Published:Updated:

சார் ஒரு கொஸ்டின்

கவிதை: யுகபாரதி, ஓவியம்: செந்தில்

சார் ஒரு கொஸ்டின்

கவிதை: யுகபாரதி, ஓவியம்: செந்தில்

Published:Updated:

1. 

'சோற்றைக் குறைத்தால்

சுகர் வராது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோம்பலைத் தவிர்த்தால்

சுபிட்சம் வந்துவிடும்

எச்சரிக்கையோடிருந்தால்

எண்பது வரை சுகவாழ்வு

பார்த்து நடந்தால்

விரிவடையும் பாதைகள்

சார் ஒரு கொஸ்டின்

படிப்பைத் தொடர்ந்தால்

பஞ்சத்தை வெல்லலாம்

வளைந்துகொடுத்தால்

வாழ்வது சிரமமில்லை

இறங்கிப் போ

எல்லாமே எளிதுதான்...’ என

பிரசங்கம் செய்தவரிடம்

பிரியத்தோடு கேட்டேன்...

'அசைவத்தை நிறுத்தினால்

ஆக முடியுமா

அய்யராக?’

2.

விவாதிக்கலாம் நண்பரே

வேறு எதுவும் வேலை இல்லை

நாட்டைச் சிந்திப்போம்

நடப்பதைப் பிதற்றுவோம்

ஒழியத்தான் வேண்டும் மது

ஒபத்திரம் தரும் ஊழலுக்கு

கட்டுவோம் முடிவை

அந்நிய செலாவணி

அண்டை தேசங்களின் ஊடுருவல்

ஸ்பெக்ட்ரத்திலிருந்து வியாபம் வரை

எத்தனையோ இருக்கிறது பேச

யார்தான் யோக்கியம்

எதற்கிந்த அறிக்கைப்போர்

கடவுளாலும் முடியாது

கல்வியைக் காப்பாற்ற

ஈழத் தமிழர்கள் செய்யக்கடவது

தலைக்கவசக் கெடுபிடி

தரிசான விவசாயம்

விவாதிக்கலாம் நண்பரே

வேறு எதுவும் வேலை இல்லை

விவாதிப்பதைத் தவிர

என்ன செய்துவிட முடியும்

நம்மால்?

3.

மறுபடியும் அவளைச் சந்தித்தேன்

மாற்றமில்லா அதே சிரிப்புடன்

இடுப்பிலிருந்த குழந்தையைப்போல்

பழைய கோபங்்களையும்

இறக்கிவிட்டாள்

அத்தானை அறிமுகம்செய்தாள்

வசதியோடுதான் வாழ்கிறாளாம்

அம்மா மாதிரியே நடத்துபவள்

அத்தையாக வாய்த்தது

அதிர்ஷ்டத்திலும் அதிர்ஷ்டமாம்

விரைவில் குழந்தைகளுக்கு

காதுகுத்தாம்

மனோன்மணி டீச்சரை

இடையில் சந்தித்தாளாம்

மடுவங்கரை ஏரி மீனென்றால்

இப்பவும் ஊறுகிறதாம் நாக்கு

பேசிக்கொண்டே இருந்தவள்

இடையில் விழுந்த

இரண்டு சொட்டுக் கண்ணீரைத்

துடைத்துக்கொண்டு சொன்னாள்

கண்ணில் விழுந்துவிட்டதாம் தூசி

காரணம் ஒன்றுமில்லையாம்.

4.

முருகேசன் இப்போது

முட்டை வியாபாரி

ஐ.ஏ.எஸ் கனவு அம்பேலானதும்

உகந்த தொழிலுடன்

உட்கார்ந்துகொண்டான்

கணக்கில் அவனைப் புலியென்று

கருமாத்தூர் வாத்தியாரே சொல்வார்

ஆங்கிலத்திலும் அவனே சிங்கம்

இன்றுபோல் அன்றவனுக்கு

தொந்தியில்லை

யாருடனும் பழகுவான் இயல்பாக

எதிர்பாரா நேரத்தில் உதவுவான்

உலக அறிவில் கில்லாடி

சோப்பு டப்பாவில் கப்பலை

சூரிய சக்தியில் மின்விசிறியை

ஓடவைத்து அசத்தினான்

கல்லூரியை

கூட்டத்திலேயே அவன்தான்

கூடுதல் அழகு நிறைந்த அறிவாளி

என்ன செய்ய?

முருகேசன் இப்போது

முட்டை வியாபாரி.

5.

பேய் படங்கள் ஓடுகின்றன

பிசாசுகளுக்கு மரியாதை

அச்சத்தை ஏற்படுத்தினால்

அரங்கம் நிறைகிறது

சாமிப் படங்களுக்குக்கூட

இவ்வளவு செல்வாக்கில்லை

அதிர்ச்சி, மிரட்டல், ஓலம்

அபாயம், குரூரம், வன்மம், கொலை

பழிவாங்கல், பதைபதைப்பு இவையே

இன்றைக்குத் தேவை

காதலித்த பெண்கள்

பூதமாக வருகிறார்கள்

மூர்க்கமான வில்லன்களை

மோதி மோதி மிதிக்கிறார்கள்

வெறிகொண்ட நர்த்தனம்

விளாசித்தள்ளும் சண்டைக்காட்சி

சாமி இல்லையென்று பேசிய

திராவிடப் பெரியார்

எங்கேயும் சொல்லவில்லையே

பூதம் இருப்பதாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism