கனடாவில் அவனுக்கிருந்த முதல் பிரச்னை அங்கே பனிக்காலம் ஒவ்வொரு வருடமும் வருவதுதான். அவன் மலிவான கோட்டும் மலிவான உள்ளங்கியும் மலிவான சப்பாத்தும் அணிந்திருந்தான். பாதாள ரயிலில் பிரயாணம் செய்தபோதும் அவன் உடம்பு நடுங்கியது. அவனுடைய அகதிக் கோரிக்கை வழக்கை வாதாடும் வழக்கறிஞரிடம் அவன் மூன்றாம் தடவையாகப் போகிறான். அவன் அவரிடம் எழுதிக் கொடுத்தது உண்மைக் கதை. அதை அவரால் நம்ப முடியவில்லை என்றார். அவனுடைய கதையை கிழித்தெறிந்துவிட்டு வழக்கறிஞரே ஒரு புதுக்கதை எழுதினார். அவருக்கு ஆதாரங்கள் தேவையாம். ஆகவே முன்கூட்டியே ஆதாரங்களைச் சேகரித்து வைத்துக்கொண்டு தன் கற்பனையை விரித்து அதற்கேற்ற மாதிரி புதுக்கதை தயாரித்தார். அதைத்தான் கோர்ட்டு நிராகரித்துவிட்டது.

அவன் இறங்கவேண்டிய ஸ்டேஷன் வருவதற்கு 20 நிமிடங்கள் இருந்தபோது அந்தப் பெண் ஏறினாள். அவளைக் கண்டதும் அவன் கால்கள் உதறத் தொடங்கின. அவன் இருதயம் ரயில் சத்தத்தையும் மீறி அவன் காதுக்குக் கிட்டவாக அடித்தது. குளிரில் கால்கள் நடுங்குகின்றன என முதலில் நினைத்தான். அவள், அவனைப் போலவே பொது நிறம் உள்ளவள். மிருதுவான தோலங்கியும் எந்தப் பனியையும் சமாளிக்கக்கூடிய பூட்சும் அணிந்திருந்தாள். ஒரு முறை கண்களை எறிந்து அவனைப் பார்த்தாள். பின்னர் தன் பையிலிருந்த ஒரு புத்தகத்தைக் கையிலே எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள். அது பாடப் புத்தகம் போல இருந்தது. அடுத்து வந்த ஸ்டேஷனில் ரயில் நிற்க, அவள் இறங்கினாள். அவனுடைய நெஞ்சு நிற்கவில்லை, தொடர்ந்து படபடவென்று அடித்தது. அப்பொழுது தீர்மானம் செய்துகொண்டான். கனடாவில் தற்கொலை செய்வதென்றால் அது அவள் பயணிக்கும் பாதாள ரயிலுக்கு கீழேதான்.

தற்கொலை எண்ணம் வரும்போ தெல்லாம் கூடவே சோமாலியின் நினைப்பும் வந்தது. இத்தாலியில் மிலானோ ஸ்டேஷனில் அவனைப் பட்டினியால் சாகாமல் காப்பாற்றியது சோமாலிதான். எல்லா நாடுகளுக்கும் பயணித்திருந்ததால் ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு தற்கொலை முறை என ஆராய்ச்சி செய்து வைத்திருந்தான் சோமாலி. பெல்ஜியம் போதை மருந்து; இத்தாலியில் துப்பாக்கிச் சூடு. பாரிஸ் என்றால் வேறு என்ன, ஈஃபில் கோபுரம்தான். வெனிஸில் எப்படிச் சாகலாம் என்று கேட்டதற்கு 'நீ முயற்சி செய்யவே வேண்டாம். வெனிஸ் தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறது’ என்றான். சோமாலிக்கு என்ன ஆனது என்பது அவனுக்குக் கடைசிவரை தெரியவே இல்லை.

அவன் கொழும்பில் விமானம் ஏறி தனியாக ரோம் வந்து சேர்ந்தபோது எந்த நேரத்திலும் பனிக்காலம் தொடங்கலாம் என்றிருந்தது. அந்த வருடத்தை அவனால் மறக்க முடியாது. அந்த வருடம்தான் ஜனாதிபதி பிரேமதாசா கொலை செய்யப்பட்டிருந்தார். அவனு டைய பெயரை அடிக்கடி மறந்துவிடும் மாமா எப்படியோ காசு சேர்த்து அவனை அனுப்பிவைத்தார். ஏஜென்ட் சொல்லியதுபோல நேரே கிரீசுக்குச் சென்று அங்கே கப்பலில் சேர்வதுதான் திட்டம். அது கேட்க மிகவும் சுலபமான தாகத்தான் தோன்றியது. கிரீசுக்கு கள்ள விசா அவனிடம் இருந்ததால் பிரச்னை இல்லாமல் கப்பலில் சேர்ந்துவிடலாம் என்றுதான் எண்ணினான். ஆனால் ஐரோப்பாவை விட்டு வெளியேற மூன்று வருடம் பிடிக்கும் என்பது அவனுக்கு அப்போது தெரியாது.

கிரீஸ் எல்லையிலே அவனைப் பிடித்த அதிகாரி வெள்ளைச் சீருடை தரித்தவன். கம்பு போல மெலிந்து உயரமாக இருந்தான். கடவுச்சீட்டை விரித்ததும் அவனுடைய முகம் மாறியது. காட்டிலே பிடித்து வந்த எச்சில் ஒழுகும் விலங்கு ஒன்றைப் பார்ப்பதுபோல பார்த்தான். அவனுடைய உடம்பிலும் பார்க்க பத்து மடங்கு பெரிதான ஒரு சத்தம் எழுப்பினான். அதிகாரி கத்திய கத்தலில் அவனுடைய கொடுப்புப் பல் ஒன்று ஆடியது. 'கிரேக்க மொழிபோல இருந்தது’ என்றொரு பழமொழி உண்டு. அதேதான். அதிகாரியின் வசை ஒன்றுமே புரியவில்லை. வெனிஸுக்குப் போகும் ரயிலில் ஏற்றிவிட்டார்கள். பாதி வழியில் டிக்கெட் பரிசோதகர் பிடித்தபோது ஒவ்வொரு தமிழ் வார்த்தையையும் ஆங்கிலமாக மாற்றி மன்றாடினான். மனிதர் அசரவில்லை. 50 டொலர், அந்தக் காலத்தில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தொகை, அபராதம் கட்டினான். அப்பொழுதுதான் அவன் எண்ணினான். இன்னொருவருக்குப் புரிந்தால்தான் ஒரு மொழியினால் பிரயோசனம் உண்டு. புரியாவிட்டால் அதைத் தெரிந்திருப்பதும் ஒன்றுதான். தெரியாமல் இருப்பதும் ஒன்றுதான்.

வெனிஸ் ஸ்டேஷனில் இறங்கியதும் அந்தக் துயரத்திலும் ஒரு சின்னக் குதூகலம் தோன்றியதை நினைக்க ஆச்சர்யமாக இருந்தது. ஷேக்ஸ்பியருடைய வெனிஸ் வணிகனை தமிழிலே படித்திருந்தான். அந்த நகரத்தை வியந்து வியந்து பார்த்தான். அவன் மனக்கண்ணிலே 3,000 தங்கக் காசுகளுக்கு உத்தரவாதம் தந்த உயிர் நண்பன் அண்டொனியோ, பஸானியோ... அவனுடைய காதலி போர்ஸியா எல்லோரும் வந்து போனார்கள். சைலொக்கை நினைத்ததும் வீதியிலுள்ள கடை எப்படி இருக்கும் என பார்க்க ஆசைப்பட்டு ஒரு கதவைத் திறந்தான். கதவு டங் என்று சத்தமிட்டு திறந்தது. ஒரு பெண் வெளியே ஓடி வந்து போ போ என கைகளை வீசித் துரத்தினாள். அவன் கதவுப் பிடியை விட்டுவிட்டு வெளியே வந்தபோது கதவு மறுபடியும் டங் என்ற சத்தத்துடன் மூடிக்கொண்டது. சைலொக் அந்த வீதிகளில் எத்தனை இழிவு வார்த்தைகளைக் கேட்டிருப்பான். அவனுக்குப் பிடித்தது சைலொக்கின் வாசகங்கள்தான்.

'நான் ஒரு யூதன். என்னைக் குத்தினால் எனக்கு ரத்தம் ஒழுகாதா? எனக்கு நஞ்சு ஊட்டினால் சாவு வராதா? எனக்கு சிரிப்பு மூட்டினால் நான் சிரிக்க மாட்டேனா?’ அழகுமிகு வெனிஸ் நகரத்து மக்களுக்கு வேற்று மனிதரில் எத்தனை வெறுப்பு? அந்த நகரம் ஷேக்ஸ்பியர் வர்ணித்தது போலவே மாற்றம் எதுவும் இல்லாமல் அப்படியே இருந்ததுபோல பட்டது. திரும்பவும் சான்ரா லூசியா ஸ்டேஷனுக்குச் சென்று ஓர் இருக்கையில் அமர்ந்தான். அப்பொழுது சருகுக் கூட்டம் நகர்வது போல மெல்ல அசைந்து வந்து பக்கத்திலே உட்கார்ந்து 'அகதியா? உங்கள் பெயர் என்ன?’ என்றான் சோமாலி. அவன் 'மகேஸ்’ என்றான். அப்படித்தான் அவர்களின் முதல் சந்திப்பு நடந்தது.

மகேஸுக்கு தொழிற்சாலையில் பலகைகள் அறுக்கும் வேலை. காலையில் அன்றைய வேலை ஆணை வந்துவிடும். எத்தனை பலகைகள், எத்தனை நீளம், எத்தனை அகலம், எத்தனை தடிப்பு என்ற விவரங்கள் இருக்கும். தூசிக் கவசத்தையும் கையுறைகளையும் மாட்டிக்கொண்டு காலையில் தொடங்கினால் மாலை வரை அறுப்பதுதான் வேலை. அந்த நேரம் முழுக்க அவளையே நினைப்பான். ஒரேயொருமுறை ரயிலில் பார்த்த பெண்ணை அப்படி நினைப்பதால் என்ன பிரயோசனம்! ஆனால், அவளை நினைக்கவேண்டும் என்று அவனுக்கு தோன்றியது. ஒரு பாட்டைக் கேட்டுக்கொண்டு வேலை செய்வதுபோல அவளை நினைத்துக்கொண்டு மரம் அறுத்ததால் களைப்பே அவனுக்கு தெரிவதில்லை.

அடுத்த வாரம் முழுக்க அவளைக் காணவில்லை. சரியாக அந்த நேரம் அதே ரயிலை பிடித்து அவன் தினமும் வேலைக்கு செல்கிறான். திடீரென்று மீண்டும் ஒருநாள் அவளை ரயிலிலே கண்டான். எப்பொழுது எங்கே எப்படி வருவாள் என்பது தெரியாது. அன்று அவளுக்கு இருக்க இடமில்லை. மேலே கம்பியை பிடித்தவாறு அசைந்துகொண்டு நின்றாள். ஏதோ கேட்காததை அவளிடம் கேட்டதுபோல திடுக்கிடும் கண்கள். இந்தியா, இலங்கை, கயானா என அவள் எந்த நாட்டுக்காரியாகவும் இருக்கலாம். சற்று முன் தள்ளிய உதடுகளில் ஒளி விழுந்து கவர்ச்சியை கூட்டியது. அவள் இறங்கும் இடம் வந்தபோது திடீரென்று நகர்ந்தாள். சிறிது நேரத்தில் அவளுடைய உடை சுழன்று விடுவித்துக்கொண்டு அவளுடன் போனது. ஒருமுறை திரும்பிப் பார்த்திருந்தால் பெரிய ஆறுதலாக இருந்திருக்கும்.

கனடா வந்த பின்னர் அவனுக்கு தற்கொலை நினைப்பு தோன்றியது இரண்டு முறைதான். பாதாள ரயிலின் கீழ் விழுவது என்பதை எப்போதோ தீர்மானித்திருந்தாலும், எந்த ரயில் எந்த ஸ்டேஷன் என்பதையெல்லாம் அவளைப் பார்த்த பின்னர் முடிவு செய்தாகிவிட்டது. அகதிக் கோரிக்கை நிராகரித்த அன்று அதைச் செய்ய யோசித்தான். ஆனால் வழக்கறிஞர் அப்பீலில் வென்றுவிடலாம் என்று ஆசை காட்டினார். அவன் மரம் அறுப்பது உயிர் வாழ்வதற்குத்தான். அவ னுடைய ஏழாவது வேலை நேர்காணல் தோல்வியானபோதும் தற்கொலை எண்ணம் வந்தது.

அவனுடைய முதல் நேர்காணல் வேடிக்கையானது. அதிகாரி உயரமான நாற்காலியில் உட்கார்ந்து கேள்விகள் கேட்டார். 'இந்தப் பாரத்தை நீங்கள்தான் நிரப்பினீர்களா?’

'ஆமாம். நான்தான். நான்தான்.’

'நீங்கள் அணிந்திருக்கும் உடை உங்களுடையதா?’

அட, எப்படியோ கண்டுபிடித்து விட்டார். அது இரவல் உடுப்புதான்.

'இந்த உடுப்புக்குச் சொந்தக்காரன் நான்தான்.’

'இந்த விண்ணப்பத்தில் இருக்கும் புகைப்படம் உங்களுடையதா?’

'ஆமாம், அது நான்தான்.’

சிறிது நேரம் அதிகாரி ஒன்றும் கேட்கவில்லை. அடுத்த கேள்வியை மூளையிலே தயாரித்துக்கொண்டிருந்தார். அந்த இடைவெளியை வீணாக்காமல் அவன் தானாகவே சொன்னான். 'இன்று காலை முகச்சவரம் செய்தது நான்தான். தலைவாரியதும் நான்தான். நான்தான்.’

என்ன காரணமோ அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. ஏழு வேலை அடுத்தடுத்து தவறி எட்டாவதாகக் கிடைத்ததுதான் மரம் அறுக்கும் வேலை.

ரயில் பெண் மர்மமானவளாக இருந்தாள். இந்த ரயிலில் இந்த நேரம் வருவாள் என்று முன்கூட்டியே யூகிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் ரயில் ஏறுமுன்னர் மனதிலே உறுதி எடுப்பான். ஓர் ஆரம்ப வசனத்தை மனப்பாடம் செய்து தயாராக வைத்திருந்தான். அதை அவளிடம் சொல்லும் சந்தர்ப்பம்தான் கிடைக்கவில்லை. எதிர்பாராமல் ஏதாவது நடந்து அவன் வாழ்க்கையே மாறக்கூடும். வெனிஸ் ஸ்டேஷனில் அப்படித்தான் நடந்தது.

சோமாலியும் அவனும் ஓர் இருக்கை யில் அமர்ந்து எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டு இருந்தபோது கடவுள் அனுப்பிய தூதுவர் போல தோற்றமளித்த ஒருவர் வந்தார். ஆடம்பரமாக ஆடை அணிந்திருந்தார். கையிலே உத்தியோகத்தர்கள் பை. அவர்கள் மனதுக்குள் ஓடுவதை படித்த வர்போல ஆங்கிலத்தில் 'உங்களுக்கு கப்பலில் சேர விருப்பமா?’ என்றார்.

'ஐயா அதற்குத்தான் நாட்டை விட்டு வெளியேறி அலைந்துகொண்டி ருக்கிறோம்.’

அந்த மனிதர் பையை திறந்து சில பாரங்களை எடுத்து அவர்கள் மொழியில் நிரப்பி அவர்களைக் கையொப்பமிடச் சொன்னார். பின்னர் ஆளுக்கு 500 டொலர் கட்டவேண்டும் என்றார். அவர்களிடம் மொத்தமாக இருந்ததே 840 டொலர்தான். மீதிப் பணத்தை ஒரு மாதத்தில் தருவதாக எழுதி கையொப்பம் பெற்றுக்கொண்டார். 'இங்கேயே இருங்கள். கப்பல் ஏஜென்டை அழைத்து வருகிறேன்’ என்று சொல்லிப் புறப்பட்டவர் பின்னர் திரும்பவே இல்லை. மகேஸ் அன்று ஒரு பாடம் கற்றான். வெள்ளைக்காரர்கள் கூட ஏமாற்றுவார்கள்.

'இத்தாலியில் மிகப் பெரிய ஸ்டேஷன் மிலானோ. அங்கே போகலாம், ஏதாவது வழி தோன்றும்’ என்று

சோமாலி சொன்னான். டிக்கெட் இல்லாமல் ரயில் ஏறி மிலானோ ஸ்டேஷன் வந்து சேர்ந்தார்கள். அவ்வளவு பிரமாண்டமான ஒரு ஸ்டே ஷனை மகேஸ் வாழ்நாளில் பார்த்தது கிடையாது. பெருமழை கொட்டுவதுபோல ஓர் இரைச்சல் எந்நேரமும் இருக்கும். அங்கேயிருந்து ஐரோப்பாவின் எந்த ஒரு நாட்டுக்கும் பயணிக்கலாம். பார்சிலோனா, ஜெனிவா, சூரிச், பிராங்ஃபர்ட் என ரயில்கள் வருவதும் போவதுமாக ஒரே திரு விழாக் கோலம்தான். ஓர் இருக்கையில் அமர்ந்து இருவரும் எதிர்காலத்தைத் திட்டமிட்டார்கள். கையிலே காசு இல்லை. மொழி தெரியாது. மகேஸ் நிமிர்ந்து பார்த்தான். மேலே சுவற்றிலே 12 ராசிகளின் உருவங்களையும் கல்லிலே செதுக்கி வைத்திருந்தார்கள். என்ன வேலைப்பாடு? யாரோ சிற்பி எப்பவோ எவருக்காகவோ எழுப்பிய சிலைகள். அவனுடையது துலா ராசி. தராசு நேராக நின்றது. அது அவனுடைய எதிர்காலம் பற்றி என்ன சொல்கிறது என ஆராய்ந்தபோது ஒல்லிப் பிச்சான் சோமாலி 'நான் சாகப் போகிறேன்’ என அலறினான்.

சோமாலி சின்னச் சின்ன ஆங்கிலம் பேசினான். கிரீஸ் நாட்டு குடிவரவு அதிகாரி போல நிறைய கேள்விகள் கேட்டான். மூன்று நாட்களாக இருவரும் பட்டினி. கையிலே ஒரு காசும் இல்லை. தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் தரித்தார்கள். பேசும்போது அடிக்கடி வயிற்றைப் பிடித்துகொண்டு சோமாலி சுருண்டு விழுவான். சந்திப்பவர்களையெல்லாம் துரத்தி துரத்தி கேள்விகள் வீசுவான். அப்படி ஒருநாள் அருமையான தகவலை சேகரித்து வந்தான். ஆறு மைல் தூரத்தில் ஒரு மாதா கோயிலில், காலண்டரில் நாள் குறித்து... உணவு தருகிறார்கள். இன்ன நாளைக்கு இன்ன உணவு.

தினமும் இருவரும் இரண்டு மணிநேரம் நடப்பார்கள். அங்கே பாதிரியார் ஓட்டை வழியாக உணவு வழங்குவார். முதலில் வெள்ளைக்கார அகதிகள், அதற்குப் பின்னரே கறுப்பர்கள். இரந்து சாப்பிடும்போது கூட வெள்ளைக்காரர்கள் உயர்வானவர்கள் என்பதையும் அன்று கற்றுக்கொண்டான். மறுபடியும் இரண்டு மணிநேரம் நடந்து ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்ததும் சோமாலி வயிற்றைப் பிடித்துக்கொண்டு ’பசிக்குது, பசிக்குது’ என அலறுவான். ’நாளைக்கு செத்துப்போவேன்’ என அவன் கத்தும்போது மகேஸுக்குக் கிலி பிடித்துவிடும். திடீரென்று எழுந்து ஓடி ஒரு பயணியைப் பிடித்து 'இந்த ரயில் எங்கே போகிறது. எத்தனை மணி நேரம் எடுக்கும்’ என்று அலும்பு கொடுப்பான். அவனிடம் நிறைய கேள்விகள் இருந்தன. வீடு எரியும்போது யாராவது ஹெலிகொப்டரில் வந்து கயிற்றை இறக்கினால் நாலு கேள்விகள் கேட்காமல் கயிற்றைப் பிடிக்கமாட்டான்.

மாதா கோயில் உணவை கண்ணீர் விட்டுக்கொண்டு சாப்பிடுவான். 'நான் படிக்கவில்லை. எங்கள் வீட்டில் புத்தகங்களிலும் பார்க்கப் பிள்ளைகளே அதிகம்’ என்பான். அவன் இறுதியாகப் பேசிய வசனம், 'நீ ஊருக்குப் போ. அல்லது செத்துப்போவாய்...’ அடுத்தநாள் காலை மாயமாக மறைந்துவிட்டான். அவன் தற்கொலை செய்தானா அல்லது இன்னொரு நாட்டுக்குப் பயணம் செய்தானா தெரியவில்லை. தோள் மூட்டெலும்புகள் அசைய சோமாலி பயணிகள் பின்னால் ஓடுவதுதான் இவன் மனதில் என்றென்றைக்கும் அழியாது நிற்கும் கடைசி பிம்பம். ஆறு மாதம் ஓடிய பின்னர் ஒரு விசயம் அவனுக்குப் புரிந்தது. இந்த உலகத்தில் பட்டினி கிடந்து ஒருவராலும் சாக முடியாது. எப்படியோ கடைசி நேரத்தில் எங்கிருந்தோ உதவி வந்துவிடும். ஒருநாள் எதேச்சையாகக் கண்ணாடியில் ஓர் உருவத்தைக் கண்டு திடுக்கிட்டான். அது அவன்தான். தடி போன்ற உடம்பில் உடைகள் தொங்கின. 24 மேடைகளில் நாளுக்கு 500 ரயில்களும் 4,00,000 பயணிகளும் வந்துபோகும் மிலானோ ஸ்டேஷனில் அவன் ஒரு நாள் அசந்து தூங்கிய சமயம் தமிழ் சொல் ஒன்று ஒலித்தது. அவன் கண் திறந்தபோது தடிப்பான மஞ்சள் ஸ்கார்ஃப்பை தலையில் சுற்றிக்கொண்டு ஓர் இளம் தமிழ் பெண் நின்றாள்.

மரம் அறுக்கும் நேரம் தவிர மீதி நேரத்தில் மகேஸ் ரயில் பெண்ணை தேடினான். அவளை கடைசியாக சந்தித்த நாளை நினைத்துப் பார்த்தான். அன்று அத்தனை சனம் இல்லை. அவன் ஏறியபோது அவள் ஏற்கெனவே பெட்டியில் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தாள். வழக்கம்போல பாடப் புத்தகத்தை திறந்து வைத்து படித்த அதே சமயம் காதிலே ஒரு கருவியை மாட்டி ஏதோ பாட்டை கேட்டுக்கொண்டிருந்தாள். கண்களும் காதுகளும் வேலையாய் இருக்க, கைகள் அடிக்கடி ஒற்றைகளைத் திருப்பின. இன்னும் நாலைந்து ஸ்டேஷன்கள் கழித்து அவள் இறங்கிச் சென்றுவிடுவாள். எந்த நிமிடமும் ஓர் எதிர்பாராத சம்பவம் நடக்கலாம்.

அடுத்த ஸ்டேஷனில் ரயில் நின்றதும் பார்வையில்லாத ஒருவர் நாயுடன் ரயிலில் ஏறினார். நாய் அவரை அழைத்துக்கொண்டு வெற்றிடம் தேடி நகர்ந்தது. இந்தப் பெண் அவர்களுக்கு இடம் விட்டு அடுத்த ஆசனத்துக்கு நகர்ந்தாள். அப்போது அவளுடைய செல்பேசி கீழே விழுந்து உருண்டு அவனிடம் வந்தது. அவன் அதைப் பாய்ந்து எடுத்து அவளிடம் நீட்டினான். முன்னுக்கு தள்ளிக்கொண்டு நிற்கும் உதடுகளை ஆகக் குறைவாகத் திறந்து 'தாங்க்ஸ்’ என்றாள். எலியின் மூச்சுக்காற்றுபோல மிக மெல்லிய ஒலி அது. அந்த வார்த்தை அவனை நோக்கி வந்தபோது பாதியிலேயே மடிந்துவிட்டது. ஒரு கணம் அவள் கண்கள் அவனை நேருக்கு நேர் பார்த்தன. அதிலே சிரிப்பு இருந்தது. அதை நினைத்தபடியே அவன் ஒரு முழு வாரத்தை ஓட்டிவிட்டான்.

மிலானோ ஸ்டேஷனில் அவனுக்கு முன் நின்றவள் இலங்கைப் பெண்தான். 'அண்ணே இந்த டிக்கெட்டை பாருங்கோ. என்னட்டை விசா இருக்கு. நான் பாரிஸ் போகவேணும். அங்கே என்னுடைய அக்கா குடும்பம் காத்துக்கொண்டு நிற்கும். என்னை சரியான ரயிலில் ஏற்றி விடுங்கோ.’ அவளுடைய கடவுச்சீட்டு, விசா, டிக்கெட் எல்லாம் சரியாகவே இருந்தன. நல்லாய் சாப்பிட்டு வளர்ந்த முகம். அவனைப்போல பட்டினி கிடந்த முகமில்லை. 'ஒரு பன் வாங்கித் தாருங்கோ தங்கச்சி’ என்றான். வாங்கித் தந்து அவளும் சாப்பிட்டாள். 'நீங்கள் யார்?’ என்று கேட்டான். அவள் சொன்ன பதில் அதிர்ச்சி தருவதாக இருந்தது. அவன் வாழ்நாளில் அப்படி ஒரு பதிலை கேட்டதில்லை. 'எங்கள் ஊரை ராணுவம் பிடிச்சிட்டுது. நான் வெளியேதான் தமிழ். உள்ளுக்கு ஒரு சிங்களப்பிள்ளை வளருது.’ அதன் பின்னர் இருவரும் ஒன்றுமே பேசவில்லை. சரியான ரயிலில் அவளை ஏற்றிவிட்டான். போய்ச் சேர்ந்தாளோ என்னவோ?

வடக்கே போன பறவைகள் எல்லாம் ஒருநாள் திரும்பவும் தெற்கே பறந்து விட்டன. மிகமோசமான பனிக்காலம் வந்தது. மூடிய உடம்பு, மூடாத உடம்பு இரண்டையும் குளிர் சரிசமமாகத் தின்றது. அன்று அவனுக்கு மதிய உணவு கிடையாது. காலையில் ஆரம்பித்த பனி மாலையும் கொட்டியது. காலையில் புதன்கிழமை. மாலையும் அதே புதன்கிழமைதான். மேலே மேஷத்திலிருந்து மீனம் வரைக்கும் ராசிகள் அவனைப் பார்த்தன. துலா ராசி அவனுக்கு நல்ல செய்தி ஒன்று சொல்வதுபோல பட்டது. ஓர் இளம்பெண்ணை சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு ஒரு முதிய பெண் அவனைக் கடந்து போனாள். அந்த இளம் பெண் பார்க்க மிக அழகாக இருந்தாள். ஒரு நடிகையாகக்கூட இருக்க லாம். அத்தனை பேரழகு. அவளுடைய கால்களைப் பார்த்தான். அதி விலை உயர்ந்த மிருதுவான சிவப்பு தோல் சப்பாத்துகள். நடக்கவே முடியாத பெண்ணுக்கு இத்தனை உயர்ந்த காலணியா என மனதில் எண்ணினான். அவன் மனதை படித்ததுபோல அந்த நாற்காலி திரும்பவும் அவனை நோக்கி வந்தது. இளம்பெண் கைப்பையை திறந்து 1,000 லீரா நோட்டு ஒன்றை எடுத்து தந்தாள். அது ஒரு டொலருக்கு சமம், இரண்டு தேநீர் குடிக்கலாம். இவன் தயங்காமல் பெற்றுக்கொண்டான். கடந்த ஆறுமாத காலமாக கைநீட்டியதில் அது பழகிவிட்டது. அந்தப் பெண் அவனை பிச்சைக்காரன் என நினைத்து விட்டாள். அன்று இரவு முழுக்க தன் நிலையை எண்ணி அழுதான். அடுத்த நாள் தற்கொலை செய்வதென்று தீர்மானித் தான்.

சோமாலி முழங்கால்களுக்குக் கீழ் தலையை குனிந்து உட்காருவது நினைவுக்கு வந்தது. அடிக்கடி அவன் கேட்பான். 'நேற்றைக்கு வந்ததே ஒன்று... பசி. அது இன்றைக்கும் வருமா?’ எந்த நேரமும் பசியினால் துடித்தான். அவன் இன்று இருந்திருந்தால் ஆலோசனை தந்திருப்பான். நாய் இறப்பதற்கு ஓர் இடம் தேடி திரிவதுபோல அவன் நல்ல ஓர் இடம் தேடி அலைந்தான். ஒரு சர்க்கஸ் கூடாரத்தை தாண்டியபோது உள்ளே இருந்து ஒருவன் அவசரமாக வெளியே வந்து இவனைப் பார்த்து 'வேலை இருக்கிறது, செய்வாயா?’ என்று கேட்டான். இவன் மறுமொழி கூறாமல் 'சாப்பாடு தருவாயா?’ என்றான். இரண்டு வருடம் அங்கே வேலைபார்த்தான். அந்தக் காசில் ஒரு கள்ள பாஸ்போர்ட் வாங்கி, எங்கே போகலாம் என பாஸ்போர்ட் விற்றவனிடமே கேட்டான். அவன் 'கனடா’ என்று சொன்னான். அப்படித்தான் கனடா வந்து சேர்ந்தான்.

அவனைப் படிப்பித்த ஆசிரியர் அடிக்கடி சொல்வார், 'நீ தோற்கவில்லை, வெற்றியை தள்ளிப்போட்டிருக்கிறாய்.’ அன்று அவனுக்கு இரண்டு வெற்றிகள் கிடைத்த தினம். கனடிய குடிமகனாக சத்தியப் பிரமாணம் செய்வதற்காக, ஸ்காபரோவின் குடிவரவு மண்டபத்தில் 200 பேருடன் அவன் காத்திருந்தான். தூய வெள்ளை சேர்ட்டும், அளவெடுத்து தைத்த சாம்பல் நிற ஜாக்கட்டும், மினுங்கும் சப்பாத்தும் அணிந்திருந்தான். குடிவரவு நீதிபதி அவர்களை வரவேற்றார். 'நீங்கள் இன்று இங்கே வரும்போது உங்களுக்கு ஒரு நாடு இல்லை. இங்கேயிருந்து திரும்பும்போது ஒரு நாடு கிடைத்துவிடும். அது கனடா. வாழ்த்துகள். வளைந்த ஆணி உதவாது. நிமிர்ந்து நின்று, வலது கையை தூக்கிப்பிடித்து சத்தியப்பிரமாணம் செய்யுங்கள்’ என்றார்.

'கனகசபாபதி மகேஸ்வரன் ஆகிய நான் கனடாவின் ராணியாகிய மேன்மை தங்கிய இரண்டாம் எலிஸெபெத்துக்கும் அவரது வாரிசுகளுக்கும் அவருக்கு பின் வருபவர்களுக்கும் சட்டத்துக்கு அடக்கமானவனாகவும் விசுவாசமானவ னாகவும் தேசபக்தி நிறைந்தவனாகவும் இருப்பேன் என்று இத்தால் சத்தியப்பிர மாணம் செய்கிறேன்.’

'ஓ கனடா’ தேசிய கீதம் இசைத்தபோது அவளைக் கண்டான். ரயில் பெண். முழுத்தொண்டையை திறந்து பாடினாள். கண்ணாடிபோல மெல்லிய சேலையால் அவளைச் சுற்றியிருந்தாள். அதே முன்தள்ளிய வசீகரமான உதடுகள். பக்கத்திலே பெற்றோர். தம்பி போல தோற்றமளித்த ஒரு சிறுவன் கனடிய கொடியை கையிலே ஏந்தியிருந்தான். அவளைப் பார்த்தான். அவளும் பார்த்தாள். அவனுடைய கால்கள் இப் போது நடுங்கவில்லை. அவனுடைய உதடுகளில் இருந்து ஒரு கனடிய சிரிப்பு வெளியே வந்தது. அவளும் சிரித்தாள். உலகத்து எல்லா நாடுகளிலும், எல்லா மக்களிடையிலும் எல்லா மொழிகளிலும் எல்லா படுக்கை அறைகளிலும் ஒருமுறை யேனும் பேசப்படும் வாக்கியம் ஒன்று இருந்தது. அதை உதட்டிலே தயாராக வைத்துக்கொண்டான்.

நான் அவளை நோக்கி நடந்தேன்.