Published:Updated:

சொல்வனம்

படம்: சி.சுரேஷ் பாபு

சொல்வனம்

படம்: சி.சுரேஷ் பாபு

Published:Updated:

திருடன் விளையாட்டு  

ராஜா

ராணி

மந்திரி

போலீஸ்

திருடன்

சீட்டெழுதிப் போட்டு விளையாடியது

சண்டையில் முடிந்தது.

அழுதுகொண்டே ஓடிவந்த

நிலா சொன்னாள்...

’ராஜா  ராணி

மந்திரி  போலீஸ்

எல்லாரும் திருடன்!’

 - சேயோன் யாழ்வேந்தன்

வருடா வருடம்

வருடாவருடம் கிடைத்துவிடுகிறது

கோடை விடுமுறை ஒவ்வொன்றிலும்

அயலூர் தேவதைகளின் அறிமுகம்.

வருடாவருடம் கிடைத்துவிடுகிறது

நாட்காட்டியில் அருள்பாலிக்கும்

புதிய கடவுளர் தரிசனம்.

வருடாவருடம் கிடைத்துவிடுகிறது

பிறந்தநாள் கொண்டாட்டம்

சொல்வனம்

சுமந்துவரும் புத்தாடைகளின் வாசம்.

வருடாவருடம் கிடைத்துவிடுகிறது

விளையாட்டுக்கள் பரிசளிக்கும்

அங்க அடையாளத்துக்கான

அத்தியாவசியத் தழும்புகள்.

வருடாவருடம் கிடைத்துவிடுகிறது

புகைப்படத்தில் சிரிக்கும் அம்மாவை

பூசையறையில் வைத்து

வழிபடும் வாய்ப்பு.

 - பாப்பனப்பட்டு வ.முருகன்

கண் குத்தும் மழை

இடுப்பளவு நீரில்

அடுப்புகள் அடித்துச்செல்லப்பட்டும்

வயிற்றோடே இருக்கிறது

பசி மட்டும்.

** 

தேநீர்க் கோப்பையோடு

சன்னலில் பார்த்த மழைதான்

பிறகு

சாப்பாட்டுப் பொட்டலங்களுக்காக

வானம் பார்க்கவைத்தது.

** 

வெள்ளம் புகுந்த வீட்டிலிருந்து

பிடித்துக்கொண்டும்

எடுத்துக்கொண்டும்

ஓடிவருவதற்கு வசதியாகயிருந்தது உயிர் மட்டும்தான்.

** 

இப்போதெல்லாம்

தப்பு செய்யும் மக்களின்

கண்ணைக் குத்துவதில்லை சாமி

மாறாக

ஒரு மழையைப்

பொழியச்செய்துவிடுகிறது.

 - நிலாகண்ணன்

நிலாக் கனவு

நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன்

அந்தக் கனவில் நிலாக்குட்டி வருகிறாள்

விழித்துப் பார்த்தால்

நிலாக்குட்டி என்னைத் துயிலெழுப்புகிறாள்

கனவில் அவளைக் கண்டுகொண்டிருந்ததை

கதையாகச் சொல்கிறேன்

நிலாக்குட்டி தூங்கிப்போகிறாள்.

கனவு கலைந்து நான் துயிலெழுகிறேன்

கதையைச் சொல்லலாமென்றால்

நிலாக்குட்டி

தூங்கிக்கொண்டிருக்கிறாள்.

 - சேயோன் யாழ்வேந்தன்