"எனது பிறப்புரிமைக்கான விடுதலை நோக்கிய நுழைவுச் சீட்டு புத்தக வாசிப்பு" - பெடரிக் டக்லஸ். புத்தகம் என்பது பொழுதுபோக்கிற்காக வாசித்து இன்புறுவது மட்டுமல்ல. வாசிப்பின் வழியே மனித வாழ்வின் திறக்கப்படாத பக்கங்களை நாம் அறிய முடியும். மனித வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை, சமூக வாழ்வை சரிநிகராக கட்டமைக்கவும் புத்தகங்கள் முன்னெடுப்பு செய்துள்ளன. பல்வேறு ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வின் வழியே கண்டறிந்தவற்றை புத்தகங்களாக தொகுத்துள்ளனர். அவை காலத்திற்கும் அழியாத தகவல் புதையல்களாக உள்ளன. உலக நாடுகள் பலவற்றில் நடந்த மக்கள் புரட்சிகளுக்கெல்லாம் புத்தகங்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன.
கதைகள், நாவல்கள் போன்ற புனைவுகள் மட்டுமின்றி ,கட்டுரைகள் , ஆய்வுகள் போன்ற புனைவுகளும் காலம் கடந்து நிற்பவையாக உள்ளன. மனித குலத்தின் வளர்ச்சிக்கான மிக முக்கியமான காரணியாக புத்தகங்கள் உள்ளன. உலகெங்கும் இதன் பொருட்டே நிறைய புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் புத்தக கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. புத்தகக் கண்காட்சியையொட்டி தமிழின் முக்கியமான கவிஞர், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் வாசிப்பின் அவசியம் குறித்தும், வாசகர்களுக்கு அவர்கள் பரிந்துரைக்கும் ஐந்து புத்தகங்கள் குறித்தும் கேட்டிருந்தோம்... வாருங்கள் வாசிப்போம்!
ஆதவன் தீட்சண்யா எளிய மனிதன் மனதில் கிடக்கும் ரணங்களை, ஆறாத வடுக்களை தன் கவிதைகளின் வழியே வெளி கொணர்பவர். "மீசை என்பது வெறும் மயிர்" என்ற இவரது நூல் மிக முக்கியமானதொரு பதிவாக இலக்கிய ஆளுமைகள் பலரால் முன்வைக்கப்படுகிறது. இந்த சமூகத்தின் மூலம் முன்வைக்கப்படும் பழமைவாதத்தை எதிர்த்து தன் எழுத்தின் வழியே குரல் கொடுக்கும் ஆதவன் தீட்சண்யாவிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
`ஒருவர் ஏன் புத்தகம் வாசிக்க வேண்டும்?''
தம்மைத்தாமே சுயதணிக்கைக்கு ஆட்படுத்தி அடங்கிப் போகாமல் உண்மையைப் பேசுகிறவர்களையும் மாற்றுக்கருத்தாளர்களையும் சகிப்பின்மையினாலும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான வெறுப்பினாலும் கொன்றொழிக்கும் காலமிது. நூலை, நூலகங்ளை எரிப்பது, வெளியிட்ட நூலைத் திரும்பப் பெற்று அரைத்து காகிதக்கூழாக்கும் படியாக பதிப்பாளர்களை நிர்ப்பந்திப்பது என அச்சுறுத்தல் மூர்க்கமடையும் காலமாகவும் இருக்கிறது. ஆனால், படித்து என் நினைவில் தங்கிவிட்ட ஒரு விஷயத்தை எவராலும் அழித்துவிட முடியாது. அதனாலேயே நான் வாசிக்க முடிந்தவற்றையெல்லாம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
வெவ்வேறு தட்பவெப்பங்களில், நில அமைப்புகளில், கோடானுகோடி உயிர்க்கூட்டத்திற்கிடையே வாழ்கிற மனிதர்கள், தங்களது வாழ்வனுபவங்களில் பகிரத்தக்க விஷயங்களை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். எழுத்து வழியான அத்தகைய பகிர்வுகளை வாசித்தறிய நேரும்போது, நான் எனது காலத்திற்கேற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கின்றேனா, இல்லையா என்றும், அதற்கான காரணங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
இந்தப் புத்தகத் திருவிழாவில் வாசகர்களுக்கு எந்தப் புத்தகங்களைப் பரிந்துரை செய்வீர்கள்?.
1. கொம்மை
பூமணியின் புதிய நாவல்
2. என் தந்தை பாலய்யா
ஒய்.பி. சத்தியநாராயணா தமிழில்- அ.ஜெனி டாலி
3. குஜராத் - திரைக்குப் பின்னால்
ஆர்.பி. ஸ்ரீகுமார் தமிழில் - ச.வீரமணி, தஞ்சை ரமேஷ்
4.இந்தியா என்கிற கருத்தாக்கம்
சுனில் கில்நானி தமிழில் - அக்களூர் இரவி
5. கினோ - ஹருகி முரகாமி சிறுகதைகள்
தமிழில் ஸ்ரீதர் ரங்கராஜ்