Published:Updated:

சொல்வனம்

படம்: அசோக் அர்ஸ்

 ஒரு மிட்டாயும்...  ஒரு சாக்லேட்டும்...

‘இதுல மயக்கமருந்து ஏதும் கலக்கல'
என்று சொன்ன பிறகும்கூட
டெய்ரிமில்க் சாக்லேட்டை வாங்க மறுத்தாள்
என்னருகே பேருந்தில் பயணித்த
கல்லூரிப் பெண்.
தனியாய்ச் சாப்பிட சங்கடப்பட்டு
சாக்லேட்டை பைக்குள் வைத்துவிட்டு
ஜன்னலுக்கு வெளியே வெறித்தபடி சிறிதுநேரம் மௌனமானேன்.
அரைமணி நேர வற்புறுத்தலுக்குப் பின்
நான் கொடுத்த சாக்லேட்டை
வாங்கிப் புன்னகைத்தவள்
தன் பையிலிருந்து எடுத்த
எக்லேர்ஸ் மிட்டாயொன்றை
என்னிடம் கொடுத்தாள் புன்னகையோடு.
டெய்ரிமில்க் சுவைத்தபடி நானுமதை
வாங்கிப் பத்திரப்படுத்தினேன்.
இரண்டரை மணிநேரப்
பயண உரையாடல் முடிந்து
பேருந்து நிலையத்தில் விடைபெற்று
ஒருவர் பார்வையில் ஒருவர் மறைந்த பிறகு, அவள் கொடுத்த எக்லேர்ஸ் மிட்டாயை எடுத்து வீசிவிட்டேன் குப்பைத்தொட்டியருகே.
அதற்கும் அருகிலேயே கிடந்தது
ஒரு டெய்ரிமில்க்.

- கிருத்திகா தாஸ்

சொல்வனம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஈரம் காய்ந்த குப்பைகள்

குடிக் கடையிலிருந்து வீட்டுக்குச் செல்ல
ஆயத்தமாகிறான் அவன்
தெருவின் ஒவ்வோர் அடியையும்
திறந்துவைக்கிறான்
அவனைப் பின்தொடர்ந்து வரும்
தவளைக் குஞ்சிற்காக
பாதம் படும் இடமெல்லாம்
ஏதேதோ அகப்படுகிறது
முக்கால்வாசி ஈரம் காய்ந்த குப்பைகளே இருந்தன
பெரிதும் சிறிதுமாய் சில
புதிதுமாய் பழையதுமாய் சில
முடிந்தவரை கால்களில் தள்ளிவிட்டு நடக்கத் தொடர்கிறான்
சிறிது தூரம் கடந்தவுடன் ஆள் வருகிறது
அவனைக் கூட்டிச்செல்ல
மேலும் போக வழி தெரியாமல்
கத்திக்கொண்டிருந்தது தவளைக்குஞ்சு.

- சதீஷ் குமார்


மூக்கணாங்கயிறு

ஞ்சாவூர் சந்தைக்கு
காலையிலேயே போய்வந்துவிட்டார்.
உழவுக் காளைகள் இருந்த கொட்டகைக்குள்
அசைபோட்டுக்கொண்டிருந்தது வெறுமை.
மாடுகளையே வித்தாச்சு
மூக்கணாங்கயிறு எதற்கு?
புதிதாக வாங்கி எரவாணத்தில்
சொருகிவைக்கப்பட்டிருந்ததை உருவிக்கொண்டு
வேகமாக அறைக்குள் சென்று
அப்பா தாளிட்டுக்கொண்டதையும்

மீத்தேனுக்கு எதிராக
போராட்டம் அறிவித்திருந்த தலைவர்
ஊழல் குற்றச்சாட்டில்
கைதுசெய்யப்பட்டதையும்
இணைத்தபடி
`தலைவர் கைதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை’
என ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது
ஒரு வரிச் செய்தி.

- வலங்கைமான் நூர்தீன்