Published:Updated:

அம்மா

சிறுகதை /பாவண்ணன், ஓவியங்கள்/மாருதி

அம்மா

சிறுகதை /பாவண்ணன், ஓவியங்கள்/மாருதி

Published:Updated:

காவல் நிலைய சந்திப்பில் வண்டியைத் திருப்பும்போதே பார்த்து விட்டேன்... வாசலில் முருங்கை மரத்தடியில் ஒரு பெரிய தட்டு நிறையச் சோறை வைத்துக் கொண்டு அம்மா நின்றிருந்தாள். அவளைச் சுற்றி ஏழெட்டு பள்ளிச் சிறுவர்களும் பெரியவர்களும் வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வண்டியின் உறுமல் சத்தத்தைக் கேட்டதும் அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் திரும்பி என்னைப் பார்த்தார்கள். மறுகணமே சோறு நிரப்பிய இலையோடு எழுந்து ஓடினார்கள். ''உக்காந்து சாப்புடுங்கப்பா, ஒடம்புல ஒட்டவேணாமா?'' என்று அவர்களை அழைத்தாள் அம்மா. வண்டியைச் சுவரோரமாக நிழலில் நிறுத்திவிட்டுத் திரும்பி, ''மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா உன் வேலய? ஆயிரம் தரம் சொன்னாலும் புரியாதா ஒனக்கு?'' என்று அம்மாவைப் பார்த்து எரிந்து விழுந்தேன். எதுவுமே புரியாமல், ''பாவம்டா பசங்க...'' என்று சிரித்தாள் அம்மா. ''ஒன்ன கவனிச்சிக்காம அவ எங்க போயி தொலஞ்சா?'' என்று முணுமுணுத்தபடியே வாசலில் செருப்பை உதறினேன். 

''ஏண்டா மெரண்டு ஓடறிங்க? டேய் பசங்களா, ஒக்காந்து சாப்புடுங்கடா'' என இந்த உலகத்துடன் சம்பந்தமே இல்லாதவளைப்போல அம்மா ஓடிப் போனவர்களை அழைத்தாள். அவள் கையிலிருந்து சோற்றுப்பருக்கைகள் உதிர்ந்தன. கோழிகள் அவற்றை ஓடி ஓடிக் கொத்தின. அவள் கையைப் பிடித்து அழைத்து வீட்டுக்குள் செலுத்தினேன். திரும்பி எதையோ சொல்ல முன்றாள். ''பேசாம போம்மா உள்ள...'' என்று குரலை உயர்த்தினேன்.

''சிவகாமி!'' என்று நான் போட்ட சத்தத்தின் எதிரொலி ஆளற்ற கூடத்தில் எதிரொலித்தது. மூன்று அழைப்புகளுக்குப் பிறகு தோட்டத்துக் கதவைத் தள்ளிக்கொண்டு அவள் உள்ளே நுழைந்தாள். ''சாய்ங்காலமாத்தான் வருவேன்னு சொல்லிட்டுப் போனீங்க, என்ன இப்பிடி திடுதிப்புனு வந்து நிக்கறீங்க..?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இந்த கண்காட்சியப் பாக்கணும்னு என் தலையெழுத்து. அதான் வந்துட்டன்... போதுமா?'' அதற்குப் பிறகுதான் அவள் அம்மாவையும் அவள் கையிலிருந்த தட்டையும் பார்த்தாள். தலையில் அடித்துக்கொண்டாள். ''ஐயோ என்ன அத்த இது? ரெண்டு நிமிஷம் இப்படி போயி வரதுக்குள்ள இந்தக் கோலமா? கடவுளே கடவுளே...'' என்று தலையில் அடித்துக்கொண்டாள். ''எதுக்கு ஒன் தலையில் அடிச்சிக்கிற? எல்லாருமா சேந்து என் தலையில அடிங்க... வாங்க!'' என்று போட்ட என் சத்தத்துக்கு எந்த பதிலும் இல்லை. வேகமாக நெருங்கி அம்மாவின் கையைப் பிடித்து சமையலறைக்குள் அழைத்துப் போனாள் சிவகாமி. ''தொவச்ச துணிய காயவச்சிட்டு வரதுக்குள்ளார இப்பிடி ஒரு அதாகுதம் பண்ணிட்டியே அத்த. நுப்பநாழியும் ஒன்னயே காவல் காத்துகினு உட்காந்திருந்தா இருக்கற வேலய யாரு செய்வா சொல்லு...'' தட்டை வாங்கிக் கீழே வைத்துவிட்டு கைகளைக் கழுவிவிட்டாள். பிறகு அழைத்துவந்து நாற்காலியில் உட்கார வைத்தாள்.

''சரி உடுங்க, புதுசாவா பாக்கறீங்க? இதுக்கு போயி மூஞ்ச தூக்கி வெச்சிகினு...''

அம்மா இன்னும் வாசலில் நின்றிருக்கும் நினைவிலிருந்து விலகாத நிலையிலேயே, ''மறுசோறு வாங்காம இலய உட்டு ஏந்திருக்கக்கூடாது. தாராளமா சாப்புடுங்கடா...'' என்று எழுந்து நின்று எதிரில் நிற்பவர்களுக்குச் சோற்றை அள்ளிவைப்பதுபோலச் செய்தாள். நிமிஷத்துக்கு நாலு தரம் ''சாப்புடுங்கய்யா...'' என்று தலையை அசைத்துச் சொன்னாள். அதிகப் பற்கள் இல்லாத அவள் வாயிலிருந்து எச்சில் தெறித்தது. தளர்ந்து சுருங்கிய அவள் காதுகளில் பவழம் பதித்த தோடுகள் தொங்கி அசைந்தன. நரைத்துப்போன வெள்ளை முடி மின்விசிறிக் காற்றில் காதருகே அலைந்தது.

அம்மா

''நேத்து மதியானமும் இப்பிடித்தான் பண்ணிட்டாங்க. ரைஸ்மில்லுக்கு நடந்துபோய் வந்த அலுப்புல சித்த நேரம் கண்ணசந்து தூங்கிட்டன். எழுந்து பாத்தா... வாசல்ல சிரிச்சிக்கினே நாலு பேருக்கு சோறு போட்டுகினு இருக்காங்க. என்னமோ விருந்து வைக்கறாப்புல வெச்சிக்கடா வெச்சிக்கடானு அள்ளி அள்ளி வைக்கறாங்க தெரியுமா? எனக்கு அப்படியே தலையிலிருந்து கால் வரைக்கும் பத்தி எரிஞ்சிது. வந்த ஆத்திரத்தயெல்லாம் முழுங்கிட்டு பேசாம உள்ள கூட்டியாந்தன்...''

எழுந்து அம்மாவின் அருகில் சென்று அவள் தோளைப் பற்றினேன். எலும்புமேடு உறுத்தியது. பார்வையை என் பக்கம் திருப்பிய அவள் ''எப்படா வந்த? சாப்புட்டியா? வேளாவேளைக்கி சாப்புடாம ஏன்டா ஊரச்சுத்தி ஒடம்பக் கெடுத்துகிற?'' என்றாள். அவள் கண்களை நீண்ட நேரம் பார்க்க இயலாமல் சுவரில் தொங்கியிருந்த காலண்டரின் பக்கம் திரும்பினேன்.

''சாப்பாட்டத் தவிர வேற எந்த நெனப்பாவுது இருக்குதா பாரு? இன்னும் எவ்வளவு வைத்தியம் தான் செய்யறது? கொஞ்சம்கூட பழக்கத்த மாத்திக்காம அப்படியேதான் இருக்காங்க. உள்ள போற மருந்துங்கலாம் வேல செய்யுதா இல்லயான்னே தெரியலை. எல்லாமே கடல்ல கரைச்ச காயமாட்டம் போவுது''

''பாக்கலாங்க. இன்னும் கொஞ்சம் நாளு போவட்டும். இருபத்தஞ்சி முப்பது வருஷத்துப் பழக்கத்த ஒரே நாள்ல மாத்த முடியுமா? டாக்டரு கூட அதத்தானே சொன்னாரு அன்னிக்கு.'' அவள் எழுந்துபோய் அலமாரியிலிருந்து மாத்திரைப் பெட்டியை எடுத்தாள். ஒரு மாத்திரையை எடுத்துப் பிரித்து அம்மாவின் கைக்குள் வைத்து ''ஆ... ஆ... போட்டுக்குங்க...'' என்றபடி ஒரு தம்ளரில் தண்ணீர் கொடுத்தாள்.

''நாள் முழுக்க நீதான் அவுங்ககூட இருக்கற? அவுங்களுக்கு புரியாறாப்புல நெதானமா எடுத்துச்சொல்லி நீதான் மாத்தணும்...''

''சொல்லும்போது பூம்பூம் மாடாட்டமா தலய தலய ஆட்டிக்கிறாங்க. அப்பறம் பழய குருடி கதவ தெறடின்னு அவுங்க நெனச்சதயே

செஞ்சா நான் என்ன செய்யமுடியும் சொல்லுங்க? வயசானவங்க அப்படிதான் இருப்பாங்கன்னு நாமதான் உட்டுப் புடிக்கணும்.''

என் தலையே வெடித்துவிடும்போல இருந்தது. ஆயிரம் வார்த்தைகள் மூளைக்குள் மோதின. ஆனால், எதுவுமே கோவையாக வெளிவரவில்லை. செயலற்றவனாக சிவகாமியை முறைத்தேன். ''எதுக்கு இப்ப என்ன அப்பிடி பாக்கறீங்க? போய் கைய கழுவிகினு வந்து சாப்படற வேலய பாருங்க...'' என்றபடி தட்டுக்கு அருகில் உட்கார்ந்தாள். ''சும்மாவா சொன்னாங்க பெரியவங்க? தொட்டில் பழக்கம் சுடுகாடுமட்டும்னு...'' என்று முனகுவதுகேட்டது.

சிவகாமியின் மீது கவனத்தைக் குவித்திருந்த நேரத்தில் அம்மா நாற்காலியின் பிடியில் கைகளை ஊன்றிக்கொண்டு எழுந்து நின்றாள். ''என்னடா மொட்ட, ரெண்டு வாயோட எழுந்துட்ட? இருடா இன்னும் ஒரு கை சோறு வைக்கறேன்...'' என்று சொல்லிக்கொண்டே முன்னால் நடந்தாள். ''இருடா இருடா ரொம்பதான் முறுக்கிக்காத...'' என்றாள். கோபம் சட்டென்று ஒரு நெருப்புப் பொறியாக என் தலையில் வெடித்தது. வேகமாகச் சென்று அம்மாவின் கையைப் பிடித்து நிறுத்தினேன். ''செவுடா நீ? இந்தப் பழக்கத்த நிறுத்து நிறுத்துன்னு சொல்றது ஒன் காதுல ஒறைக்கவே இல்லியா? ஏன் இப்பிடி நேரம் காலம் தெரியாம ஒளறிக்கினே இருக்கற. இட்லிக்காரம்மா பெருமயிலயே இன்னும் எவ்வளோ காலம்தான் மெதந்து திரிவ? இன்னிய தேதிக்கு இது பஞ்சாயத்து போர்டு மெம்பரு ஊடு. அந்த மரியாத தெரிய வேணாமா ஒனக்கு? ஊட்டு ஜனங்களே மதிக்கலைன்னா ஊருல ஜனங்க எப்படி மதிப்பாங்க சொல்லு?'' சீற்றத்தில் அவள் கையை அளவுக்கு அதிகமாகவே அழுத்திவிட்டேன். ''ஐயோ...'' என்ற அவள் பதற்றத்தோடு அலறினாள். அவள் கண்கள் கலங்கி வேதனையை வெளிப்படுத்தின. சட்டெனக் கண்ணீர் திரண்டு தளும்பி நின்றது. பல் இல்லாத வாயைத் திறந்து அழுதாள் அம்மா.

அம்மா

''என்னங்க இது? பெரியவங்ககிட்ட இப்பிடியா மொரட்டுத்தனமா நடந்துக் குவாங்க?'' சிவகாமி வேகமாக நெருங்கி வந்து என் பிடியை விலக்கினாள். என் வேகம் சட்டென வடிந்தது. அக்கணம் என்னையே அருவருப்பாக உணர்ந்தேன். சலிப்பாகத் திரும்பி நாற்காலியில் உட்கார்ந்தேன். ''பொறுமையாத்தான் மாத்த முடியும்னு சொல்லிட்டு இருக்கும்போதே ஏன்தான் இப்பிடி கெடந்து துடிக்கறீங்களோ?'' என்று சிவகாமி அலுத்துக்கொண்டே என் பக்கமாகப் பார்த்தாள். பிறகு ''வா அத்த நீ...'' என்றபடி அம்மாவை கூடத்தின் சுவரோரமாக இருந்த கட்டிலுக்கு அழைத்துச் சென்றாள். வேதனையும் முனகலுமாக அம்மா என்னைத் திரும்பிப் பார்த்தபடி நடந்தாள். ''வலிக்குது சிவகாமி'' என்றாள். சிவகாமி அவள் கையைப் பிடித்து மணிக்கட்டுப் பகுதியைத் தொட்டு உருவிவிட்டாள்.

சாப்பாட்டைக் கண்டாலே எனக்கு வெறுப்பாக இருந்தது. நாற்காலியிலிருந்து இறங்கிச் சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கால்களை நீட்டினேன். புத்தகமொன்றை உருவி மனம்போன போக்கில் ஒரு பக்கத்தைத் திருப்பினேன். மிதத்தல் விதி. ஒரு திடப்பொருளை தண்ணீர் நிரப்பிய தொட்டியில மிதக்கவோ அல்லது மூழ்கவோ வைக்கும்போது வெளியேறுகிற தண்ணீரின் கொள்ளளவும் அந்தத் திடப்பொருளின் எடையும் சமமானது. எட்டாம் வகுப்போடு படிப்பை ஏறக்கட்டிய என் தலைக்குள் எதுவும் பதியவில்லை.

ஆனால், அந்த வரிகளில் ஏதோ வசீகரம் இருப்பதுபோல இருந்தது. இன்னொரு முறை படித்தேன். அந்த சமன்பாடு சுவாரஸ்யம் மிகுந்ததாகத் தோன்றியது. நெஞ்சில் அதை மறுபடியும் அசைபோட்டபடி அடுத்த பக்கத்தைப் புரட்ட முனைந்தபோது மனதில் ஒரு மின்னலடித்தது. இன்னொரு முறை மனம் குவித்து அதையே மறுபடியும் படித்தேன். பிறகு அதன் பொருளை எனக்குத் தகுந்த வகையில் வளைத்து மாற்றிச் சொல்லிப் பார்த்தேன். ஒரு தொட்டியிலிருந்து எந்த அளவுக்கு தண்ணீரை வெளியேற்ற எண்ணுகிறோமோ, அந்த அளவுக்கு ஈடான எடையுள்ள பொருளை அந்த அளவுக்கு மூழ்க வைக்கவேண்டும். எவ்வளவு பெரிய உண்மை. என் மனம் சட்டென்று பாரமற்றதுபோல ஆனது.

இந்த உண்மையையும் அம்மாவையும் ஒரு கணம் இணைத்துப் பார்த்தேன். அம்மாவின் நெஞ்சம் பழைய விருப்பம். அதற்கான முதல் தேவை, அதற்கு இணையான வேறு அனுபவங்களை அவள் நெஞ்சில் இறங்கும்படி செய்வது மட்டுமே. இந்த வயதில் அம்மாவின் மனத்தில் பதியவைக்க புதிய அனுபவங்களுக்கு எங்கே போகமுடியும்? கடவுளே, என் மனம் தடுமாறிக் குழம்பியது புதிய அனுபவத்துக்கு இடமில்லாததால்தான் அம்மா பழைய அனு பவங்களை கற்பனையால் கட்டியெழுப்பிக்​கொண்டு தடுமாறுகிறாளா? அதற்குமேல் என் எட்டாம் வகுப்பு மூளை வேலை செய்ய வில்லை. தொடர்ந்து சிந்திக்க நானும் விரும்பவில்லை. அம்மாவுக்கு நான் ஒரே பிள்ளை. சின்ன வயதிலேயே அப்பாவைப் பறிகொடுத்துவிட்டோம். புத்துப்பட்டு ஐயனார் கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பும் வழியில் குளக்கரையில் வயிற்று உபாதையைத் தணிக்க உட்கார்ந்த இடத்தில் பாம்பு கடித்து இறந்துபோனார். காட்டு வேலைக்குப் பழக்கமில்லாத அம்மா வயிற்றுப்பிழைப்புக்கு பலகாரக்கடை வைத்தாள். பக்கத்திலேயே கடைத்தெரு இருந்தது. இரும்பு சாமான்கள் முதல் உப்பு புளி மிளகாய்வரை வாங்கிச் செல்ல அக்கம்பக்கம் பதினாறு பாளையங்களிலிருந்தும் மக்கள் வந்து போகும் இடம் அது அங்கே வந்துபோன வாடிக்கைக்காரர்கள் இட்லிக்கடைக்கும் வந்து போனார்கள்.

ஓய்வே இல்லாமல் உழைத்தாள் அம்மா. பகல் வரைக்கும் கடை வியாபாரம் நடக்கும். அதைத் தொடர்ந்து மாவரைக்கும் வேலை. அவளுக்கு அருகில் உட்கார்ந்து நான் மாவை தள்ளிவிடுவேன். ஒரு குண்டான் அரிசியையும் ஒரு குண்டான் உளுந்தையும் அரைத்தெடுத்து கரைத்து ஒதுக்கிவைக்கும்போது இரவு கவிந்து விடும். நான் கஷ்டப்பட்டு படித்துப் பெரிய ஆளாகவேண்டும் என்பது அம்மாவின் கனவாக இருந்தது. ஆனால், அம்மாவின் கஷ்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்பதில்தான் எனக்கு நாட்டமிருந்தது. எட்டாம் வகுப்போடு படிப்பை மூட்டை கட்டிவைத்தேன்.

வீட்டுக்கு அருகில்தான் பள்ளிக்கூடம். பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிட்டாத மாணவர்கள் பள்ளிக்கு வெளியே மரத்தடியில் துவண்ட முகத்தோடு உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி நேரத்தைப் போக்குவார்கள். அவர்கள் ஏதோ பொழுதுபோக்காக நிற்பதாகத்தான் அம்மா முதலில் நினைத்தாள். ஒரு நாள் நான்தான் உண்மையான காரணத்தை அவளுக்குச் சொன்னேன். அதைக் கேட்ட அம்மாவின் கண்கள் கலங்கின. ''ஐயோ, அப்படியா?'' என்று நாக்கு சப்புக்கொட்டினாள். மறுநாள் அவர்கள் மரத்தடியில் உட்கார வந்தபோது அவர்களைக் கடைக்கு அழைத்துவரச் சொன்னாள்.

அம்மா. மந்தார இலையில் ஆளுக்கு நாலு இட்லி வைத்து எல்லோருக்கும் சாம்பார் ஊற்றிக் கொடுத்தாள். ''சாப்புடுங்க புள்ளைங்களா. கூச்சப்படாம சாப்புடுங்க...'' என்றாள்.

''எங்ககிட்ட காசி இல்ல பெரிம்மா...'' கட்டம்போட்ட சட்டையணிந்த ஒரு பையன் திக்கித்திக்கிச் சொன்னான்.

''ஒங்கிட்ட யாருடா காசக் கேட்டது? மொதல்ல சாப்புடுடா...'' மெதுவாகப் பேசி அவர்கள் கூச்சத்தைப் போக்கினாள் அம்மா.

அவர்கள் வேகவேகமாக இலையிலிருந்த இட்லிகளைச் சாப்பிட்டு​விட்டு தண்ணீர் குடித்தார்கள் ''இன்னும் வேணுமாடா?'' என்று கேட்ட கேள்விக்குத் தலையாட்டி​யவர்களுக்கு மேலும் இரண்டு இட்லி​களை வைத்தாள்.

அம்மா

அன்று முதல் அம்மா ஒரு விசித்திரமான திட்டத்தை நடைமுறைப்படுத்தினாள். எங்கள் குண்டானில் நாலு தட்டுகளை வைத்து இறக்க முடியும். ஒவ்வொரு தட்டிலும் பதினாறு இட்லிகள். ஒரு ஈடில் அறுபத்திநாலு இட்லிகள். கடைசியாக ஊற்றி எடுக்கும் ஈடின் இட்லிகள் எதையுமே அம்மா விற்பதிலை. அவை அனைத்தையும் அந்தப் பிள்ளைகளுக்குக் கொடுத்தாள். அவசரத்துக்குக்கூட அவற்றை அவள் விற்பதில்லை. தற்செயலாகத் தொடங்கிய பழக்கத்தை ஆண்டவன் போட்ட கட்டளையாகவே பின்பற்றினாள் அம்மா. பள்ளி இல்லாத நாட்களில் அடுப்பிலிருந்து இறக்கும் கடைசி ஈடு இட்லிகளை வேறு விதத்தில் தானம் செய்யத் தொடங்கினாள். கடையின் முன் கையேந்தும் ஏழைபாழைகளுக்கும் வெளியூர் கூலிக்காரர்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் கொடுத்தாள். சாப்பிடுவதற்காக அம்மாவைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் நின்றது. கருத்துப் புரியாத சின்ன வயதில் எனக்கு அது வித்தியாசமாகத் தெரியவில்லை. தன் மனத் திருப்திக்காக அம்மா எதையோ செய்கிறாள் என்றுதான் முதலில் நினைத்துக்கொண்டேன்.

அம்மாவுக்குத் துணையாக வேறொரு பாட்டியை ஏற்பாடு செய்துவிட்டு ஒரு சைக்கிள் மெக்கானிக் கடையில் சேர்ந்து தொழிலைக் கற்றுக்கொண்டேன். பிறகு வேறொரு கடையில் மோட்டார் சைக்கிள் நுட்பத்தில் பயிற்சிபெற ஆரம்பித்தேன். அரசியலில் பிரபலமான ராமசாமிக்கவுண்டருக்கு சொந்தமான கடை அது. பஞ்சாயத்து போர்டில் எங்கள் பகுதியின் மெம்பர் அவர். அவர் சொல்லுக்கு எங்கள் பகுதிக்கு உட்பட்ட பத்துத் தெருக்களிலும் மரியாதை இருந்தது. கடை வேலை, வீட்டு வேலை, அரசியல் வேலை என்று நான் எந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லை. அவர் எதைச் சொன்னாலும் தட்டாமல் செய்தேன். அதனால் அவர் எப்போதும் என்னைத் தன்னோடு வைத்துக்கொண்டார். பதினைந்து ஆண்டுகள் ஓடியதே தெரியவில்லை. பெரியவர் தன் செல்வாக்கால் எனக்கு ஒரு பால்பூத் ஏஜென்சி கிடைக்கும்படி செய்தார். கடைத்தெருவில் ஒரு கடையை அவரே முன்னின்று அமர்த்திக் கொடுத்தார். அவர் தலைமையில்தான் எனக்கும் சிவகாமிக்கும் திருமணமே நடந்தது.

பல ஆண்டுகளாகத் தொடர்கிற அம்மாவின் தானமுறையைக் கண்டு ஆரம்பத்தில் சிவகாமி ஆச்சர்யப்படாத நாளே இல்லை. ''பெரியவங்க செய்யற புண்ணியம் புள்ளைங்களுக்குத்தானெ சேரும்...'' என்று பலரிடம் மரியாதையாகச் சொன்னதும் உண்டு. அம்மாவுக்கு முடியாமல் போகிற சமயங்களில் அவளே கூட அந்தத் தானத்தை தொடர்ந்து செய்த சமயங்களும் உண்டு. ஆனால், நாளாக நாளாக அந்த முறை எனக்குத்தான் பிடிக்கவில்லை. என் வருமானமே போதுமான அளவுக்கு உயர்ந்த பிறகு வியாபாரத்தை நிறுத்தும்படி அம்மாவை கேட்டுக்கொள்ளாத நாளே இல்லை. அப் போதெல்லாம், ''போடா சின்னப்புள்ள நீ, ஒனக்கு என்னடா தெரியும்?'' என்று சிரித்துக்கொண்டு போய்விடுவாள் அவள்.

ஐந்து முறை தொடர்ச்சியாக பஞ்சாயத்து போர்டு மெம்பர் தேர்தலில் வெற்றி பெற்ற கவுண்டர் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என்னை நிற்கவைத்து வெற்றிவாகை சூடவைத்தார். 'இட்லிக்காரம்மா வீடு’ என்கிற அடையாளம் போய் 'மெம்பர் வீடு’ என்கிற அடையாளம் தானாக வந்தது. இடைவிடாமல் அம்மா செய்யும் தானம் அந்தப் பெயரைத் தகர்த்துவிடும் அல்லது களங்கப்படுத்திவிடும் என்று தோன்றியது அக்கணத்தில் அம்மாவை நான் வெறுத்தேன். அவள் செய்யும் தான முறையை வெறுத்தேன். அவளுடைய வியாபாரத்தை வெறுத்தேன். பசியோடு நாடிவரும் பள்ளிப் பிள்ளைகளை வெறுத்தேன். வாங்கிச் சாப்பிட்ட பிறகு கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுச் செல்கிற வழிப்போக்கர்களையும் வெறுத்தேன். பிச்சைக்காரர்களையும் வெறுத்தேன். கட்டாயப்     படுத்தித்தான் அவள் வியாபாரத்தை நிறுத்தினேன்.

அந்த முதல்நாள் அனுபவம் ஆழ்மன வடுவாக இன்னும் நெஞ்சில் பதிந்துள்ளது. வெளிச்சம் மண்ணைத் தொடும் நேரத்தில் மரக்கிளைகளில் வந்து அமர்ந்த காகங்கள், தரைநெடுக அம்மா பிய்த்துப்போடும் இட்லித்துண்டுகளைக் காணாமல் குழந்தைகள் கதறுவதுபோல இடைவிடாமல் அலறின. பிறகு கோழிகள் வந்தன. நாய்கள் வந்து வளைவளையச் சுற்றிவிட்டுச் சென்றன. வாடிக்கைக் காரர்கள் வந்து வெறும் வாசலை நிமிர்ந்து பார்த்துவிட்டுப் போனார்கள். பள்ளிக்கூடத்தில் சாப்பாட்டு மணியடித்ததும் சிறுவர்கள் கூட்டமாக வந்து முற்றத்தில் நின்று பார்த்துவிட்டு தலையைத் தொங்கப்போட்டுகொண்டு சென்றார்கள். வழிப்போக்கர்களும் பிச்சைக்காரர்களும் ''இட்லிக்காரம்மா... இட்லிக்காரம்மா...'' என்று அழைத்துப் பார்த்துவிட்டு ஏமாந்து போனார்கள். அறைக்குள் மன அமைதியில்லாமல் சுற்றிச்சுற்றி வந்த அம்மா சிவகாமியையும் என்னையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு, தனக்குள்ளாகவே புலம்பியபடி சுவரோரமாகச் சரிந்து படுத்துவிட்டாள். அந்த இம்சைகளைச் சகித்துக்கொள்ள இயலாமல் நான் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டேன்.

அம்மா

வீட்டுவாசலில் நடமாட்டம் குறைந்ததை யொட்டி ஆறுதலாக இருந்தாலும் நாள் செல்லச் செல்ல அம்மாவின் நடத்தையில் தெரிந்த மாற்றம் நிம்மதியைக் குலைத்தது. எந்தச் சம்பந்தமும் இல்லாமல் அம்மா தனக்குள்ளாக ஏதேதோ பேசத்தொடங்கினாள். தன் எதிரில் யாரோ ஒருவருக்குப் பரிமாறுவதுபோலவே அவள் பேச்சும் செய்கையும் தொடர்ந்தன. அவள் கை கரண்டியாக மாறிச் சுழன்ற வேகம் ஆச்சர்யமாக இருந்தது. ஆறேழு மாதங்களாக அவள் நடவடிக்கைகள் வீட்டுக்குள்ளாகவே இருந்ததால் நாங்கள் அதிகமாகக் கவலைப் படவில்லை. திடீரென வீட்டுக்கு வெளியே வந்து அவள் தன் நடவடிக்கைகளைத் தொடங்கியபோதுதான் அதன் விபரீதம் உறைந்தது. கவலையும் கசப்பும் நெஞ்சில் மண்டின. யாரும் பார்க்காத சமயத்தில் ஆக்கிவைத்திருந்த சோற்றை வெளியே எடுத்துச் சென்று யாருக்கோ பரிமாறுவது போல இந்தா இந்தா என்று கொட்டுவதுதான் அவள் செய்கையின் உச்சம். அவளைச்  சோதித்த மருத்துவர், ஆழ்மனச் சோர்வைத் தவிர வேறொன்றும் இல்லை என்று மாத்திரை கொடுத்து அனுப்பி விட்டார். அவை நாலுநாள் வேலை செய்யும். ஐந்தாம் நாள் வேலை செய்யாது.

தலையைத் திருப்பி பார்த்தேன். கட்டிலில் அம்மா ஒரு சுள்ளிக்கட்டுபோல் சுருண்டு படுத்திருந்தாள். குறட்டைச் சத்தம் கேட்டது. பக்கத்தில் சிவகாமியும் படுத்திருந்தாள். நான் மெதுவாக எழுந்து பின்கதவைத் திறந்துகொண்டு கழிப்பறைக்குச் சென்று வந்தேன். கதவை மூடும் சத்தம் கேட்டு சிவகாமி எழுந்து பரக்கப்பரக்கப் பார்த்தபடி உட்கார்ந்தாள். தலைமுடியை உதறி கொண்டை போட்டபடி, ''சாப்பாடு வைக்கட்டுமா?'' என்று கேட்டாள்.

''அதெல்லாம் ஒண்ணும் வேணாம்...''

''இப்ப என்ன நடந்திச்சின்னு கோவிச் சிக்கிறீங்க?''

''யார் மேலயும் எனக்கு கோவமில்ல. என் மேலதான் எனக்கு கோவம்!''

எதையும் சொல்லாமல் சிவகாமி ஒருகணம் என்னை ஏறிட்டுப் பார்த்​தாள்.

''என்ன மெம்பரே, ஏன் உங்க அம்மா இப்பிடி கிறுக்குப் புடிச்சாப்புல செய்றாங்கன்னு மத்தவங்க கேக்கும்போது நாக்க புடுங்கினு சாவணும்போல இருக்குது...''

சிவகாமி உடனடியாக எந்த எதிர்வினையையும் காட்​டாமல் தரையையே பார்த்தபடி இருந்தாள்.

வரிசையாக ஓர் எறும்புக் கூட்டம் அரிசிமணியொன்றைத் தள்ளிக்கொண்டு சென்றது. நிதானமான குரலில், ''ஒவ்வொண்ணுக்கும் ஒரு நேரம்காலம் வரும்ங்க. அதுவரைக்கும் பொறுமையாத்தான் இருக்கணும்...'' என்றாள். பிறகு எழுந்துபோய் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். துண்டால் துடைத்துக் கொண்டே ''சரி, சரி, உக்காருங்க. மணி ரெண்டாவப்போவுது. சாப்புடுங்க...'' என்றாள்.

நான் எதுவும் பேசவில்லை. பசித்தது. மனத்தை அடக்கிக் கொண்டு உட்கார்ந்தேன். தட்டில் எனக்குப் பரிமாறிவிட்டு அவளும் போட்டுக்கொண்டு சாப்பிட்டு முடித்தாள்.

கைகழுவிக்கொண்டு மீண்டும் சுவரோரமாகச் சரிந்தபடி உட்கார்ந்தேன். ''அம்மா கைய ரொம்ப மொரட்டுத்தனமா அழுத்தி முறுக்கிட்டேன் சிவகாமி. என்னப்போல பெரிய முட்டாள் ஒலகத்துலயே கெடயாது!'' தூங்கும் அம்மாவைப் பார்த்தபடியே சொன்னேன்.

''அதுக்கென்ன இப்ப? நீங்க வேண்டுமின்னா செஞ்சிங்க? மொதல்ல அந்த பேச்ச உடுங்க...'' பழக்கூடையிலிருந்து ஒரு மாம்பழத்தை எடுத்துக் கழுவினாள்.

''படிக்கற பசங்கன்னா அம்மாவுக்கு ரொம்ப ஆச. நான் சரியா படிக்கலைங்​கறதுல அவுங்களுக்கு ரொம்ப வருத்தம் உண்டு. ஆனா காட்டிக்கிட்டதில்ல...''

''அதெல்லாம் ஏற்கெனவே என்கிட்டக் கொட்டித் தீத்துக்கிட்டாங்க அத்த... '' பழத் துண்டுகளை ஒரு தட்டில் நிரப்பி என் முன்னால் வைத்தபடி, ''இப்ப பழய கதயெல்லாம் எதுக்கு?'' என்றாள்

''திடீர்னு ஒரு நாள் பேன்ட் சட்டயெல்லாம் போட்டுகினு ஜம்முனு ஒருத்தர் வந்து அம்மாவ நிக்கச் சொல்லி கால்ல உழுந்து கும்புட்டு ஆசீர்வாதம் பண்ணச் சொன்னாரு. அந்தக் காலத்துல அம்மாகிட்ட இட்லி வாங்கிச் சாப்புட்டு படிச்சவராம். இப்ப பெங்களூருல டாக்டரா இருக்கறேன்னு சொன்னாரு. அம்மாவுக்குத்தான் மூஞ்சி அடையாளமே தெரியலை...''

''நாம நல்லா இருக்கறதுலாம் அவுங்க பண்ற தர்மத்தாலதான்...''

''அப்பிடி வந்த பல பேர பாத்திருக்கேன் நான். கோயம்புத்தூருல இருக்கேன்... சேலத்துல இருக்கேன்... வெளிநாட்டுல இருக்கேன்னு... பல பேரு வந்து அம்மாகிட்ட அடிக்கடி பேசிட்டுப் போவாங்க!''

சிவகாமி பெருமூச்சோடு என்னைப் பார்த்தாள்.

''அம்மாவை காயப்படுத்த​ணும்னு நான் எதுவும் சொல்லலை. குடும்பம் நமக்கு சாதகமான சூழல்ல இருக்கணும்னு நான் நெனைக்கறது தப்பா?''

''உங்களை யாரு இப்ப குத்தம் சொன்னது?''

''நேருமாறா அவுங்க ஏடாகூடமா செய்யறதப் பார்த்தாலே எரிச்சலா வருது. கோபம் வருது. என்ன செய்றம் என்ன பேசறம்னு கட்டுப்பாடே போயிடுது!''

''சரி விடுங்க. அதான் நான் சொன்னதும் அவுங்க அடங்கிட்டாங்க இல்ல. கொஞ்சம் கொஞ்சமா மாத்தலாம். கவலப்படாம இருங்க...'' பாயை விரித்துப் போட்டு அவள் படுத்துக்கொண்டாள். நான் மட்டும் விழித்திருந்தேன். கிடத்தப்பட்ட ஒரு பொம்மையைபோல இருந்த அம்மாவையும் சிவகாமியையும் மாறிமாறிப் பார்த்தேன். 'உச்... உச்...’ என பல்லி ஒன்று சத்தமிட்டது. அரிசி மூட்டையின் மீதிருந்த ஒரு பழைய செய்தித்தாளை இழுத்துப் பிரித்தேன். படங்களை மட்டும் பார்த்தேன். எதிலும் மனம் ஒட்டவில்லை. அலுப்பில் மடித்துவைத்துவிட்டு இன்னொரு பாயை விரித்து நானும் படுத்துக் கொண்டேன்.

யோசனைகள் அறுபட ஏதோ ஒரு கணத்தில் தூக்கத்தில் அமிழ்ந்து போனேன். அதிர்ச்சியில் எழுந்து சுவர்க் கடிகாரத்தில் மணியைப் பார்த்தேன். முட்கள் நான்கைக் காட்டின. பிள்ளைகள் வரும் நேரம். பஞ்சாயத்து போர்டு அலுவலக வேலை ஒன்று நினைவுக்கு வந்து புரண்டு தலையைத் திருப்பிப் படுத்தேன். அம்மாவைக் காணவில்லை. தூக்கி வாரிப்போட்டது. சட்டென்று துள்ளி​யெழுந்தேன். பின்கட்டுக்கதவு தாழ்ப்பாள் போட்ட நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அது சற்றே நிம்மதியை அளித்தது. ஏதாவது அறையில்தான் இருக்கக் கூடும் என்று தோன்றியது கழிப்பறை, சமையலறை, படுக்கையறை, பிள்ளைகள் அறை என ஒவ்வொன்றாகப் புகுந்து புகுந்து வந்தேன். ஏதோ ஒரு குழப்பத்தோடு சாமியறையின் பக்கம் பார்த்தேன். ஒருக்களித்திருந்த கதவைத் திறந்து உள்ளே சென்றேன்.

சாமி படத்தின் முன் அம்மா உட்கார்ந்திருந்தாள். உணவு பரிமாறப்பட்ட மூன்று இலைகள் சாமி படங்களின் முன்னால் வைக்கப்பட்டிருந்தன. ''சாப்புடு சாமி, சாப்புடு சாமி...'' என்று படங்களில் இருந்த தெய்வங்களிடம் முறையிட்டுக் கொண்டிருந்தாள். சுருக்கம் விழுந்த அவள் முகம் விளக்கொளியில் கனிந்து சுடர்போல் இருந்தது. வெளியேறி சரிந்து உட்கார்ந்த போது என் உடல் அதிர்வதை உணர்ந்தேன்.

முட்டிக்கொண்டு திரண்ட கண்ணீர்த் துளிகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை. ''அம்மா... அம்மா!'' என்று என்னையறியாமல் முனகினேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism