Published:Updated:

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: செந்தில்

ஆசை...

10 செகண்ட் கதைகள்

``நியூஸ் பேப்பர்ல ஒரு நகைக்கடை விளம்பரம் வந்திருக்கே... அதைக் கொண்டுவா” என்றான். முகம் மலர ஆவலோடு ஓடிப்போய் எடுத்து வந்தாள். ``அதை தேங்காய் எண்ணெய்க் கிண்ணத்தின் கீழே வை. ஆயில் ஒழுகினாலும் நல்லா உறிஞ்சிக்கும்’’ என்றான்.

 -கி.ரவிக்குமார்

மழை... பள்ளி!

10 செகண்ட் கதைகள்

``ஹைய்யா... மழை பெய்யுது. ஸ்கூல் போக வேணாம்... லீவு’’ என்றான் மகன் மகிழ்ச்சியாக.
``குடிசைக்குள்ள வெள்ளம் பூந்துடுச்சு. வாடா உங்க ஸ்கூல்ல போய்த் தங்கலாம்’’ என்றார் அப்பா!

 - ஸ்ரீகாந்தன்

லிஸ்ட்

10 செகண்ட் கதைகள்

``இந்த மாச லிஸ்ட் எழுதுங்க... ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி, சமையல் பாத்திரங்கள், சோபா...’’ மயங்கிச் சாய்ந்தான் கணவன் !

 - ரியாஸ் 

பலா(லே) பலன்!

10 செகண்ட் கதைகள்

ஜோதிடர் கணித்த ராசி பலன்களைப் பொய்யாக்கி,  12 ராசி நேயர்களையும் பாதித்தது சென்னை மழை வெள்ளம்!

-பெ.பாண்டியன்

பிழைப்பு

10 செகண்ட் கதைகள்

``ஏகப்பட்ட சொத்தோடு சந்தோஷமா நான் இருக்க வழி சொல்லுங்க   குருவே...’’ எனக் கேட்ட சீடனிடம் சாமியார் சொன்னார், ``500 கிலோ மீட்டர்  தள்ளிப்போய் நீயும் ஒரு ஆசிரமம் வெச்சுப் பொழச்சுக்க!"

- த.ச.பாலாஜி

ஏமாற்றியவன்!

10 செகண்ட் கதைகள்

ஹோட்டலில் சாப்பிட்டு காசு தராமல் ஏமாற்றியவனை, காவல் நிலையத்தில் ஒப்படைத்தான் சூரி. மதியம் அவன் கடையில் இருந்து பிரியாணி பார்சல், காவல் நிலையத்துக்குப் போனது!

- ச.ஆனந்தப்பிரியா

கோரிக்கை

10 செகண்ட் கதைகள்

அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவிந்தன... “தயவுசெய்து எங்களைத் தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றுங்கள்!”

- சாய்ராம்

டேஸ்ட்

10 செகண்ட் கதைகள்

``இதென்ன இப்படி ஒரு கலர்? டிசைனும் கேவலமா இருக்கு’’ என இவன் நிராகரித்த சட்டையை, சற்று நேரத்தில் ``சூப்பரா இருக்குல்ல?’’ எனத் தேர்ந்தெடுத்தான் வேறு ஒருவன்!

 - எஸ்கா

சேவை

10 செகண்ட் கதைகள்

`மழைத் தண்ணியைச் சேமிச்சுவைங்க… நிலத்தடி நீர் ரொம்பக் குறைஞ்சுபோச்சு’ எனச் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தமுக்கடித்துச் சொல்ல ஏற்பாடு செய்த குளிர்பான கம்பெனிக்கு, சமூக சேவைக்கான விருது கிடைத்தது!

 - அஜித்

எப்பூடி..?

10 செகண்ட் கதைகள்

``என் சர்க்கிள்ல இருக்கிற ஒரு கடையிலகூட இந்த வாரம் `புக்' கிடைக்காமப் பண்ணிட்டேன் சார்’’ என மேலதிகாரியிடம் பெருமையாகப் பேசிவிட்டு போனை வைத்தார் இன்ஸ்பெக்டர். பல லட்சம் பேர் படித்துக்கொண்டிருந்தார்கள் `ஆன்லைனில்’!

 -இன்பா

10 செகண்ட் கதைகள்