நம்பர் 1

'சினிமாவுக்குக்கூட கூட்டிப்போவது இல்லை’ என வருத்தப்பட்டாள் நம்பர்1 நடிகரின் மனைவி!
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- பெ.பாண்டியன்
கோரிக்கை

மதுக்கடையை அகற்றக் கோரி இதுவரை 10 மனுக்கள் கொடுத்திருந்த தியாகி ராமசாமி, மீண்டும் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார்... மதுக்கடைக்கு அருகில் இருக்கும் காந்தி சிலையை அகற்றக்கோரி!
- இன்பா
கரப்டட்

''கரையான் அரித்த ஓலைச்சுவடினா என்னப்பா?' கேட்ட மகனுக்கு எவ்வளவோ முயன்றும் புரியவைக்க முடியவில்லை. கடைசியாகச் சொன்னார்... ''அது Corrupted memory card மாதிரி'' இப்போது அவனுக்கு எளிதாகப் புரிந்தது!
- நவநீ குரு
கொண்டாட்டம்

பக்கத்துவீட்டுக் குழந்தைகள் புது ஆடைகள் உடுத்தி, பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதைப் பார்த்து ஏக்கத்தோடு சொன்னாள் மகள்... 'நம்ம அப்பா குடிக்காம இருந்திருந்தா, நானும் இப்படி சந்தோஷமா பட்டாசு வெடிச்சிருப்பேன்லம்மா!'
- சி.சாமிநாதன்
ஆட்டம்

''அப்பா... தாத்தாவுக்கு தனியா ஒரு மொபைல் வாங்கிக் கொடுங்க. என் மொபைலை எடுத்து கேம்ஸ் ஆடுறார்' என்றாள் 10 வயது மகள்!
- லதா ரவிச்சந்திரன்
கொலை... கலை...

யானையைக் கொன்று தந்தத்தைத் திருடுகிறான் ஒருவன். அந்தத் தந்தத்தில் யானையைச் செதுக்கி விற்கிறான் இன்னொருவன்!
- அஜித்
ஹீரோ

'மாப்பிள்ளை 'ஹீரோ’ மாதிரி இருக்காரும்மா.'
' எனக்கு வேணாம்பா. ஹேர் கட்டிங் பண்ணாம, குளிக்காம, சதா சிகரெட் புகைச்சிட்டு, அப்பாகிட்ட பணம் திருடிக் குடிச்சிட்டு, ஊர் சுத்திட்டு, சைட் அடிச்சிட்டுத் திரியுற மாப்பிள்ளை வேணாம்பா.
வேற நல்ல மாப்பிள்ளையா பாருங்க...'
- கோ.தேவி
திறந்த கதவு

இறந்த பின்னர் கொட்டகையில் இருந்து வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார் தாத்தா!
- விகடபாரதி
ஹோம் வொர்க்

'ஹோம் வொர்க் முடிச்சுட்டியா?’ எனப் பக்கத்து அறையில் இருக்கும் மகனுக்கு 'வாட்ஸ்அப்’புவ தற்குள் ஹாலில் இருந்த கணவரிடம் இருந்து 'காபி ரெடியா?’ என மெசேஜ் வந்தது!
- சாய்ராம்
ரைம்ஸ்... புதுசு!

கை வீசம்மா கை வீசு.
கடைக்குப் போகலாம் கை வீசு.
ஐ பேட் வாங்கலாம் கை வீசு .
ஸ்கைப்பில் பேசலாம் கை வீசு!
- பத்மா செல்லப்பா
