மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும் - 13

#BanTasmac தொடர்பாரதி தம்பி

துவின் கொடுமைகள் 'இவைதான்’ என விவரிக்க முடியாத வரம்பைக் கடந்துவிட்டன. குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் மதுவினால் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்பது சொல்லிமாளாத துயரம். நேரடியாகப் பள்ளிச் சிறுவர்களே குடிப்பது ஒரு வகை. இது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பல ஊர்களில் பள்ளிச் சீருடையுடன் எந்தத் தயக்கமும் இல்லாமல், டாஸ்மாக் வாசல்களில் பாட்டிலும் கையுமாக நிற்கின்றனர். போதையின் உச்சத்தில் மயங்கி, சரிந்து, வீழ்ந்துகிடக்கிறார்கள். இது பார்க்கப் பார்க்க வயிறு எரியும் வேதனை. 

சென்னை, பெருங்குடியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியை விவரிப்பதைக் கேளுங்கள்...

''ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒருநாள் ஸ்கூலுக்கு போன் வந்தது. 'உங்க ஸ்கூல் யூனிஃபார்மோடு ஒரு பையன் ரோட்டுல விழுந்து கிடக்கிறான்’னு சொன்னாங்க. நானும் இன்னொரு டீச்சரும் பதற்றத்தோடு வண்டியை எடுத்துக்கிட்டுப் போனோம். ஒரு டாஸ்மாக் கடையில இருந்து நூறு மீட்டர் தள்ளி லாரிகள் நிறைய நிறுத்திக்கிடக்கு. அதுக்குப் பக்கத்துல, ரோட்டு ஓரத்துல ஒரே சாக்கடை. துர்நாத்தம் தாங்க முடியலை. அங்கே அந்தப் பையன் விழுந்துகிடக்கான். பேன்ட், சட்டை எல்லாம் சாக்கடை, சகதி. எங்க ஸ்கூல்ல ப்ளஸ் ஒன் படிக்கிற பையன். மனசு கேட்கலை. தட்டி எழுப்புனா, முழு போதையில இருக்கான். நாங்க சொல்றதை அவனால புரிஞ்சுக்கக்கூட முடியலை. தூக்கி வண்டியில உட்காரவெச்சா, பொத்துபொத்துனு நழுவிக் கீழே விழறான். அப்புறம் ஒரு ஆட்டோவுல தூக்கிட்டு வந்தோம். வர்ற வழியிலயே என் மடியில வாந்தி எடுத்துட்டான். பள்ளியில, மத்த பசங்களுக்குத் தெரியாத மாதிரி ஒரு ஓரமா அவனை இழுத்துப்போட்டு, தண்ணியை ஊத்திக் கழுவினோம். அங்கேயே ஒரு ரூம்ல தனியா படுக்கவெச்சுட்டோம். சாயங்காலம் பள்ளி முடியுற நேரத்துலதான் போதை தெளிஞ்சு எழுந்தான்.

குடி குடியைக் கெடுக்கும் - 13

அந்தப் பையனோட அப்பா, குடிச்சு குடிச்சே செத்தவர். அம்மா மட்டும்தான். அவங்க ஒரு ஹோட்டல்ல பாத்திரம் கழுவுற வேலைபார்க்கிறாங்க. அந்த அம்மாவை வரச் சொன்னோம். வந்து அவங்க அழுதுக்கிட்டே நின்னதைப் பார்க்க பரிதாபமா இருந்தது. பிள்ளையைப் பக்கத்துல இருந்து பாதுகாப்பா பார்த்துக்கிற வாழ்க்கைச் சூழல் அவங்களுக்கு இல்லை. காலையில வேலைக்குப் போனா, நைட்டுதான் வர முடியும். வீட்டுச் சூழ்நிலையைப் புரிஞ்சுக்கிட்டு பிள்ளைங்கதான் பக்குவமா நடந்துக்கணும். ஆனா, சுத்தியும் குடிகாரனா இருக்கும்போது இந்தப் பசங்க, தானா அதுல போய் விழுந்துடுறாங்க. வீட்டுலேர்ந்து ஸ்கூலுக்கு வர்ற வழியில குறைஞ்சது பத்து டாஸ்மாக் கடைகளாவது இருக்கும். அதை எல்லாம் தினமும் பார்க்கிறாங்க. எல்லா சினிமாவுலயும் குடிக்கிற காட்சியா வருது. டி.வி-யைத் திறந்தா அதையேதான் திரும்பத் திரும்பக் காட்டுறாங்க. குடி, தப்பானதுனு அவங்களால நினைக்கக்கூட முடியலை. 'ஸ்டூடன்ட்ஸ் குடிக்கிறாங்க’னு மாணவர்களை மட்டும் குற்றவாளியாக்க நான் விரும்பலை. அவங்க குடிக்கிறாங்கதான். ஆனா, அதுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கிறது அரசாங்கமும் சமூகமும்தான். 'மாணவர்கள் சுயக்கட்டுப்பாட்டோடு நடந்துக்கணும்’னு சொல்லலாம். அப்படின்னா, ஒரு அரசாங்கத்துக்கு சுயக் கட்டுப்பாடு வேணாமா?'' - ஒரு தாயின் பரிவுடன் பேசத் தொடங்கி, ஓர் ஆசிரியரின் அக்கறையுடன் சிக்கலை அணுகி, சமூகப் பொறுப்புள்ள குடிமகளாக அரசை நோக்கி கேள்வி எழுப்புகிறார் அந்த ஆசிரியை.

இவர் மட்டும் அல்ல... தமிழ்நாடு முழுவதும் பல ஆசிரியர்களுக்குத் தங்கள் பள்ளி மாணவர்களுடன் இத்தகைய அனுபவம் இருக்கிறது. எல்லோரும் இத்தனை பொறுமையுடன் இந்தச் சிக்கலை அணுகுவது கிடையாது; அப்படிச் செய்யவும் முடியாது.

குடி குடியைக் கெடுக்கும் - 13

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் ஆறு மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வந்தனர். ஆசிரியர் பாடம் நடத்த, இவர்கள் ரகளை செய்ய, நிலைமை எல்லை கடந்தபோது வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியரிடம் முறையிட்டார். போதை தலைக்கு ஏறிய நிலையில் இருந்த மாணவர்களைக் கண்டு ஆத்திரம் அடைந்த அவர், ஆறு மாணவர்களின் பெற்றோர்களையும் பள்ளிக்கு வரவழைத்து உடனடியாக டி.சி கொடுத்து அனுப்பினார். பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையிட்டனர். அவர், 'மாணவர்களை மன்னித்து பள்ளியில் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என அறிவுறுத்தினார். ஆனால், தலைமை ஆசிரியர் கலெக்டரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். அந்த வட்டாரத்தில் மிகவும் நற்பெயர் எடுத்துள்ள அந்தப் பள்ளி, அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவிகிதத் தேர்ச்சிபெறக்கூடியது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் இடத்தில் இதுபோன்ற சிலரை அனுமதித்தால், அது மற்ற மாணவர்களுக்கு எதிர்மறை முன்னுதாரணம் ஆகிவிடும் என அந்தத் தலைமை ஆசிரியர் கருதியிருக்கக்கூடும். ஒரு சிக்கலை அணுகும்விதத்தில் ஒவ்வொருவருக்கும் ஓர் அணுகுமுறை இருக்கும். இந்த ஆசிரியர் இதை இவ்வாறு அணுகியிருக்கிறார்.

விருதுநகர் மாவட்டப் பள்ளி ஒன்றில் இதேபோல் நடந்தது. குடித்துவிட்டு வந்த மாணவர்கள் டி.சி கொடுத்து அனுப்பப்பட்டனர். ஆனால், அந்த மாணவர்களில் ஒருவரது மாமா உள்ளூர் சாதி சங்கப் பிரமுகர். சாதி கட்சி ஒன்றிலும் பொறுப்பில் இருக்கிறார். அவர் அடுத்த நாள் பள்ளிக்கு வந்து முதலில் பணிவாகக் கேட்டுப்பார்த்தார். மறுத்ததும், 'பையனைச் சேர்த்துக்கொள்ளாவிட்டால், இதை சாதிப் பிரச்னையாக மாற்றுவேன்’ என வெளிப்படையாகச் சவால்விட்டார். ஆசிரியர்கள் பாடம் நடத்தத்தான் முடியும். இந்த ஏழரைகளை என்ன செய்வது? வேறு வழி இல்லாமல் அந்த மாணவர்கள் மறுபடியும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இப்படி, குடித்துவிட்டு வகுப்புக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2,500 மாணவர்கள் படிக்கிறார்கள். மதிய உணவு இடைவேளையில் ப்ளஸ் டூ மாணவர்கள் மூன்று பேர் வெளியில் சென்று குடித்துவிட்டு வகுப்புக்கு வந்தார்கள். வகுப்பில் ரகளைசெய்து, வாந்தி எடுத்து, யார் சொல்லியும் அவர்கள் அடங்கவில்லை. கடைசியில் போலீஸ் வந்து மூன்று பேரையும் வகுப்பில் இருந்து வெளியேற்றியது. இப்படிக் குடித்துவிட்டுவரும் மாணவர்கள் வெறுமனே போதையில் சலம்பி மட்டும் கொண்டிருப்பது இல்லை. வளரிளம் பருவத்தில் இருக்கும் அவர்கள், போதையில் மாணவிகளைச் சீண்டுகின்றனர். மிகமிக ஆபாசமான சொற்களால் கமென்ட் அடிக்கிறார்கள். மாணவிகளை மட்டும் அல்ல... ஆசிரியைகளை நோக்கியும் அந்த ஆபாசச் சொற்கள் பாய்கின்றன. நமது சினிமா ஹீரோக்கள்தான் பெண்களைக் கேவலப்படுத்துவதற்கு என்றே, ஒரு படத்துக்கு ஒரு பாடல் வீதம் பாடி சமூகச் சேவை செய்கிறார்களே... அந்தப் பாடல்களைப் பாடி கூனிக் குறுகச் செய்கிறார்கள். முக்கியமாக, பெரும்பாலான மாணவர்களின் கைகளில் நவீன ரக டச் போன் இருக்கிறது. அதில் தவறாமல் ஆபாசப் படங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, திருட்டுத்தனமாகப் படம்பிடிக்கப்பட்ட யாரோ சிலரின் ரகசிய அந்தரங்கக் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். வகுப்பில் அமர்ந்துகொண்டு அந்தக் காட்சிகளைப் பார்க்கிறார்கள். அந்த வயது, போதை, ஆபாசப் படம் எல்லாம் சேர்ந்து மாணவர்களின் மனதைக் குப்பைக்கிடங்காக மாற்றுகின்றன. ஆசிரியர்களுக்குத் தெரியும், அந்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று. தட்டிக்கேட்டால் என்ன ஆகும் என்பதும் தெரியும். அதனால், ஓர் எல்லை வரை கண்டும் காணாமல் இருக்கிறார்கள். வரம்பு மீறும்போது அது சிக்கலாக வெடிக்கிறது.

குடி குடியைக் கெடுக்கும் - 13

பள்ளி மாணவர்களுக்குக் குடிப்பதற்கான பணம் எங்கிருந்து கிடைக்கிறது? முடிந்தவரை வீட்டில் ஏதேதோ பொய் சொல்லி காசு வாங்குகின்றனர். நான்கைந்து பேர் சேரும்போது யாரோ ஒருவரிடம் பணம் இருந்துவிடுகிறது. அது அன்றைய குடிக்குப் போதுமானது. ஆனால், குடியே ஒரு பழக்கமாக மாறி, அடிக்கடி குடித்தாக வேண்டிய நிலைக்கு வரும்போது பணத்துக்காகத் திருடவும் தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் படிப்பு இரண்டாம்பட்சமாகி, 'குடிக்க வேண்டும்; அதற்குப் பணம் வேண்டும்; அதற்கு வேலைக்குப் போக வேண்டும்’ என அவர்களே ஒரு கணக்குப்போட்டு, படிப்பைக் கைவிட்டு, ஏதோ ஓர் உதிரி வேலையில் ஒட்டிக்கொள்கின்றனர். தன் தலைமுறையை அடுத்த படிக்கு எடுத்துச்செல்ல வேண்டிய ஓர் இளைஞன், போதையின் பாதாளத்தில் வீழ்ந்து தன் வாழ்வை, தானே அழித்துக்கொள்கிறான்.

தேனி அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், சில மாதங்களுக்கு முன்பு, தாழ்த்தப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் தந்தார்கள். பணத்தை கையில் வாங்கிய கொஞ்ச நேரத்தில், சில மாணவர்கள் டாஸ்மாக் கடைக்குச் சென்றனர். மூச்சு முட்டக் குடித்து முழு போதையானார்கள். சில மணி நேரம்தான். போதையில் நிலை தடுமாறி வாகனம் ஒன்றில் மோதி இரண்டு மாணவர்கள் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தனர். மேலும் இரண்டு பேருக்கு கடும் காயம். காலையில் அவர்களின் கல்வி உதவிக்காக பணம் வழங்கிய அரசு, மாலையில் டாஸ்மாக்கின் மூலம் அவர்களின் உயிரைப் பறித்துவிட்டது. 'இதை எப்படி இணைத்துப்பார்க்க முடியும்? கல்வி உதவிக்காகக் கொடுத்த பணத்தை குடிப்பதற்குச் செலவழித்தால், அதற்கு அரசு எப்படிப் பொறுப்பேற்க முடியும்?’ எனக் கேட்பது குயுக்தியானது. 'ஒரு கையில் தீமை... மறு கையில் நன்மை... நான் இரண்டையும் நீட்டுகிறேன். எதை எடுத்துக்கொள்வது என்பது உங்கள் தேர்வு’ எனச் சொல்வது ஜனநாயகமா? அதுதான் தீமை எனத் தெரிகிறதே... பிறகு எதற்காக அதைத் தருகிறீர்கள்? எதற்காக என்றால், 'உங்களுக்கு மிக்ஸி, ஃபேன், கிரைண்டர் எல்லாம் தர வேண்டாமா, அதற்கு பணம் வேண்டாமா?’ என பதில் வரக் கூடும். இது மக்களை இழிவுபடுத்தும் வாதம். தமிழ்நாட்டின் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் சென்று 'டாஸ்மாக்கை மூட வேண்டுமா... ஃபேன், மிக்ஸி வேண்டுமா?’ எனக் கேட்டுப்பாருங்கள். 'உங்க பொங்கச்சோறும் வேண்டாம், பூசாரித்தனமும் வேண்டாம். தயவுசெஞ்சு சாராயக் கடையை மூடுங்க’ என்பதுதான் மக்களின் பதிலாக இருக்கும். அந்த அளவுக்கு அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குடும்பத்தில் கணவனையும் பிள்ளையையும் குடிக்குப் பறிகொடுத்துவிட்டு மிக்ஸியை வைத்து என்ன செய்வது? அரளி விதையை அரைத்து உயிரை மாய்த்துக்கொள்ளத்தான் உங்கள் விலையில்லா மிக்ஸி உதவும்.

குடி குடியைக் கெடுக்கும் - 13

மேலும், இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான ஒரு பாயின்ட் இருக்கிறது. 'மக்களுக்கு ஃபேன், மிக்ஸி போன்ற பொருட்கள் கொடுக்கத்தான் நாங்கள் சரக்கு விற்கிறோம். மற்றபடி, இந்தக் கருமத்தை விற்க வேண்டும் என எங்களுக்கு என்ன தலையெழுத்தா?’ என ஏதோ வேண்டாவெறுப்பாக, மக்கள் நலனை முன்வைத்து, இந்த வேண்டாத வேலையைச் செய்வதைப்போல பேசுகிறார்கள். இது பச்சையான பாசாங்கு; அப்பட்டமான நடிப்பு; கடைந்தெடுத்த பொய். ஆண்டு ஒன்றுக்கு இலவசப் பொருட்களுக்கு அரசு செலவிடும் பணத்தைக் காட்டிலும், மிடாஸ் சாராயக் கம்பெனிக்குக் கிடைக்கும் லாபம் பலமடங்கு அதிகம். மிடாஸுக்கு மட்டும் அல்ல... டாஸ்மாக்குக்கு சரக்கு விநியோகிக்கும் கம்பெனிகளின் ஆதாயத்துக்காகத்தான் டாஸ்மாக் நடத்தப்படுகிறதே தவிர, மக்களின் நலன்களுக்காக அல்ல. 'எதை விற்றேனும் மக்களுக்கு நல்லது செய்தே தீர வேண்டும்’ என நாடி நரம்பு எல்லாம் மக்கள் நலன் பொங்கி வழிந்தால், சாராயக் கடையை மூட வேண்டியதுதான் அதற்கு முதல் நிபந்தனை.

முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு மக்களை நோக்கி 'என்னை வாழவைக்கும் தெய்வங்கள்’ என அடிக்கடி சொல்கிறார். அது உண்மை என்றால் தெய்வங்களுக்கு குவார்ட்டர் ஊற்றிக்கொடுப்பதை முதலில் நிறுத்துங்கள்!

- போதை தெளிவோம்...