கை தோண்டும் ஆழத்திலேயே கிடைத்தது நீர்
பின் அம்மாவை நின்றபடி புதைக்கும் ஆழத்திற்குப் போனது
இப்பொழுதோ நம் மொத்தக் குடும்பத்தையும் நின்றபடி புதைத்தாலும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தாகத்துக்கு எட்டிவிடாத தொலைவிலிருக்கிறது.
நீர்க்காகங்களோடு எங்கோ போய்விட்டார் அப்பா
நீரொழுக ஆறுகள் லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுகின்றன
மீன்கொத்திகள் கூழாங்கற்களைத் தின்னப் பழகிவிட்டன
நட்சத்திரங்களுக்கும் நீருக்கும் ஏதோ தொடர்பிருக்கிறது
சூரியன் சந்தேகத்தோடு எழுந்து குழப்பத்தோடு மறைகிறது.
மனிதர்கள் வயிற்றில் ஈரத்துணியைச் சுற்றிக்கொள்வதைப்போல
கழுகுகள் ஆகாயத்தைச் சுற்றுகின்றன.

கிடைத்ததை எல்லாம் உண்டு
வயிறு வீங்கிச் சாகிற கால்நடைகளிலிருந்து
தோலிசைக் கருவிகளை ஆக்கி முழக்கலாம் நாமின்று
அதோடு முதல்முறையாக நதிக்கரைப் பக்கம் வந்தபோது
நாம் நாகரிகமற்றவர்களாயிருந்தோம் என்பதையும் நினைவுகூர்ந்து பாடலாம்
நீர் விலையேறிவிட்டது
ஏன் எதற்கென்றெல்லாம் கேட்கக் கூடாது
ஆத்திரத்தில் ஒருவன் நாக்கைப் பிடுங்கி மேகத்தை நோக்கி வீசுகிறான்
மொத்த ஊரையும் நின்றபடி புதைத்துக்கொண்டிருக்கிறோம்
ஒரு நீள மண்புழுவாகப் பூமியினாழத்தில் நீர் தேடிப் போகிறோம்.
நீரின் கதைக்கும் இம்மக்களின் கதைக்கும்
எம் சிறுபிள்ளையே
இந்நிலத்திற்கு மேலே நீ சாட்சியாயிரு
கண்ணீரை வீணாக்கிவிடாதே. கரித்தாலும் குடி. உயிர்த்திரு.
நீர்க்காகங்கள் தன் பெயரிலிருக்கும் நீரைப் பருகுகின்றன
குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன
வேகவேகமாகப் பறந்து
பெயர்களுக்கு முன்னிருக்கும் நீர் குறித்து
உயிர்கள் யாவிற்கும் அவை நினைவூட்டுகின்றன.
நீர்க்காகங்கள் சொல்லின,
அப்பா மேற்கு நோக்கிப் போய்
ஒருவழியாக சூரியனைத் தொட்டுவிட்டார்
நீர் விற்கப்படுவதற்கு எதிராக
பொருள்மிக்கதோர் தற்கொலையை நிகழ்த்திவிட்டார்.
நீர்க்காகங்களுக்கு
அவற்றின் பெயர் குறித்துச் சொன்னதும்கூட அவர்தான்.
வானிலிருந்து வந்து விழுகிறது ஒரு நாக்கு
அதில் இன்னும் உயிர் துடித்துக்கொண்டிருக்கிறது
எம் சிறுபிள்ளையே
அதுதான் இக்கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறது
வாசித்துக்கொண்டும்.