Published:Updated:

குடி குடியைக் கெடுக்கும்! - 15

#BanTasmac தொடர்பாரதி தம்பி, படம்: சு.குமரேசன்

குடி குடியைக் கெடுக்கும்! - 15

#BanTasmac தொடர்பாரதி தம்பி, படம்: சு.குமரேசன்

Published:Updated:

சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜங்ஷனுக்கு காலை நேரத்தில் போனால், சாலையோரங்களில் பெரும் கூட்டம் நிற்கும். நாள் தவறாமல் இந்தக் காட்சியைப் பார்க்கலாம். இதேபோன்ற கூட்டத்தை சூளைமேடு அண்ணா நெடும்பாதையிலும், வில்லிவாக்கம் பகுதியிலும், இன்னும் சென்னையின் பல்வேறு இடங்களிலும் பார்க்கலாம். எனக்கு நீண்ட நாட்களாகக் குழப்பம்... காலை 7 மணிக்கு எல்லாம் எதற்காக இவர்கள் இங்கு கூடி நிற்கிறார்கள்... எதற்காக வருவோர், போவோர் முகங்களை எல்லாம் உற்றுக்கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒருநாள் விசாரித்தபோதுதான், குழப்பம் தீர்ந்தது.

காய்கறிச் சந்தைபோல இவர்கள் தொழிலாளர் சந்தை. ஒவ்வொரு நாள் காலையிலும் இங்கு வந்து கூடி நிற்பார்கள். நகரத்தில் எங்கே என்ன வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டாலும், இங்கு வந்து இவர்களை அழைத்துச்செல்வார்கள். இந்த இடங்களில் எல்லாம் தொழிலாளர்கள் நின்றிருப் பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். கட்டட வேலை, கிளீனிங் வேலை மற்றும் விதம்விதமான வேலைகளுக்கு இங்கு ஆட்கள் கிடைப்பார்கள். வயது குறைவானவர்கள், உடல்திறன்மிக்கவர்கள் முதலில் அழைத்துச் செல்லப்படுவார்கள். வயதானவர்கள் ஏக்கத்துடன்,  ‘தங்களை வேலைக்குக் கூப்பிட யாரேனும் வருவார்களா?’ என எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பார்கள். இப்படி எம்.ஜி.ஆர் நகரில் ஒவ்வொரு நாள் காலையிலும் கூடி நிற்கும் உதிரிப் பாட்டாளிகளின் வசிப்பிடம் சூளைப்பள்ளம். காசி தியேட்டர் பின்புறம் தொடங்கி, நெசப்பாக்கம் எம்.ஜி.ஆர் சிலை வரை நீண்டு செல்லும் சாலைக்கும், அடையாறுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கிறது இந்தச் சூளைப்பள்ளம். குறைந்தபட்சம் 3,000 வீடுகளாவது இருக்கும். அவற்றை வீடுகள் என்ற வரையறையில் கொண்டுவரவே முடியாது. அனைத்தும் குட்டி குட்டியான குடிசைகள். மிகமிகக் குறுகலான சந்துகள். சாக்கடையும் சகதியுமான தெருக்கள். சகிக்க முடியாத துர்நாற்றம். தென்சென்னையின் தாராவி இது. இந்தப் பகுதியில் இருந்து உதிரிப் பாட்டாளிகளாக வேலைக்குச் செல்வோர் ஒருபக்கம் என்றால், துப்புரவுத் தொழிலாளர்கள், பழவண்டி, தள்ளுவண்டி வியாபாரம் உள்ளிட்ட சாலையோரச் சிறுகடைகளை நடத்துவோரும் ஏராளமாக உண்டு.

குடி குடியைக் கெடுக்கும்! - 15

நவம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து சென்னையில் பெய்துவரும் பெருமழை இந்த மக்கள் அனைவரின் வாழ்வையும் அசைத்துப் பார்த்தது. அடையாற்றில் முதலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சூளைப்பள்ளத்தின் பெரும்பகுதி வீடுகளைப் பதம்பார்த்தது. ஆயிரக்கணக்கான மக்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்; வீடுகளை, உடைமைகளை இழந்து வீதிகளுக்கு வந்தனர். ஓரிரு நாட்களில் நிலைமை சீரானதும் தத்தமது குடிசைகளை முடிந்தவரை சரிசெய்து வாழ்க்கை எனக் கருதத்தக்க ஒன்றை வாழத் தொடங்கினார்கள். அடுத்து நவம்பர் 30-ம் தேதியில் மறுபடியும் அடித்து ஊற்றியது ஊழிப் பெருமழை. இந்த முறை அச்சம் அவர்களை ஆட்கொண்டது. கரையோரப் பகுதிகளில் வசித்தோர் முன்கூட்டியே மேல்பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்தனர். 1-ம் தேதி பகல்பொழுதில் விட்டுவிட்டுப் பெய்த கனமழை அடையாற்றின் வெள்ளத்தைத் தொடர்ந்து அதிகரித்தது. அரசுத் தரப்பிலோ, வேறு இயக்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் யாரும் அண்டாத பகுதி என்பதால் செய்வதறியாது, வருவது வரட்டும் எனக் காத்திருந்தனர். வேலைக்குச் சென்றோர் இரவில் வீடு திரும்பினர்.

பொதுவாகவே இது முழுக்க, முழுக்க உடல் உழைப்புத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. வேலை முடிந்து மது குடிப்பது ஒரு வாழ்க்கை முறையாகவே இவர்களுக்கு மாறிவிட்டிருக்கிறது. உடல் அசதியை மறக்கடிக்க, தூக்கம் எனக் கருதத்தக்க ஒன்றைச் செய்து முடிக்க மது தேவைப்படும் நிலைக்கு வந்துவிட்டனர். இதோடு வெள்ளத்தின் பாதிப்பு ஏற்படுத்திய துக்கமும், அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியும் அவர்களை மேற்கொண்டும் மதுவை நோக்கி ஓடவைத்தது.  1-ம் தேதி இரவில் சூளைப்பள்ளத்தின் பெரும்பகுதி தொழிலாளர்கள் வழக்கம்போல குடித்துவிட்டு வந்தனர். விடாது பெய்த மழை, எங்கும் நசநசப்பு, அடையாற்றில் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருக்கும் பெருவெள்ளம்... சத்தங்கள் ஓய்ந்து மதுவின் மயக்கத்தில் தூக்கத்தில் ஆழ்ந்தனர் தொழிலாளர்கள். செம்பரம்பாக்கம் ஏரி திடீரெனத் திறக்கப்பட்டதோ, அதில் இருந்து கடல்போன்ற நீர் பாய்ந்துவருவதோ அவர்களுக்குத் தெரியாது. இரவு 1 மணிக்கு அடையாற்றில் இருந்து தண்ணீர் மேலே ஏறி வரத் தொடங்கியது. மெதுவாக ஒவ்வோர் அங்குலமாக அல்ல... ஆற்றில் வேகமாகப் பாய்ந்துவரும் வெள்ளத்தைப்போல சீறி வந்தது. கொஞ்சம் சுதாரிப்பதற்குள் சரசரவென வீடுகளின் பாதியை மூழ்கடித்தது. தூங்காமல் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். ஆனால், எத்தனை பேர் ஓட முடியும்... எவ்வளவு தூரம் ஓட முடியும்?

சூளைப்பள்ளத்தில் இருந்து நான்கு தெருக்கள் தள்ளிக் குடியிருக்கும் ஒரு பத்திரிகையாளர் சொல்கிறார்...

‘‘இரவு இரண்டு மணியிருக்கும். என் எதிர் வீட்டுக்காரர் கதவைத் தட்டி, ‘தண்ணி வருது. கிளம்புங்க’ என்றார். நான் என் குழந்தைகளின் பாடப் புத்தகங்களையும், துணிமணிகளையும் எடுத்து பைக்குள் திணிப்பதற்குள், கால் மணி நேரத்துக்குள், என் வீட்டுக்குள் கழுத்து அளவு தண்ணீர் ஏறிவிட்டது. மனைவியை மாடிப் படியில் ஏறச் சொல்லிவிட்டு, குழந்தையைத் தூக்கி தலையில் உட்கார வைத்துக்கொண்டு மெதுவாக மாடியில் ஏறினேன். எங்களுடைய வீடு மொட்டை மாடி. அதற்கு மேல் வீடுகள் இல்லை. மாடியில் நின்று கீழே பார்த்தால் தெருவெங்கும் ஆக்ரோஷமாக ஆறு ஓடிக் கொண்டிருந்தது. மின்சாரம் இல்லாததால் இருட்டு. செல்போனில் உள்ள டார்ச் லைட் வெளிச்சத்தில் கீழே பார்த்தேன். சூளைப்பள்ளத்தில் இருந்து வரும் சாலையில் நான்கு மனிதர்கள் அடித்துச் செல்லப்படுவதை என் கண்ணால் பார்த்தேன். பதை பதைப்பாக இருந்தது. அவர்களைக் காப்பாற்ற எந்த வழியும் இல்லை. யார் முயற்சித்தாலும் அவர்களும் அந்தத் தண்ணீரில் இழுத்துச் செல்லப்படுவார்கள். மனிதர்கள் மட்டும் அல்ல, சூளைப்பள்ளம் பகுதியில் நிறையப் பேர் மாடுகள் வளர்த்தனர். அவையும் அந்த நீரில் அடித்துச் செல்லப்பட்டன. என் கணிப்பின்படி நூற்றுக்கணக் கானோர் சூளைப்பள்ளம் பகுதியில் பலியாகியிருக்கக் கூடும். நான் மிகைப்படுத்துவதாக எண்ண வேண்டாம். அது குடிசைப் பகுதிகள் நிறைந்த மிக மிகத் தாழ்வான பகுதி. காங்கிரீட் வீடுகளில் வசித்த எங்களாலேயே வெள்ளத்தின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவர்களால் நிச்சயம் முடிந்திருக்காது. குழந்தைகள், வயதானவர்களின் நிலையை நினைத்தால் நடுக்கமாக இருக்கிறது’’ என்றார்.

சூளைப்பள்ளத்தின் பெரும் பாதிப்புக்குக் காரணமாக அவரும், மேலும் பலரும் சுட்டிக்காட்டுவது, அவர்களில் பெரும்பகுதியினர் மதுவின் மயக்கத்தின் ஆழ்ந்திருந் தனர் என்பது. ஒருவேளை சுயநினை வுடன் இருந்திருந்தால் இழப்புகள் சற்றுக் குறைந்திருக்கும். முறையான அறிவிப்பு இல்லாமல், அறிவித்ததை விட அதிகத் தண்ணீரை அடையாற்றில் திறந்துவிட்ட அரசின் குற்றம் ஒரு பக்கம் என்றால், அதை உணர்ந்து தப்பிக்கும் சூழலில் தொழிலாளர்கள் இல்லை. இது வெள்ளத்தின் பாதிப்புக்கு ஆளான மற்றப் பகுதிகளுக்கும் பொருந்தும். ‘அவங்க குடிச்சதுக்கு யார், என்ன பண்ண முடியும்? ஊரே என்ன நடக்குமோ, ஏது நடக்குமோனு பரிதவிப்புல இருக்கும்போது குடிச்சுட்டு வந்தது அவங்களோட திமிர்த்தனம்’ என்று இதை அணுக முடியுமா? ஊரே சாவு வீடுபோல இருக்கும்போது குடித்தது அவர்கள் தவறு என்றால், சாவு வீட்டில் சாராயம் விற்றது யார் தவறு?

பச்சைக் குழந்தைகளுக்கு பால் பாக்கெட் கிடைக்கவில்லை. கேட்டால், ‘சாலைகள்

குடி குடியைக் கெடுக்கும்! - 15

பழுதாகியிருக்கின்றன. ஆவின் வாகனங்கள் எப்படி வர முடியும்?’ எனக் கேட்கிறார்கள். ஆனால், கழுத்து அளவு தண்ணீர் நிற்கும் இடங்களில்கூட டாஸ்மாக் வாகனங்கள் நீந்திச் சென்று சரக்கு விநியோகம் செய்தது எப்படி? அந்த வாகனங்களில் பால் பாக்கெட்டை ஏற்றி வர வேண்டும் என அரசுக்குத் தோன்றவில்லை. டாஸ்மாக் கடைகளை இந்த நேரத்திலாவது மூடிவைக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அறவுணர்ச்சி இல்லை. மகிழ்ச்சிக்கும் துக்கத்துக்கும் மதுவே மருந்து என்ற நிலையை ஏற்கெனவே இந்த அரசு உருவாக்கிவிட்டது. இப்படி ஒரு பேரழிவுக் காலத்தில், அதை தன் அதிகபட்ச ஆற்றலாலும் எதிர்கொள்ள முடியாது என்ற கையறுநிலையில், அவர்களின் மனம் தன்னியல்பாக மதுவின் பக்கம் சாய்கிறது. அதில் தீர்வு இல்லை; ஆனால், மறக்கலாம் எனக் கருதுகின்றனர். அதன் விளைவு, எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிற்கும் அவர்கள் கையில் இருக்கும் கடைசிக் காசையும் டாஸ்மாக் கல்லாவில் கொட்டுகின்றனர். ஆனால், அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் அந்தத் தொழிலாளி யிடம் இருக்கும் கடைசி நூறு ரூபாயையும் மதுவை ஊற்றிக்கொடுத்து வழிப்பறி செய்வதற்கு, இந்த அரசு வெட்கப்பட வேண்டாமா?

இப்போது நிவாரணப் பணிகளிலும் போதை பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது. நிவாரணப் பொருட்களை வாங்கி விற்றுக் குடிக்கிறார்கள். வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு பல இடங்களில் குடிகாரர்களால் தொல்லை. பொருட்களை விநியோகிக்கவிடாமல் தடுப்பது, தன்னார்வல ராகச் செல்லும் பெண்களைக் கிண்டல்செய்வது எனப் பல வகைகளில் இன்னல் தருகின்றனர். சில இடங்களில், ‘எங்களுக்கு இதெல்லாம் வேணாம். ஒரு குவார்ட்டர் வாங்கிக் குடுங்க’ என நேரடியாகவே கேட்கவும் செய்கிறார்கள். உதவச் செல்வது நடுத்தர வர்க்கத்தினர். அவர்களுக்கு மொத்த சமூகச் சிக்கல்களையும் நேர்மறையில் புரிந்துகொள்வதோ, இந்தக் குடிகாரர்களை இணக்கமாகக் கையாள்வதோ சிக்கலானது. ‘வெள்ளத்துல மோசமா பாதிக்கப் பட்டிருக்காங்களேனு, வேலைவெட்டியை விட்டுட்டு கைக்காசைச் செலவழிச்சு ஹெல்ப் பண்ண வந்தா, இப்படிப் பண்றாங்களே?’ என்ற ஆதங்கம்தான் அவர்களுக்கு மிஞ்சுகிறது. ஏற்கெனவே ஏழைகள் குறித்து இருக்கும் கீழான பொதுச்சித்திரத்தை மேற்கொண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தி, கையில் இருக்கும் உதவிகளைச் செய்துவிட்டு மனவருத்தத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேற்கொண்டும் உதவுவதற்கான மனநிலையை இழந்துவிடுகின்றனர். சமூக யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, இந்தக் குடிகாரர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தேவை உள்ள மக்களை நோக்கி அவர்கள் உதவிகளைத் தொடர வேண்டும். 

ஆனால், இந்தப் பேரழிவுக் காலத்திலும் டாஸ்மாக் கடையைத் திறந்து வைத்துக்கொண்டு விற்பனை செய்யும் அருவருப்பான இந்த அரசாங்கத்தை நோக்கி நடுத்தர வர்க்கம் கேள்வி எழுப்ப வேண்டும். மின்சாரம் இல்லாத நிலையில் மெழுகுவத்தி வெளிச்சத்தில் கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்யவேண்டிய அளவுக்கு சாராயம் என்ன அத்தியாவசியத் தேவையா? ‘தீபாவளிக்கு 401 கோடி ரூபாய்க்கு சாராயம் விற்க வேண்டும்’ என இலக்கு நிர்ணயித்து, போலி சரக்குகள் விற்கப்படாமல் இருக்க கண்காணிப்புப் படைகள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தெரிந்த ஜெயலலிதா அரசு, மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற எச்சரிக்கையைப் பொருட்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது ஏன்? உணவுப் பொட்டலங்கள், பிஸ்கட், தண்ணீர், துணிமணிகள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றை மக்கள் தெருத்தெருவாக அலைந்து விநியோகித்துக்கொண்டிருக்க... அரசு தெருத்தெருவாக அலைந்து சாராயம் விநியோகித்தது. ரேஷன் கடை இயங்காத இடத்தில்கூட சாராயக் கடை இயங்கியது. உலகத்தில் எந்த அரசேனும் இப்படிச் செய்யுமா... மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது சரக்கு விற்குமா?  மழை வெள்ளம் ஏற்படுத்தியுள்ள இயற்கைச் சீரழிவைவிட, மதுக்கடைகளைத் திறந்துவைத்து அரசு நடத்திக்கொண்டிருப்பது தான் மாபெரும் பேரழிவு!

- போதை தெளிவோம்...