Published:Updated:

ஓர் உணவுவிடுதியும் இரண்டு காதலிகளும்

சிறுகதை: சுப்ரபாரதிமணியன், ஓவியங்கள்: ஸ்யாம்

ஓர் உணவுவிடுதியும் இரண்டு காதலிகளும்

சிறுகதை: சுப்ரபாரதிமணியன், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:

டலும் மனமும் அப்படி ஒரு பரபரப்புக்கு ஆட்பட்டு ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன.  அழகான பெண்களைப் பார்க்கிறபோது அந்த வகை பரபரப்பு ஏற்படும். அப்போதும் ஏற்பட்டது... இன்னும் கொஞ்சம் விபரீதத்துடனே!

`மைதிலி...' என வாய்விட்டு, தான் அலறியதாக அவனுக்குத் தோன்றியது. ஆனால், அலறல் சத்தம் கேட்டு, நடந்துகொண்டிருந்தவர்கள் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. அப்படியானால், குரல் சரியாக எழும்பி அடையாளம் காட்டவில்லையா? கொஞ்சம் வாயைத் திறந்து அலறவேண்டும் என நினைத்தான் சேதுபதி.

``மைதிலி... மைதிலி...”

மைதிலியைப் பெண் பார்க்கப் போன அன்றுதான், `மைதிலி என்னை காதலி' படத்தை யதேச்சையாக தொலைக்காட்சியில் பார்த்தான் சேதுபதி. அதனால் பெயர் குழப்பம் வராமல் மனதில் கல்வெட்டுப் பெயர்போல் `மைதிலி' என்ற அந்தப் பெயர் நிலைத்து நின்றுவிட்டது. நிச்சயமாக எல்லாம் சுமுகமாக நடக்கும் என எதிர்பார்த்திருந்தான். ஆனால், வழக்கமாக செவ்வாய், ஏழாம் இடத்தில் புதன்... என ஏதேதோ காரணங்கள் காட்டி, அந்த ஜாதகமும் கைகூடவில்லை. ஆனால், முடிவு தெரியத் தாமதமான மூன்று மாதங்களில், அவன் அவளுடனான இன்பக் காதல் ஜுரத்தில் இருந்தான். படுகாட்டமான ஜுரம். ஜுரம் வடிய, ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.

ஆறு வருடங்கள் கழித்து மைதிலி, கண்களில் தட்டுப்படுகிறாள். இதற்குள் அவளுக்குத் திருமணமாகி, குழந்தைகளுக்கு அவளின் இனிஷியலை வித்தியாசமாக வைத்திருப்பாளா... `குடும்பஸ்திரி' என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருப்பாளா? உடல் கொஞ்சமும் கட்டுக்குலைய வில்லை. இது வேறு ஊர்தான். கண்களில் தட்டுப்பட்டவளைக் கண்டதும் எந்தக் கூச்சமும் இல்லாமல் அவள் பெயரை உரக்கவே சொல்லத் தோன்றியது சேதுபதிக்கு. அவன் கையில் இருந்த `சுலபமாக ஆங்கிலம் பேசுவது எப்படி?' நூல் கையில் இருந்து நழுவுவதுபோல் இருந்தது. இறுக்கிப் பிடித்துக் கொண்டான். நுனிநாக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் ஆசை அவனுக்கு இந்த வாரத்தில் வந்துவிட்டது. அந்தப் புத்தகம், அவனை எங்கோ ஒரு படி மேலேதான் கொண்டுபோகும் என நம்பினான்.

ஓர் உணவுவிடுதியும் இரண்டு காதலிகளும்

மைதிலி, மொழிப்போர் தியாகிகள் நினைவுச் சின்னத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தாள். டவுன்ஹால் நிறுத்தத்தில் இறங்கியவளை பின்தொடர்ந்துகொண்டிருந்தான் சேதுபதி. குறுக்கிடும் வாகனங்கள், மனிதர்கள் எல்லாம் மறைந்துபோக, மைதிலி மட்டும் அவன் பார்வையில் இருந்தாள்.

`மைதிலி'... சரியான பெயர்தான். அப்படி ஒன்றும் மாறிப்போயிருக்காது.  சரியான பெயரைச் சொல்லியும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை. அந்தப் பெயருக்குரியவளே திரும்பிப் பார்க்காதபோது வேறு யார் திரும்பிப் பார்ப்பார்கள்?  அல்லது உயிர்போகும் வெயிலில் அவர்களுக்கு காதுகள் அடைத்துப்போயிற்றா என்ன?

குமரன் நினைவகத்தைத் தாண்டி அன்னபூர்ணா விடுதிச் சந்தில் தனிமையில் விடப்பட்டவள்போல் மைதிலி நடந்துகொண்டிருந்தாள். ஆண்களையும் அவர்களின் பார்வைகளையும் விலக்கிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறாள். நடையின் விரைசல், அவனின் வேகத்தைக் கூட்டச் சொன்னது. அவனும் உடம்பின் சிரமம் மீறி நடையை விரைவாக்கிக்கொண்டான். இந்த முறை பெயரை உரக்கச் சொல்லிவிடவேண்டியதுதான். தொண்டையைச் சரிசெய்து கொண்டான்.

அவள் திரும்பிப் பார்த்த மாதிரி அவளின் கழுத்து 45 டிகிரி கோணத்தில் திரும்பியது. ஆனால், காதர்பேட்டையின் வீதிக்குள் நடையை முடுக்கிக்கொண்டிருந் தாள். உடம்பில் இன்னும் எந்தச் சுணக்கமும் இல்லை. திருமணமாகி இருந்தாலும்  உடம்பை அப்படியே வைத்திருக்கிறாள்.  அம்மா காலத்துப் பெண்ணாக இருக்கவேண்டியவள். உடம்பைச் சரியாக வைத்துக் கொள்வதில் அம்மாவுக்கு இணை யாக எளச்சிபாளையம் பெரிய சித்தியைத்தான் சொல்ல வேண்டும். அதற்கு அப்புறம்தானா மைதிலி நீ?

இந்தப் பகுதி எப்போதும் கலவர பூமிதான். ஏதாவது மதக் கலவரங்கள், அரசியல் போராட்டங்கள், சிரமங்கள் நாட்டில் எங்கேயாவது ஏற்படுகிறபோது, இந்தப் பகுதி காய்ச்சல் வந்ததுபோல் ஆகிவிடும். எங்கேயாவது நின்று யாராவது ஆர்ப்பாட்டம் செய்வார்கள்; உரிமைகளுக்குக் குரல்கொடுப் பார்கள். குமரன் நினைவகம் தொடங்கி நெரிசலாக வழியும்.  இப்போது சேதுபதிக்குக் காய்ச்சல் வந்ததுபோல் இருந்தது. தொண்டை கிழிய மைதிலி பெயரைச் சொல்லிக் கத்திவிட்டேனே! இன்னும் திரும்பிப் பார்க்கவில்லையே. பெண்கள் கல் மனதுக்காரர்கள் என்பதைத் திரும்பத் திரும்ப நிருபிக்கிறாளா என்ன? மைதிலியின் ஜாக்கெட்டில் கை விரல்கள்போல் விரிந்த பூ வைத்த, முதுகு தெரிய பார்டர் சீரமைக்கப் பட்ட, அவனுக்குப் பிடித்த மஞ்சள் நிற ஜாக்கெட்.

கொஞ்சம் விரைவாகப் போய் எதிரிலே நின்று `மைதிலி... என் வார்த்தைகள் காதில் விழ வில்லையா?' எனக் கேட்க வேண்டும் என விரைந்து நடந்தான். இரண்டு சக்கர வாகனம், தொடர்வண்டி நிலைய இருப் பிடத்தில் இருந்தது. காங்கேயம் போய்விட்டு வந்தவன், பேருந்தில் இருந்து  இறங்கி இருசக்கர வாகனத்தை எடுக்க நடந்தவனின் கண்களில்தான் அவள் விழுந்தாள். `வெள்ளக்கோவில்காரிக்கு இங்கு என்ன வேலை?' என முதலில் அவனுக்குள் கேட்டுக்கொண் டான். திருப்பூரே, காங்கேயம் வரை விரிவாகிவிட்ட பின்னர் வெள்ளக்கோவிலும் உள்ளூர் தான். உள்ளூரில்கூட வாழ்க்கைப் பட்டிருக்கலாம்; இங்கு அவளுக்கு வேலை அமைந்திருக்கலாம். எப்படியும் கேட்டுத் தெரிந்து கொள்ளத்தானே போகிறேன்.

ஓர் உணவுவிடுதியும் இரண்டு காதலிகளும்

அவள் தொலைபேசி நிலையத்தைக் கடந்து  ராயபுரம் பகுதிக்கு நகர்ந்தாள். இருசக்கர வாகனத்தை எடுத்து வந்து அவளைப் பின்தொடரலாமா... அதற்குள் அவள் மின்னல் என மறைந்துவிட்டால் சிரமமாகி விடும். பின்தொடர்ந்து பார்க் கலாம். வேறு வழி இல்லை. நடுராத்திரிப் படங்களில் பெண் களை, ஆவிகளை விரட்டிப் போகும் ஆண்களின் கதியில் அவன் இருந்தான்.
`குழந்தைகளைப் படிக்க வையுங்கள், இடையில் நிறுத்தா தீர்கள். குழந்தைகளின் வருமானம், பெற்றோருக்கு அவமானம்' - ஜெய்வாய்பாய் பெண்கள் பள்ளி எதிரில் பதாகைகளுடன் பள்ளிக் குழந்தைகளின் ஊர்வலம் அப்போதுதான் புறப்பட்டது என்பதுபோல், சிறு குழுக்கள் தென்பட்டு அவளைத் தடுமாறவைத்துவிட்டது. அவளின் நடை மெதுவாகியிருந்தது. கோஷங்கள், சிலருக்கு எதை எதையோ சொல்லிக்கொண்டிருந்தன. கோஷங்களூடே `மைதிலி...' எனக் கத்தலாமா என நினைத்தான். அவனின் தற்போதைய கோரிக்கை, அவளை அடையாளம் கண்டுகொள்வது. அப்புறம், சில நிமிட நேரப் பேச்சு. கிருஷ்ணன் கோயில் முகப்பில் இருந்த நகராட்சிப் பூங்காவுக்குள் மைதிலி நுழைந்துவிட்டது தெரிந்தது.

அவன் உள்ளே நுழைந்து, வாசலில் 180 டிகிரி  கோணத்தில் தலையை அசைத்துப்பார்த்தான். அவள் ஒரு பெஞ்சில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். முழு உடம்பையும் பெஞ்சில் சிரமத்துடன் சாய்த்திருந்தாள். அவளின் கண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. இது என்ன பார்வை...  உடல் முழுக்க மின்சாரம் தாறுமாறாகப் பாய்ந்து நிலைகுலைய வைக்கிறதே!
அவள், பார்வையை விலக்கவில்லை. அதீதம் இல்லாத முகப்பூச்சில் இரவு நேரத்து நிலவாக அவள் முகம் மின்னியது. அவள் புங்கமரம் ஒன்றின் கீழ் குளுமையை அனுபவிப்பவள்போல் கண்களை மூடித் திறந்து பார்த்தாள். அவள் வாயெடுக்கும் முன்பே அவன் கதறுவதுபோல் கேட்டான்...

``மைதிலிதானே நீங்க..?''

``இல்லை.''

கண்களுக்குக் கீழ் அரும்பியிருந்த வியர்வையை ஆள்காட்டி விரலால் சுண்டினாள். அவளின் பிரகாசத்துக்குள் அவன் திணறினான்.

``எதுக்கு என் பின்னால வர்றீங்க?''

``நீங்க மைதிலிதானே..?''

``இல்லைனு சொன்னேன்ல.''

``இல்லை...  என்னால நம்ப முடியலே!''

``வேற என்ன பண்ணணும்... என் பேரை மாத்திக்கணுமா?''

``மைதிலினு...''

``டவுன்ஹால்ல இருந்து ஃபாலோ பண்றீங்க. யாராச்சும் பார்த்து, ஏதாச்சும் கேள்வி கேட்டா எவ்வளவு அசிங்கம்?''

அவள் கண்கள் துளிர்க்க ஆரம்பித்தன. வியர்வைத் துளிகளில் இருந்து மாறுபட்டது இந்தத் துளிர்ப்பு.

``ஒரு பெண்ணை ஃபாலோ பண்றது எவ்வளவு சங்கடமா இருக்குது தெரியுமா?''

கண்களில் நீர் தளும்பித் திரிந்தது அவளுக்கு. கன்னக்கோடுகளில் தாரைகள் விழுந்தன.

``சாரி...  நான் உங்களை மைதிலினு நினைச்சு...''

``அதுதான் `இல்லை'னு சொல்லிட்டேனே.''

``மைதிலி...''

``அதுதான் இல்லையே... விடுங்க... ஃபாலோ பண்ணாதீங்க.''

அவள் விறுவிறுவென ராயபுரம் பூங்கா வெளிவாசல் பக்கம் சென்றாள். இதை அவனிடம் சொல்வதற்காகவே இங்கு நுழைந்தாளா? இடதுபக்கம் இருந்து காவலாளி போல் தென்பட்டவன், சேதுபதியை நோக்கி விரைந்து  வந்தான். அவன் நெருங்குவதற்குள் பூங்காவின் குளுமையில் இருந்து தப்பித்துவிட வேண்டும் என்பதுபோல் வாசல் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவளைப் பார்த்தான். அந்தப் பூங்காவில் போன வாரம் நடந்த கூட்டம் பற்றி அவன் கேட்டுத் தெரிந்திருந்தான். 
    
பனியன் தொழிலுக்காக உள்ளுரில் வந்து தங்கியிருக்கும் நைஜீரியர்களுக்கு, இனி யாரும் வீடு தரக்கூடாது. இருக்கிறவர்களும் காலிசெய்ய வேண்டும். நைஜீரியர்கள், வெகு சுதந்திரமாக நடமாடுகிறார்கள்; இரவுகளில்கூட நேரம் காலம் இல்லாமல் திரிகிறார்கள்; போதை வாசத்துடனேயே இருக்கிறார்கள். நைஜீரியப் பெண்களும் இப்போ தெல்லாம் அவர்களுக்கு ஜோடியாகத் தென் படுகிறார்கள். இல்லையென்றால், ராயபுரம் அம்மன் நகர் பெண்களுடன் சுற்றுகிறார்கள். கலாசார  அதிர்ச்சி அலைகளைக் கிளப்பிக்கொண்டே இருக்கிறார்கள். நைஜீரியப் பெண்கள் இறுக்கமான உடை, அபரிமிதமான லிப்ஸ்டிக் எனத் திரிந்தபோது, கொஞ்சம் சுலபமாகவே எடுத்துக்கொண்டார்கள். உள்ளூர் பெண்களுடன் அவர்கள் சுற்றுவது அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியது. `அவர்கள் இந்தப் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும்’ என மக்கள் அந்தப் பூங்கா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர்.

ஓர் உணவுவிடுதியும் இரண்டு காதலிகளும்

காவலாளி நெருங்கிவந்து, ஏதோ விபரீதம் என அவனை வெளியேறச் சொல்வான். அதற்குள் தப்பித்துவிட வேண்டும் என நடையை விரைவாக்கினான். நைஜீரியர்களின் இருட்டு முகம் தனக்கு வந்திருக்கும் என நினைத்துக்கொண்டான். தன்னைப் பின் தொடர வேண்டாம் என, புறங்கையால் தள்ளிவிட்டுப் போய்விட்டாள். இனி தொடர முடியாது.

ராயபுரம் பகுதிக்கு வரும்போதெல்லாம் ஓ.எஃப்.சி உணவுவிடுதிக்குப் போக அவன் தவற மாட்டான். `நம்ம பட்ஜெட்டுக்கு இதெல்லாம் தாங்காது' என நினைத்தபடிதான் அவன் முதல் முறை ஓ.எஃப்.சி-க்குள் நுழைந்தான்.

முதல் முறை ஓ.எஃப்.சி-க்குள்...

கட்டடத்தின் உட்புறம் முழுக்க, மெல்லிய சிவப்பு வண்ணம் மேலோங்கியிருந்தது. நின்றுகொண்டு சாப்பிடும்விதமாகச் சாய்ந்து கோணலாக எட்டு வட்டமேசைகள் இருந்தன. அவனை நோக்கிச் சிரித்தபடி வந்த பெண், அட்டையை நீட்டினாள். தலை கேசம் தவிர, எல்லாமே பழுப்பு - சிவப்பு நிறத்தில் இருந்தன. அவனுக்கு அட்டையில் நெளிந்த புழுக்களாக எண்களும் வார்த்தைகளும் மிதந்தன. அதில் இருந்த விலைதான் அவற்றை எல்லாம் புழுக்களாக்கி விட்டன. அபரிமிதமான விலை. அரை பிளேட் பிரியாணி 60 ரூபாய் என்பதை அதிகம் என நினைக்கும் சிக்கனக்காரன் அவன். பனியன் கம்பெனியில் வேலைசெய்பவன். இதற்கு மேல் எப்படிச் செலவுசெய்ய எனத் திடமாக நம்புபவன்.

“என்ன ஆர்டர் பண்றீங்க?''

“என்ன பண்றதுனு தெரியலே.''

“என்னென்ன அயிட்டம்னு சொல்லட் டுமா?''

``அது இல்லை... விலைதான். நூறு ரூபாய்க்குள்ள ஏதாச்சும்...''

“ஒரு சிக்கன் லெக் பீஸ், ஒரு கப் கூல்டிரிங்க் 105 ரூபா.''

“சரி... இதுதான் நம்ம பட்ஜெட். கொண்டுவாங்க.”

“அவ்வளவுதானா?''

“இன்னிக்குப் போதும். போனஸ் வாங்குறப்போ மனசுல வெச்சுக்கிறேன்.''

“எப்போ போனஸ்?''

``தீபாவளிக்கு.''

“அதுக்கு ரொம்ப நாள் இருக்குதே!''

60 ரூபாய் பிரியாணி என்றால், ருசித்துச் சாப்பிடுவான். ரொம்ப நேரம் அந்தக் கார நெடி வாயில் இருக்கும். எண்ணெய்ப் பிசுக்கு, விரல்களில் மாட்டிக்கொண்டி ருக்கும். 105 ரூபாய்க்கு ஒரு லெக் பீஸ் மட்டும்தானா?

“வேற ஏதாச்சும்...”

“இன்னிக்கு இது போதும். மொதல் தரம் இப்பத்தான் வர்றேன்.''

லெக் பீஸ் சுவையாகத்தான் இருந்தது. நின்றுகொண்டே சாப்பிட்டான். சுற்றிலும் பார்த்தபோது அங்கு இருந்த சுவரொட்டிகளில் யார் யாரோ பாடகர்களின் முகங்கள் இருந்தன. அவனின் ஆங்கில அறிவில் ஓ.எஃப்.சி-க்குத் திரும்பத் திரும்ப அவர்கள் வரவேற்பது தெரிந்தது. வெளி நாட்டுப் பாடகர்களும் அதையே செய்தார்கள். பணம் வாங்குகிறவன் தவிர, எல்லோரும் பெண்களாகவே இருந்தார்கள்.  சிவப்பு பேன்ட் - சட்டை, சிவப்புத் தொப்பி என எல்லாமே ஒரே சிவப்புமயம். இளமையான பெண்கள் என்பது அவனை உறுத்தியது. மூன்று நாட்கள் தாடியைச் சொறிந்து கொண்டான்.

அங்கு  பல தரம் சென்றிருக்கிறான். குறைந்த பட்ஜெட்டை எப்போதும் அவன் தாண்டியது இல்லை. ஜெயமணியை ஒரு தரம் கூட்டிக் கொண்டு வர நினைத்திருந்தான். அவளின் பனியன் கம்பெனி அலுவலகத்தில் ஞாயிறு மட்டுமே விடுமுறை. ஞாயிறுகளில் திருமுருகன் பூண்டி சிவன்கோயில் காங்கேயம் சிவன்கோயில், அழகுமலை முருகன் கோயில்... என அவனின் இருசக்கர வாகனம் திரியும். நொய்யல் கரை வெள்ளி விழாப் பூங்கா பக்கம் சாதாரண மாகச் சென்று திரும்புவதே பாக்கியம் என்பதுபோல், நான்கு வீதிகளுக்குள் விடுமுறை தினம் அடைபட்டுப்போகும். தினமும் இரவு எட்டு மணிக்கே வீடு திரும்பும் பனியன் கம்பெனி வேலை அவளுக்கு. நின்றுகொண்டு வேலைசெய்து சலித்திருந்தாள். அவள் பிரிவு அப்படி.

ஓ.எஃப்.சி-யின் சிவப்பு நிறக் கட்டடத்தைப் பார்த்தான். மைதிலி தந்தது, நான் அவள் இல்லை என்ற நோஸ்கட்டா... மறுப்பா. இல்லை, அவள் மைதிலியே இல்லையா... அவனுக்குக் குழப்பமாக இருந்தது.
பெண் பார்க்கும் படலத்தில் அலுத்துப்போயிருந்தான். பல்லடம் சித்தப்பா, கல்யாண புரோக்கர்தான். அவரே அலுத்துப்போனார்.

“நான் பார்த்து ஊர் முழுக்க நிச்சயதார்த்தம் பண்ணி வைக்கிறேனே. இவனுக்குனு ஒண்ணு வாய்க்க மாட்டேங்குதே!''

அம்மா புலம்பித் தீர்த்தாள்... “டேய் வயசாகிட்டே போகுதுடா. ஏதாச்சும் தாலியை அறுத்தது, விவாகரத்துப் பண்ணினதுனு கெடச்சாலும் பண்ணிக்கடா. நானும் உனக்குச் சமைச்சுப் போட்டுச் சலிச்சுப்போயிட்டேன். ரொம்பவும் லேட் ஆகுதுடா.''

சேதுபதியும் மிகையான முகப்பூச்சு, டாலடிக்கும் சட்டைகள் எனத் திரிந்தான். அம்மா அடையாளம் கண்டுகொண்டாள்.

“ எப்படியும் தேடிக் காதலிச்சு கண்டுபிடிச்சு உங்க கவலையைப் போக்கிடுறேன்.''

“பாத்துடா... மாறு கை, மாறு கால்னு வெட்டற காலம் மறுபடியும் வந்திட்டிருக்கு. கலப்பு ஜாதினு கை - காலுக்கும் உடம்புக்கும் பிரச்னை வந்துடப்போகுது.''

ஜெயமணியைப் பார்த்தபோது சம வயது என்றார்கள்; ஜாதகம் ஒன்றும் வேண்டாம் என்றார்கள். கொஞ்சம் அவள் பார்வையில் படும்படி திரிந்தான். அபூர்வமாக தொலைபேசியில் பேசிக்கொண்டான். `காதல்’ என்றான். அவள் `இரண்டு மாதங்கள் போகட்டுமே’ என இழுத்தடித்தாள். சிக்கண்ணா கல்லூரிச் சாலை கொங்கணகிரி  முருகன் கோயிலில்  பூ பார்த்து, `சரி' என்றதும் ஒப்புக்கொண்டாள். கொஞ்சம் அதிகம் படித்தவளாக ஜெயமணி இருந்தாள் என்பது, அவன் அம்மாவுக்கு சங்கடமாக இருந்தது. சேதுபதி  ப்ளஸ் டூ. ஜெயமணி டிகிரி. ஆரோக்கிய நாதன், சேதுபதியுடன் மெர்சண்டைஸிங்கில் வேலை பார்ப்பவன்.

“எங்க ஆளுங்கள்லகூட  ஈக்குவல் ஏஜ்தான் நிறைய இருக்கும். குற்றவுணர்வா இருக்காதே...'' என்றான்.

ஜெயமணியின் நினைவாக  மூன்று மாதங்கள் காத்திருந்து, `காதலிக்கிறேன்' என மனதிலும் தொலைபேசியிலும் தினமும் பல முறை  சொல்லிச் சாதித்தான். அவன் அம்மாவுக்கு அவர்கள் சாதியிலேயே ஜெயமணியைத் தேடிக் கல்யாணம் கட்டிக் கொண்டதில் ஏக சந்தோஷம். ஆத்மா சாந்தியடைய சரியான வழியைக் கண்டுகொண்டாள்.

ஓ.எஃப்.சி-யின் உள்ளில் இருந்த குளுமையை உள்வாங்கிக் கொண்டவன்போல் உட்கார்ந் தான்  சேதுபதி. கண்களைத் திறந்தபோது  மேஜையின் கிறீச் சலுடன் மைதிலி நின்றிருந்தாள்.

“மைதிலி நீங்களா, இங்கே...”

“நான் மைதிலி இல்லை.  ஆர்டர் பண்ணுங்க. என்னை ஃபாலோ பண்ணி வந்திருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன்.''

“இல்லை... ஃபாலோ பண்ணலை. எப்பவாச்சும் இங்கே வருவேன்.''

வழக்கமான பட்ஜெட்டைவிட 50 ரூபாய் அதிகம் இருக்கும் அயிட்டத்தைத் தேடினான். லெக் பீஸைத் தாண்டி அவன் கண்களை நகர்த்திக்கொண்டுபோவது சிரமமாக இருந்தது. மைதிலியின் முன்பு கஞ்சனாகக் காட்டிக் கொள்ளக் கூடாது.

சேதுபதி, 185 ரூபாய் பணத்தை எடுத்து நீட்டியபடி, மைதிலியைத் தேடினான். இந்த முறை வறுத்த எட்டு உருளைக்கிழங்கு நறுக்குகள் அதிகம் இருந்தன. வாயையும் கையையும் துடைத்துக்கொள்ள கொஞ்சம் அதிகமான டிஷ்யூ தாள்களைப் பயன்படுத்தியிருந் தான். மைதிலியைக் காணவில்லை. எங்கோ ஒளிந்திருக்கலாம். இன்னும் நான்கு டிஷ்யூ  தாள்களைக் கசக்கி எரிச்சலில் எறிந்தான்.
கல்லாவில் இருந்தவர் இன்னொரு பணிப்பெண்ணிடம் உரத்தக் குரலில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் பெண் கலங்கிய கண்களுடன் நின்றிருந்தாள். சேதுபதி, கல்லாவின் அருகில் பில்லுடன் செல்லவே அவள் நகர்ந்துவிட்டிருந்தாள். சிவப்பு மேசையில் அவனின் கை விரிந்து பில்லுடன் கிடந்தது.

``கல்யாணமான பொண்ணுகனா கொழந்தைக, ஆஸ்பத்திரினு அடிக்கடி லீவு கேப்பாங்கனு, கல்யாணம் ஆகாதவங்களைப் போடுறோம். இதுங்களை மேய்க்கிறதுக்கு நாலு ஆள் வேண்டியிருக்கு. உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணுக இருந்தா சொல்லுங்க சார்.” 

யதேச்சையாக அவனிடம் ஒரு விண்ணப்பம். அவனுக்குப் பெருமிதமாக இருந்தது. அவனின் விண்ணப்பங்களை நிராகரிக்க ஆயிரம் பேர். அவனுக்கே ஒரு விண்ணப்பம்.
அப்படியென்றால், மைதிலி திருமணம் ஆகாதவளா... இன்னும் ஆகவில்லையா? அவளின் தெறித்த உடம்பில்   இளமை மினுங்கிக்கொண்டிருந்ததே!

“கல்யாணம் ஆகாததாத்தான் வேணுமா?''

“கல்யாணம் ஆகியிருந்தாலும் பரவாயில்லை. ரெண்டும் மிக்ஸிங்கா இருக்கட்டும். அதுவும் பார்க்கலாம்.''

“வயசு...”

“வயசு வெளியே தெரியக்கூடாத மாதிரி இருந்தா சரி. கொஞ்சம் இங்கிலீஷ் நுனிநாக்குலே பேசணும். அது போதும்.''

அவன் கையில் இருந்த, `சுலபமாக ஆங்கிலம் பேசுவது எப்படி?' - நூலை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான். நுனிநாக்கு ஆங்கிலத்துக்கு இது போதுமா... போதும்.
“ஒன்லி லேடீஸ்?''

சேதுபதி ஒய்.எம்.சி.ஏ ரவுண்டானாவைக் கடந்த பின்னால், ஓ.எஃப்.சி அவன் கண்களில் இருந்து மறைந்தது.

அவள் கல்லாவின் அருகில் வந்து நின்றாள்.

 ``ரெண்டு கல்யாண விளம்பரங்கள் பார்த்து குறிச்சுவைச்சேன் மைதிலி.  இது செட் ஆகுமா பாரு. விடோ, டிவோர்சினு கேட்டிருக்காங்க. வொர்க்அவுட் ஆகலாம் மைதிலி. ட்ரை பண்ணு'' - காகித நறுக்கை மைதிலியிடம் தந்தார் கல்லாப்பெட்டிக்காரர்.

ஓர் உணவுவிடுதியும் இரண்டு காதலிகளும்

ஜெயமணி, அன்றைக்கு வெகு தாமதமாகத் தான்  வீட்டுக்கு வந்தாள். ஹேண்ட்பேக்கைத் தூக்கி எறிந்துவிட்டு, ``இந்தப் பனியன் கம்பெனி வேலையே ஆகாது. நேரம், காலம்னு ஒண்ணும் இல்லாமப்போச்சு'' என்றாள்

``இருபதாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலாவணினா சும்மாவா?''

“அது எத்தனை குடும்பத்துக்கு... நம்மளை மாதிரி கூலிகளுக்கு வாரக் கூலியும் அபூர்வமா வருஷாந்தர போனஸும்தான்.''

“வேற வேலைக்கு மாத்திக்கிறயா காதலி...”

“ஒண்ணு புடுச்சுக் குடு காதலா''

``சரி... ஏற்பாடு பண்ணிடுவோம். எட்டு மணி நேரம்தான் உன் குறிக்கோளா?”

“ஒரு ஷிஃப்ட்டுங்கிறது பத்து பன்னிரண்டு மணி நேரமாகிப்போன ஊர் இது. கொஞ்சம் ஓய்வு தேவை. அது மாதிரி வேலை.''

“இந்த புக்கை இன்னையில இருந்து படிக்கிறே...''
கையில் இருந்த `சுலபமாக ஆங்கிலம் பேசுவது எப்படி?' என்ற நூலைக் காட்டினான்.
“டிகிரி படிச்சதுக்கு இதெல்லாம் தேவை இல்லை. உன்னோட ப்ளஸ் டூ-க்கு வேணும்னா படி!''
“பிராக்டிக்கலா தேவைப்படும். படி...” 

“அப்புறம் வேறே என்ன பண்றது வேலை மாத்திக்கிறதுக்கு?'’ 

திருப்பூர் திருப்பதி கோயிலில் ஒரு சனிக்கிழமையில்  அவள் சுண்டல் பிரசாதமும் இலவச இனிப்புப் பொங்கலும் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தபோது, அவன் ஜெயமணி உடம்பு இளைக்கவேண்டிய அவசியம் பற்றி சொன்னான். சந்தோஷத்துக்குக் காரணம் அன்றைக்குச் சீக்கிரம் பிரசாதம் கைக்கு வந்துவிட்டதும், அதற்கான வரிசை சீக்கிரம் நகர்ந்துவிட்டதும்கூட.
“இந்த இனிப்பை கொஞ்சம் குறைக்கணும்.''

“சாமி பிரசாதம் இல்லையா?''

“கொஞ்சம் குறைக்கணும். உடம்பு வெயிட் கொறைக்க மலமிளக்கி டேப்ளட் முதற்கொண்டு போடணும்.''

“கொஞ்சம் கொள்ளு, சுடுதண்ணினு குடிச்சு, குறைக்க முடியாதா?''

“அது ரொம்ப லேட்டாயிரும். கிழவியாகிருவே!''

“சரி. எதுக்கு இது?”

“வேற எடத்துக்கு... வேற  வேலைக்கு.''

“பியூட்டி பார்லருக்கா வேலைக்குப் போகப்போறேன்?''

“இல்லை. ஆனா, பியூட்டியா இருக்க வேண்டாமா? சரி... இப்போ கொஞ்சம் ருசியா சிக்கன் சாப்பிடலாமா?''

“கோயில் பிரசாதம் சாப்பிட்டு, சிக்கனா..?”

``சிக்கன் சாப்புட்டுத்தான் கோயிலுக்குப் போகக் கூடாது. பிரசாதம் நெய்ப்பொங்கல் சாப்புட்டு சிக்கன் சாப்புடலாமே... என்ன தீட்டு வந்திருது?''

“ரொம்பத் தூரமா..?”

“சபாபதிபுரத்தில் இருந்து ராயபுரத்துக்கு. அவ்வளவுதான்.”

“நெய்ப்பொங்கலுக்கும் சிக்கனுக்கும் உள்ள தூரம்.''

ராயபுரம் ஓ.எஃப்.சி-க்குள் நுழைந்து, சிவப்பு வர்ணம் மேலிட்டக் கட்டடத்தை   ஆச்சர்யத்துடன் பார்த்தாள். லெக் பீஸ் சிக்கனும் கோகோ கோலாவும் அவளுக்குப் பிடித்திருந்தன.பனியன் கம்பெனி வேலையில் இருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்பவள்போல் பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

``ஹோட்டலுக்குப் போகத் தோணுறப்போ இங்க வரலாங்க.”

“சிக்கன் ருசி புடிச்சிருக்கா?”

“இந்தச் சுத்தமும் புடிச்சிருக்கு. பனியன்  குப்பைக்குள்ளயே பத்து மணி நேரம் இருந்தவங்களுக்குத்தான் இந்தச் சுத்தம் சுகம்னு புரியும்.”

“இங்க வேலை செய்யறது புடிக்குமா?”

“எட்டு மணி நேரம்தானா?”

“அப்படித்தான் சொன்னாங்க. சம்பளமும் கொஞ்சம் கூடுதலா இருக்கும். பஸ் விட்டு இறங்கினா ஓ.எஃப்.சி.”

இரண்டு நாள் யோசித்து ஓ.எஃப்.சி-க்கு ஓகே சொன்னாள். ஜெயமணி வேலைக்குச் சேர்ந்துவிட்டால், சிக்கனும் லெக் பீஸும் சலுகை விலையில் கிடைக்கலாம்.  அவளுக்கும் ருசியாகச் சாப்பிட அவ்வப்போது ஏதாவது கிடைக்கும். சமையலில் அவ்வளவு கெட்டிக்காரி அல்ல ஜெயமணி. அதுவும் லெக் பீஸ், ஃபிரைடு சிக்கன் என்பது எல்லாம் அவளுக்கு வெகுதூரம். மைதிலியை அடிக்கடி பார்க்கவும் வாய்ப்பு கிடைக்கும். அது அவனின் மைதிலிதானா..? அவள் `இல்லவே இல்லை' என்கிறாள். மைதிலிதானா எனக் கண்டுபிடிக்கும் கண்ணாமூச்சி விளையாட்டில் ஆவலாக இருந் தான். எப்படியும் கண்டு பிடித்துவிட வேண்டும். மைதிலி எப்படி அப்படியே இருக்கிறாள். ஆறு வருடங்களுக்கு முன்னர் கண்ணில்பட்ட அதே பார்வை வசீகரம் அல்லது அப்படியே இருப்பதாக அவன் கண்களுக்குத் தெரிகிறாள்.
உடம்பைக் குறைக்க எனச் சாப்பிட  ஆரம்பித்த  மலம் இளக்கி மாத்திரைகள், ஜெய மணியை இம்சைப்படுத்தி விட்டன. முகத்துக்்குப் பொலிவு இல்லாமல் சிறுத்துப் போய்விட்டது. அடர்த்தியாக பவுடர் போட்டு, மினுங்கலை ரசித்தாள்.

ஓ.எஃப்.சி   வேலை, அவளுக்குப் பிடித்திருந்தது. சிவப்புத் தொப்பி, சிவப்பில் மேலாடை,  பேன்ட், எட்டு மணி நேர வேலை, கணிசமான சம்பளம், ருசியான பார்சல் எல்லாம் இருவருக்கும் பிடித்திருந்தன. பனியன் கம்பெனி வாழ்க்கையில் இருந்து அவள் விடுபட்டதற்கு அவனுக்குப் பல முறை முத்தங்கள் மூலம் நன்றி சொன்னாள்.

ஆனால், உடம்பைக் குறைக்க அதிகப்படியாக மாத்திரைகள் சாப்பிட்டதால், முதுகுவலியும் கர்ப்பப்பைக் கோளாறும் அவளை முடக்கின. படுக்கையையும் ஓய்வையும் அவள் உடம்பு கெஞ்சிக் கேட்டது.
“என்னை வேற ஆளா மாத்துறதுக்கு முயற்சி பண்ணுனீங்க.முதல்ல சந்தோஷமாத்தான் இருந்தது. அப்புறம் மெள்ள சந்தேகம் வந்தது.''

“என்ன சந்தேகம்?''

“நான் இயல்பா இல்லாம, எதுக்கு இப்படிப் பட்டினிக் கிடந்து மாத்திரைகளைச் சாப்புட்டு  உடம்பை இளைக்க வைக்கிறேன். என்னை எங்க தள்றீங்க?''
“அங்கே அதுதான் கேட்டாங்களே. ஒல்லியா இருக்கணும்னு.''

“நுனிநாக்கு இங்கிலீஷ் சுலபமா வந்திருச்சு. மெலிஞ்ச உடம்பு வர்றதுக்கு எதை எதையோ தியாகம் பண்ணியிருக்கேன்னு இந்த முதுகுவலி சொல்லிட்டிருக்கு. `உடம்பு இளைக்க தேவையில்லாம அதிக மாத்திரை சாப்பிடிருக்கே’னு டாக்டர் கணக்கு போட்டுச் சொன்னார்.”

“உடம்பைத் தேத்திக்கலாம்.''

“லெக் பீஸ் சிக்கன் உடம்பைத் தேத்துமானு தெரியலை. விபரீதமாக் கூடத் தெரியுது.”

“தேறிரும். நிறைய புரோட்டீன் இருக்கு அதுல.”

“உடம்பு தேறலே. கஸ்டமர்கிட்ட என் சிரிப்பு இயல்பா இல்லாம செயற்கைத்தனமா இருந்தா, வலிஞ்சு உடம்பு வலியில் கஷ்டப்பட்டுச் சிரிக்கிறதா இருந்தா, அங்க இருக்க முடியாது. வெளியேத்திருவாங்க. பிளசென்ட் ஸ்மைல்தான் அவங்களுக்கு வேணும்.”

“அதைப் போலியாவாவது மாட்டிக்க.”

“ரொம்பச் சிரமம்தான். செயற்கையா சிரிக்கிறதுக்கு அழறதே மேல்.”

``எல்லாம் சரியாயிரும். ஆமா... கொஞ்ச  நாளா ஒண்ணு கேக்கணும்னு இருந்தேன். உங்க ஹோட்டல்ல மைதிலினு யாராச்சும் இருக்காங்களா?”

“தெரியலையே...  மாடி சர்வீஸ் சேர்த்து இருபது லேடீஸ் இருக்கும். கேள்விப்பட்ட பேரா தெரியலை. வெளியே போறது வர்றதுனு நிறையப் பேரு வருவாங்க... போவாங்க. அதுல போனவங்கள்ல இருப்பாங்களோ என்னமோ. அவங்க யாரு... எப்படிப் பழக்கம்?''

ஜெயமணிக்கு வந்த முதுகுவலியால் பத்து நாட்கள் கட்டாய ஓய்வும் வைத்தியமும் தேவை என டாக்டர் சொல்லிவிட்டார். வீட்டில் ஜெயமணி முடங்கிக்கிடக்க வேண்டிய தாகிவிட்டது. விடுமுறை சொல்ல, சேதுபதி ஓ.எஃப்.சி-க்குச் சென்றான். கல்லாவில் இருந்தவர் சிவப்பு மாறாத புன்னகையுடன் இருந்தது, ஆறுதல் தந்தது. இடையில் வந்து சென்ற நான்கைந்து தடவைகள் மைதிலி கண்ணில் தட்டுப்படவில்லை. வெவ்வேறு ஷிப்ட்டுகளில் இருந்திருப்பாளோ அல்லது அவள் மைதிலியே இல்லையா... பெயர் வேறா..?

“லீவா... நிரந்தரமா?”

“லீவுதாங்க. இருந்த பனியன் கம்பெனி வேலையையும் இதனால விட்டுட்டு வந்தேங்க.''

“நீங்க பனியன் கம்பெனியில் இருக்கீங்கலா?”

“இருக்கேன். ரெண்டு பேர் சம்பாதிச்சாலும் சிரமப்பட வேண்டியதா இருக்கு இந்த டாலர் சிட்டியில. ஆமா... இங்க மைதிலினு ஒருத்தங்க இருந்தாங்களா... இப்ப இருக்காங்களா?''
“போயிட்டவங்க லிஸ்ட்ல அவங்க பேரும் இருக்கு.''

“ரொம்ப நாளாச்சா?''

“அவங்க போன இடத்துக்குதான் உங்க ஜெயமணி வந்தாங்க.”

“என்ன காரணம்?''

“கல்யாணம் ஆகாத பொண்ணுகன்னா, அவங்களுக்கு கஸ்டமரா நிறையச் சின்ன வயசு காதலர்கள் கிடைச்சுடுறாங்க. மைதிலி மாதிரி விடோவுக்கு வர்ற கஸ்டமர் எல்லா வயசிலும் இருக்காங்க. அது பெரிசா தொந்தரவு ஆகிருச்சு.”

“அவங்க விடோவா?''

“எப்படியோ கஸ்டமர் மோப்பம் பிடுச்சு எல்லாம் தெரிஞ்சுக்கிறாங்க.”

“அவங்க விடோவா?''

“கல்யாணம் ஆகி பத்து நாள்லயே புருஷன் ரோடு ஆக்ஸிடென்ட்ல செத்துப்போனார். எனக்கே லேட்டாத்தான் தெரிஞ்சது. அவங்க இங்க சேர்ந்தப்போ கல்யாணம் ஆகாதவங்கனுதான் சேர்த்தேன். இங்க சேரும்போதே அவங்க புருஷன் செத்து நாலு வருஷம் ஆகியிருந்தது அப்புறம்தான் தெரிஞ்சது. பாவம்... பரிதாபப்படலாம். நானே சில புரப்போசல் தந்தேன். எதுவும் தேறலை!”
சேதுபதிக்கு,  நான்கு  விஷயங்கள், ஞாபகத்தில் அலைமோதி ரொம்பவும் இம்சித்தன.

அவன் அம்மா உயிருடன் இருக்கும்போது சொன்னது:

1. ``டேய்... வயசாகிட்டே போகுதுடா. ஏதாச்சும் தாலியை அறுத்தது,  விவாகரத்துப் பண்ணினதுனு  கெடச்சாலும் பண்ணிக்கடா. நானும் உனக்குச் சமைச்சுப்போட்டுச் சலிச்சுப்போயிட்டேன்.'' 
2. ஓ.எஃப்.சி-யில் இருந்து வெளியேற்றப்படும் பட்டியலில் ஜெயமணியும் இருக்கிறாளா... மைதிலி வெளியேற்றப்படும்போது கதறி அழுதிருப்பாளா? என்ன காரணமாக இருந்திருக்கும்? ஜெய மணி அப்படி வெளியேற்றப்படும் போது என்ன வசவைத் தாங்கி அவள் வெளியேறுவாள் அல்லது வெளியேற்றப்படுவாள்?

3. அவனின் காதலிகள், எப்போதும் கெளரவப்படுத்தப்பட்டது இல்லை.
 
4. கவிதைகள் எழுதுவது, படிப்பதுபோல் காதலிப்பதும் கால விரயமான பொழுதுபோக்கா?