Published:Updated:

நெடுஞ்சாலை வாழ்க்கை - 32

பண்டரிபுரம் ரயில்வே கேட்!கா.பாலமுருகன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

நெடுஞ்சாலை வாழ்க்கை - 32

பண்டரிபுரம் ரயில்வே கேட்!கா.பாலமுருகன், படங்கள்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:

காஷ்மீர்ப் பயணத்தின் முதல்நாள். சேலத்தில் இருந்து லாரி கிளம்பியபோது, இது ஒரு நீண்ட பயணமாக இருக்கும் என்று மலைப்பு ஏற்பட்டது. ஆனால், லாரி டிரைவர்களுக்கு இது சகஜம். ஒரு மாதம் வரை பயணத்திலேயே இருப்பவர்கள் ஏராளம். டிரைவர் மணிக்கும் பரமேஸ்வரனுக்கும் இதுபோன்ற பயணங்கள் சாதாரணம். ஆனால், எனக்கும் புகைப்படக்காரர் ரமேஷுக்கும்தான் காஷ்மீர் புதிது. பனி மலைகளை காணப்போகும் ஆர்வம் எங்களிடம் இருந்தது. அதேசமயம், அந்த மலைச் சாலையின் பள்ளத்தாக்குகள் நெஞ்சுக்குள் புகுந்த கல் போல உறுத்தியது.

கிருஷ்ணகிரி நோக்கி லாரி மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. ஆக்ட்டிங் டிரைவரான பரமேஸ்வரனிடம் பேச்சுக் கொடுத்தேன். ‘‘21 ஆண்டுகளாக டிரைவராக இருக்கிறீர்களே... சொந்தமாக வண்டி வாங்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?’’ என்ற என் கேள்விக்கு முதலில் ஒரு சத்தமான சிரிப்பைப் பதிலாகக் கொடுத்தவர், ‘‘நானும் இடையில கொஞ்ச காலம் அப்படித்தான் நெனைச்சுக் கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன். இப்ப இருக்கிற ஓனருங்க நிலைமைய நெனைச்சா... நல்லவேளை நாம தப்பிச்சோம்னு இருக்கு.

சாப்பிடாம, நல்ல துணிமணி உடுத்தாம, குருவி சேர்க்கிறது மாதிரி காசை மிச்சம் பிடிச்சு, அட்வான்ஸ் பணம் கட்டி கடனுக்கு லாரி வாங்கினா, ஒவ்வொரு மாசமும் தவணை கட்டுறதுக்குள்ள கண்ணு முழி பிதுங்கிப்போகுது. ஏண்டா லாரி வாங்கினோம்... பேசாம டிரைவராவே இருந்திருக்கலாம்னு தோணும். என்னோட கூட்டாளிங்க பலபேரு லாரி வாங்கிட்டு ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க. லாரித் தொழில்ல காசு மிச்சம் பண்ணுன காலம் எல்லாம் மலையேறிப் போச்சு. இப்போ தவணையாவது கட்ட முடியுமானு பார்க்கிற காலம். நான் டிரைவரா மட்டும்தான் இருக்கேன்; சந்தோஷமா இருக்கேன். பல லாரி ஓனருங்க தூங்க முடியாம இருக்காங்க!’’ என்றார். ‘‘திருமணம் ஆகிவிட்டதா?’' என்ற கேள்விக்கு  பரமேஸ்வரன் இன்னும் சத்தம்போட்டுச் சிரிக்க, மணியும் அவருடன் சேர்ந்துகொண்டார்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 32

பரமேஸ்வரனுக்குத் திருமணமாகி ஐந்து ஆண் பிள்ளைகள். மூத்த மகனுக்கு வயது 23. ‘’ரொம்பச் சின்ன வயசிலேயே கல்யாணம் பண்ணிட்டேன். அதெல்லாம் பெரிய கதை. ஆனா, எல்லா பசங்களையும் படிக்க வைக்கிறேன். நான் சம்பாதிச்சு எந்தச் சொத்தும் சேர்க்கலைன்னாலும் படிப்புங்கிற சொத்து மட்டும் போதும். என்னால முடிஞ்சது அதுதான்!’’ என்றவருக்கு போன் வந்தது. எதிர்முனையில் பேசியவர் இவரது நண்பர் லாரி டிரைவர் மேகவர்மன். டெல்லியில் இருந்து ஈரோடுக்கு பார்சல் லோடு ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருப்பவர். வழியில் தார்ப்பாயை அறுத்து பொருட்களைத் திருடிவிட்டார்கள் எனப் புலம்பியவரை, ‘எங்கே வந்துக்கிட்டிருக்கிற?’ எனக் கேட்டுவிட்டு, ‘‘பெங்களூரு பைபாஸ் சாலையில் பார்க்கலாம்’’ எனக் கூறினார். ‘‘பாவம், எவ்வளவு ரூபாய் பொருள் போச்சுனு தெரியலை. அரசாங்கத்துல என்னென்னமோ திட்டம் எல்லாம் போடுறாங்க. இந்தத் திருட்டைத் தடுக்கிறதுக்கு எதுவும் செய்யமாட்டேங்கிறாங்களே!’' என்று அலுத்துக்கொண்டார்.

தொப்பூரில் இறங்கி வணிக வரி முத்திரை பெற்றுக்கொண்டு மலையேறினோம். கிருஷ்ணகிரி தாண்டியதும் சாலையில் வாகனங்கள் அதிகமாக, லாரியின் வேகம் மேலும் மெதுவானது. ஓசூரில் மதிய உணவு முடித்துவிட்டு, தமிழக எல்லையைத் தாண்டி கர்நாடகா மாநிலத்தில் நுழைந்து, இடதுபக்கமாக இருந்த ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நுழைந்தது லாரி. முத்திரைகளுடன் 300 ரூபாய் கொடுத்துவிட்டு எலெக்ட்ரானிக் சிட்டியைக் கடந்து இடதுபக்கம் மைசூர் பைபாஸ் சாலையில் திரும்பினோம்.

பிரம்மாண்டமான விசாலத்துடன் அமைக்கப் பட்டுள்ள இந்தச் சாலையில் பயணம் செய்வதே நல்ல அனுபவமாக இருக்கிறது. ஆனால், டோல்கேட் கட்டணம்தான் டிரைவர்களுக்குக் கிலியைக் கிளப்புகிறது. எதிர்ப்பக்கச் சாலையில் தூரத்தில் வந்த லாரியைப் பார்த்து, சங்கேத ஹாரன் கொடுத்தார் பரமேஸ்வரன். எதிரே வந்த லாரி ஓரங்கட்ட... நமது லாரியும் சாலையோரமாக ஒதுங்கி நின்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெடுஞ்சாலை வாழ்க்கை - 32

‘‘வாங்க சார், இதுதான் திருடு கொடுத்த லாரி. என்ன பிரச்னைனு கேட்போம்...’’ என நம்மை அழைத்த பரமேஸ்வரன், திருடு நடந்த இடத்தைப் பற்றி ஒரு சிறிய முன்னோட்டமும் கொடுத்தார்.
மஹாராஷ்ட்ராவில் உள்ள சோலாப்பூருக்குள் நுழையாமல் செல்ல, பண்டரிபுரம் வழியாக குறுக்குப் பாதை இருக்கிறது. இங்கிருந்து செல்லும்போது கர்நாடகாவில் உள்ள ஜால்கி என்ற ஊரைக் கடந்ததும் மஹாராஷ்ட்ரா மாநில எல்லை ஆரம்பம். அங்கிருந்து இடதுபக்கம் செல்லும் கிராமச் சாலை வழியே பண்டரிபுரம் சென்று மீண்டும் நெடுஞ்சாலையில் இணைந்துகொள்கிறார்கள் லாரி டிரைவர்கள்.

காரணம், தூரம் குறைவு என்பது மட்டுமல்ல... சோலாப்பூர் ஆர்.டி.ஓ அதிகமாக அபராதம் கேட்கிறார் என்பதுதான். இதற்காக இந்தக் கிராமச் சாலை வழியே ஏராளமான லாரிகள் செல்கின்றன. இங்குள்ள ரயில்வே கிராஸிங்கில் உள்ள ஸ்பீடு பிரேக்கர்தான் திருடர்களின் துருப்புச் சீட்டு. இரவில் தனியாக வரும் லாரிகள், ஸ்பீடு பிரேக்கரை மெதுவாகக் கடக்கும்போது பின்னால் ஏறி, அடுத்த ஊருக்கு முன்பாக இருக்கும் ஸ்பீடு பிரேக்கர் வரும்போது இறங்கிவிடுவார்களாம். இந்தக் குறைவான கால அவகாசத்தில் என்ன கிடைக்கிறதோ, அதை லாரியிலிருந்து கீழே தூக்கி வீசிவிட்டு இறங்கிவிடுவதுதான் இந்தத் திருடர்களின் ஸ்டைல். இந்தத் திருட்டை யாரும் தனி ஒருவனாகச் செய்வது இல்லை. குழுவாகச் செய்கிறார்களாம். அதனால், இந்தப் பகுதியில் இரவில் வரும் லாரிகள் பெரும்பாலும் ஒன்றுசேர்ந்துதான் பயணிக்குமாம்.

‘‘ராத்திரிகூட இல்லீங்க... சாயந்திரம் நேரம்தான். இருட்டக்கூட இல்லை. அப்பவே இப்படிப் பண்ணிட்டானுங்க'' என்று வருந்தினார் திருடு கொடுத்த லாரியின் கூடுதல் டிரைவரான சுரேஷ்.
டெல்லியில் ஈரோடுக்கு பார்சல் சர்வீஸ் லோடு ஏற்றி, இரண்டு தார்ப்பாய்கள் போட்டுக் கட்டியிருக்கிறார் லாரியின் ஓனர் கம் டிரைவரான மேகவர்மன். சரியாக தார்ப்பாயின் நடுவே வெட்டி ஒரு பார்சலை மட்டும் தூக்கி இருக்கின்றனர். அது என்ன பார்சல், எவ்வளவு ரூபாய் மதிப்பு கொண்டது என்பது அவருக்குத் தெரியாது. என்ன அபராதம் கேட்கிறார்களோ அதைக் கொடுப்பதுதான் லாரித் தொழிலின் தர்மம். போனது பொருள் மட்டுமல்ல... 35,000 ரூபாய் மதிப்புள்ள மெழுகு பூசிய தார்ப்பாய் கிழிக்கப்பட்டுவிட்டது. மேலும் 15,000 ரூபாய் மதிப்புள்ள இன்னொரு பாயும் போய்விட்டது. இது, லாரித் தொழிலில் மிகப் பெரிய நஷ்டம்.

நெடுஞ்சாலை வாழ்க்கை - 32

‘‘ஜாண் ஏறினா முழம் வழுக்குதுண்ணா... என்ன பண்றதுன்னே தெரியலை’’ என்று புலம்பிய மேகவர்மனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவருக்கு விடை கொடுத்து மீண்டும் லாரியில் ஏறினோம். பெங்களூருவைச் சுற்றிக்கொண்டு தும்கூர் பைபாஸை எட்டியபோது இருட்டத் துவங்கியிருந்தது. ஹிரியூருக்கு முன்பாக வழக்கமாக பலசரக்குப் பொருட்கள் வாங்கும் கடையின் முன்பு லாரியை நிறுத்தி பொருட்களை வாங்கினார்.

சித்திரதுர்காவில் இருந்து வலதுபக்கம் செல்லும் சாலையில் திரும்பி பெல்லாரி நோக்கிச் செல்ல ஆரம்பிக்க, போட்டோகிராபர் ரமேஷ் தூங்க ஆரம்பித்திருந்தார். டிரைவர் சீட்டில் இருந்த பரமேஸ்வரனிடம், நள்ளிரவு தாண்டியும் முடியாத அவரது கல்யாண சாகசக் கதையைக் கேட்டுகொண்டே இருந்தவன், எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.
விழிப்பு வந்து எழுந்தபோது, சாலை யோரம் இருந்த ஒரு சின்னக் கட்டடம் முன்பு லாரி நின்றிருந்தது; இருள் விலகவில்லை. பரமேஸ்வரன் பெர்த்தில் படுத்திருந்தார். டிரைவர் மணி மட்டும் இல்லை; இயற்கை உபாதைக்காக இறங்கியிருப்பார் போல! தூக்கக் கலக்கத்துடன் என்ன செய்வது எனத் தெரியாமல் சாலையை வெறித்துப் பார்த்துகொண்டிருந்தேன். சட்டென சாலையில் ஏதோ குதித்து ஓடியது. அது என்ன என்று பார்க்க யத்தனிப்பதற்குள், டிரைவர் மணி பாய்ந்து வந்து லாரியில் ஏறினார். ‘‘என்ன இவ்வளவு வேகம்?’’ என்றவரிடம், ‘‘கரடி’’ எனச் சொன்னதும் எனக்கு சப்தநாடியும் ஒடுங்கிப்போனது!

(நெடுஞ்சாலை நீளூம்)