நூற்றாண்டுக் குரல்
நீலப் பைங்கிளி
தெரியுமோ.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பச்சை பஞ்சவர்ணம்
சிலநேரம்
வெளிர் சாம்பல்
பார்த்திருக்கிறது.
நீலப் பைங்கிளி
தெரியுமோ...
தாத்தா நிச்சயமாய்
சொல்வார்
’வளைந்த மூக்கில்லை
விசிறிவால் இல்லை
ஆனால் தெரிந்த
கிளி’யென்பார்.
நடையைப் பார் நளினம்
பேச்சுகூடப் புரிகிறது
உற்றுப்பார்.
ஜன்னல் கம்பிகளின் வழி
பூஜையறை பார்த்து
மகாலட்சுமி படம் பார்த்து
வணங்கி மகிழும் பரவசம்
கண்களில் தெரியும்.
கிணற்று மேடையில்
உட்கார்ந்துகொண்டு பார்க்கும்.
ஜகடையொலியும் கேட்கும்.
நூறு குடம் இறைத்துக்கொட்டிய பெருமிதம்கூட.
ஞாயிறு விரதம் இருக்கும்போல.
முகவாட்டம் புரிபட
மனசு முழுக்க நெகிழ்ச்சி.
நூற்றாண்டுப் பெருமைக் குரல்.
துயரம் விழுங்கிய முகம்.
நீலப் பைங்கிளியின்
கழுத்து மணியசைவு
செத்துப்போன பாட்டியின் சாயலென
தாத்தா சிரிப்பு கர்வமாய்!
- நா.விச்வநாதன்

நீ சொன்ன அந்தக் கதைகள்!
ஒரு மழைநாளின் வெயில்போலில்லை
நீ சொன்ன அந்தக் கதைகள்.
கொடும் வெம்மையின் தாகம் தீர்க்கும்
இதம்போலில்லை நீ சொன்ன அந்தக் கதைகள்.
பனியிரவுக் கம்பளி நாளொன்றின்
புதைந்திருக்கும் வெதுவெதுப்பாயில்லை
நீ சொன்ன அந்தக் கதைகள்.
தூக்கம் வரத் தவிக்கும் குழந்தையின்
பாட்டி சொன்ன அதன் உலகில்
பிரமிப்பூட்டும் அதிசயங்கள் போலில்லை
நீ சொன்ன அந்தக் கதைகள்.
கதைகளுக்கே உரிய எந்த முகாந்திரமும்
இல்லாதிருந்தது நீ சொன்ன அந்தக் கதைகள்.
பிணவறைக்குக் கொண்டுபோன பிணத்தின் மார்பை
தடமற்று கூரிய கத்தியைக்கொண்டு
அறுத்ததுபோலிருந்தது
யாருமற்ற புல்வெளியில் அழுது நேற்றிரவு
மறுத்து நீ சொன்ன அந்தக் கதைகள்.
- எஸ்.நடராஜன்
இறந்த காலம்
அம்மாநகரப் பேருந்தில்
கண்டக்டரிடம்
யார் அங்கு
டிக்கெட் கேட்டாலும்
திரும்பிப் பார்க்கும்
ஊதா சட்டைக்காரன்
ஊருக்கு வந்த புதிதில்
இதேபோல்
ஒரு மாநகரப் பேருந்தில்
இறங்குமிடம் தெரியாது முழித்த
என் இறந்தகாலம் ஒன்றை
நினைவுபடுத்துகிறான்!
- தரணி வேந்தன்
ஈர நெஞ்சம்
பெய்த மழையின்
ஈரம் காயாத தரையில்
வெறுங்காலுடன் விளையாடும்
மகனிடம் சொன்னேன்...
'ஷூ போட்டு விளையாடு’ என்று.
சொல்லிவிட்டு நான் நகரும் சமயம்
எதிரே வந்த என் அப்பா
சொன்னார் என்னிடம்
'ஈரத்தில் வெறுங்காலுடன்
வெளியே போகாதே’
என்று!
- செ.பிரமநாயகம்