Published:Updated:

“குழந்தைகளுடைய ஆளுமை, கற்பனை எல்லையற்ற மலர்சிக்கு புத்தக வாசிப்பு அடிப்படை” - எழுத்தாளர் யூமா வாசுகி #ChennaiBookFair

“குழந்தைகளுடைய ஆளுமை, கற்பனை எல்லையற்ற மலர்சிக்கு புத்தக வாசிப்பு அடிப்படை” - எழுத்தாளர் யூமா வாசுகி #ChennaiBookFair
“குழந்தைகளுடைய ஆளுமை, கற்பனை எல்லையற்ற மலர்சிக்கு புத்தக வாசிப்பு அடிப்படை” - எழுத்தாளர் யூமா வாசுகி #ChennaiBookFair

41-வது சென்னைப் புத்தகக் காட்சி தொடங்கி எட்டு நாள்கள் ஆகிவிட்டன. எப்போதும்போல ஆரம்பம் டல்லடித்து, தற்போது கூட்டம் அலைமோதுகிறது. சமீபமாக குழந்தைகளுக்குப் புத்தகங்களை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். அதேநேரம், குழந்தைகளுக்கான புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பங்களை எதிர்கொள்கிறார்கள். அதில் ஒன்று, ஆங்கிலத்துக்குக் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்குத் தமிழ்ப் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது. இதுகுறித்து குழந்தைகள் உலகிலேயே மூழ்கியிருக்கும் எழுத்தாளர் யூமா வாசுகியிடம் கேட்டோம்...

“குழந்தைகளின் ஆளுமை, கற்பனை ஆகியவற்றுக்குப் புத்தக வாசிப்பே அடிப்படை. மனிதர்களின் பல்வேறு கலாசாரம், மானுடப் பந்தம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள புத்தகங்கள் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதன்மூலம் ஒட்டுமொத்த உலகத்துடன் தொடர்புடையவராக அந்தக் குழந்தை மாறுகிறது. குழந்தைகளுக்குத் தமிழில் நிறையப் புத்தகங்கள் இருக்கின்றன. பாரதி புத்தகாலயம் மற்றும் என்.சி.பி.ஹெச் வெளியீடுகள், சரவணன் பார்த்தசாரதி மற்றும் கொ.மா.கோ இளங்கோ புத்தகங்கள், 2014-ம் ஆண்டுக்கான பால சாகித்திய அகாதமி விருதுபெற்ற இரா.நடராசனின் சிறார் புத்தகங்கள் முக்கியமானவை” என்கிற யூமா வாசுகி, சில புத்தகங்களையும் பரிந்துரைத்தார். 

“ ‘பெனி என்னும் சிறுவன்', 'பிரியமுடன் பிக்காசோ', 'ஜிமாவின் கைப்பேசி', 'எட்டுக்கால் குதிரை', 'விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள்', பேரா.எஸ்.சிவதாஸின் 'புத்தகத் தேவதையின் கதை', ஆதி வள்ளியப்பன் எழுதிய 'குழந்தைகளுக்கான லெனின்', யெஸ். பாலபாரதியின் ஆமை காட்டிய அற்புத உலகம் ஆகியவை குறிப்பிடத்தக்கன. குழந்தைகளுக்கான அரசியல், கருத்தியல் சார்ந்த சிறிய வெளியீடுகளும் இருக்கின்றன. 'வண்ண நதி' என்கிற இதழ், மேன்மை பதிப்பகம் சார்பாக வெளிவரும் இதழில், சிறுவர்களுக்கான இணைப்பிதழ் ஆகியவற்றை வாசிக்க அளிக்கலாம். 

ரஷ்ய சிறார் இலக்கியங்கள் இதுபோன்ற கருத்தியல் ரீதியான புத்தகங்களே. இந்த உலகில் யார் முக்கியம், யாருடன் நாம் சேர்ந்து இருக்கவேண்டும் என்கிற அடிப்படையைக் குழந்தைகளுக்கு வழங்குகிறது. இந்த உலகத்தை எதிர்கொள்வதற்கான பார்வையைக் கொடுக்கிறது. குழந்தைகள் வளர வளர அவர்களின் சிந்தனை பல பரிமாற்றங்களைத் தொடும். அதன் நோக்கத்தை உருவாக்கிக்கொடுப்பதை கருத்தியல் சார்ந்த நூல்கள் செய்கின்றன. மனிதர்கள்மீதும் இந்தப் பிரபஞ்சம் மீதும் ஒட்டு மொத்த நேசம் உருவாக புத்தகங்கள் காரணமாகின்றன. இந்த உலகம் சகல ஜீவராசிகளுக்கும் உரித்தானது என்கிற உணர்வை பொதுவுடமை கருத்தியல் நூல்கள் எளிமையாகவும் கற்பனையுடனும் வழங்குவது அவர்களின் சிந்தனையை விரிக்கவே செய்யும்” என்கிறார் யூமா வாசுகி. 

ஆங்கிலப் புத்தகங்கள் குறித்து, ஐடி துறையைச் சேர்ந்தவரும் சிறுவர்களுக்கான கலை இலக்கிய செயற்பாட்டாளருமான அகிலா, “மூன்று வயது வரையான குழந்தைகளுக்கு வரைபடங்கள் மட்டுமே நிறைந்த புத்தகங்களை வாங்கலாம். Go to bed, Bye போன்ற சிறிய சிறிய வார்த்தைகள்கொண்ட புத்தகங்களைப் படித்துக் காண்பிக்கலாம். மூன்று வயதுக்கு மேல் ஸ்டோரி புக்ஸ் பயன்படுத்தலாம். வெளிநாடுகளில் இந்த வயதில் பழக்கவழக்கங்கள், அவர்களுக்கு ஏற்படும் பயங்கள் குறித்தான புத்தகங்களை வாங்கிக் கொடுப்பார்கள்.

உணவு உண்ணும் முறை, கழிவறையைப் பயன்படுத்துதல் போன்ற பழக்கவழக்கங்களை வெவ்வேறு கேரக்டர்கள் மூலம் சொல்லிக்கொடுப்பார்கள். இந்த புத்தகக் காட்சியில், 'தும்பி' புக் ஸ்டாலில் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளையும் உள்ளடக்கிய அழகான கதைப் புத்தகங்கள் கிடைக்கின்றன. 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு Teddy Bear ஸ்டோரிகளைப் பரிந்துரைக்கலாம். Tulika வெளியீட்டு நிறுவனத்தின் ஃபிக்‌ஷனல் புத்தகங்கள் குறிப்பிடக்கூடியன.

2015-ம் ஆண்டு அம்பேத்கர் குறித்த The boy who asked why என்கிற புத்தகத்துக்கு விருது வாங்கியிருக்கிறார்கள். அது குழந்தைகளுக்கான இன்ஸ்பிரேஷன் புத்தகம். இதுபோல 150 தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. டிங்கிள் காமிக்ஸில் வரும் சுப்பாண்டி கேரக்டரை உருவாக்கியவர் நம் திருச்சியைச் சேர்ந்தவர். அந்த கேரக்டரைவைத்து எட்டு புத்தகங்களை வந்துள்ளன. கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக வலம்வரும் கேரக்டர். ஐந்து முதல் பத்து வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்தச் சுப்பாண்டி புத்தகம் உற்சாகத்தைக் கொடுக்கும்” என்கிறார்.