இல்லையா என்பதை அவரது முகத்திலிருந்து வாசிக்க முடியவில்லை.

தேநீர்க் கடையில் அவருக்கு வேண்டி யதை அவர் வாங்க, நான் தேநீர் குடித் தேன். தேநீர்க் கடையை ஒட்டியே நாடகத்துக்கான வினைல் பேனர் கட்டப் பட்டிருந்தது. கிடைக்கும் குறைந்த ஒளியில் அதில்காணும் வண்ணச் சரிவுகள் மொத்தப் பரப்புக்கும் ஒரு திருவிழா தோற்றத்தைக் கொடுத்தது.

ஆவலாக சந்திரா அதன் அருகில் சென்று நாடகத்தின் பேரைப் பார்த்து விட்டு என்னை வாசிக்கச் சொன்னார். நான் வாசித்தேன்.

'பெண்ணணங்கு''

எழுத்து முனைகளின் செவ்வகத்தை மறுத்து உருளைத்தனமான எழுத்துருவில் இதை வடிவமைத்திருந்தார்கள். சந்திராவின் போதை அளவுக்கும் அந்த அரை இருட்டுக்கும் அவருக்கு பத்திலிருந்து இருபது வரை படலமான சைபர்கள்தான் காட்சியளித்திருக்கும் என நம்புகிறேன். 'பெண்ணணங்கு’ எனத் தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டவரின் விவாத தர்க்க மூளை விழித்துக்கொண்டது. இதில் பெண் என்பது சந்திராவுக்குத் தெரிந்திருந்தது. என்ன இருந்தாலும் கலைஞன் அல்லவா? ஆதாரமான விஷயங்களை எந்த மொழியில் சொன்னாலும் புரியும். இந்த 'அணங்கு’தான் அவரை சிரமத்தில் இடறியது. எனக்கும் அதுபற்றி துலக்கமான சித்திரம் கிடையாதென்றாலும், '’ஒரு விதமாக அப்சரஸ்சுகளுக்கும் தேவதை களுக்கும் இடைப்பட்ட மாதிரி'' என்று சொன்னவன், அத்தோடு நிற்காமல் ''அணங்கு கொல் ஆய்மயில் கொல்'' எனும் அய்யன் வள்ளுவரின் குறளையும் சொல்லிவைத்தேன். இது துலங்கும் வெளிச்சத்தின் மீது கரி பூசினாற்போல ஆயிற்று.

ஆய் மயில் என்பது அவரது போதை நாவுக்கு உற்சாகம் ஊட்டியிருக்க வேண் டும். யாரையோ அழைப்பது போன்ற பாவனையில் சிலதடவைகள் 'ஆய் மயில்! ஆய் மயில்!’ என உச்சரித்துக் களைத்தார்.

''சரி. இந்த கொல் அப்படின்னா என்ன?''

''அது ஓர் அசைச் சொல்.''

ஆனால் கொல் என்பது 'கில்’ என்கிற ஆங்கிலத்துக்கு நிகரானது என்பதும் சந்திராவுக்குத் தெரிந்திருந்தது. எனது வாக்குமூலத்தை சந்திரா ஏற்கவில்லை.

''கொல... கொலவெறி. ஐ நோ பிரதர். கொல்... ப்ச். எனிவே இது பெண்களின் மீதான எடர்னல் ஒடுக்கு முறையைப் பேசுது, ஓகே?'' இது தவிர பேனரில் காணப்பட்ட சூன்யங்களிலிருந்து பெண் களின் நிலைக்குத் தாவி தத்துவ உரை நிகழ்த்தினார். ''உண்மையில் சூன்யம் என்பது எதுவுமில்லை. சூன்யம் இல்லாமலும் எதுவுமில்லை. யூ ஸீ... அதுதான் பெண்கள்.''

நான் சந்திராவிடம் இப்போது சரணடைவது தொண்டையில் நனைந்த தேநீரின் ஈரத்தைக் காபந்து பண்ணிக்கொள்வதாகும். மறுபடி நாடகத் திடலுக்கு வந்தோம். அரங்கம் என்பதைக் காட்டிலும் திடல் என்பதே இச்சூழலுக்குப் பொருத்தமானது.

நாடகத்தின் இறுதிக்காட்சி. நாங்கள் மீளும் போது வந்திருந்தது. சந்திரா கண் கலங்கினார். கூட்டம் கைதட்டியது.

''நான் உன் நண்பனைப் பார்க்க வேண்டும்.''

சந்திராவை நாடக நண்பனிடம் அழைத்துப் போகையில் நானொரு பற் சக்கரத்தின் பட்டைக் கண்ணியாக மாறவிருக்கிறேன் என்பதை உணர்ந்தி ருக்கவில்லை.

நண்பன் நாடக இயக்குநன் ஒப் பனையைக் கலைத்துக் கொண் டிருந்தான். ஒப்பனையைக் கலைப்பது என்பது சரியான சொல்லா தெரிய வில்லை. இனி ஒரு முறை கூந்தலை நேர்த்தி செய்து கொண்டு வேட்டியை மாற்றிவிட்டு பேன்ட் சர்ட்டுக்கு மாறவேண்டும். அவ்வளவே.

நவீன கோலத்தில் எதிர்வந்த நண் பனை ஆரத் தழுவினார் சந்திரா. பின் கைகொடுத்தார். உலுக்கிக் குலுக்கினார் கரங்களை. ''உங்க நாடகத்தை எங்க ஊர்ல போடறோம். நான் பொறுப்பு. இவரு சப்போர்ட் பண்ணுவாரு. ஓகே..?'' இந்த அறிவிப்பின்போதுதான் அவர் கட்டிப் பிரிந்தது, கைகுலுக்கியது, ஓகே என்கிற கடைசி வார்த்தைக்கு என்னை இடது கையால் அரவணைத்தது... அவ் வளவும் நடந்தது. கலை நிகழ்வில் மின்னற் கணப்பொழுது அடைகிற ஒளியின் மிகைதூரம். மீதியுள்ள இர வில் நாடகத் திட்டத்துக்கான முன் வரைவு உண்டாகிவிட்டது. மறுநாளின் காலைக் கதிரவன் அயல் மாநிலத்தில் பெண்ணணங்கை நிகழ்த்திக் காட்ட தோன்றாத் துணையாக பணித்துவிட்ட கடமையை கிரணங்களாய் அனுப் பினான்.

பகலில் பக்கத்து மாநிலத்துக்கு பேருந்து ஏறினோம். போன கையோடு 'போயேறி’களும் கலைக் காதலர் களுமான ஐந்து பேர் கூடி ஒரு அமைப்பை உருவாக்கினோம். இந்த ஐவரும் வெவ்வேறு வகைகளில் நாடக இயக்குநனுக்கு நண்பர்களாகவோ, அபிமானிகளாகவோ இருந்தோம். ஆகவே அமைப்பைக் கட்டுவதில் பிரச்னை இல்லை. அமைப்புக்கு முதலில் 'குரல்கள்' எனப் பேரிட்டு... ஐந்து அங்கத்தினர்கள் கூடினதால் 'விரல்கள்' என்கிற பெயர் உறுதிப்பட்டது. விரல்களுக்கிடையே கடைசி வரை புரிந்துணர்வு இருந்தது நாடகத்தை சிறப்பாக நடத்த உதவியது.

நாடகத்துக்கு இடம், டிக்கெட் விற்பனை, வி.ஐ.பி-க்கள் ஏற்பாடு பலதையும் சந்திரா ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தபடியால் நாங்கள் ஆசுவாசத்தை உணர்ந்தோம்.

சந்திராவுடன் ஒருங்கிணைந்து செயல் களை முன்னெடுக்க.... ஒரே ஒரு விரலை பிய்த்து அனுப்பினோம். சீனிவாசன். சீனி.

சந்திராவுடன் பணியாற்றுவதில் என்ன நேர்ந்ததென்றால், கட்டெறும்பு ஒன்றிடம் சீனிக்கு என்ன நேருமோ அதுவே நேர்ந்தது.

காப்பிக் கடைகளில், பார்க்குப் பெஞ்சுகளில் என பல இடங்களுக்கு வருவதாய் ஒப்புதல் அளித்துவிட்டு சந்திரா வராமல் போய்விடுவார். 'என்னை இதிலிருந்து கத்தரித்து விடுங்கள்'' என கண்ணீர் மல்க சீனி நின்றபோது... தனசேகரன் ''நாளைக்கு அவர் வர்றார்'' என்றான் ஒரு தேவ அசரீரிபோல்.

தனசேகரன் ஒரு ராஜ ரிஷியைப்போலச் செயல்பட்டான்.

'நாளைக்கு இம்பீரியல் பாருக்கு வரச்சொல்லி ஒரு போனைப்போடு'' என்றான் சீனியிடம். இந்தத் தந்திரம் பலித்தது. சீனியுடன் சேர்த்து மூன்று விரல்களும் காத்திருந்த பாருக்கு சொன்ன நேரத்துக்கு சந்திரா வந்தார்.

அந்தச் சந்திப்பு கலங்கலாகவும் கலகலப்பாகவும் முடிவடைந்த மாலை நேரத்துக்குள் பெரு நகரின் கலைக் கலாசார முக்கிய அடையாளமான அரங்கத்தை உறுதிப்படுத்தி தேதி குறித்தார்.

அன்றைக்கே தமிழில் பத்திரிகையின் வார்த்தை வடிவத்தை எழுதி வாங்கிக் கொண்டு ஆங்கிலம் மற்றும் அவரது தாய்மொழி என அனைத்திலும் இன்விடேஷன் அடிப்பதும் டிக்கெட் புத்தகங்கள் அடிப்பதும் தனது பொறுப்பு என்றார்.

திரும்பவும் சீனியின் அலைச்சல்கள் தொடங்கின. எப்போது கேட்டாலும் கணினியில் தயார் நிலையில் மேட் டர் இருக்கிறது என்றும், எடுத்து அச்சுக்குக் கொடுத்தால் மூணு மணி நேரத்தில் அனைத்தும் தயார் என்றும் கூறிக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில் வேறொரு பிரச்னை வந்து சேர்ந்தது. சந்திராவுக்கு நட்பு வட்டம் பெரியது. ஏற்கெனவே அந்த ஊரில் பத்ம விருதுக்காரர்கள், சாகித்ய அகடாமி வென்றோர், ஞான பீடங்கள் என நிறைந்திருந்தார்கள்.

தினந்தோறும் இரவு போன் செய்து அவர் வர்றார், இவர் வர்றார் எனப் பூச்சாண்டி காட்டியதில், இத்தனை பேரை அழைப்பிதழில் போட்டால் தெக்கத்திக் கல்யாணப் பத்திரிகை மாதிரி ஆகிவிடுமே என்றும் நாடகம் நடத்த நேரம் போதாதே என்றும் பயம் மேலிட்டது. சந்திரா நினைத்தால் அப்போது ஆடும் நாற்காலியில் இருந்த முதலமைச்சரைக் கூட அழைத்து விடுவார்போல இருந்தது.

ஒரே ஒரு தித்திப்பான சந்திப்பில் அழைப்பிதழ்கள், டிக்கெட்டுகள் வி.ஐ.பி-க் கள் பற்றிய தீர்மானம் அனைத்தையும் ஒழுங்கு செய்துவிடுவது என தனசேகரன் ஆலோசனை அருளினான்.

அடுத்த கூட்டம் கணினியறை ஒன்றில் நடந்தது. கச்சா வடிவில் உருவாக்கி வைத்திருந்த அழைப்பிதழ்களை கணினித் திரையில் சந்திரா காட்டினார்.

அட்டைகளின் பின் புலங்கள் யாவும் வோட்கா, ஜின் நீங்கலான மதுவகைகள் என்னென்ன நிறம் கொண்டிருக்குமோ அந்த வகையிலேயே இருந்தன. சந்திராவின் வாழ்க்கையில் சில நிறங்கள் நிரந்தரித்துவிட்டன. ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால் திறந்த மனமும் காதுகளும் அவருக்கு இருந்தன. ஆகவே, எங்களுக்கு ஒப்புகிற அளவில் வடிவமைத்து அழைப்பிதழ்களையும் டிக்கெட் புக்குகளையும் வாங்கினோம். கணிசமான அளவு டிக்கெட் விற்றுத் தருவதாய்ச் சொல்லி இருபது சதவிகித அழைப்பிதழ்களையும் டிக்கெட் புத்தகங்களையும் சந்திரா வாங்கிக் கொண்டார். டிக்கெட் விற்பதை அவர் ஒரு வேலையெனக் கருதிச் செய்யமாட் டார் என ஏகமனதாக எண்ணினோம். எண்ணிய எண்ணியாங்கே நடந்தது. ஆயினும் விழா முடிவு வரை அவரது தொடர்ந்த பங்களிப்பு அபரிமித மானதே.

அழைப்பிதழ் கைக்குக் கிடைத்ததும் உயரிய திட்டங்களிலும் கற்பனைகளிலும் ஒன்றாக 'தமிழ்ச் சங்க’த்தை அணுகி ஒரு பத்திருபதாயிரத்துக்காவது வழிவகை செய்வது என நினைத்து ஒரு மங்கல நாளில் தமிழ்ச் சங்கத்துக்குப் போனோம். நாங்கள் போன அன்றைக்கு சுயம்வரம் நிகழ்ச்சி ஏற்பாடாகி சங்க அரங்கம் பட்டொளியால் பளபளத் துக்கொண்டிருந்தது. 'பெண்ணணங்கு’ என்ற பேரைப் பார்த்துவிட்டு உடனடியாக ஒருவர் ''பெண்ணுக்கு எதாவது சடங்கு வச்சிருக்கீங்களா?'' என்று கேட்டார். நீண்ட நாளாய் பையனுக்குப் பெண் கிடைக்காத அப்பாவாக அவர் இருக்கக்கூடும். அடுத்து சிறியதொரு அவகாசத்தில் (என்ன இருந்தாலும் நாடகம் முத்தமிழில் ஒன்றல்லவா?) செயலாளரைப் பார்த்து அழைப்பிதழை உரிய மரியாதைகளுடன் கொடுத்தோம்.

படித்துப் பார்த்துவிட்டு அவர் ''நாடகம் இலவயமா நடத்தறீங்களா?'' என்றார். அவர் என்ன கேட்கிறார் என்பது முதலில் வசப்படாமல் திகைத்து, பிறகு இலவசம் என்பதைத்தான் இலவயம் என்று கூறுகிறார் எனத் தெளிந்தோம்.

''டிக்கெட் போட்டுத்தான்....'' என்று கத்தைகளை தனசேகரன் அவரது கையில் திணிக்க முயன்றான். 'டிக்கெட்’ என்று தனசேகரன் கூறியதை அவர் ரசிக்கவில்லை. ஏற்கெனவே கையில் வைத்திருந்த கறுப்புப் பையினை நாகரிகத் தடுப்பானாகப் பாவித்தும் பயன்படுத்தியும் அவர் எங்கள் பொருட்களைப் பெற்றுக்கொள்ளாமல் நழுவினார்.

'போன மாதந்தான் மாணாக்கர்களுக்கு ஏடுகள், சுவடிகள் இலவயமாக் கொடுத்தோம். இப்ப புதிதா எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் உதவவோ, உறுதுணையா இருக்கவோ, உபகாரம் பண்ணவோ இயலாத சூழ்நிலைல இருக்கோம்'' என்று மோனையால் கலங்கடித்தார். ஒற்றை டிக்கெட்டும் விற்கமுடியவில்லை. கடைசியில் தனசேகரன் வி.ஐ.பி. டிக்கெட் ஒன்றை அவரிடம் நல்கி ''பரவயில்லை அய்யா! இது உயர்திருவாளர்களுக்கான இலவய அனுமதிச் சீட்டு. கட்டாயம் கலந்துகொண்டு கௌரவப்படுத்துங்கள் எங்களை'' என்று சங்கச் செயலரை திகைப்பிலாழ்த்தினான்.

அந்த முற்றுகையின் போது எங்கள் சங்கத்தின் திருமணமாகாத விரல்களுக்கு அடுத்த சுயம்வரத்தில் நாமும் கலந்துகொள்ளலாம் என்கிற எளிய நப்பாசையைத் தவிர வேறெதுவும் பிரயோசனமாக விளையவில்லை. எங்கள் நவீன நாடகத்துக்கும் தமிழ்ச் சங்கத்துக்கும் இடையே ஒரு பஃறுளியாறும் பல மலைத்தொடர்களும் படுத்துக்கிடந்தன.

தமிழ்ச் சங்கத்தால் விளையாத நன்மை சந்திராவால் விளைந்தது. நாடகத்துக்கென நண்பனான இயக்குநன் முந்தைய நாளிலேயே வந்தபோது அன்றைய மாலைநேர ஆங்கில தினசரியொன்றில் அவனது ஒரு பேட்டி வருகிற மாதிரி ஏற்பாடு செய்துவிட்டார். அந்தச் செய்தியின் பரவல் சில பத்தாயிரங்களின் நட்டத்தை எங்களுக்குக் குறைத்தது.

பேட்டியில் நண்பன் பலவிதமான கருத்துகளை அள்ளி விதைத்தான். ஆங்கிலத்தில் மொழிக் குறைபாடு நண்பனுக்கு உண்டு. பேட்டியாளருக்கு புரிதல் குறைபாடு. இரண்டும் இணைந்ததில் அவன் ஸ்திரீ பார்ட் எனக் குறிப்பிட்ட இடங்கள் அனைத்தும் ஸ்ட்ரீட் பார்ட்... ஸ்ட்ரீட் பார்ட் என்றே அச்சில் வந்திருந்தது. தெரு நாடக இயக்கம் வலுவான அம்மாநிலத்தில் இந்த சுவாரசியமான பிழையினால் பேட்டியின் ஆற்றொழுக்குக்கு யாதொரு பங்கமும் நேரவில்லை.

விழா மாலைப் பொழுதில் அளவாகப் பேசிய நான்கு முன்னிலையாளர்களுடன் திருநங்கை கமலையும் அழைத்திருந்தோம். கமல், கமலா என அறியப்படுவதை விரும்பியவராயிருந்தார். மாநிலத்தின் சொல்லத்தக்க மாற்றுப் பாலினரின் செயற்பாட்டாளர்.

அரங்கை ஒழுங்கு செய்து ஒலிஒளி அமைப்புகள் இருக்கைகள் அனைத்தும் தயாரான நிலைவரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க - குறிப்பாக விழா ஆரம்பக் கட்டமான வாழ்த்துரை வகையறாக்களை - ஒருவர் வேணுமென்பது எங்கள் புத்தியில் தோன்றவே இல்லை.

சந்திரா அதற்கும் தயாராக வந்திருந்தார். பேன்ட் சர்ட் அணிந்த தனது பெண் தோழியை அழைத்து வந்து 'இவர் தான் நம்ம ஃபங்ஷனை தொகுக்கப் போகிறார்’ என மகிழ்ச்சி தந்தார்.

அந்தப் பெண் திருத்தமான உருவம், பருவம், புருவம் ஆகியவற்றைக் கொண்டிருந்தார். ஆங்கிலமும் போதுமான அளவு திருத்தமாகவே இருந்தது. நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. வாழ்த்துரையின் கடைசியாளராக கமலா இருந்தார். தொகுப்பாளினிப் பெண் அளவுக்கு கமலா திருத்தமாக இல்லாததாலோ என்னவோ மேடையில் மிஸ்டர் கமல் என்று குறிப்பிட்டுவிட்டார். கமலா மேடையில், 'நான் மிஸ் கமலா என அறியப்படுவதை விரும்புகிறேன்'' என்றார். கூட்டம் கைதட்டி ஆமோதித்தது. அவர் பேசி அமர்ந்ததும் தொகுப்புப் பெண் திருத்தமாகவும் அழுத்தமாகவும் தேங்க் யூ மிஸ்.கமலா எனச் சொன்னதும் கூட்டம் கை தட்டி ஆரவாரித்தது. அதற்குப்பின் நாடகம் தொடங்கி இனிதே நிறைவுற்றது.

நாடகத்துக்கு இடையில் தொகுப்பா ளினி பாத்ரூம் போகும்போது வழுக்கி விழுந்து ரத்தக் காயம் பட்டுக்கொண்டார். சந்திரா முழு நாடகத்தைப் பார்க்காமல் அவரை அழைத்துக்கொண்டு ஆஸ்பத் திரிக்குப் போனார்.

அப்புறம் கொஞ்ச நாள் சந்திரா என்னிடம் முகம் கொடுத்துப் பேசாமல் இருந்தார். ஒருநாள் போனில், ''நாம் நாடகம் அரேஞ்ச் பண்ணுனதுல எதோ துரதிர்ஷ்டம் இருக்கு. இல்லீனா என் ஃப்ரண்டுக்கு அடிபட்டிருக்காது'' என்றார்.

இனி சந்திராவிடம் பேச்சு வார்த்தைகள் முடிந்தன என்று நினைத் துக்கொண்டிருந்தேன். போனமாதம் போன் செய்தார்.

''நெக்ஸ்ட் மன்த் ஸ்ரீகாகுளத்தில் ஒரு தியேட்டர் ஃபெஸ்டிவல். போலாமா?''

நாடகக்காரன்... நாடகக்காரன்தான்!