Published:Updated:

புத்தர் சிரித்தார்

சிறுகதை: சுபா, ஓவியம்: மனோகர்

புத்தர் சிரித்தார்

சிறுகதை: சுபா, ஓவியம்: மனோகர்

Published:Updated:

காரைக்குடி சோமசுந்தரம் பழனியப்பனை எல்லோரும் கானா, சோனா, பானா என்றுதான் அழைப்பது வழக்கம். கானா.சோனா.பானா-வில் நரை, திரை, மூப்பு எல்லாம் ஒட்டிக் கொள்வது போல் உணர்ந்து, பழனி யப்பன் தனது பெயரை கே.எஸ்.பி. என மாற்றிக் கொண்டான். புதிதாக சந்திப் பவர்களிடம் கே.எஸ்.பி. என்றுதான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வான். பழைய நண்பர்கள் கானா.சோனா.பானா என்று அழைத்தால், 'கே.எஸ்.பி.’ என்று திருத்துவான். 

சில நாட்களுக்கு உள்ளேயே கே.எஸ்.பி. என்றால் அவனை அறிந்த அத்தனை பேருக்கும் ஒல்லியான தேகமும், லேசான முன் வழுக்கையும், பழைய வெஸ்பா ஸ்கூட்டரும் நினைவுக்கு வரத் தொடங்கின.

கே.எஸ்.பி. ஒரு பதிப்பாளன். எழுதத் தெரிந்தவர்களிடம் சமையல், ஜோதிடம், ஆன்மிகம், ஆரோக்கியம் போன்ற துறைகளில் புத்தகங்களை எழுதச் சொல்லி, வாங்கிப் பதிப்பித்து விற்றான். புத்தகத்தின் ஒரு பதிப்பு விற்பதற்கு மூன்று ஆண்டுகள் பிடிக்கும். புத்தக வியாபாரிகள் பணத்தை அனுப்பாமல் இழுத்தடிப்பார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாழ்க்கை கைக்கும், வாய்க்குமாகப் போய்க்கொண்டிருந்தது. கொஞ்சமாவது காசு பார்த்து விட வேண்டும் என்பது அவனது நீண்ட நாள் ஏக்கம்.

அன்றைக்குக் காலையில் கடையைத் திறந்து வைத்துக் கொண்டு வேலைக் காரர்களுக்கு தீபாவளி போனஸ் தர எந்த நகையை அடகு வைக்கலாம் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.

மேஜையில் படபடத்த தினசரியில் நாடாளுமன்றம் ஆறாவது நாளாக ஸ்தம் பித்தது என்று தலைப்புச் செய்தி. இவன் ஸ்தம்பித்துக் கிடப்பது பற்றி எவனுக்குக் கவலை?

அந்த சமயத்தில்தான் ராம்லால் வந்தார். கப்பலில் அயல்நாட்டு வெள்ளைக் காகிதத்தை இறக்குமதி செய்து உள்ளூர்ச் சந்தையில் சில்லறையாக விற்பவர். அவரிடம்தான் கே.எஸ்.பி. தொண்ணூறு நாள் கடனுக்குக் காகிதம் வாங்குவது வழக்கம்.

புத்தர் சிரித்தார்

தலைக்கு மேலே ஃபேன் விர்ரென்று சுழன்றது. ராம்லால், மேஜை மீது பேப்பர் வெயிட் புத்தர் சிலையைத் தூக்கி அதன டியில் ஒரு பாங்க் செலானை வைத்தார்.

'என்னோட இந்த வருஷ இம்போர்ட் கோட்டா ஓவர். ஹார்பர்ல சரக்கு வந்து நாலு நாளாவுது. டெமரேஜ் ஏறிட்டே போவுது. எப்பவும் மச்சினன் பேர்ல கோட்டா வாங்கி டி.டி. எடுக்கறது வழக்கம். ராஜஸ்தான் போயிருக்கான். அதான் இங்க வந்தேன். நாப்பது லட்சத்துக்கு உங்க பேர்ல டிராஃப்ட் எடுத்துக் குடுத்தீங்கன்னா பேப்பரை டெலிவரி எடுத்துடுவேன். செலான்ல கையெழுத்து மட்டும் போடுங்க. நாலு லட்சம் கமிஷன். நீங்களும் நாலு காசு பார்க்கணும் இல்ல..?'

நாற்பது லட்ச ரூபாயை அவர் கொடுப்பார், தன் பெயரில் டிராஃப்ட் எடுத் துக் கொடுக்க வேண்டும். கமிஷன் நான்கு லட்சம். தீபாவளிக்கு என்ன, பொங்க லுக்கும், பூணூலுக்கும் கூட போனஸ் கொடுக்கலாம். இருந்தாலும்....

'யோசிக்காதீங்க கே.எஸ்.பி.! மார்க்கெட்ல இது சகஜம்தான். தீபாவளி போனஸ் கூட கொடுக்கல, பணம் பத்தலைன்னு சொன்னீங்களே? வாங்கி உள்ள வைங்க.....' என்று எட்டு ஐந்நூறு ரூபாய் கட்டுகளை மேஜை மீது எடுத்து வைத்தார்.

நான்கு லட்ச ரூபாய் வசீகரம் கே.எஸ்.பி-யைச் சுண்டி இழுத்தது. புத்த ருக்குக் கீழே படபடத்த சலானை உருவினான். கையெழுத்து இட்டான்.

ஆபீஸ் பையன் உள்ளே நுழைந்தான். 'சார். உங்க காரை கொஞ்சம் ஓரமா நிறுத்தச் சொல்றாங்க சார். குப்பை லாரி வந்து நிக்குது. பின்னால பத்து வண்டிங்க வந்து ஹாரன் அடிச்சிட்டிருக்கு...' என்றான் ராம்லாலிடம்.

'இதோ வந்துடறேன்..' என்று ராம்லால் கிளம்பிப் போனார்.

கே.எஸ்.பி. செலானை மறுபடி புத்தருக்கு அடியில் வைத்தான். கண்களை மூடினான். 'ஹப்பா! எவ்வளவு பெரிய விடுதலை லக்ஷ்மி கடாட்சம் கிட்டி விட்டது. இனிமேல் யாருக்கும் பாக்கி வைக்க வேண்டாம். ரொக்கம் என்றால் பிரஸ், பேப்பர் என்று எல்லா இடத்திலும் டிஸ்கவுன்ட்டும் கிடைக்கும். கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருந்தால் உண்மையிலேயே நாலு காசு பார்த்து விடலாம்.

ராம்லால் சென்னைப் போக்குவரத்தைத் திட்டியபடி திரும்பி வந்தார். அவன் புத்தருக்கு அடியில் இருந்து செலானை எடுத்து அவரிடம் நீட்டினான்.

செலானை வாங்கிய ராம்லால், 'பணத்தை உள்ள வைங்க..' என்றார்.

அப்படி ஆரம்பித்ததுதான். அந்த கமிஷன் வியாபாரம் தொடர்ந்தது. ஆறே மாதங் களில் கே.எஸ்.பி. அறுபது லட்சத்தைப் பார்த்து விட்டான். சிந்தாதிரிப்பேட்டை சந்தில் ஒரு பழைய வீட்டை வாங்கி இடித்துக் கட்டினான்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. விஜய தசமியன்று காலையில் இன் பண்ணிய அரைக்கை சட்டை அணிந்து நான்கு அதிகாரிகள் அறைக்குள் நுழைந்தார்கள்.

'கே.எஸ்.பி.?'

'யெஸ்?'

'லட்சம், லட்சமா டி.டி. எடுத்து இம்போர்ட் பண்ணிட் டிருக்கீங்க. அந்தப் பணத்துக்கு எல்லாம் கணக்கு வேணும். இல்லேன்னா ஃபெரா, ஃப்ராடுன்னு உள்ள வெச்சி விசாரிக்க வேண்டியிருக்கும்..' என்று லிட்டில் பாயை அவன் மீது தூக்கிப் போட்டார்கள்.

பாங்க்கில் கட்டியது தன் பணம் இல்லையென்றால் யார் பணம் என்று கேட்டார்கள். ராம்லால் பணம் என்றால் ராம்லால் பெரிதாகச் சிரித்தார். ஆதாரம் கேட் டார். ரொக்கத்துக்கு ஏது ஆதாரம்?

கே.எஸ்.பி-க்கு என்ன செய்வதென்றே புரிய வில்லை. சோலை.அருணனைப் போய்ப் பார்க்கச் சொல்லிப் பத்திரிகைக்காரர் ஒருவர் அவனுக்கு அறிவுரை வழங்கினார்.

சோலை.அருணன் மத்திய அமைச்சரின் மகன். யார், யாரையோ பிடித்து சோலை. அருணனை சந்தித்தான்.

விவரங்களைக் கேட்டு சோலை.அருணன் சிரித்தார். 'நம்ம ஆளாப் போய்ட்டீங்க. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. இதுக்குப் போய் இப்படிக் கலவரப்படறீங்களே... அரெஸ்டாவது. கிரெஸ்டாவது... அதெல்லாம் ஒண்ணும் இல்ல. தைரியமாப் போங்க...' என்றார்.

உண்மையிலேயே ஒன்றும் இல்லாமல் போய் விட்டது. சோலை. அருணனுக்குத் தனது நன்றியை அவர் ஆசைப்பட்ட விதத்தில் தெரிவித்தான்.

சந்தோஷத்தில் சோலை.அருணனே போன் போட்டுப் பேசினார். 'அடிக்கடி வரப் போக இருங்க...' என்றார்.

'சரிண்ணே...' என்றான் கே.எஸ்.பி.

அதன் பின் தைரியம் பெற்று அது என்ன இறக்குமதி வியாபாரம் என்று விசாரித்தான். வாங்குபவர்கள் யார் என்று தெரிந்தால், மரக்கட்டைகள், பாதாம் கொட்டை, ஆலிவ் எண்ணெய், புத்தகங்கள் என்று யாவற்றையும் இறக்குமதி செய்து விற்கலாம் என்று தெரிந்தது.

வீடு கட்டும் சிவில் இன்ஜினீயர்கள் மரம் வாங்கத் தயாராக இருந்தார்கள். மொத்த மளிகை வியாபாரிகள் பாதா மையும், ஆலிவ் எண்ணெயும் வாங்கிக் கொள்ள ஆர்வம் காட்டினார்கள். பிளாட் ஃபாரத்தில் ஆங்கிலப் புத்தகங்களை விற்பவர்கள் கொள்முதலுக்குத் தயாராக இருந்தார்கள்.

கே.எஸ்.பி. இறக்குமதியில் இறங்கினான். பிஸ்தா, பாதாம், பாமாயில், தேக்கு, புத்தகம் என்று டன், டன்னாக இறக்குமதி செய்தான். அக்கவுன்டில் பணம் லட்சக் கணக்குக்கு மாறியது. வரவு செலவை கவனிக்க ஆடிட்டரை வேலைக்கு வைத்தான்.

வெஸ்பா ஸ்கூட்டரை எடைக்குப் போட்டு ஹோண்டா சிட்டியையும், டிரைவரையும் வாங்கினான். சிந்தாதிரிப்பேட்டை வீட்டை விற்று, அடையாறில் நான்கு கிரவுண்டில் மாளிகை கட்டினான்.

சோலை.அருணனுக்கு மிகவும் நெருக்கமாகி விட்டான். நினைத்தால் அவரைப் போய் பார்ப் பான். இல்லாவிட்டால் அவர் அழைப்பார். அவருடைய போட் கிளப் பங்களாவுக்குப் போய் நீச்சல் குளம் அருகே ஸ்காட்ச்சைச் சீப்பிவிட்டு வருவான். திரும்பும்போது, டிக்கியில் சில கோடிகள் பணம் இருக்கும். பத்திரங்கள் இருக்கும். அவனை நம்பி ஒப்ப டைக்கப்பட்டவை. எல்லாவற்றையும் அவன் பத்திரமாக வைத்திருந்தான்.

கொஞ்ச நாட்களில் சோலை.அருணனுக்கும், அவருடைய அமைச்சர் தந்தைக்கும் அவன் மிக

புத்தர் சிரித்தார்

நம்பகமானவனாகி விட்டான். அவர்களுக்கு எங்கெங்கே என்னென்ன சொத்துகள் இருக்கின்றன, என்னென்ன பெண் தொடர்புகள், என்னென்ன அரசியல் தொடர்புகள், என்னென்ன வியாபாரங்கள் என்று சகலமும் அவனுக்குத் தெரிந்தன.

அமைச்சர் சார்பாக அவனே பேரங்கள் பேசினான். அவ்வப்போது புறங்கையை நக்கிக் கொண்டான்.

திடீரென்றுதான் பத்திரிகைக்காரர்​களும், எதிர்க்கட்சிக்காரர்களுமாகச் சேர்ந்து அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தினார்கள். நாடாளுமன்றத்தில் தினம் அமளி.

வேறு வழியில்லாமல் அமைச்சர் கைது செய்யப்பட்டார். தந்தை கைதாவார் என்று சோலை.அருணனுக்கு முன்பே தெரியும் போல. நார்வேக்கோ, மெக்ஸி கோவுக்கோ போய் விட்டார்.

அமைச்சர் கைதான நான்காம் நாள் அவனுடைய மாளிகைக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் வந்தார்கள். அமைச்சரைப் பற்றி விசாரித்தார்கள். சோலை.அருணனைப் பற்றி விசாரித்தார்கள். அவன் பதுக்கி வைத்திருந்த பத்திரங்களின் நகல்களை எல்லாம் காட்டி, அசல் எல்லாம் எங்கே இருக்கின்றன என்று விசாரித்தார்கள்.

கே.எஸ்.பி. தனக்கு எதுவும் தெரியாது என்றான். அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். மறுநாளும் வந்தார்கள். முதல் நாள் சிரித்த முகத்துடன் விசாரித் தவர்கள் மறுநாள் இறுக் கமான முகத்துடன் விசாரித் தார்கள். எதுவும் தெரியாது என்றான். மறுநாள் விசாரணை இன்னும் கடுமையாக இருக்கும் என்று தோன்றியது. என்ன செய்வது என்று தெரியவில்லை.

அன்றைக்கு இரவு இரண்டு மணி இருக்கும். தூக்கம் வரவில்லை. வீட்டுக்கதவை யாரோ ரகசியமாகத் தட்டுவது போல் இருந்தது. எழுந்து கதவைத் திறந்தான்.

சோலை.அருணன் வீட்டு வேலைக்காரன் வாசலில் நின்றிருந்தான். உடனே அவனை உள்ளே வரவழைத்துக் கதவைச் சாத்தினான்.

'யார் கிட்டயாவது ஏதாவது சொன்னீங்களாய்யா?' என்று கேட்டான்.

'மூச்சுக் கூட விடலை..' என்றான் கே.எஸ்.பி.

'இனிமேயும் விடக்கூடாதுங்கறதுக் காகத்தான் வந்திருக்கேன்...' என்று சொல்லி அவன் சட்டென்று கே.எஸ்.பி-யை வளைத்துப் பிடித்தான். வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு நான்கைந்து திடகாத்திரமான ஆட்கள் உள்ளே நுழைந்தார்கள்.

'டேய். கே.எஸ்.பி. ஐயாவை அப்படியே பூ மாதிரி தூக்கித் தூக்குல தொங்க விடுங்கடா..' என்றான் வேலைக்காரன்.

கே.எஸ்.பி-க்கு எப்படித்தான் துணிவு வந்ததோ. சட்டென்று அவனுடைய பிடியில் இருந்து திமிறி விடுபட்டான். வாசலைக் கடந்து வீதிக்கு ஓடி வந்தான்.

கே.எஸ்.பி. சின்னச் சந்து ஒன்றில் நுழைந்​தான். அதன் மறுமுனையை நெருங்கியபோது ஆட்டோ ஒன்று அங்கே காத்திருந்தது. ஆட்டோ டிரைவர்களுக்கு அவனைக் காட்டிலும் நன்றாக வழி தெரிந்திருந்தது.

'ஐயோ... என்ன செய்யப் போகிறேன். என்ன செய்யப் போகிறேன்..?’ இருட்டில் இதயம் துடிக்கப் பதுங்கி இருந்தான்.

கே.எஸ்.பி-க்குப் பின்னால் இருந்து பூனைப் பாதம் வைத்து எவனோ ஒருவன் நிழலாக நெருங்கினான். கையில் என்ன வைத்திருந்தான்? அதை உயர்த்தி.. ஒரே போடு.,.!

'ஹெக்..’ என்று கே.எஸ்.பி-யின் தொண்டையிலிருந்து விக்கல் வெளிப்பட்டது.

'இந்தாங்க.. தண்ணி குடிங்க.. வண்டிய ஓரமாப் பார்க் பண்ணிட்டு வர்றதுக்குள்ள கண் அசந்துட்டீங்க போல...' என்று ராம்லால் மேஜை மீதிருந்த தண்ணீர் பாட்டிலை அவனிடம் நீட்டினார்.

கே.எஸ்.பி. மேஜைப் பரப்பைப் பார்த்தான். அவன் கையெழுத்திட்ட பேங்க் செலான் இன்னும் புத்தருக்கடியில் படபடத்துக் கொண்டிருந்தது. புத்தர் மாறாப் புன்னகையுடன் அவனை நோக்கினார்.

கே.எஸ்.பி. செலானை எடுத்துக் கிழித்தான். 'இது என்னவோ நமக்குச் சரிப்பட்டு வரும்னு தோணல சேட்..' என்றான்.

ராம்லால் அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தார். 'பொழைக்கத் தெரியாத ஆளுய்யா நீங்க..' என்று சொல்லி விட்டு ரூபாய்க் கட்டுகளை எடுத்து லெதர் பேகில் வைத்துக் கொண்டு பாம்பு போல் சரசரவென வெளியேறினார்.

புத்தர் சிரித்தார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism